காந்தியும் தலித் அரசியலும் – 4

4. அதிகாரப்பகிர்வின் பின்னணி

பூனா ஒப்பந்தத்தைப்பற்றி இன்று பேசப்படும் பக்கம் பக்கமான பேச்சுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வாதங்களை ஒவ்வொன்றாக மறுப்பதென்பது மணலை எண்ணி கணக்கிடுவதைப்போன்ற வீண்வேலை. பல ஆய்வுகள் ஏராளமான தரவுகள் கொண்டவை. ஆனால் அவற்றின் நோக்கம் முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தி அல்லது அம்பேத்காரின் உத்தேசங்களை  தங்கள் தேவைக்கு ஏற்ப முன்னரே தீர்மானித்துவிட்டு தரவுகளை அதன் அடிப்படையில் தொகுத்து வைத்து விளக்கம் அளிக்கும் முயற்சிகள் அவை.

தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகமிகச் சிலவே ஏதேனும் ஒரு வகையில் ஒரு தரமான வாசகன் பொருட்படுத்தக்கூடியவை. ஒரு வரலாற்று நிகழ்வுக்கு நியாயம் செய்யவேண்டும் என்பதற்கு மேலாக அதை ஒட்டி தன்னை எப்படி காட்டிக்கொள்வது என்றோ, அல்லதுந்தான் சார்ந்துள்ள தரப்பை எப்படி முன்வைப்பது என்றோ மட்டும்தான் இவை கவனம் கொள்கின்றன. பெரும்பாலான வாதங்கள் கசப்பு மண்டிய முன் தீர்மானங்களில் இருந்து எழுபவை. அதற்கேற்ப அனைத்துமே அவற்றில் திரிபு கொள்கின்றன

முன்தீர்மானங்களின் பட்டியல்

பூனா ஒப்பந்தம் குறித்து பொதுவாக நமக்குக் கிடைக்கும் விவாதங்களில் காந்தியை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் அடிப்படையான குற்றச்சாட்டுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துச் சொல்லல்லாம். 

1. பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகிய அம்பேத்காருக்கும் உயர்சாதியினரின் பிரதிநிதியாகிய காந்திக்கும் இடையே நடைபெற்றது. 

2. பூனா ஒப்பந்தம்மூலம் காந்தி தலித்துக்களுக்கான ஜனநாயக உரிமைகளை முற்றாக நிராகரிக்கச்செய்தார். 

3 காந்தி தலித்துக்களுக்காக எதையுமே செய்தவரல்ல. பூனா ஒப்பந்தத்துக்கு பிறகு எழுந்த அதிருப்தியை சமாளிக்கவே அவர் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார். 

4 இரட்டை வாக்குரிமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த காந்தி தீண்டாமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் காங்கிரஸில் இருந்த உயர்சாதியினரின் ஆதரவாளர்.

இந்தக் கருத்துக்களை ஒவ்வொன்றாகவே ஆராயலாம்.

காந்தியும் அம்பேத்காரும் யாருடைய பிரதிநிதிகள்?

பூனா ஒப்பந்தம் நடக்கும் நாட்களில் அம்பேத்கார் இந்திய அரசியலில் தலித்துக்களின் ஒரே பிரதிநிதியாக இருக்கவில்லை. சொல்லப்போனால் தன் வாழ்நாளில் எப்போதுமே அம்பேத்கார் ஓர் அரசியல் சக்தியாக ஆகவில்லை. அவரது மகர் சாதிக்கு வெளியே அவரது ஆதரவுப்புலம் விரியவில்லை. தலித்துக்களை தன் குடைக்கீழ் நிறுத்த அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

அம்பேத்கார் பிரிட்டிஷாரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர். அவர்களால் முன்னிறுத்தப்பட்டவர். சவுத்பரோ கமிட்டியிலும் சரி ,பின்னர் சைமன் கமிஷனுக்கான ஆலோசனைக்கமிட்டியிலும் சரி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிலும் சரி ,பிரிட்டிஷார்தான் அவரை பங்கெடுக்க வைத்தார்கள்.

அம்பேத்காரைப் பற்றிய குற்றச்சாட்டு அவர் என்றுமே அரசியலில் ஓர் மக்கள்தலைவராக இருக்கவில்லை என்பதே. இந்தியாவெங்கும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களைச் சென்று சந்திக்கக்கூட அவர் செல்லவில்லை. அவர் எப்போதுமே அரசியல் சதிகள், பேரங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசுடன் பேரம்பேசி அவர்கள் அளிக்கும் அதிகாரங்களைக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்தலாம் என்று எண்ணினார். அம்மக்களின் வாழ்க்கை, என்ண ஓட்டங்கள், பலவீனங்கள் ,சிக்கல்கள் எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

அவர் மட்டுமல்ல, அன்று தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரத்துக்காகப் பேசிய எவருமே அந்த மக்களில் ஒருவராக வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களுடன் நேரடி உறவு வைத்திருந்தவர்களும் அல்ல. பிரிட்டிஷார் நியமனம் மூலம் தங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக இடம் அளிக்கவேண்டும் என்று வாதிட்டவர் எம்.சி.ராஜா. அவ்வளவே அவர்களின் கோரிக்கை.

ஒரு சமூகத்தில் இருந்து கல்வி மற்றும் செல்வம் மூலம் அதிகாரத்துடன் பேரம்பேசும் தகுதிக்கு வருபவர்களே அச்சமூகத்திற்காக பேச முடியும் என்பதே அக்குற்றச்சாட்டுக்குச் சொல்லவேண்டிய பதில். அம்பேத்காரும் எம்.சி.ராஜாவும் அப்படி வந்தவர்கள். அவர்கள் தங்கள் சமூகத்துக்கான குரலை எழுப்பியது இயல்பானதே.

ஆனால் அவர்களின் போராட்டங்கள் முழுக்கமுழுக்க காங்கிரசுக்கு எதிரானவையாகவே இருந்தன. முழுக்க முழுக்க பிரிட்டிஷாருக்கு ஆதரவான சக்திகளாக அவர்கள் இருந்தனர். ஆகவே ஆட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான துருப்புசீட்டுகளாகவே அவர்கள் எப்போதும் பயனபடுத்தப்பட்டார்கள்.

