3 வரலாறு வகுத்த மறுதரப்பு
அம்பேத்காரையும் காந்தியையும் குறித்த விவாதங்கள் எல்லாமே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஒட்டியே இருப்பதென்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் சொல்லாடலின் விளைவே. அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒப்புமையும் உறவும் இங்கே கவனிக்கப்பட்டதில்லை. காந்தியை சரிவரக் கவனிக்காதது போலவே அம்பேத்காரையும் சரியாக கவனிக்காமல் குத்துமதிப்பாகவே இந்த வாதகதிகள் முடையப்பட்டன
வரலாற்று எதிரியைக் கட்டமைத்தல்
வரலாறுகள் எல்லாமே முக்கால்நூற்றாண்டைத்தாண்டிவிட்ட இன்று அதற்குப்பின்ற பிறந்த தலைமுறையினரே பெரும்பாலும் வழும் சூழலில் படித்த தலித் மக்களில் கணிசமானவர்கள் காந்தியை தங்களுக்கு எதிரான ஒரு சக்தியாக எண்ணுகிறார்கள். காந்தி அவர்களை ஒடுக்கிய பாரம்பரியம் மற்றும் ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுகிறார்
இந்த வகையான கோணத்தை முதலில் இடதுசாரிகள் தொடங்கி வைத்தார்கள். காங்கிரஸின் வலிமையான ஆதரவுப்புலமாக இருந்த தலித் மக்களை தங்கள் குடைக்கீழ் கொண்டுவர அவர்கள் விரும்பினார்கள். ஒடுக்கப்பட்ட மக்களாகிய அவர்கள் இயல்பாகப்பார்த்தால் தங்களுடன் அல்லவா இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள்.
அதற்கு தடையாக இருப்பது தேசம் முழுக்க தலித்துக்களில் கணிசமானவர்களுக்கு காந்திமீதிருந்துவரும் மதிப்பே என உணர்ந்தார்கள். ஆகவே தொடர்ச்சியாக காந்தி மீதான வெறுப்பை அம்பேத்காரின் சொற்கள் வழியாக உருவாக்க முயன்றார்கள். இன்று அம்பேத்காரியர்கள் சொல்லும் பெரும்பாலான வரிகள் வங்க இடதுசாரி அரசியல் எழுத்தாளர்களால் உருவாக்கபப்ட்டவை.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான தேர்தல் அமைப்பில் போட்டியிட்ட எல்லா பிற கட்சிகளுக்கும் முதல் எதிரியாக சர்வ வல்லமையுடன் விளங்கியது காங்கிரஸ். காங்கிரஸின் வல்லமை என்பது அது காந்தியின் கட்சி என்ற படிமம். ஆகவே காந்தியை மக்களிடம் எதிர்மறையாகக் காட்டுவது எல்லா கட்சிகளுக்கும் தேவையாக இருந்தது. எல்லா பிராந்தியக் கட்சிகளும் அதைச் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளும், வடநாட்டில் இந்துத்துவ கட்சிகளும், கேரளத்தில் இடதுசாரிகளும், பஞ்சாபில் அகாலிகளும்.
வடநாட்டில் தலித் இயக்கம் உருவாகி வந்தபோது காந்தியை கடுமையான எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு மேலும் வலிமை பெற்றது. அதற்கேற்ப காந்தி காங்கிரஸின் சின்னமாக மட்டுமல்லாமல் இந்திய அரசின் சின்னமாகவும் மாறிவிட்டிருந்தார். இந்தியாவின் மைய ஆட்சியின், அதிலிருந்த ஆதிக்கத்தின் சுரண்டலின் ஊழலின் படிமமாக அவரை ஐம்பதாண்டுக்கால காங்கிரஸ் மாற்றியது.
அத்துடன் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் சாதி, மத, இன, பிராந்தியப் பிரிவுகளை மட்டுமே பிரதிநிதிகரிக்கும் சின்னஞ்சிறு தலைவர்கள் அனைவருமே பூதாகரமான பிம்பத்துடன் வளர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். காந்தியையோ நேருவையோ அக்கக்காக கிழிக்கும் அறிவுஜீவிகள் சாடையாகக்கூட அவர்களைப்பற்றி பேசமுடியாத நிலை உருவாகியிருக்கிறது.
அவர்கள் வளர்க்கப்பட்டபோது காந்தி கீழே இறக்கப்பட்டார். காரணம் அவர்களில் பெரும்பாலானவர்களின் பிம்பம் காந்திக்கு எதிராகவே உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்தி இந்தியசமூகத்தை ஒருங்கிணைத்த ஆளுமை என்றால் இவர்கள் அதை பிளவுபடுத்த முயன்ற ஆளுமைகள். காந்தி இந்திய விடுதலைக்காக போராடினார். இவர்கள் அந்த விடுதலையின் லாபங்களில் தங்கள் தரப்புக்கான பங்கைபெறுவதற்காக முண்டியடித்தார்கள்.
இவர்களில் பலர் சுதந்திரப்போராட்டத்தின்போது தங்கள் லாபத்துக்காகவும் தங்கள் வகுப்புகளின் லாபத்துக்காகவும் பிரிட்டிஷாருடன் துணை நின்றவர்கள். காங்கிரஸ் மீதான ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவளித்தவர்கள். ஆனால் காங்கிரஸின் போராட்டத்தால் சுதந்திரம் கிடைத்தபோது அதன் அதிகாரத்துக்கு முண்டியடித்தார்கள். அரசியல்கட்சிகளாக உருமாறி தேர்தலுக்குள் புகுந்தார்கள். தங்கள் பிராந்திய,வகுப்பு நலன்களை முன்னிறுத்தி பிளவுப்போக்கை முன்னெடுத்து அதிகாரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.
இந்த மனிதர்களை தலைவர்களாக ஆக்கவேண்டுமென்றால் இவர்களை நியாயத்துக்காக போராடியவர்களாக ஆக்க வேண்டியிருக்கிறது. அதற்காக காந்தியையும் காங்கிரஸையும் இவர்கள் முன்வைத்த வகுப்பு, பிராந்திய, சாதி நலன்களுக்கு எதிரான சக்தியாக சித்தரித்தார்கள். தங்களுக்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாக கூவினார்கள். அதற்கு எதிராக போராடியவர்களாக தங்கள் தலைவர்களை வருணித்தார்கள் இந்தியா முழுக்க இப்படித்தான் காந்திக்கு எதிரான பேச்சுகள் ஆரம்பமாயின.
