இருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…

ஆசிரியருக்கு

வணக்கம்.

அலெக்சின் எழுத்து பிரசுரமே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்தது. உங்கள் அனுமதி இல்லாமல் செய்து இருக்காது என நினைக்கிறேன். தான் பதிப்பித்த நூலை ஒருவர் புரோமோட் செய்வதில் என்ன தவறு? அலெக்ஸை பதிப்பாளர் என சொல்லாமல் கிறித்துவ இறையியலாளர் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

இது வரை பல முறை அலெக்ஸைப் பற்றி எழுதியுள்ளிர்கள், நூறு நாற்காலிகள் மலிவு பதிப்பு பற்றி குறிப்பிடும் போதும் அலெக்ஸை பற்றி சொல்லியுள்ளீர்கள். அப்போதெல்லாம் கிறித்துவ இறையிலாளர் என்று சொன்னது இல்லை.

உங்களை மடக்க வேண்டும். கேள்வி கேட்டு தொல்லை செய்ய வேண்டுமென்பது எண்ணம் இல்லை. ஜெயமோகன் வரலாற்று உணர்வுடையவர், மனிதாபிமானம் உள்ளவர்,தான் நம்புவதை நேரிடையாக சொல்லுபவர் என்ற நம்பிக்கை வாசகனாக மனதில் உண்டு. அந்த நம்பிக்கையில்தான் கேட்கிறேன்.

அன்புடன்
நிர்மல்

***

இந்த கேள்வியை புறக்கணிக்கவும். ஆழ்ந்த அவநம்பிக்கை உருவாகும் நேரம் எதுவும் பேசக் கூடாது. எழுதக்கூடாது. எழுதிய பிறகு கடும் மன உளைச்சலையே உண்டாக்கியது.

உங்கள் புத்தகம். உங்கள் விருப்பம். நான் சொல்ல என்ன இருக்கிறது?

நிறைய முறை நண்பர்கள் உங்களைப் பற்றிக் கடுமையான கருத்துகள் வைக்கும் பொழுதும் இந்துவுக்கும், இந்துத்துவ சத்திரிய மனநிலைக்கும் வித்தியாசம் உண்டு என்பதற்கு ஜெயமோகனின் எழுத்தே சாட்சி என வாதாடி இருக்கிறேன். இந்த முறை அந்த வாதங்கள் சரியும் அளவுக்கு மனக் கொந்தளிப்பாக இருக்கிறது.

அன்புடன்
நிர்மல்.

***

எங்கே என்ன சொல்லியிருந்ததாக எழுதியிருக்கிறீர்கள்? புரியவில்லை. வெள்ளை யானையிலா?

ஜெ

****

கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது./

இன்றைய கட்டுரையில் பார்த்தேன். (http://www.jeyamohan.in/?p=43043). இன்றைய கட்டுரையில் “கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ்” என்று சொல்லி இருந்தீர்கள். இதுவரை அது போல சொன்னது இல்லை. சொன்ன context , அரவிந்தன் நீலகண்டனிடம் வரலாற்று உணர்வு பார்க்க சொன்னது எல்லாம் சேர்ந்து ஒரு கொந்தளிப்பான மனநிலையை கொடுத்தது. மடமடவென கடிதம் எழுதினேன்.

இது வரை அலெக்ஸைப் பற்றி பல கட்டுரைகளில் எழுதி உள்ளீர்கள். அப்போதெல்லாம் வே.அலெக்ஸ், எழுத்து பிரசுரம் என்று வரும். இப்போது அலெக்ஸ் “கிறிஸ்தவ இறையியலாளர்” என்று அடையாளப்படுத்தப்பட்டு , அரவிந்தன் நீலகண்டன் வரலாற்றினை நிரப்புவராகவும் அடையாளப்படுத்தப்படவும் சஞ்சலம் வந்தது.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்

அவை என் வரிகள் அல்ல. இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். வெள்ளையானைக்கு எழுதப்பட்ட கடுமையன எதிர்விமர்சனம் அது. அதற்குச் சுட்டிகொடுக்க அக்கட்டுரையின் சில வரிகளை நான் மேற்கோள் காட்டியிருந்தேன். எப்போது சுட்டிகொடுத்தாலும் அக்கட்டுரைகளில் இருந்து ஒரு பத்தியை மேற்கோள்காட்டிக் கொடுப்பது என் வழக்கம்.