மாறாக காந்தி ஏற்கனவே இந்திய அரசியலில் ஒரு பெரும் சக்தியாக இருந்தார். அவரது ஆதரவுத்தளம் இந்தியாவின் சிறுபான்மையினரான உயர்சாதியினரால் ஆனது என்று அவர் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்யாக்ரகம் போன்ற பிரம்மாண்டமான மக்களியக்கங்களை கவனிக்கும் எவருமே சொல்லிவிட முடியாது.

காந்தியின் அந்தக்கால மக்களியக்கத்தில் தலித்துக்களின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு இருந்தது. வெளிப்படையாக முன்வைக்கவில்லையே ஒழிய தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளியல் சமூகவியல் சூழலை மேம்படுத்தும் பணிகளை காங்கிரஸ் முன்னெடுத்து ஓர் விழிப்பை உருவாக்கியிருந்தது. கதரியக்கம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றின் பாதிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் சமூகங்களில் அதிகம் இருந்தன. ஆகவே அம்பேத்கார் அளவுக்கே காந்தியும் அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகவே இருந்தார்.

முக்கியமாக பூனா ஒப்பந்தம் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையே நடைபெற்ற ஒன்று அல்ல. அம்பேத்காருக்கும் காங்கிரஸ¤க்கும்  இடையே நடைபெற்றது. தனித்தொகுதி முறையால் சீண்டப்பட்ட காங்கிரஸின் இதர சாதியினருக்கும் அம்பேத்காருக்கும் இடையே நடைபெற்றது என்றே சொல்லவேண்டும். மனக்கசப்புகள் மோதல்களாக மாறாமல் இருக்க இரு தரப்பினர் நடுவே ஒரு புரிந்துணர்வுக்காகவே காந்தி தன் அழுத்தத்தை அளித்தார்.

பூனா ஒப்பந்தம் உரிமை நிராகரிப்பா?

பூனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை இப்போது படிக்கும்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அன்றைய சூழலில் அளிக்கப்பட்ட ஆகப்பெரிய வாய்ப்பு அது என்றே படுகிறது. அந்த ஒப்பந்தத்தை அவ்வாறு தங்களுக்குச் சாதகமாக அமைப்பதில் அம்பேத்கார், எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களாகவோ ஏமாளிகளாகவோ இருக்கவில்லை.

பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களின் ‘ஜனநாயக’ உரிமைகளை பறித்தது என்று சிலர் இன்று சொல்வதைப்போல அப்பட்டமான பொய் ஏதும் இல்லை. சொல்லப்போனால் அது ஜனநாயகத்தை கொஞ்சம் அழுத்திச் சொன்னது. தலித் மக்களும் இந்திய சமூகத்தின் உறுப்பினரே என்றும் அவர்களுக்குச் சம உரிமை உண்டு என்றும் சொன்னது. அத்துடன் வரலாறெங்கும் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் ஆதலால் அவர்களுக்கு தனியாக தங்கள் வேட்பாளர்களை தேர்வுசெய்து தங்கள் குரலை ஒலிக்கச்செய்யவும் போராடவும் உரிமை உண்டு என்றது

இதுதான் வேறுபாடு. மண்டேகு செம்ஸ்போர்டு சிபாரிசின்படி பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் முன்வைத்த திட்டப்படி நாடெங்கும் தாழ்த்தப்பட்டோர் பொதுத்தேர்தல்முறைக்குச் சம்பந்தமில்லாமல் தனியாகவே ஓட்டளித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்வுசெய்வார்கள். பொதுத்தேர்தலில் இன்னொரு ஓட்டை அளித்து பொதுவேட்பாளர்களையும் தேர்வுசெய்வார்கள்

பூனா ஒப்பந்தத்தின்படி அவர்களும் பிற மக்களைப்போல பொதுவாக்கெடுப்பில் வாக்களிப்பார்கள். அந்தப் பொதுத்தேர்தல் முறைக்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்கப்படும். அதில் தாழ்த்தப்பட்டோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களை தாங்களே கூடி தனியாகத் தேர்வுசெய்து நிறுத்துவார்கள். அந்த நான்குபேரில் ஒருவரை அந்த தொகுதி மக்கள் தேர்வுசெய்வார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டோரின் தனிப்பிரதிநிதிகளாக செயல்படுவார்கள்.

அதாவது இந்திய சிவில் சமூகத்துக்குள் ஒதுக்கப்பட்ட ஒரு தனிச்சமூகமாக தாழ்த்தப்பட்டோர் நிறுத்தப்படுவதை மட்டுமே பூனா ஒப்பந்தம் தடைசெய்தது. அதேசமயம் பொதுதேர்தலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி உரிமையை அது அங்கீகரித்தது. இந்தியாவெங்கும் மொத்தம் 148 இடங்களை அது தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கி வைத்தது.

இன்று இதிலுள்ள முக்கியமான ‘சதி’ என்று எது சொல்லப்படுகிறதென்றால் இங்கே தலித்துக்களின் பிரதிநிதியாக தலித்துக்கள் நிறுத்தும் ஒருவரை பிற இந்துக்களும் சேர்ந்து வாக்களித்து தேர்வுசெய்யவேண்டியிருக்கிறது, ஆகவே சாதி இந்துக்களுக்கும் பிடித்தமான ஒருவரை தான் தலித்துக்கள் தலைவராக அடைய முடியும் என்பதே. ஆனால் இது அபத்தமான ஒரு வாதம். அந்த நான்கு வேட்பாளர்களையும் முழுக்கமுழுக்க தாழ்த்தப்பட்டோர்தான் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் நான்குபேருமே சாதி இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றால் அவர்களில் ஒருவரை சாதி இந்துக்கள் வாக்களித்து தேர்வுசெய்தே ஆகவேண்டும்.

அபப்டியானால் இந்த ஒப்பந்தம் ஏன் இதை முன்வைக்கவேண்டும்? ஒரே காரணம்தான். தாழ்த்தப்பட்டோரால் தேர்வுசெய்யப்பட்டாலும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளர் பொது வாக்காளர்களை எதிர்கொண்டாக வேண்டும். அதாவது வெறும் பிரிவினைவாதம் மற்றும் கசப்பு மூலம் அவர் வெல்ல முடியாது. இதன் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் இதன்மூலம் சாதி இந்துக்கள் உட்பட்ட ஒரு தொகுதியில் அவர்கள் அனைவருக்குமே பிரதிநிதியாக தாழ்த்தப்பட்டோர் ஒருவர் வருகிறார் என்பதே.