அகாலிகளும் திராவிட இயக்கத்தவருமே அந்தப்போக்கை தொடங்கி வைத்தவர்கள் . இவர்களின் அரசியல் பேச்சுகள் அனைத்துமே காந்தியையும் நேருவையும் கரிபூசுவதில் இருந்தே தொடங்குவதைக் காணலாம். காந்தியையும் நேருவையும் பெரும் அரசியல் சதிகாரர்கள் என்று ஒத்துக்கொண்டால் ஒழிய நம்மால் இவர்களை சாதனையாளர்கள் என்றோ அரசியல் போராளிகள் என்றோ சொல்ல முடியாது.
ஆச்சரியம் என்னவென்றால் இந்தியா முழுக்க உள்ள எல்லா வகுப்புவாத, சாதியவாத, பிராந்தியவாத குழுக்களும் காந்தியின் பாரபட்சம் மற்றும் துரோகம் பற்றியே பேசுகின்றன என்பதே. இந்தியாவில் உள்ள அத்தனை பிரிவினருக்கும், வடக்கு- தெற்கு, முற்போக்கு- பிற்போக்கு, இந்து- முஸ்லீம் அனைவருக்கும், ஒரேசமயம் துரோகம்செய்ய ஒரு தனிமனிதரான காந்தியால் எப்படி முடிந்தது என்று என்றாவது தலைமுறைகள் வியக்கக்கூடும்!
இதற்கப்பால் சென்று காந்தியை காண்பதற்கான கல்வித்திறனும், ஆய்வுத்திறனும் நம் ஆய்வாளர்களிடமும் பெரும்பாலும் இருக்கவில்லை. ஒருபக்கம் ஆதிக்க எதிர்ப்பு என்ற பேரில் காந்தி கடுமையாக நிராகரிக்கப்பட்டார். மறுபக்கம் அவரை புனிதராகவும் தேசியத்தின் அடையாளமாகவும் மட்டுமே முன்னிறுத்தும் சம்பிரதாய காந்தியம் பேசப்பட்டது. அவரை ஒரு அரசியல்சிந்தனையாளராகவும், தத்துவவாதியாகவும் முன்வைக்க ஆளிருக்கவில்லை. இந்த நிலை அரைநூற்றாண்டுக்காலம் நீடித்த சூழலில் இருந்தே நமது பேச்சுகள் எல்லாமே நடந்துகொண்டிருக்கின்றன.
காந்தி மறுவாசிப்பு
கடந்த இருபதாண்டுக்காலமாக காந்தியைப்பற்றி அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்கள், பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் எழுதிய முக்கியமான பல நூல்கள் வரிசையாக வெளிவந்து நம்மில் சிலரை மட்டும் ஆக்கபூர்வமாக சிந்திக்க வைத்தன. இவை எதுவுமே காந்தியை வெறுமே புகழக்கூடிய நூல்கள் அல்ல. அவரை விரிவான தகவல்களின் அடிப்படையில் புறவயமாக விவாதிக்கக்கூடியவை மட்டுமே.
இன்றைய காந்திய விவாதங்களில் மேற்கோள் காட்டப்படும் சில முக்கியமான நூல்கள் உள்ளன. தாமஸ் வெபர், ரொனால்ட் டெஜெக், டேவிட் ஹார்டிமான், பார்ட் க்ருசால்ஸ்கி, கிளாட் மார்கொவிட்ஸ், ஜீன் ஷார்ப், டென்னிஸ் டால்ட்டன், அந்தோனி பாரெல்,மார்ட்டின் கிரீன் போன்ற குறைந்தது ஐம்பது ஆசிரியர்களை நாம் இன்று பட்டியலிட முடியும்.
என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் மார்ட்டின் கிரீனின் கருத்தியல் பங்களிப்பு இருப்பதை வாசகர்கள் கண்டுகொள்ளலாம். நான் அவரை அடிக்கடி மேற்கோள்காட்டுவதில்லை, ஆனால் அவரது ஆய்வுமுறை எனக்கு மிகவும் நெருக்கமானது. குறிப்பாக ‘காந்தி புதிய கால புரட்சியி குரல்’ [Gandhi: Voice Of A New Age Revolution ] என்ற முக்கியமான நூல். காந்திய இலட்சியவாதம் எப்படி தல்ஸ்தோயில் இருந்து முளைக்கிறது என விரிவாக ஆராய்கிறார் கிரீன். ராஜ்மோகன் காந்தியின் காந்தி குறித்த நூலாகிய ‘காந்தி , மனிதர், அவரது மக்கள், சாம்ராஜ்யம்’ என்ற நூல் பெரிதும் மார்ட்டின் க்ரீனால் பாதிக்கப்பட்டது [Gandhi: the man, his people, and the empire, Rajmohan Gandhi]
ராமச்சந்திர குகா, அஷிஷ் நந்தி, டி.ஆர்,நாகராஜ் போன்ற இந்திய சிந்தனையாளர்களின் ஆய்வுகள் மேலைநாட்டு ஆய்வாளர்கள் கடும் உழைபபல் திரட்டிய தகவல்களின் மேல் நிகழ்த்தப்பட்ட மேலதிக ஆய்வுகளாகவே அமைந்தன என்றாலும் அவை முக்கியமானவை. பொதுவாக இந்திய ஆய்வாளர்களில் மிகமிகச்சிலரின் ஆய்வுகள் தவிர எவையுமே உண்மையான கள ஆய்வையோ விரிவான ஆவணவாசிப்பையோ நிகழ்த்தவில்லை என்பதே உண்மை.
இன்று நாம் அக்கால வரலாற்றை வீரநாயகர்கள், எதிர்நாயகர்கள், துரோகங்கள் போன்ற உருவகங்கள் இல்லாமல் அரசியல் செயல்பாடுகள் மூலம் விழித்தெழும் ஒரு தேசத்தின் முரணியக்க வரலாறாக அணுக இந்நூல்களே நமக்கு உதவிசெய்கின்றன. பல்வேறு அதிகாரவிசைகள், பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி முந்தியும் பிந்தியும் நவீன வெளிக்கு வருவதன் அரசியல் அது. இன்றைய ஆய்வாளனுக்கு அங்கே தெரிவது சமூக ஓட்டங்களின் சாத்தியக்கூறுகளின் ஆட்டம் மட்டுமே. அதில் ஒவ்வொரு மனிதரும் வகித்த பாத்திரம் என்ன என்று மட்டுமே அவன் ஆராய்வான்.
