ஏ.ஏ.ராஜ்- ஒருகடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் வேண்டாம், நலமாக இருக்கிறீர்கள் இல்லையா?

ஏ.ஏ.ராஜ் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்பு எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. எனக்கு அவரை மிக நன்றாகவே தெரியும். நெருக்கமாகப் பழகியிருக்கிறோம். அடக்கமான இனிமையான மனிதர். சினிமாவில் ஜெயிக்கமுடியாமல்போன திறமைசாலிகள் பலர் உண்டு. அவர்களில் பலபேர்கள் அவர்களுடைய கெட்டபழக்கத்தினால் கெட்டுப்போயிருப்பார்கள். அல்லது அதேபோன்ற கெட்டகுணங்கள் இருக்கும். ஏ.ஏ.ராஜ் எந்தப்பிரச்சினையும் இல்லாதவர். அவருக்கு அதிருஷ்டம் இல்லை என்பதுதான் காரணம். அதோடு தேடித்தேடிப்போய் வாய்ப்பு சேகரிப்பது அவருக்கு தெரியாது. நாலுபேரிடம் பேசுவதே கஷ்டமானவர். அதோடு அவருக்கு தொடர்ச்சியாக வாசிப்பதற்கு சான்ஸ் வந்துகொண்டிருந்தது. ஆகவே கவலைப்படாமல் இருந்தார்.

[ஏ.ஏ.ராஜ்]

அதைக்காட்டிலும் முக்கியமான ஒன்று உண்டு. அவர் அறிமுகமான காலகட்டத்திலே புதிய இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். பெரும்பாலும் நிரந்தரமான கம்பெனிகள்தான் படங்கள் எடுக்கும். அவர்கள் ஆளை மாற்றவே மாட்டார்கள். அதோடு அன்று இளையராஜா மும்முரமாக இசையமைத்துக்கொண்டிருந்தார். அவருக்கு ரேட்டும் அப்போதெல்லாம் ரொம்ப கம்மி. ஏ. ஏ .ராஜை புக் செய்தவர்கள் கூட இளையராஜா வருவார் என்றால் மாறிவிடுவார்கள். அவருக்கு ஏழு படங்கள் வரை தவறிப்போயிற்று. அதன்பிறகு அவர் முயற்சியும் செய்யவில்லை.சாய்பாபா பக்தர். ஆகவே ஒன்றும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

ஆனால் தமிழிலே மிகமுக்கியமான ஒரு இசையமைப்பாளராக இருந்திருப்பார். கிரேட் ஆக இருந்திருக்க முடியாது. அதற்கு ஓடிஓடி நிறைய போடக்கூடிய ஸ்டாமினா வேணும் அது அவருக்கு இல்லை. ஆனால் ரொம்பநல்ல பாட்டுகள் கொஞ்சம் போட்டிருப்பார். இவ்வளவு வருஷங்களுக்குப்பிறகு அவருக்கு இப்படி ஒரு அஞ்சலி எழுதப்பட்டது ரொம்பநல்ல விஷயம். என் மனமார்ந்த நன்றிகள். அவருக்கு கொஞ்சமாவது மரியாதைசெய்தவர்கள் இலங்கை வானொலிக்காரர்கள்தான். மற்றவர்கள் மறந்தேபோனார்கள். மிகுந்த நன்றி.

ஒருதலைராகம் காலம் முதல்கொண்டு நான் சினிமாவில் இருக்கிறேன்.. அதில் பலரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் தெரியும். அந்தக்காலத்தில் குமுதத்தில் அரசுபதில்களில் ஒரு கேள்வி. ஒருதலைராகம் படத்தில் இருந்தவர்களில் டிராஜேந்தர் மட்டும்தான் நீடித்திருக்கிறர். அப்படியென்றால் ஒருதலைராகம் அவருடையதுதானே? அதற்கு அரசு பதில். இல்லை, அது ஒரு கூட்டுமுயற்சி. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

நீங்கள் சொன்ன தகவல்களில் ஒரு பிழை உண்டு. டி.ராஜேந்தர் ஒருதலைராகத்தில் பணியாற்றியபிறகு பணியாற்றியபடம் ரயில்பயணங்களில் கிடையாது. ஜேப்பியார் எடுத்த ஒரு படம். பெயர் வசந்த அழைப்புகள் என நினைக்கிறேன். அதில் உள்ள இசையும் சரி அதிலுள்ள கதையும் சரி அவருக்கு சினிமாவே தெரியாது என்பதற்கு ஆதாரமாக அமைந்தன. ரவீந்தர் நடித்திருந்தார் தப்புதப்பாக குழந்தைத்தனமாக எடுத்திருந்தார். பாட்டுகளெல்லாமே கொடுமை. ஷாட் வைக்கவோ நடிக்கவைக்கவோ தெரியவில்லை படம் அட்டர் ஃப்ளாப்.

அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு ரயில்பயணங்களில் எல்.வைத்தியநாதனை பயன்படுத்திக்கொண்டார். நல்ல இரண்டு அசோசியேட்டுகளையும் வைத்துக்கொண்டார். ஒருதலைராகம் கதையையே திரும்ப எடுத்து ஜெயித்தார். பாட்டுக்களையும் ஒருதலைராகம் மாதிரியே போட்டார். பாட்டுக்காகவும் காதலுக்காகவும் படம் ஓடியது. ஆனால் அசட்டுத்தனமான படம். காட்சியளவில் ரொம்ப திராபையாக இருக்கும். கடைசிவரை அவர் சினிமாவை கற்றுக்கொள்ளவே இல்லை.

ராபர்ட் ராஜசேகருக்கு நடந்தது இன்னொரு சோகம். 1981 iல் வந்த பாலைவனச்சோலை நல்ல படம். ஹிட்டும் ஆனது. ஆனால் அதன்பின்பு 1982 லே ஒருபடம் வந்தது. கல்யாணக்காலம் என்று பெயர். குமுதத்தில்கூட அந்தக்கதையை சீரியலாக போட்டார்கள் சுகாசினி தியாகு நடித்திருந்தார்கள். மிக நீட்டாக எடுக்கப்பட்ட ஒரு சினிமா. இன்றைக்குப்பார்த்தால் ஒரு நல்ல கலைப்படம் என்று சொல்லியிருப்பார்கள். ஒரு குடும்பத்தில் அண்ணன்களுக்கும் தங்கைக்கும் இடையே உள்ள உறவைச் சொல்லக்கூடியது. மைல்ட் ஆன சினிமா. கிளைமாக்ஸ் கூட கிடையாது.

ஆனால்அன்றைய டேஸ்டுக்கு ஒத்துவரவில்லை. அன்றைக்கு மெலோடிராமாதான் எல்லாராலும் ரசிக்கப்பட்டது. ஒருதலைராகம்கூட அந்த மெலோடிராமா கிளைமாக்ஸில் இருந்ததனாலும் பாட்டுகளினாலும் ஜான் டிரவோல்டா ஸ்டைல் ஸ்டேஜ் டேன்ஸினாலும்தான் ஓடியது. கல்யாணக்காலம் படம் படுமோசமாக தோற்றது. அப்படித் தோற்றதும் ராபர் ராஜசேகர் சோர்ந்து போனார்கள், அவர்களுடைய தன்னம்பிக்கை போய்விட்டது.

பாலைவனச்சோலை ஏன் ஓடியது என்றால் சங்கர் கணேஷ் பாட்டுகளினால்தான். ஆனால் அதில் உள்ள ஹிட் பாட்டான மேகமே மேகமே ஒரு இந்திப்பாட்டின் தழுவல். பாலைவனச்சோலைதான் ஒருதலை ராகத்தின் விஷுவல்தனம் இருந்த ஒரே படம் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கு பிறகு வந்த கல்யாணக்காலம்தான் இன்னும் அழகான நியூவேவ் படம். அழகான ஒரு கவிதை. ஒரு ஃபெஸ்டிவல் படம் மாதிரி அது பாருங்கள் சுகாசினியின் விக்கிப்பீடியா பட்டியலிலேகூட அந்தப்படம் கிடையாது.

ராபர்ட் ராஜசேகரனின் சரிவு இந்தப்படத்தின்பிறகுதான். அன்றைக்கு டி.ராஜேந்தர் எல்லாம் உருவாக்கிய பாட்டுமேனியா இருந்தது. காதல் படங்கள். அந்தமாதிரி எடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஸ்டைல் அதற்கெல்லாம் ஒத்துவரவில்லை. அதன்பிறகுவந்த ;தூரம்அதிகமில்லை; அவர்கள் எடுக்கவேண்டிய சினிமாவே இல்லை. அதுபரிதாபமாக தோற்றது. அதற்குள் காலமே மாறிக்கொண்டிருந்தது. பாரதிராஜா படங்களும் பாக்கியராஜ் படங்களும் டிரெண்ட் ஆக மறின.