சாதி இந்துக்கள் தங்களுடைய பிரதிநிதியாக ஒரு தலித்தை தெரிவுசெய்வது அவர்களுக்கு ஒரு சவால் என்றால் அந்த தலித்தைப் பொறுத்தவரை தன் சாதி அரசியலில் இருந்து பொது அரசியலுக்குள் வர வேண்டியது அவருக்குச் சவால். இதன் மூலம் இரு சாராரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. ஒருபோது இரு தரப்பாகப் பிரிந்து கசப்புகொள்ள முடியாமலாகிறது. காந்தி உத்தேசித்தது இதுவே.

பூனா ஒப்பந்தம்தான் முதல்முறையாக இந்திய பொது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியிர்மை அளித்த நிகழ்வு. இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளாக இருந்து அவர்களை மேம்படுத்தும் எல்லா சலுகைகளுக்கும் அதுவே தொடக்கம். அது தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகங்களால் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டது. அமைதியாக பேச்சுவார்த்தைகள் மூலம் அளிக்கப்பட்டது அது.

இத்தனை சலுகைகளை தலித்துக்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். அவர்கள் அப்போதுகூட ஓர் அரசியல் சக்தியாக திரட்டப்படவில்லை. இதை அக்கால வரலாற்றை மேலோட்டமாகப் புரட்டும் எவரும் அறியலாம். தாழ்த்தப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தை நடத்தி தங்கள் கோரிக்கைகளை கவனித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிடவில்லை. வழக்கமாக ஜனநாயகப்போராட்டங்கள் உரிமைகளை பெறும் முறை அதுதான்.

மாறாக, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியால் காங்கிரஸ¤க்கு எதிராக உள்ளே கொண்டுவரப்பட்ட தரப்பு அவர்கள். அவர்களுக்கு இருந்த ஒரே வல்லமை என்பது அவர்களால் பிரிட்டிஷ் தரப்புக்குப் போய்விடமுடியும் என்பதே. இந்திய சமூகத்தை மேலும் ஒருமாபெரும் பிளவுக்குக் கொண்டுசெல்ல அவர்களால் முடியும் என்பதே. அதை காந்தி உயிரைவிட அஞ்சினார் என்பதே அவர்களின் பலம். அதை வைத்தே அவர்கள் காந்தியிடம் பேரம் பேசினார்கள்.

வரலாற்றை ஓரளவு நடுநிலையுடன் பார்க்கும் எவருக்குமே உண்மையில் ‘மிரட்டல்’ விடுத்தது யார் என்பது புரியும். யெரவாடா ஒப்பந்தம் குறித்த பேரங்கள் அச்சில் கிடைக்கின்றன. அம்பேத்கார் காந்தியிடம் பேசும் பேச்சுக்களில் கறாரான ஓர் பேரம்பேசும் தொனியே உள்ளது. தங்களுக்கு இந்து சமூகம் இழைத்த அநீதிகளுக்காக அது பிராயச்சித்தம் செய்து சலுகைகளை அளித்தேயாகவேண்டும் என்கிறார் அம்பேத்கார். அதை காந்தி ஏற்றுக்கொள்கிறார். இந்தியப் பொதுச் சமூகத்தில் இருந்து பிரிந்து தனிச்சமூகமாகச் செயல்படும் இரட்டை வாக்குரிமை என்ற பிரிவினைக்கோரிக்கையை மட்டுமே காந்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

காந்தியிடம் அம்பேத்கார் வாதிடுகிறார் ”எனது சமூகத்துக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். நாங்கள் அது இல்லாமல் எழுச்சி கொள்ள முடியாது. எங்களுக்கு தேவையானவற்றை பெறாமல் வேறுவழியே இல்லை என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருக்கவேண்டும். ஹிந்துக்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், எங்களுக்கான இழப்பீடு தரப்பட்டே ஆகவேண்டும்”

இழப்பீடு என்று அம்பேத்கார் சொல்வதை காந்தி முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்கிறார். அரசியல் அதிகாரம் தேவை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இரட்டை வாக்குரிமைதான் தேவை என்ற கோரிக்கையின் காரணத்தை அம்பேத்காரால் சொல்லமுடியவில்லை என்கிறார். தனித்தொகுதியையும் பிற சலுகைகளையும் ஏற்கிறார். இரட்டை வாக்குரிமை மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுச்சமூகத்திற்கு வெளியே தனியாகவே அரசியல் செயல்பாட்டில் ஈடுபட நேரும் என்றும் அது பிரிவினையையே உருவாக்கும் என்றும் சொல்கிறார்.

அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு. இரண்டுவருடங்களுக்கு முன்னர் 1929 ல் சைமன் கமிஷனுக்கு முன்பாக அம்பேத்கார் தலைமையில் பகிஷ்கிருத ஹிதகாரிணி சபா சபா அளித்த மனுவில் அம்பேத்காரே கோரியது பூனா ஒப்பந்தம் மூலம் அவர் என்ன அடைந்தாரோ அதே தனித்தொகுதிமுறையைத்தான். ” தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை பொதுத்தொகுதிகளில் பொதுவான தேர்தல் சாத்தியமல்ல என்பதே சபாவின் கருத்தாகும். ஆனால் வகுப்பு அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளை சபா விரும்பவில்லை. பொதுதொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அதுவே போதுமானது என்பதே சபாவின் கருத்து” என்று அதில் அம்பேத்கார் சொல்கிறார்.

 1929 ல் அம்பேத்காரும் சரி எம்.சி.ராஜாவும் சரி கோரியது பூனா ஒப்பந்தத்தில் அவர்கள் பெற்ற தனித்தொகுதி ஒதுகீட்டையே. ஆனால் பின்னர் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த தனி வாக்குரிமைக்கு நிகரான , அல்லது ஒரு படி மேலானஇரட்டை வாக்குரிமைக் கோரிக்கையாக அதை அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். அந்த மாற்றம் அவர்கள் இரண்டாம் வட்டமேஜைமாநாட்டில் 1931ல் நடந்தது.  அன்று அவர்களுடன் இரட்டை வாக்குரிமைக்காக மேலும் பல சிறுபான்மையினர் கோரிக்கை விடுத்தனர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுப்பதை முஸ்லீம் லீகும் தந்திரமாக ஆதரித்தது.