காந்தியைப்பற்றிய அஷிஷ் நந்தியின் மிகப்பொருத்தமான ஒரு வரையறையைச் சொல்லி பேச ஆரம்பிப்பது நல்லது. நான்கு காந்திகள் இருக்கிறார்கள் என்கிறார் அஷிஸ் நந்தி. 1. இந்தியதேசியத்தின் அடையாளமாகி நிற்கும் காந்தி 2. மரபான காந்தியவாதிகளின் காந்தி 3. சூழலியர்கள் மற்றும் இயற்கைவாதிகளின் காந்தி 4. காந்தியவழிமுறைகள் வழியாக சென்று நாம் காணும் காந்தி.
முதல் காந்தி உயிரற்ற வெற்று பிம்பம் என்கிறார் அஷிஷ் நந்தி. இரண்டாவது காந்தி சில நன்மைகளை அளிப்பவர். நல்லவர். ஆனால் ஓய்வுபெற்றவர்,சலிப்பூட்டுபவர். சமூக இயக்கத்துக்குச் சம்பந்தமில்லாமல் ஆசிரமங்களில் ஒடுங்கியவர். மூன்றாவது காந்தி உலகமெங்கும் பேசப்படுபவர். போராளி. ஆனால் மிகமிக ஆகிருதி குறைக்கப்பட்ட ஒரு காந்தி அவர்.
நான்காவது காந்தி காந்தியம் என்று இன்றைய பின்நவீனத்துவ உலகம் அடையாளம் காணக்கூடிய ஒரு கொள்கையில் இருந்து நாம் கண்டடையும் காந்தி. அவரே மார்ட்டின் லூதர் கிங்கின், நெல்சன் மண்டேலாவின், ஆங் சான் சூகியின், பராக் ஒபாமாவின் காந்தி. அவர்களுக்கு காந்தி இந்திய சுதந்திரப்போராட்டத்தில் யார் என்று தெரியாது. அவர் பனியாவாக இருந்தாலும் பார்ப்பனராக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் முன் இருப்பது காந்தியம் என்ற போராட்டமுறை. அதன் தரிசனம். அது காந்தியை விட மிகப்பெரியது என்கிறார் அஷிஷ் நந்தி. காந்தி இறந்தாலும் அது வாழும்.
போலந்தில் ருஷ்யக் கொடுங்கோன்மைக்கு எதிராக லே வலேசா கிளர்ந்தெழுந்த போது ‘வலேசா எங்கள் காந்தி’ என்று தொழிலாளார்கள் கூவினார்கள் என்கிறார் அஷிஷ் நந்தி. சுருட்டுபிடிக்கிற ஸ்காட்ச் அருந்துகிற காந்தி! பெனிட்டோ அகிவினோ பிலிப்பைன்ஸில் கொல்லபப்ட்டபோது அவரது ஆதரவாளார்கள் சாலைகளில் நின்று கதறினார்கள் ‘பெனிட்டோ எங்கள் காந்தி!’ என்று ! ஆங் சான் சூகி சமரசமில்லாத காதியவாதியாக குற்றம்சாட்டப்பட்டபோது அவர் காந்தியை வாசித்திருக்கவேயில்லை. ஆனால் அவரிடம் இருந்தது காந்தியம் என்கிறார் அஷிஷ் நந்தி.
ஏனென்றால் இங்கே காந்தி ஒரு மனிதரல்ல. அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அந்த நான்காவது காந்தியைத்தான் இன்றைய நவீன சிந்தனையாளர்கள் அவரது பல்லாயிரம் பக்கங்களில் இருந்து எழுதி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுயநல அரசியலின் முட்டிமோதல்களில், சேறுபூசல்களில் காந்தி இன்று நம் கண்ணுக்குத்தெரியாதவராக இருக்கலாம். ஆனால் இன்று அவர் உலக நாகரீகத்தின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று. அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிராக எதுவுமே இல்லாத எளிய மக்கள் எங்கெல்லாம் போராட இறங்குகிறார்களோ அங்கெல்லாம் காந்தி முளைத்து வருகிறார்.
”சர்வாதிகாரிகள் காந்தியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் ஏனென்றால் அவரிடம் ஆயுதமில்லை. புரட்சியாளர்கள் கிண்டல்செய்கிறார்கள். ஏனெறால் அவர் அகிம்சையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அந்த குறைத்து மதிப்பிடலுக்கு எப்போதுமே அவர்கள் அதிக விலைகொடுக்க நேர்கிறது” என்று அஷிஷ் நந்தி சொல்கிறார் ”காந்தியை தேர்வு செய்யாமலிருப்பதே லௌகீகமான புத்திசாலித்தனம். அவர் அபாயகரமானவர்!” [Gandhi after Gandhi : Ashis Nandy] இந்த விவாதத்தில் முன்வைக்கப்படும் காந்தி அந்த நான்காவது காந்தி. காந்தியம் வழியாக ஒருவர் சென்றடையக்கூடிய காந்தி.
நாவற்றவர்களின் குரல்
இந்த விவாதத்தில் உருவாகி வரக்கூடிய அடிப்படையான ஒரு சிக்கலை முதலிலேயே பேசிவிடவேண்டும். இந்தியச் சுதந்திரத்தின் கனிகளை துய்க்க பாய்ந்து விழுந்து பூசலிட்ட,இட்டுவரும் பல்வேறு வகுப்புவாத, இனவாத, பிராந்தியவாத பிரிவினைச் சக்திகள் காந்திக்கு எதிராக தங்களை நிறுத்திக்கொள்ளும்போது எளிதாக அம்பேத்காரையும் தங்களைப்போன்ற ஒருவராகச் சேர்த்துக்கொள்கின்றன. அம்பேத்காரை எதிர்மறையாகக் காட்டவிரும்பும் சக்திகளுக்கும் அந்த தோற்றம் மிக வசதியானது. ஆனால் அம்பேத்காரை அவ்வாறு அவர்கள் வரிசையில் நிறுத்துவது போல அவருக்கு செய்யும் அநீதி ஒன்றில்லை.