உங்கள் இந்த குறிப்பிட்ட மனநிலையைத்தான் நான் கவனிக்கிறேன். தொடர்ந்து எனக்கு இது நிகழ்கிறது. என்னை தீவிரமாக வாசித்து பின் தொடரும் ஒருவர் சட்டென்று அவருக்கு உடன்பாடல்லாத எதையாவது நான் சொல்லிவிட்டால், அல்லது செய்துவிட்டதாக அவர் நினைத்தால் உச்சகட்ட சினம் கொண்டு நேர் எதிர்நிலைக்குச் சென்று என்னை வசைபாடி எழுதுகிறார்.

இதைக் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். இவர்கள் என்னைப்பற்றி எழுதப்படும் எல்லா வசைகளையும் அவதூறுகளையும் ஆர்வமாகச் சென்று வாசிக்கிறார்கள். இவர்கள் அவ்வாறு சென்று வாசிப்பதனால்தான் அத்தகைய எழுத்துக்களுக்கு ஹிட்ஸ் வருகிறது. அவை மேலும் மேலும் எழுதபபடுகின்றன. அதாவது அக்கட்டுரைகளை மறைமுகமாக உருவாக்குபவர்களே இவர்கள்தான்

ஏதேனும் ஒரு சிறிய தகவலின் அடிப்படையில் என்னை மதவெறியனாக, சாதிவெறியனாக, அயோக்கியனாக, வேறு எப்படி வேண்டுமென்றாலும் நம்பத்தயாராக இருக்கிறார்கள் இவர்கள். அந்தத்தகவல் அதற்கன ஆதாரமாகக் கூட இருக்கவேண்டியதில்லை , இவர்களே செய்யும் ஊகமாக இருந்தால்கூடப்போதும். பெரும்பாலான தருணங்களில் அது முற்றிலும் பிழையான ஊகமாகவே இருக்கும்.

எங்கே எந்த அவதூறைப்பார்த்தாலும் உடனே எனக்கு மின்னஞ்சல் செய்து என் விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். நான் என் நேர்மையை ஒவ்வொருமுறையும் இவர்களிடம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத அபத்தமான குற்றச்சாட்டுகளுக்குக்கூட ‘உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்று கடிதங்கள் வருகின்றன. நான் பேசாமல் இருந்தால் ‘நீங்கள் பதில் சொல்லாததனால் மனசோர்வடைந்தேன்’ என்று கடிதம் வரும்

நம்பவே மாட்டீர்கள், ஏதோ ஓர் இணையதளத்தில் நான் ஒரு நடிகையை கற்பழித்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்களாம். அதை வாசித்துவிட்டு இரண்டுபேர் உண்மையை விளக்கி நான் உடனே ஆதாரபூர்வமான மறுப்பை வெளியிடவேண்டும் என்று உணர்ச்சிகரமாக எழுதியிருந்தனர். அச்செய்தியை போய் வாசித்தேன். ஒரு spoof அது. இவர்களிடம் நீங்கள் அச்செய்தியை முழுக்க வாசித்தீர்களா என்று கேட்டேன். இல்லை, நண்பர் சுட்டி அனுப்பியிருந்தார். தலைப்பை மட்டும்தான் வாசித்தேன் என்றார்கள். விளக்கிய பின்பு மாறி மாறி மன்னிப்பு கேட்டர்கள். என்ன சொல்ல?

என்ன நடக்கிறது? இவர்கள் தொடர்ந்து என்னைவாசித்தாலும் இவர்களின் உள்மனம் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. ஆழ்ந்த அவநம்பிக்கையுடன், கசப்புடன். அதற்கு என்ன காரணம்? காரணம் என்னில் இல்லை, அவர்களிடம்தான்.