பூனா ஒப்பந்தம் மூலம் நடந்தது இவ்வளவுதான். திடீரென்று இரண்டாவது வட்டமேஜைமாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் முதலியோரால்  எழுப்பப்பட்டு பிரிட்டிஷாரால் அப்போதே வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமை என்ற சலுகையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்களின் நெடுநாள் கோரிக்கையான தனித்தொகுதிமுறையை ஏற்றுக்கொண்டது.

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன செய்தார்?

பூனா ஒப்பந்தம் மூலம் தாழ்த்தப்பட்டவர்களை காந்தி தோற்கடித்து காங்கிரஸில் உள்ள சாதியவாதிகளை மகிழ்வித்தார் என்ற உச்சகட்ட பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் தனித்தொகுதி ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த தனிச்சலுகை காங்கிரஸைக் கொந்தளிக்கச் செய்தது. காந்தி அதன் ஈடிணையற்ற தலைவராக இருந்த ஒரே காரணத்தால் மட்டுமே அன்று அந்தக் கோரிக்கைகளை காங்கிரஸ் வேறு வழியில்லாமல் ஏற்றது.

அன்றைய இந்திய சமூகத்தில் பெரும்பலான தாழ்த்தப்பட்டோர் அல்லாத சாதியினரின் நிலைமையும் தாழ்த்தப்பட்டோரின் அதே இழிநிலையிலேயே இருந்தது. உண்மையில் இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சற்றுமேல் வாழும் சாதிகளின் வாழ்க்கை என்பது சிறு அடையாள மேன்மையை தவிர்த்தால் தாழ்த்தப்பட்டவர்களின் அதே வாழ்க்கைதான்.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்பை பயன்படுத்தி அடைந்த அந்த சலுகை அவர்களை கொந்தளிக்கச் செய்தது. இன்று , எழுபது வருடங்கள் கழித்து, தனித்தொகுதிமுறைக்கு எதிராக உருவாகிவந்துள்ள கோபங்களை வைத்து அன்றைய நிலையை எண்ணிப்பார்க்க சிந்திக்கும் திறனுள்ள எவராலும் இயலும்.

அன்று பிற்படுத்தப்பட்ட சாதிகள் பலவும் தங்களை தாழ்த்தபப்ட்ட சாதிகளாக அறிவிக்கவேண்டும் என்று கோரின. அதற்கு தாழ்த்தப்பட்ட சாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூனா ஒப்பந்தத்துக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து உருவான எதிர்ப்பும் கசப்பும் காந்தியின் உறுதி ஒன்றினாலேயே தவிர்க்கப்பட்டது. அதை அம்பேத்காரே பதிவு செய்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களின் தரப்புக்காக காந்தி வெளிப்படையாகவே ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அந்தப்பிரச்சாரம் என்பது பெரும்பாலும் காங்கிரஸிடம்தான் என்பதை எவரும் காணலாம். சாதியமைப்பு குறித்த தன் கருத்துக்களை காந்தி பெரிதும் மாற்றிக்கொண்டு அம்பேத்கரின் தரப்பை நோக்கி நகர ஆரம்பித்தார். அம்பேத்கருடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட்டார் அவர்.

பூனா ஒப்பந்தம் முடிந்த எட்டாவது மாதம் 1933ல், காந்தி அவரது வாழ்நாளில் செய்த நீண்ட உண்ணாவிரதங்களில் ஒன்றைச் செய்தார். ஏறத்தாழ மூன்றுவாரம் நீடித்து அவரது உயிரை விளிம்புவரைக் கொண்டுசென்ற அந்த உண்ணாவிரதம் இந்தியாவையே உலுக்கியது. அது எவருக்கு எதிராக? தாழ்த்தப்பட்ட மக்களின் விஷயத்தில் இந்து சமூகம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் தன்னை அதிலிருந்து தூய்மைப்படுத்திக்கொள்ளவும் அதைச் செய்ததாக அவர் அறிவித்தார். வரலாற்றை வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு அது காங்கிரஸில் இருந்த தனித்தொகுதி எதிர்ப்பாளர்களுக்கு அவரளித்த எதிர்ப்பே என்று எளிதில் புரியும்.

வழக்கம் போல உண்ணாவிரதம் மூலம் இந்தியசமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவை தனக்காகத் திரட்டி எதிர்ப்புகளை காந்தி முறியடித்தார். காங்கிரஸை தாழ்த்தப்பட்டோருக்கான சேவைசெய்யும் இயக்கமாக மாற்றவும் செய்தார். எத்தனையோ நூற்றாண்டுகளாக நீடிக்கும் சமூக அமைப்புக்கும் மனநிலைக்கும் எதிராக கோடிக்கணக்கான மக்களை திருப்புவதென்பது சாதாரண விஷயம் அல்ல. தனது அபரிமிதமான வசீகரம் மூலமே காந்தி அதைச் செய்தார்.

இந்திய வரலாற்றை கவனிப்பவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேல் நேரடியாக வந்து தொட்ட முதல் வெகுமக்களியக்கம் என்பது காந்தியின் ஹரிஜன இயக்கமே என்பது தெள்ளத்தெளிவாகவே தெரியும். அம்பேத்கார் முதலியவர்களின் அன்றையச் செயல்பாடென்பது மத்திய,மாகாண சபைகளில் அதிகாரத்தைப் பெறுதல் ,அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தல் என்ற அளவிலேயே நின்றுவிட்டது. ஓர் அறிவுஜீவியான அம்பேத்கார் அவரது அனைத்து மேதமையுடனும் ஒரு மேல்மட்ட ‘கனவான் – தலைவ’ராகவே இருந்தார். வசீகரமான மக்கள்தலைவராக அல்ல. அவர் இந்தியா முழுக்க அறியப்பட்ட தலைவராக ஆனதே ஐம்பதுகளுக்குப் பின்னர்தான். ஐயமிருந்தால் உங்கள் ஊரில் முதல் அம்பேத்கார் சிலை எப்போது வைக்கப்பட்டதெனச் சென்று பாருங்கள்.