அம்பேத்கார் அவர்களில் ஒருவரல்ல. அவரது ஆளுமையும் சிந்தனைவீச்சும் அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத ஒன்று. இந்திய மரபின் மாபெரும் தத்துவவாதிகளில் ஒருவர் அவர். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இன்றுவரையிலும் நீடிக்கும் அதன் ஜனநாயக அடிப்படைக்கும் அவரது பங்களிப்பு மகத்தானது. இன்றைய இந்தியாவின் அத்தனை வகுப்புகளுக்கும் இனங்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு தேசியக் கட்டுமானத்தை உருவாக்க உழைத்த முன்னோடி அவர்
இந்திய அரசியலில் அம்பேத்காரின் போராட்டம் சமூக அரசியல் லாபங்களுக்கான போர் அல்ல. மாறாக அடிப்படை உரிமைகளுக்கான சமர். வாழும் உரிமைக்கான போர் அது. அவருக்கும் பிறருக்குமான அந்த வேறுபாடு எப்போதும் நீடிக்கிறது. நூற்றாண்டுகளாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் தலைவராக வரலாற்றின் எந்த ஒரு வாய்ப்பு வழியாக அவர் வந்திருந்தாலும் அதுவே சாத்தியமானது என்றே சொல்ல வேண்டும். தன் மக்களின் உரிமைகளுக்காக அவர் எந்த வகையில் போராடியிருந்தாலும் அதுவே வரலாறு அளித்த வழி என்றே பொருள்படும்
இந்தியாவில் பிற மக்கள் மேல் ஒரு வன்முறையை துவங்க எவருக்கேனும் நியாயம் இருந்தது என்றால் அது அம்பேத்காருக்கு மட்டுமே. இந்தியாவில் பிற சமூகம் மீது வெறுப்பைக் கக்கியிருந்தாலும் அதை நியாயப்படுத்தியிருக்க முடியும் என எவரையேனும் சொல்ல முடியும் என்றால் அது அம்பேத்காரையே. ஆனால் கடைசிக்கணம் வரை அகிம்சை வழியில் நம்பிக்கைகொண்ட தலைவராகவே அவர் இருந்தார். உறுதியான ஜனநாயகவாதியாகவே அவர் இருந்தார்.
ஆகவேதான் அவரது வகுப்புக்கோ அவர் பரிந்துபேசிய மக்களுக்கோ மட்டுமல்ல மானுட விழுமியங்கள்மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு தனிமனிதனுக்கும் ஆதரிச புருஷராக இருக்க தகுதி கொண்டவர் அவர்.
அம்பேத்கார் இந்து சமூகத்தின் நூற்றாண்டுக்கால சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து இழிவுகளையும் அடைந்து வளர்ந்து வந்தவர். அதில் இருந்தே அவரது அனைத்துச் சிந்தனைகளும் ஆரம்பிக்கின்றன. அதேசமயம் அம்பேத்கார் அவர் இந்து சமூகத்திற்குள் எழுந்து வந்த சீர்திருத்த அலையின் சிருஷ்டியும்கூட! இன்றுவரை மொத்த தலித்துக்களும் உத்வேகத்துடன் உச்சரிக்கும் அம்பேத்கார் என்ற பெயர் அம்பேத்காரின் ஆசிரியரும் வழிகாட்டியுமான மகாதேவ் அம்பேத்கார் என்ற தேஸாஸ்த பிராமணரின் குலப்பெயராகும். குருவின் பேரில் இருந்து, அவரது வாரிசாக தன்னை நினைத்து, அம்பேத்கார் சூட்டிக்கொண்டது.
மகாதேவ் அம்பேத்கார் தியானேஸ்வரின் பக்திமரபில் வந்தவர். சாதி மத ஆசாரங்களுக்கு எதிரானவராக தன்னை அமைத்துக்கோண்டவர். அன்று மகாராஷ்டிராவில் உருவாகி வந்த மதச்சீர்திருத்த இயக்கங்களில் ஈடுபாடுள்ளவர். பீமராவ் அம்பேத்கரின் ஆரம்பகால கல்விக்கும் வளார்ச்சிக்கும் பேருதவி புரிந்திருக்கிறார். அதற்கான தன்னுடைய ஆசாரமான சாதியின் எதிர்ப்பையும் ஒதுக்குதலையும் சந்தித்திருக்கிறார்.
மேலும் அம்பேத்கார் மிகச்சிறந்த மாணவருக்கான கல்விக்கொடையை பரோடாவின் கெய்க்வாட் மன்னர் அவர்களிடம் இருந்து பெற்று தன் உயர்கல்வியை முடித்தார் என்பது. பரோடா அக்காலத்தில் மோசமான சாதிய ஒதுக்குமுறை கொண்ட பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தக் கல்விக்கொடைக்கு அது தடையாக இருக்கவில்லை. அதாவது ஒருபக்கம் சாதிய ஒடுக்குமுறை இருந்தது. மறுபக்கம் அதற்கு எதிரான சீர்திருத்தக் கருத்துக்கள் உருவாகி வந்தன. அம்பேத்கார் இந்த இரு சக்திகளின் முரணியக்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளுமை!
அம்பேத்கார் இந்திய அரசியலுக்குள் நுழைந்த தருணம் கவனத்திற்குரியது. 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் முன்வைத்தது. இது இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதனபடி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். நிர்வாக அதிகாரம் உள்ள மாகாண அரசுகள் அமைக்கப்படும். அதில் இந்தியர்கள் தேர்தலில் போட்டியிட்டு கலந்துகொள்ள முடியும்.
இந்தச் சட்டம் ஏன் முன்வைக்கப்பட்டது என்பதும் முக்கியம். 1918 ல் காந்தியின் பெரும்புகழ்பெற்ற சம்பாரன் சத்யாகிரகப்போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. காந்தி இந்தியாவெங்கும் அறியப்படலானார். தேசப்பிதா என்றும் மகாத்மா என்றும் அவரை இந்தியாவில் சொல்ல ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் மேற்கொண்ட முதல் மக்கள் போராட்டம் இதுவே. மேலும் மேலும் காங்கிரஸில் மக்கள் பங்கேற்பு அதிகரித்து ஒரு கட்டத்தில் அது ஒரு மாபெரும் மக்களியக்கமாக மாறியது. இந்த எழுச்சியே மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது.