டி ராஜேந்தரின் பல படங்கள் பரிதாபமாக தோற்றன. உறவைக்காத்தகிளி மாதிரி சகிக்கவே முடியாத படங்கள், ஆனால் அவர் ரொம்ப கீழ் லெவலுக்குப்போய் அடுக்குமொழி வசனம் , அதிபயங்கர செண்டிமெண்ட் எல்லாம் சேர்த்து மைதிலி என்னை காதலி என் தங்கை கல்யாணி மாதிரி சினிமாக்கள் எடுத்து தப்பித்துக்கொண்டார். ராபர்ட் ராஜசேகருக்கு ஸ்கிரிப்ட் சென்ஸ் கொஞ்சம் கம்மிதான். நல்ல இயக்குநர்கள். நல்ல தீம் எடுத்து நல்ல எழுத்தாளர்க்ளை வைத்து எடுத்திருந்தால் பிரமாதமாக எடுத்திருப்பார்கள். எல்லாம் விதிதான்

அதேமாதிரிதான் தணியாத தாகத்தின் கதையும். ஈஎம் இப்ராகீம் ஒருதலைராகத்துக்குப் பிற்பாடு அதேபோல ஒரு படம் செய்ய ஆசைப்பட்டார். இன்ஸ்டியூட்டில் படித்த ஒருவரை அணுகி கதை கேட்டார். அவர்தான் தணியாததாகத்தின் சரியான இயக்குநர் . கிட்டப்பா என்ற பேரில் எழுதினார். கிருஷ்ணசாமி என்று பெயர் என நினைக்கிறேன். ரங்கசாமி என்ற காமிராமேன். இரண்டுபேரும் சேர்ந்து எடுத்தபடம். இரண்டுபேருமே திறமைசாலிகள். ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார்கள். படம் சரியாக எடுக்க விடவில்லை. பத்துநாள் ஷூட்டின் நடக்கும். இப்ராகீம் சிங்கப்பூர் போய்விடுவார். கொஞ்சநாள் காத்திருப்பார்கள். அடுத்த பத்துநாள் ஷூட்டிங் நடக்கும். படம் வெளிவந்தது. அட்டர் ஃப்ளாப்..

ஆனால் அந்தப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே நல்ல படம். கமர்ஷியலாக அதில் ஒன்றுமில்லை. ஆனால் சரியான இன்ஸ்டிடியூட் படம். வங்காளத்தில் வந்த நல்ல படங்களின் சாயல் உடைய படம். அந்தபடமெல்லாம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருந்தால் தமிழிலே ஒரு வேறுமாதிரி படம் வ்ந்திருக்கும். ரொம்ப ஸ்லோவான படம். கிராமத்துப் பண்ணையாருக்கும் ஒரு பெண்ணுக்குமான மெச்சூர்ட் காதல். மிக சூட்சுமமான படம் அது. அது இன்று எங்காவது காப்பி இருக்கிறதா என்று தெரியவில்லை.

[எல். வைத்தியநாதன்]

கடைசியாக இன்னொரு விஷயம். எல் வைத்தியநாதனுக்கு நம்முடைய சினிமா சங்கீதத்தில் உள்ள இடம் நிறையபேருக்குத் தெரியாது. ராஜேந்தர் எல்லாம் வாயால் பாட்டுபோடுவதோடு சரி. அதை வைத்தியநாதன் பலவிதமாக வாசிப்பார். அதை ரிக்கார்டு செய்து ஒரு நல்ல கண்டக்டரின் உதவியோடு பாட்டாக ஆக்குவார்கள். எல் வைத்தியநாதன் உதவிசெய்யாமல் பாட்டுபோட்டவர் இளையராஜா மட்டும்தான். அதேமாதிரி பலபேருக்கு ஏ.ஏ.ராஜ் பாட்டு போட்டிருக்கிறார்.

ரொம்பநாளைக்கு பிறகு இதையெல்லாம் நினைக்கமுடிந்ததில் சந்தோஷம். சினிமா என்பது ஒரு காடு மாதிரி. நிறைய நல்ல விதைகள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் அழிந்துவிடும். சுமாரான விதைகள் நல்ல இடத்திலே விழுந்து பிரமாதமாக வரும். எல்லாம் விதிப்படி நடக்கும். சினிமா என்பது கடவுளுடைய லீலையை கண்ணால் உடனடியாகப் பார்க்கக்கூடிய இடம் என்று அண்ணன் வாலி அடிக்கடி சொல்லுவார். அதுதான் உண்மை.

எம்

எல் வைத்யநாதன் ஓர் அஞ்சலிக்கட்டுரை

முந்தைய கட்டுரைஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…
அடுத்த கட்டுரைம.பொ.சிவஞானம் பிள்ளை