காந்தியின் ஹரிஜன இயக்கம் சிலமாதங்களிலேயே பிரம்மாண்டமான ஒரு தொண்டர்படையை ஹரிஜன சேவைகென கிராமங்களுக்கு அனுப்பியது. இந்தியாவெங்கும், அம்பேத்காரின் பெயரையே கேள்விப்பட்டிராத பகுதிகளிலெல்லாம்கூட,  தாழ்த்தப்பட்ட மக்களிடையே அவர்களின் சமூக முன்னேற்றத்துக்கு முதற் தூண்டுதல் ஹரிஜன இயக்கத்தால்தான் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கல்வி, கைத்தொழில் முதலியவை அறிமுகம்செய்யப்பட்டன. அனைத்துக்கும் மேலாக சமூகநீரோட்டத்திலேயே இல்லாமலிருந்த அவர்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டார்கள்.

அந்த மாபெரும் சேவைக்கான பதிலாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் முக்கால் நூற்றாண்டுக்காலம் காங்கிரசின் அடித்தள வல்லமையாக இருந்தார்கள். அம்பேத்கார் ஆரம்பித்த குடியரசுக் கட்சி கூட காங்கிரசுக்கு இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள்செல்வாக்கை பாதிக்க முடியவில்லை என்பது வரலாறு. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்வரை தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி காங்கிரஸே. கேரளத்தில்  கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்து அரைநூற்றாண்டு ஆகியும்கூட இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி காங்கிரஸே.

இன்று காந்திக்கும் காங்கிரஸ¤க்கும் எதிராக விஷம்துப்பும் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் திராவிடக் கட்சிகளும் ஒன்றை மறந்துவிட்டன.  இந்திய அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் அளித்த இடத்தில் பாதியைக்கூட இக்கட்சிகள் அளிக்கவில்லை. இந்த நிமிடத்தில்கூட இக்கட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரப்பங்கேற்பு என்பது பூஜ்யமே.

எண்பதுகளில் உருவான தலித் கட்சிகள்மட்டுமே காங்கிரஸின் தாழ்த்தப்பட்டோர் ஆதரவை கொஞ்சமேனும் பாதிக்க முடிந்தது. ஆனாலும் இன்றும் இந்தியாவில் தலித்துக்கள் மிக அதிகமாக ஆதரிக்கும் கட்சி காங்கிரஸே. அதுவே இன்று வரை காங்கிரஸை அசைக்க முடியாத வல்லமையாக நிலைநாட்டி வருகிறது. இப்போதே தலித் அரசியல் கட்சிகளில் ஏமாற்றம் கொண்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸை நோக்கிச் செல்கிறார்கள். ஆகவே வரும்காலத்திலும் காங்கிரஸே தலித்துக்களின் கட்சியாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் குடிசை முற்றத்துக்குச் சென்ற முதல் கட்சி காந்தியின் காங்கிரஸ். காங்கிரஸின் ஊழல், சீர்கேடுகள், ஏகாதிபத்தியப்போக்கு எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த உண்மை நிலைநிற்கிறது.

காந்தியின் வற்புறுத்தலான் பூனா ஒப்பந்தம் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி அளிக்கப்பட்டமைக்காக காந்தி  பிற சாதியினரின் கடும் சினத்துக்கு உள்ளானார். அன்றைய காங்கிரஸ் தலைவர்களிலேயே அந்தக்  கசப்பு இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை காந்தி திசை திருப்புகிறார் என்று சிலர் ண்ணினார்கள். காந்தியின் ஹரிஜன இயக்கம் மீது சுபாஷ் சந்திரபோஸ் கடுமையான விமரிசனம் கொண்டிருந்தார். ஆனால் உக்கிரமான சினம் வழக்கம்போல இந்து உயர்சாதி குழுக்களிலேயே இருந்தது

1934ல் மட்டும் காந்தியை கொல்வதற்கு மூன்று முயற்சிகள் நடந்தன. அவற்றில் இரண்டு முயற்சிகள் பெரிய அளவில் விளையவில்லை. ஒன்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. [ஒரு நிகழ்ச்சியின் அடிபப்டையில் பொவானி ஜங்ஷன் என்ற ஹாலிவுட் படம் வெளிவந்திருக்கிறது] அவற்றில் அனேகமாக எல்லாவற்றிலுமே ஏதோ ஒருவகையில் இந்து மகா சபாவின் ஒரு தரப்பினர் பங்கு வகித்தனர் என்று பியாரேலால் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். முயன்றிருந்தால் ஒருவேளை காந்தியின் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

1933 முதலே காந்தி ஹரிஜன இயக்கத்தை பிரச்சாரம் செய்ய பயணம்செய்துகோண்டிருந்தார். அது ஹரிஜனயாத்ரா என்று அழைக்கப்பட்டது. 1934 ஜூன் 25 ஆம் தேதி காந்தி கஸ்தூரிபாயுடன் ஹரிஜன யாத்திரையின் பொருட்டு பூனா வந்தார். இருகார்களில் இரண்டாவது காரில் காந்தியும் கஸ்தூர்பாயும் சென்றனர். முதலில் சென்ற கார் நிகழ்ச்சி நடக்கவிருந்த கார்ப்பரேஷன் அரங்கைச் சென்றடைந்ததும் ஒரு குண்டு அதன்மேல் வீசப்பட்டது. இரு போலீஸ்காரர்களும் ஏழு பொதுமக்களும் பூனா முனிசிப்பல் கார்பரேஷனின் சீ·ப் ஆபீஸரின் உதவியாளரும் கடுமையான காயம் அடைந்தார்கள். காந்தி மயிரிழையில் உயிர்தப்பிய நிகழ்ச்சி இது.

அன்று காந்தி இறந்திருந்தால் பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் பிரவேசத்துக்கும், அதன் பின் ஹரிஜன இயக்கம் மூலம் அவர்களின் வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்காக வழியமைத்தமைக்கும் அவர் களப்பலியாகிருந்திருப்பார். இன்று அவர்மேல்தான் இந்த அவதூறுகள் சுமத்தப்படுகின்றன. 

பூனா ஒப்பந்தத்தை மழுப்பவா ஹரிஜன இயக்கம்?