இன்று ‘மாற்றுவரலாறு’களை எழுதுபவர்கள் அக்காலத்தில் இந்தியவெங்கும் சிறு சிறு குழுக்களாக, எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தும் ஆர்வமோ வலிமையோ இல்லாதவர்களாக, இருந்த சிலரின் மனுக்களுக்குச் செவிசாய்த்துத்தான் மாபெரும் ஏகாதிபத்தியம் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களுடன் வந்தது என்று எழுதுகிறார்கள். போராட்டமில்லாமல் உரிமை இல்லை என்ற தங்கள் அடிப்படைப்பாடத்தை அப்போது வசதியாக மறந்துவிடுகிறார்கள். எந்த ஒரு உரிமையும் யார் போராடினார்களோ அவர்களுக்கே உரியதென்பதே வரலாற்றின் நியாயம். காங்கிரஸ் அன்றி எவருமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எந்தப்போராட்டத்தையும் சிறிய அளவில்கூட செய்தவர்கள் அல்ல. பிரிட்டிஷார் அளித்த உரிமைகளைப் பங்குபோட மட்டுமே அவர்கள் வந்தார்கள் என்பதே வரலாறு.
காந்தி இந்தச் சீர்திருத்தங்களின் உள்நோக்கத்தை உடனே புரிந்துகொண்டார். பிரிட்டிஷாருக்கு காங்கிரஸை நன்றாகவே தெரியும். அரச பதவிகளுக்காக பிரிட்டிஷார்முன் கைகட்டி நின்றவர்களால் ஆனதே அதன் பெரும்பகுதி. சிறிய சலுகைகளைக் கொடுத்து கால் நூற்றாண்டுக்காலம் மிதவாதிகளை கட்டுக்குள் வைத்திருந்த அனுபவம் வெள்ளையருக்கு உண்டு. அந்த மூத்த மிதவாதிகளின் தலைமுறை காங்கிரஸ¤க்குள் வலுவாகவே இருந்தது. முதன்மையாக அவர்களுக்காக அளிக்கப்பட்ட தூண்டில்தான் மாகாண அரசுகள். மற்றும் காங்கிரஸ¤க்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த சக்திகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையும்கூட.
ஓவ்வொருமுறை அத்தகைய ஆட்சி வாய்ப்பு முன்வைக்கப்படும்போதும் காங்கிரஸ் பிளந்திருக்கிறது. 1908ல் மிண்டோ மார்லி பரிந்துரை சுரேந்திரநாத் பானர்ஜியை காங்கிரஸை பிளக்கும்படிச் செய்தது. 1922 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம் மோதிலால்நேருவையும் சி.ஆர்.தாஸையும் சுயராஜ்யக் கட்சியை உருவாக்கச்செய்தது.
ஆகவேதான் காந்தியின் காங்கிரஸ் மாண்டேகு சேம்ஸ்போர்டு பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. அந்த மண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டி முன் வாக்குமூலம் அளிப்பதற்காக அன்று ஒரு மும்பையில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக செயலாற்றிக்கொண்டிருந்த அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அதுவே அவரது அரசியல் நுழைவாகும். பெரும்பாலும் பிரிட்டிஷ் ஐ.ஸி.எஸ் அதிகாரிகளால் ஆன இக்கமிட்டி சவுத்பரோ கோமகனின் தலைமையில் அமைந்திருந்தது.
இந்தக் கமிட்டியின் நோக்கம் இந்தியாவின் உண்மையான அரசியல் சூழலை அறிவது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு சரியான ராஜதந்திர அமைப்பும் செய்வதைப்போல காங்கிரஸ் என்ற தன் எதிரியின் வலிமையையும் பலவீனங்களையும் அறிவதுதான் அதன் உண்மையான நோக்கம்.
மேலும் காங்கிரஸ் இந்தியாவின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் அல்ல, வேறு பலரும் இருக்கிறார்கள் என்று காட்ட அதன்வழியாக பிரிட்டிஷார் முயன்றார்கள். இப்போது அஸ்ஸாம் அல்லது இலங்கைப் போராளிகளுடன் பேசும்போது இந்தியாவும் இதையே செய்கிறது என நாம் அறிவோம். இது எப்போதுமே அரசுகள் செய்யும் ஒரு வெற்றிகரமான ராஜதந்திரம். எந்தப்போராட்ட அமைப்பையும் உடனடியாக உள்மோதல்களுக்கு இட்டுச்செல்லும் இது.
அந்தக்கமிட்டியின் முழு விவரங்களையும் நாம் இப்போது பார்க்கலாம். இந்தியாவில் காங்கிரஸ் உருவாகி அரைநூற்றாண்டாகிவிட்டிருந்தது. படிப்படியாக இந்திய சமூகத்தை காங்கிரஸ் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்கியது. அதன் ஆகபெரிய மக்கள் இயக்கம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் அழுத்த்தம் காரணமாகவே அக்கமிட்டி உருவாகிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அந்த வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் 1908ல் காங்கிரஸால் முழுக்க நிராகரிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்தங்களை தாழ்த்தப்பட்டோரையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ‘சிறுபான்மையின’ரையும் சேர்த்துக்கோண்டு விரிவாக்கம்செய்து இந்திய சமூகத்தை ‘ஆய்வு’ செய்ய ஆரம்பித்தது.
இந்திய சமூகத்தை பலவகையான வகுப்புகளின் ஒட்டுமொத்தத் தொகையாக அக்கமிட்டி வரையறை செய்தது. இந்த வகுப்புகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியவை என்று அது தீர்மானித்துக்கொண்டது. அத்தனை வகுப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ‘பிரதிநிதிகள்’ யாரென தாங்களே தீர்மானித்து அவர்களை அழைத்து, அவர்கள் அனைவரின் தரப்புகளையும் கேட்டு பதிவுசெய்துகொண்டது. இருநூறு வருடம் பிரிட்டிஷார் இந்தியாவின் பேதங்களை ஆழமாக கவனித்திருக்கிறார்கள், அனைத்து ஞானமும் அப்போது உதவிக்கு வந்தது.
மிகவும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் ஒரு திட்டம் இது என்பதை எவரும் உணரலாம். மொத்த இந்திய சமூகமே ஒன்றுடன் ஒன்று போரிடும் குழுக்களாக உருவகிக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுக்கள் முன்னால் அவர்கள் முட்டிமோதி பிய்த்துப்பிராண்டி சண்டை போடும் பொருட்டு தூண்டிலில் இரட்டை ஆட்சிமுறையும், மாகாண அரசுகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்தியாவின் யதார்த்தம் தெரிந்த ஒருவருக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும்?
