கொளத்தூர் புலிக்குத்தி நடுகல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்கள் ஊர் சத்தியமங்கலம் அருகில் நான் கண்டறிந்த நடுகல் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா (சென்னை மற்றும் கோயம்புத்தூர் பதிப்பு) லும், தினமலர் (ஈரோடு பதிப்பு) லும் செய்தி வந்துள்ளது. இது குறித்த கட்டுரையும் இணைப்புகளையும் கொடுத்துள்ளேன்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-17/chennai/44161844_1_hero-stone-clan-inscription

நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்,
தளம்: https://sites.google.com/site/tnexplore/

கட்டுரை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:

“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”

இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.

பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்
குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .

சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அடிக்குறிப்புகள:

[1] புலவர் செ. இராசு,”வேட்டுவர் சமூக ஆவணங்கள்”, கண்ணப்பர் அறக்கட்டளை.
[2] K. Rajan, “South Indian Memorial Stones”, Manoo Pathippagam, Thanjavur, 2000.
[3] கி. அ. புவனேஸ்வரி, “கொங்கு சோழர்”, புவியரசு பதிப்பகம், கோவை

முந்தைய கட்டுரைசென்னையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைடெல்லி சம்பவம்- சில பதில்கள்