பூனா ஒப்பந்தத்துக்குப் பின்னர்தான் காந்தி ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது உண்மை. ஆனால் அதற்கு முன்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றிக் கவலைப்படவே இல்லை என்பதும் சரி, ஹரிஜன இயக்கத்தை அவர் அம்பேத்காரின் இயக்கத்தை வலுவிழக்கச்செய்யவே ஆரம்பித்தார் என்பதும் சரி , அப்பட்டமான திரிபுகள் அன்றி வேறல்ல. உள்நோக்கம் கற்பித்தபின் எதைவேண்டுமானாலும் நிரூபிக்கலாம்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தை நேரடியாக தலித் தலைவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இப்போது உள்ளது. சலிக்காமல் ஆங்கிலத்தில் இதை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்னுக்குச் சென்றால் மிஷனரிகளில் தலித் விடுதலை இயக்கத்தின் வேர்களை கண்டுகொள்வார்கள். மகாத்மா பூலே போன்ற நாலைந்து பெயர்களுக்குப் பின் நேரடியாக அம்பேத்கரில் வந்து முடிப்பார்கள். இவர்களின் கண்ணில் இந்திய மதச்சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பு கொஞ்சம்கூட விழாது.

ஆனால் வரலாறு அப்படி அவரவர் சமைத்துக்கொள்வது அல்ல. உண்மையில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கான குரல் பெருமளவில் எழுந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் மதச்சீர்திருத்த இயக்கங்களில்தான். அதற்கு முன்னரே மிஷனரிகள் இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்புக்கான ஆரம்பகட்ட பணிகளைச் செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் அவர்கள் பணியாற்றிய பகுதிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவே. அவர்கள் எப்போதுமே மக்களியக்கமாக இருக்கவில்லை.

ஆரியசமாஜம், பிரம்ம சமாஜம்,ராமகிருஷ்ண இயக்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கிய விழிப்புணர்ச்சியே இந்தியாவில் சாதியமைப்பிற்கு எதிரான முதல் நகர்வு. இவ்வியக்கங்கள் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஊழியர்களால் ஆனவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1869ல் ஆரம்பிக்கப்பட்ட ஆரியசமாஜமும் 1828ல் ஆரம்பிக்கப்பட்ட பிரம்ம சமாஜமும் திட்டவட்டமாகவே சாதிமுறையை நிராகரித்து அவர்றுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டவை.  ராமகிருஷ்ணமடம் சாதியமைப்பை இந்துமதத்தின் இருளாக எண்ணியது.

இவற்றைத்தவிர ஏராளமான பிராந்திய மதசீர்திருத்த அமைப்புகள் சாதிய ஒழிப்பில் அரும்பணி ஆற்றியிருக்கின்றன. மிகச்சிறந்த உதாரணம் கேரளத்தில் நாராயணகுருவின் இயக்கமும் தமிழகத்தில் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் இயக்கமும் ஆகும்.  இந்த வகையான இந்துமதச்சீர்திருத்த நோக்குள்ள துறவிகளும் அமைப்புகளும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக அளித்த கொடை சாதாரணமல்ல. அத்வைதமகாசபை, சுவாமி சகஜானந்தர், சுவாமி ஆத்மானந்தர், சாதுஜன பரிபாலன சபாறென பலநூறு அமைப்புகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்

இவை உருவாக்கிய கருத்தியல் மாற்றமே பல்லாயிரம் வருட வரலாறுள்ள சாதியமைப்பு குறித்த மறுபரிசீலனையை இந்தியாவில் உருவாக்கியது. படித்த உயர்வட்டத்தில் அச்சிந்தனைகள் வலுப்பெற்றன. தனிவாழ்க்கையில்கூட அம்பேத்கார் அந்த அலையின் நேரடிப்பயன்பெற்று உருவாகிவந்தவர் என்பதைக் காணலாம்.

இந்திய சுதந்திரப்போராட்டம் கூட இந்தியமறுமலர்ச்சி என்று சொல்லப்படும் இந்துமதச்சீர்திருத்த அலையின் விளைவாக உருவாகி வந்ததே. அந்த சீர்திருத்த அலையின் நீட்சி எப்போதும் காங்கிரஸில் இருந்தது. ஆகவேதான் காங்கிரஸ் அத்தகைய ஒரு லட்சியவாத அலையை அத்தனை விரிவாக அனைத்து சாதிகளையும் உள்ளடக்கி உருவாக்க முடிந்தது.

இன்று தலித் அரசியலெழுத்தாளர்களில் ஒருசாராரும் திராவிட இயக்கத்தினரும் காங்கிரஸை உயர்சாதியினரின் அமைப்பு என்ற அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். காங்கிரஸின் தலைமை பிராமணர் கையில் இருந்தது என்றும் பார்ப்பனர்களும் பனியாக்களும் அந்த பேரியக்கத்தை ஏமாற்றி வழிநடத்தினர் என்றும் சொல்கிறார்கள்.லட்சக்கணக்காக  காங்கிரஸில் இணைந்து போராடி தியாகங்கள் செய்த அத்தனை பிறசாதியினரையும் முட்டாள்கள் என்றும் ஏமாளிகள் என்றும் இழிவுபடுத்தும் பேச்சு என்று மட்டுமே அதைச் சொல்லமுடியும்

காந்தி  அவரது பொதுவாழ்க்கையின் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக தீண்டாமையையும் சாதியின் ஏற்றதாழ்வுகளையும் எதிர்ப்பவராகவும்தான் இருந்திருக்கிறார். பிறரைப்போல அதை மேடைகளில் சொல்லிவிட்டுச் செல்பவரல்ல அவர்.  அவரது சொந்த வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அவர் எதை நம்பினாரோ அதைச் செய்தும் வந்தார்.

தென்னாப்ரிக்காவில் அவரது தல்ஸ்தோய் பண்ணையில் அவர் தன்னுடன் தாழ்த்தப்பட்டவர்களை தங்க வைத்தார். ஒரு சாதிஇந்து ஒருபோதும் செய்யத்துணியாத விஷயங்களை , தாழ்த்தப்பட்டவர்களின் கழிவறையை சுத்தம்செய்வதை, அவர் செய்தார்.சாதி எண்ணத்தில் இருந்து மீளாத தன் மனைவியையும் குடும்பத்தையும் அச்செயலை ஏற்கச்செய்தார்.