இன்று பலரும் எண்ணுவதுபோல பிரிட்டிஷ் அரசு தலித்துக்களையும் முஸ்லீம்களையும் அழைத்து அவர்களின் தரப்பைக் கேட்கவில்லை. மாறாக அன்று எந்த குழுக்கள் எல்லாம் காங்கிரஸின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்புள்ளனவோ அவர்களையெல்லாம் அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்களில் அன்றைய பழைமைவாத பிராமணர்களும் பெருவணிகர்களுமே அதிகம். ஒவ்வொருவருமே தங்கள் வகுப்புக்குத் தனிச்சலுகைதான் கேட்டார்கள்.
அவர்களின் பெயர்களை இன்று பார்க்கும்போது மூவர் மட்டுமே உண்மையான அரசியல் கொண்டவர்களாக பிற்காலத்தில் ஆனார்கள் என்பதை காணமுடிகிறது. அம்பேத்கார், ஜின்னா இருவரைத்தவிர மில் தொழிற்சங்கத் தலைவரான வாடியா. இவ்வாறு பிரிட்டிஷார் உருவாக்கிய ஒரு பெரும் ராஜதந்திரத்தின் பகுதியாக அரசியலுக்குள் நுழைந்தவர் அம்பேத்கார். அவர் பங்குபெற்ற அந்த சவுத்பரோ கமிட்டி முன் ஆஜரானவர்களின் பெயர்களை இன்று பார்த்தால் அப்பட்டியலில் அம்பேத்காரைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பதுக்கல்வணிகம் செய்த பணமுதலைகள், அதிகாரத் தரகர்கள், கவர்னர்களுடன் குடிக்க அமரும் ராவ்பகதூர்கள், குத்தைகைதாரர்கள்….
இவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஆதரவாளராக, பிளவுபடுத்தும் கருவியாக, அரசியலில் நுழைந்த அம்பேத்கார் அவ்வாறே காங்கிரஸாலும் காந்தியாலும் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார், அது மிக இயல்பானதே.
இங்கே அருண் ஷ¥ரி போன்றவர்கள் செய்யும் தந்திரம் என்னவென்றால் அதுவே அம்பேத்கார் என்று காட்ட அந்த ஆவணங்களை பயன்படுத்துவதே. அதாவது காந்தியை சாதியவாதி என்று முத்திரைகுத்த அவரது ஆரம்பகால பேச்சுக்களை மேற்கோளாக்கும் தலித்தியர்கள் செய்யும் அதே உத்தி. அம்பேத்காரின் அரசியல் மிகத்தீவிரமாக பல்வேறு படிகள் வழியாக பரிணாமம் அடைந்த ஒன்று.
அதிகாரத்தின் பேரமேஜையில்…
காங்கிரஸில் ஒரு பெரும் பிளவை உருவாக்க பிரிட்டிஷார் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சிக்கு எங்குமே ஆதரவு கிடைக்கவில்லை. காந்தியின் ஒருமைப்படுத்தும் வல்லமை எப்படிப்பட்டது என்று பிரிட்டிஷார் உணர்ந்தார்கள். 1921ல் காங்கிரஸ் காந்தியின் தலைமையில் முழுச்சுதந்திரமே [ஸ்வராஜ்] தன் இலக்கு என்று அறிவித்தது. அன்னியத்துணி புறக்கணிப்புப்போராட்டம் ஆரம்பித்தது.
காந்தி அவருக்கும் காங்கிரஸ¤க்கும் கிடைத்த மக்களாதரவின் பலத்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பெரிய போராட்டங்களை உருவாக்கினார். ஒத்துழையாமைப் போராட்டம். அதன்பின் 1930ல் அவரது மிகப்பெரிய போராட்டமான உப்பு சத்தியாக்கிரகம். உச்சபட்ச மக்கள் கலந்துகொண்ட போராட்டம் இது– இந்தியவரலாற்றில் அதன் பின்னரும் கூட அத்தகையதோர் ஒட்டுமொத்த தேசியப்போராட்டம் நிகழ்ந்ததில்லை.
கைதுகள் அடக்குமுறைகளுக்குப் பின்னர் தொடர்ச்சியான மக்கள்போராட்டங்களின் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இறங்கிவந்தனர். சமரச நோக்குடன் முதல் வட்டமேஜைமநாடு 1930ல் நடந்தது. 1931 மார்ச் மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் நடந்து போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டு காந்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்.
இக்காலகட்டத்தில் அம்பேத்கார் என்ன செய்துகொண்டிருந்தார்? 1919ல் அவர் சவுத்பரோ கமிட்டிமுன் பேச அழைக்கப்பட்டதுமே அவரது பெயர் பரவ ஆரம்பித்தது. 1920ல் அம்பேத்கார் ஊமைகளின் தலைவர் [மூகநாயக்] என்ற இதழை ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையைப் பற்றி பேச ஆரம்பித்தார். மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைப்பேசும் அறிவுஜீவியாக அறியப்பட்டார்.புறக்கணிக்கப்பட்டோர் கருத்துருவாக்க சபை [பகிஷ்கிருத ஹிதகாரிணி சபா] என்ற அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை பிரச்சாரம் செய்தார். இந்தச்சபை தாழ்த்தப்பட்டவர்களுக்கான எல்லா கமிட்டி முன்னும் அறிக்கைகளை அளித்திருக்கிறது.
இக்காலகட்டத்தில் அம்பேத்கார் எழுதிய எழுத்துக்களில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிரிட்டிஷ் ஆதரவும் ஓங்கி ஒலிக்கின்றன. காங்கிரஸை சாதி இந்துக்களின் அமைப்பு என்று முத்திரை குத்தும் அம்பேத்கார் அது இந்தியாவின் பிரதிநிதி அல்ல என்று வாதிடுகிறார். பிரிட்டிஷார் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க முடியும் என்று கோருகிறார்.
காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே நேரடியாகவும் மறைமுகமாகவும் விவாதங்கள் நிகழ்ந்தன. அம்பேத்காரை காந்தி இந்தியப்போராட்டத்தைப் பிளவுபடுத்த பிரிட்டிஷார் முன்னால் நிறுத்தும் பல்வேறு பொம்மைமனிதர்களில் ஒருவராகவே ஆரம்பத்தில் கருதினார். ஏற்றத்தாழ்வற்ற ஒரு சாதியமைப்பும், தொழில்சார்ந்த வருண அமைப்பும், தான் கனவுகாணும் கிராமசுயராஜ்யத்தை உருவாக்க இன்றியமையாதவை என எண்ணம் கொண்டிருந்தார்.
காந்தியை கடுமையாக விமரிசித்தாலும் அம்பேத்கார் காந்தியை நோக்கி ஆழமாக ஈர்க்கப்பட்டமைக்கு ஆகச்சிறந்த உதாரணம் 1927ல் அவர் நடத்திய முதல் மக்கள்போராட்டமான மகத் குடிநீர் சத்யாக்கிரகம். பிரிட்டனில் கல்விகற்று ஐரோப்பிய நாகரீகம் மீது நம்பிக்கை கொண்டிருந்த அறிவுஜீவியான அம்பேத்கார் நடைமுறையில் மக்கள் போராட்டத்தை நடத்த காந்தி காட்டிய சத்யாக்கிரகமே மிகச்சிறந்த போராட்டவழிமுறை என உணர்ந்தார்.
1928 ல் சைமன் கமிஷனுக்கு உதவிசெய்ய பம்பாய் ராஜதானி கமிட்டி [Bombay Presidency Committee] அமைக்கப்பட்டது.பம்பாய் மாகாணசபையின் உறுப்பினராக இருந்த அம்பேத்கார் அந்த கமிட்டியில் ஆலோசனைசொல்ல அழைக்கப்பட்டார். பரிஷ்கிருத ஹிதகாரிணி சபாவின் சார்பில் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மீதான விசுவாசமும் அவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தொனித்தாலும் ஆழத்தில் அவர்களின் நோக்கங்கள் மீது அவர் ஐயப்பட்டதையும் காணலாம்.
1931ல் உப்புசத்யாகிரகப் போராட்டத்தின் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம் உருவாகி அதன் வாக்குறுதியின்படி இரண்டாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் சாதி சமய பேதமில்லாமல் பங்குகொண்ட ஒரு மாபெரும் போராட்டம் சமரசமாகி அப்போராட்டத்தின் தலைவனிடம் பேச்சுவார்த்தை நடத்தும்பொருட்டு கூட்டப்பட்ட மாநாடு அது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த மாநாட்டில் அம்பேத்கார் பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டார். அவர் அங்கே இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டார். இந்திய தாழ்த்தப்பட்டோரின் ஒரே பிரதிநிதியாக அங்கே நிற்க அப்போது அம்பேத்கார் அம்மக்களால் எவ்வகையிலும் தேர்வு செய்யப்படவில்லை — அவர் அதற்கு முழுக்க முழுக்க தகுதிகொண்டவர் என்பது வேறு விஷயம். அந்த மாநாட்டில் அம்பேத்கார் காந்தியை மிகக் கடுமையாக நேரடியாக எதிர்த்துப்பேசினார். பேச்சின் பல இடங்கள் ராஜதந்திர உரையாடலின் எல்லைகளை மீறின. காந்தி அங்கே அப்போது ஒரு தனி மனிதனாக சென்றிருக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் ஒரே பிரதிநிதியாகச் சென்றிருந்தார்
சொல்லப்போனால் அந்த மாநாட்டை தகர்க்க அம்பேத்காரை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள். அம்மாநாட்டில் பிரிட்டிஷார் எல்லா வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்ற பேரில் இந்தியாவின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகளை அழைத்து அவர்களில் ஒருவராக காந்தியையும் அமரச்செய்து பேச முற்பட்டார்கள். காந்தி தவிர அங்கே வந்த அத்தனைபேருமே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள், அவர்களால் அழைத்துவரப்பட்டவர்கள். அம்பேத்கார் அம்மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரினார். அதேபோல அங்கே வந்த ஒவ்வொரு பிரதிநிதியும் சிறப்பு வாக்குரிமை கோரினார்கள்!
ஏற்கனவே முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இரட்டை வாக்குரிமை இருந்தது என்பதையும் அது உருவாக்கிய எதிர்மறை விளைவுகளை காந்தி கண்டுகொண்டிருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அம்பேத்காரின் கோரிக்கையின் நியாயம் என்னவாக இருந்தாலும் சரி, அந்த மாநாட்டில் காந்தியை அவமானப்படுத்தி வெளியேற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரம் மேற்கொண்ட உத்தியையே அவர் நிறைவேற்றினார்.
இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி முன்வைத்த எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. ‘வெறும் கையுடன் திரும்புகிறேன்’ என்று காந்தி காங்கிரசுக்குச் சொன்னார். ஆனால் அம்பேத்கார் கோரிய வகுப்புவாரி இரட்டை வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டது. அதாவது, யார் மக்கள் பங்கேற்புள்ள போராட்டத்தை நடத்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்களோ அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பிரிட்டிஷார் அவர்களே அழைத்ததனால் வந்து பங்கேற்ற ஒருவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
அவ்வாறு காங்கிரஸை முழுக்கவே புறக்கணித்து , காங்கிரஸின் போராட்டங்களை பிளவுபடுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதே இரட்டை வாக்குரிமை. அதை காந்தி அவரது முழுச் சக்தியுடன் எதிர்த்ததை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் காந்தி அச்சந்தர்ப்பத்தில்கூட அம்பேத்காரை குறைசொல்லவில்லை. அவரது நோக்கங்களை ஐயப்பட்டு ஏதும் சொல்லவில்லை. அந்த ஏற்பாட்டை தான் ஏற்கமுடியாது என்றார். அதற்கான தன் தரப்பு விளக்கங்களை முன்வைத்தார்.
இர்வின் பிரபுவுக்குப் பின்னர் வந்த வெலிங்டன் பிரபு கடுமையான அடக்கு முறைகளைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறைமூலம் ஒடுக்கப்பட்டார்கள். அந்த வன்முறைச்சூழலில் உறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியை, அதன் அடக்குமுறையை, அம்பேத்கார் அங்கீகரித்தார். 1932ல் ஒருபக்கம் காங்கிரஸ்மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு மறுபக்கம் அம்பேத்காரின் கோரிக்கையை ஏற்று இரட்டை வாக்குரிமைக்கான அங்கீகாரத்தை ஆங்கில அரசு முறைப்படி வழங்கியது.