இந்தியா திரும்பிய காந்தி முதன்முதலில் காங்கிரஸ் மாநாட்டில் கண்டு எதிர்ப்பு தெரிவித்த விஷயமே அங்கே சுகாதாரப்பணிகளை பிறசாதியினர் செய்யாமையினால் நிலவிய அசிங்கத்தைத்தான். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தானே சுகாதாரப்பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் அவர். தன்னுடைய ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றாகச் சேர்த்து தங்கவைத்து அதன் விளைவாக கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆசிரமங்களையே மூடிவிடும் நிலையை அடைந்தும் அக்கருத்தில் அவர் மாற்றம் கொள்ளவில்லை.

சாதியமைப்பு மக்களை இயல்பான தன்னதிகாரமும் சுதந்திரமான செயல்பாடும் கொண்ட சமூகக் குழுக்களாக ஆக்குகிறது, ஆகவே அதுதேவை என்ற எண்ணம் கொண்டிருந்த காந்தி அதை வெளிப்படையாக சொன்னார். முற்போக்கு முகமூடிகள் போட்டுக்கொள்ளவில்லை. அதே சமயம் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கலாகாது என்று நம்பிய அவர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் அதைக் கடைப்பிடித்து வழிகாட்டினார்.

இந்தியாவில் மதச்சீர்திருத்த இயக்கங்கள் மூலம் உருவான சமூகமாற்ற அலையின் கடைசிக்கண்ணிதான் காந்தி. அதை இன்றைய எந்த தலித்தியர்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அம்பேத்கார் அறிந்திருந்தார். ஆகவேதான் யெரவாடா சிறையில் காந்தியிடம் உரையாடும்போது நீங்கள் மட்டுமே எங்களுக்கு இன்று பாதுகாப்பு என்று சொல்கிறார் அம்பேத்கார்.

”நீங்கள் இருப்பது எங்களுக்குப் பெரும் உதவி” என்று காந்தியிடம் சொல்கிறார் அம்பேத்கார். ” ஆனால் உங்களிடம் எங்களுக்குள்ள சச்சரவு ஒன்றே ஒன்றுதான். எங்கள் நலனுக்காக மட்டுமில்லாமல் தேசநலன் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் ஒன்றுக்காகவும்  நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.மாறாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே நீங்கள் பணியாற்ற வந்தால் எங்கள் தலைவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்…” 

காந்தியைப் பொறுத்தவரை தனித்தொகுதியும் சரி மாகாண அரசியலில் ஈடுபடுவதும் சரி அர்த்தமற்ற அரசியல் நடவடிக்கைகளே. ஒருபோதும் அவர் அதில் ஆர்வம் காட்டியதில்லை. பெரும்பாலும் காங்கிரஸை அதிலிருந்து விலக்கவே முயன்றிருக்கிறார். இந்திய சுதந்திரம்ந் நெருங்கிவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்ட பின்னரே ஜனநாயகப்பயிற்சிக்காகவும் அதிகார கையகபப்டுத்தலுக்காகவும் அவர் அதில் ஈடுபடுவதை முகுந்த நிபந்தனைகளுடன் ஆதரித்தார். அதன்படி அரசமைத்த எந்த காங்கிரஸ் அரசும் நீடித்து ஆளவுமில்லை.

பூனா ஒப்பந்தம் காந்தியைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வோ ஒன்றுமில்லை. காரணம் அவ்வாறு பிரிட்டிஷாரிடம் இருந்து பெறும் அதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவரல்ல அவர். மேலும் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மீது ஆழமாந அவநம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு. அதிகாரம் இருப்பது மக்களிடையே என நம்பியவர் அவர். சிவில் சமூகத்தின் அதிகாரத்தை மட்டுமே அதிகாரம் என நினைத்தவர்

ஆகவே அவர் இரட்டைவாக்குரிமையில் தலையிட்டது அது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான ஆயுதமாகிவிடக்கூடாது என்பதற்காகவே. மாகாண தேர்தல்களில் இரட்டை வாக்குரிமை மூலம் உருவாகும் பூசல்கள் பிளவுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. மற்றபடி பிரிட்டிஷாரின் கீழ் மாகாண அரசில் சென்று அமர்ந்து கொண்டு காங்கிரஸ¤ம் சரி அம்பேத்காரும் சரி ஏதும்செய்யப்போவதிலலி என நன்கு அறிவார். அதுவே யதார்த்தமும்கூட

ஆகவேதான் எது உண்மையான சமூக மாற்றத்துக்கும் எளியவருக்கு அதிகாரப்பகிர்வுக்கும் வழிவகுக்குமோ அதைச் செய்ய ஆரம்பித்தார் அவர். அந்த மக்களிடையே இறங்கிச்சென்றார். அவர்களுக்கு அரசியல் விழிப்பையும், கல்வியையும், மாற்றுத்தொழில் வாய்ப்புகளையும் அளிக்கும் இயக்கத்தை ஆரம்பித்தார். தேசத்தையே அம்மக்களை நோக்கி திருப்பினார்.

திசைதிருப்பும் சுட்டுவிரல்கள்…

காந்தியைப்பற்றி இன்று சில தலித்தியர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இருவகை நோக்கம் கொண்டவை. ஒன்று, ஏற்கனவே சொன்னதுபோல   தலித் ஆதரவை காங்கிரஸ் பக்கமிருந்து தலித் கட்சிகளுக்கு திசைதிருப்பும் அரசியல் திட்டம் கொண்டவை. காங்கிரஸ் தலித் நலன்களைக் காக்கவில்லை என்று எண்ண அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கான அரசியலிலும் அவர்கள் ஈடுபடலாம். ஆனால், அதற்காக வரலாற்றை திரிப்பதும் அவதூறு செய்வதும் உகந்தது அல்ல. அது அவர்களின் அற அடிப்படையைத்தான் பலவீனப்படுத்தும்.

தலித் அல்லாதவர்கள் இதே அவதூறுகளை இன்னமும் வேகமாகக் கூறுகிறார்கள். இதைவிட கருத்தியல்மோசடி என்று எதுவுமே இன்றைய இந்தியச் சூழலில் இருக்கமுடியாது. இன்றைய தலித் எழுச்சிக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் உடனடித்தடையாக இருப்பது இன்றுள்ள பிற்பட்டோர் அரசியலே. இன்றும் அது ஆவேசமான ஒரு சாதிய அடிப்படைவாத அரசியல் என்பதை எவரும் அறிவர். அந்த பச்சையான யதார்த்தத்தை போலியான தலித் ஆதரவு கோஷங்கள் மூலம், காந்தியை அல்லது உயர்சாதியினரை மொத்தப் பழியையும் சுமக்கசெய்வதன் மூலம், மழுப்புவதற்கான அரசியல் தந்திரம் அன்றி வேறல்ல அது.