ஆகவே கைதுசெய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்த காந்தி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அது அவர் எப்போதெல்லாம் தன்னால் வழிநடத்தப்படும் அமைப்பு கட்டுமீறுகிறதோ, எப்போதெல்லாம் தான் உறுதியாக நம்பும் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக நிலைநாட்ட விரும்புகிறாரோ அப்போதெல்லாம் கடைப்பிடிக்கும் வழிமுறை.
காந்தியின் உண்ணாவிரதத்தின் அரசியல் தளத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது உண்ணாவிரதம் மிரட்டலோ இரக்கம் சம்பாதிக்கும் உத்தியோ ஒன்றும் அல்ல. அந்த வழிமுறைகளை காந்தி பிரிட்டிஷாருடனான அவரது போராட்டங்கள் எதிலும் கடைப்பிடித்தது இல்லை. உண்மையில் காந்தி அதன் வழியாக மறைமுகமாக உணர்த்தியது ஒன்றையே, ‘நான் ஜனநாயகத்தை மதிப்பவன், மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவன், அனைவரையும் அணைத்துச்செல்ல விரும்பும் சமரசவாதி. ஆனால் உண்மையில் நானே இங்கே மக்கள் ஆதரவுள்ள ஒரே தலைவன். நான் அவர்களின் குரல். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது’
உண்ணாவிரதங்கள் காந்திக்கு இருந்த எல்லையற்ற மக்கள் ஆதரவை திட்டவட்டமாக அடிக்கோடிட்டுக் காட்டின. தேசியத்தேர்தல்களோ அல்லது பிற ஜனநாயக வழிகளோ இல்லாத காலம். அன்று இந்திய மக்களின் குரலாக அவர்களின் பிரதிநிதியாக தன்னை முன்வைக்க காந்தி அவ்வழியை பின்பற்றினார். கோடானுகோடி இந்திய சாமானியர்களின் கருத்து தன்னைச்சார்ந்தே இருக்கிறது என்று ஐயம் திரிபற அவர் பிறருக்கு அந்த உண்ணாவிரதங்கள் மூலம் காட்டுவார். அதன் பின் எவருக்குமே அந்தக் கருத்தை புறக்கணிக்க இயலாது. இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் ஆற்றல்.
அவ்வாறுதான் அம்பேத்கார் இறங்கிவந்தார். அன்று அம்பேத்கார் ஒரு மக்கள்தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துக்களின் ஒட்டுமொத்தத் தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்காரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை, மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே அது நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது அது இன்னும் ஆரம்பநிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறுவழியில்லை. அதுவே நடந்தது.
இன்று இரு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, காந்தி இறந்தால் தலித்துக்கள்மேல் வன்முறை வெடிக்கும் என்ற பயத்தால் அம்பேத்கார் இறங்கிவந்தார் என்று. காந்தி நடத்திய காங்கிரஸ் இயக்கம், அவருக்குப் பின்னால் ஜனநாயகவாதியான நேருவின் தலைமையில் அப்படி ஒரு வன்முறையை நிகழ்த்தும் என்பதெல்லாம் அன்றே ஒரு மிகைக் கற்பனை. அம்பேத்கர் காந்தியின் மீதுள்ள அடிப்படை மரியாதையால் இறங்கி வந்தார் என்பது அடுத்த விளக்கம்.
பிற்பாடு கசப்புடன் இந்த ஒப்பந்தம் குறித்து அம்பேத்கார் சொல்லியிருந்தாலும்கூட காந்தி மீது உள்ளார்ந்த மதிப்புள்ளவராகவே அவர் இருந்தார் என்பது உண்மையே. அம்பேத்காரை முன்னிறுத்தி இன்று எழுதுபவர்களில் பலர் காந்தி அம்பேத்காரை அவமானப்படுத்தினார் என்றும் அம்பேத்காருக்கு காந்திமே மனகக்சப்பு மட்டுமே இருந்தது என்றும் எழுதுகிறார்கள். பூனா ஒப்பந்தம் குறித்த உரையாடலக்ள் பதிவாகி வெலியாகியிருக்கின்றன. அவற்றில் காந்திமீதான தன் மதிப்பை மீண்டும் மீண்டும் சொல்கிறார் அம்பேத்கார். அதை வெறும் பசப்பு அல்லது தந்திரம் என்று நான் நினைக்கவில்லை.
பூனா ஒப்பந்தம் காங்கிரஸின் பழைமைவாதிகளும் பிற தலித் செயல்வீரர்களும் இணைந்து அம்பேத்காரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எட்டப்பட்ட ஒன்று. 1932 செப்டெம்பர் 24 அன்று உருவான இந்த ஒப்பந்தம் இன்றும் பல கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. இன்று இதைப்பற்றிய மிகமிக விரிவான ஆராய்ச்சிகள், அதே அளவுக்குத் திரிபுகள் வாசிக்கக் கிடைக்கின்றன.
அன்றைய சூழலை வைத்துப் பார்த்தால் பூனா ஒப்பந்தத்தை எப்படி விளக்கலாம்? காந்தியின் காங்கிரஸே உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பெரும்பான்மை அமைப்பு. அம்பேத்கார் மிகச்சிறுபான்மையை பிரதிநிதித்துவம் செய்தவர். அவர் பெரும்பான்மையின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டது தவிர்க்கமுடியாதது. அவரது தரப்புக்கும் பெரும்பான்மையின் தரப்புக்கும் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளிதான் பூனா ஒப்பந்தம். அம்பேத்காரின் தரப்பின் தீவிரம் மற்றும் தார்மீகம் காரணமாக நடைமுறையில் அது பெருமளவுக்கு அம்பேத்காருக்குச் சாதகமாக நிகழ்ந்தது.
அம்பேத்கார் காந்திக்கு இணையான மறுதரப்பாக வரலாறு கொண்டு வந்து அமரச்செய்த சக்தி. காந்தியைப்போலவே உறுதியான அகிம்சைவாதி, முழுமையான ஜனநாயகவாதி. இருவரும் ஒரு முரணியக்கத்தின் இரு விசைகள். ஒருவரை ஒருவர் மறுத்து, ஒருவரில் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, ஒருவர் செய்யத்தவறியதை இன்னொருவர் செய்து, ஒருவரை ஒருவர் நிரப்பிய வரலாற்றுப்போக்குகள்.
[மேலும்]