வேடிக்கையான ஒரு விஷயம் இன்று கவனத்துக்கு வருகிறது. ஈ.வே.ரா-ம் திராவிட இயக்கமும் தலித்துக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி இன்று தலித்துக்கள் மத்தியில் இருந்து வலுவாக எழுந்து வருகிறது. ஏறத்தாழ ஐம்பதாண்டுக்கால அரசியல் வரலாறுள்ள திராவிட இயக்கம் காங்கிரஸ் அளித்த முக்கியத்துவத்தைக்கூட தலித்துக்களுக்கு அளிக்கவில்லை என்பது வரலாறு. அக்கேள்விக்குப் பதிலாக பதற்றம் அடையும் பெரியாரியர் மேடைகளில் ஈ.வே.ரா பேசிய மிகையுணர்ச்சி கொண்ட தடாலடி மேற்கோள்களை எடுத்து வைத்து வாதிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை காங்கிரஸில் இருந்து பிரிப்பதற்காக ஈவேரா பேசிய தூண்டிவிடும் பேச்சுக்கள் மட்டும்தான் அவை.

இன்று தலித்தியர் அதைச்சொல்லிக் ஈவேராவைக் குற்றம் சாட்டும்போது திராவிடக் கட்சிகளில் இருந்து தலித் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக தலித்தியர் செய்யும் அரசியல் அது என்று வாதிடுகிறார்கள் பெரியாரியர்கள். ஐம்பதாண்டுக்காலமாக காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்காக அவர்கள் செய்த அதே வேலை அல்லவா அது?

இந்த அவதூறு அரசியலில் கிறித்தவ மதப்பரப்பு அமைப்புகளுக்கு உள்ள நேரடியான, மறைமுகமான பங்கும் எந்த ஒரு பொதுப் பார்வையளனும் எளிதில் கண்டு கொளக்கூடிய ஒன்றே. கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவனுக்கு காந்தி பிற எவரைவிடவும் நெருக்கமானவர். ஆதிக்க அரசியலுக்கு மதத்தை கருவியாக்கும் அமைப்புகளுக்கு அவர் எப்போதுமே  எதிர்இலக்கு.

[மேலும்]

1932 ஆம் ஆண்டு யெரவாடா சிறையில் காந்தியுடன் அம்பேத்கார் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அம்பேத்காருக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 

 1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிராந்திய பிரதிநிதி சபைகளில் பொதுத் தேர்தல் இடங்களிலிருந்து பின்வருமாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்

மெட்ராஸ் 30; பம்பாயும் சிந்துவும் 25; பஞ்சாப்  8; பீகாரும் ஒரிஸாவும் 18; மத்திய மாகாணங்கள் 20; அஸாம் 7; வங்காளம் 30; ஐக்கிய மாகாணங்கள் 20. மொத்தம் 148.மிவை பிரிட்டிஷ் முக்கிய மந்திரியின் தீர்மானத்தின் பேரில் அடையப்பெற்ற எண்ணிக்கை ஆகும்.

2) இந்த இடங்களுக்கான தேர்தல் பொது தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்குமென்றாலும் பின்வரும் முறைமைகள் அதில் கையாளப்படும்: ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் அட்டவணயில் பதிவு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் ஒரு வாக்காளர் கணமாக கருதப்பட்டு அவர்கள் அந்த தொகுதிக்கு நான்கு உறுப்பினர்களை ஒற்றை வாக்கு முறை மூலமாகத்  தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வருமே பொது தேர்தலுக்கு அந்த தொகுதிக்கான வேட்பாளர்களாக இருப்பார்கள்.

3) மத்திய பிரதிநிதி சபையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமானது கூட்டுத்தொகுதி முறையிலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மேல்கூறிய பிராந்திய பிரதிநிதி சபைகளுக்கான அடிப்படை தேர்ந்தெடுத்தல் முறையிலும்,  அமையும்.

மத்திய பிரதிநிதி சபை

4) மத்திய பிரதிநிதி சபையில் பிரிட்டிஷ் இந்தியாவின் பொது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இருக்கைகளில் 18 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

5) இந்த முதன்மை தேர்தலின் மூலம் வேட்பாளர்களை மத்திய மற்றும் பிராந்திய பிரதிநிதி சபைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொகுதிகளிலிருந்து அனுப்பப்படும் இந்த முறை முதல் பத்து ஆண்டுகளில் அல்லது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் கலந்தாலோசித்த கூட்டு சம்மதத்துடன் அதற்கு முன்னதாக முடிவுக்கொண்டு வரப்படலாம். அது இந்த ஒப்பந்தத்தின் ஆறாவது ஷரத்தின் படி அமையும்.

6) இந்த ஒப்பந்தத்தின் 1 ஆவது மற்றும் 4 ஆவது ஷரத்துகளின் படி அமைக்கப்பட்ட இந்த பிரதிநிதித்துவ முறை, தொடர்பான சமுதாயக்குழுக்களின் ஒத்த முடிவின் படி சமரசம் கண்டடையும் வரை தொடரும்.

7) மத்திய மற்றும் பிராந்திய பிரதிநிதி சபைகளுக்கான தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் வாக்காளர்கள் லோத்தியன் கமிட்டியின் அறிக்கையின் படி அமைக்கப்படுவர்.

8 )  அந்தந்த வட்டார மற்றும் ஊள்ளூர் அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது அரசு பணிகளில் பொதுத்துறைகளில் நியமிக்கப்படுவதற்கோ, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு எவ்வித தடையும் இருக்காது. இந்த துறைகளில் உரிய கல்வி தகுதிப் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு நியாயமான இடங்கள் கிடைத்திட எல்லாவித முயற்சிகளும் செய்யப்படும்.

9) ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கணிசமான தொகை தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வி முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு கல்விகற்பதற்கான ஆதார வசதிகள் உருவாக்கப்படும்

முந்தைய கட்டுரைக்ரியா இணையதளம்
அடுத்த கட்டுரை“தனி” குறும்படம்