அவர்கள் உள்ளூர விழுமியங்களில் நம்பிக்கையற்றவர்கள். ஒழுக்கத்திலோ நேர்மையிலோ முழுநம்பிக்கை வராதவர்கள். ’அதெப்படி அப்படிச் சாத்தியம்?’ என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆகவே அப்படி நேர்மையானவர் ஒழுக்கமானவர் என முன்வைக்கப்படும் ஒருவரை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறு வீழ்ச்சி கண்ணுக்குப்பட்டால்கூட உடனே நம்பி துள்ளிக்குதிக்கிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள்.

அவர்கள் கோபம் கொள்வதுகூட ஒரு நுட்பமான பாவனையே. உள்ளூர அது ஒரு மகிழ்ச்சியைத்தான் அளிக்கிறது. ’நான் அப்பவே சொன்னேன்ல’ என்ற நிறைவை. ‘இதெல்லாம் இப்டித்தான், எனக்கெல்லாம் எப்பவோ தெரியும்’ என்ற தன்னம்பிக்கையை. அதற்கான ஏக்கமே நிரந்தரமான இந்தக் கண்காணிப்பு. தவறான தகவல்களைக்கூட எடுத்துக்கொண்டு முடிவுகளுக்குத்தாவும் முனைப்பு.

நான் என்னசெய்யவேண்டும்? இவர்கள் முன் நிரந்தரமாக என்னை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டுமா என்ன? நிரூபிக்க முடியாத நிலையில் நான் இருந்தால் நான் அயோக்கியன் என்று அர்த்தமாகிவிடுமா என்ன?

நான் இவர்களிடம் சொல்வது ஒன்றே. நான் எவரிடமும் எங்கும் ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட முன்னுதாரணம் என என்னை முன்வைக்கவில்லை. ஓரு புனைவெழுத்தாளன் என்ற அடையாளத்துக்கு அப்பால் எதையும் நான் முன்வைக்கவில்லை நீங்கள் என்னை அயோக்கியன் என்றும் வேடதாரி என்றும் மதவெறியன் என்றும் சாதிவெறியன் என்றும் மொழிவெறியன் என்றும் ஃபாசிஸ்ட் என்றும் சந்தர்ப்பவாதி என்றும் அல்லது வேறு எப்படி வேண்டுமென்றாலும் நம்பிக்கொள்ளலாம். எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.

அபப்டி ‘நிரூபிக்க’ இரவுபகலாக முயல்பவர்கள் உண்டு என நான் அறிவேன். அவர்களிடம் நான் சொல்வதெல்லம் ஒன்றுதான் ‘சகோதரரே எதற்காக இந்த அவஸ்தை? எதற்காக இந்தக் கடும் உழைப்பு. அப்படியே இருக்கட்டும். நான் எதிர்க்கப்போவதில்லை. ஒரு புனைவெழுத்தாளன் அயோக்கியன் என நிரூபிக்கப்பட்டால்கூட அவனுடைய புனைவெழுத்து செத்துப்போய்விடாது. சற்று நிம்மதியாக இருங்கள்’ அதையே உங்களிடமும் சொல்கிறேன்

நான் வாதிடப்போவதில்லை. என் மீது நம்பிக்கை கொண்ட சிலர் என்னை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு என் எழுத்தும் கருத்துக்களும் முக்கியமானவை என்று தோன்றினால் அதுவே போதும். இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல

கடைசியாக, அலெக்ஸ் கிறித்தவ இறையியல் கற்றவர், இறையியல் நிறுவனத்தில் பணியாற்றியவர், தலித் செயல்பாட்டாளர், அவரது பொதுவாழ்க்கையும் தனிவாழ்க்கையும் அனைவரும் அறிந்தவை. எந்த ரகசியங்களும் அற்ற மனிதர். அவரை ஒருவர் கிறித்தவ இறையியலாளர் என வசையாக குறிப்பிடுவது வசைபாடுபவரது மனநிலையை மட்டுமே காட்டுகிறது

ஜெ

*

ஜெ,

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகளைப் படிப்பதில்லை. வெறுப்பை முன் வைப்பது அயர்வை, அச்சத்தை கொடுப்பதால் அதை தொடுவதில்லை. படித்து இருந்தால் புரிந்திருப்பேன்.

மன்னிக்கவும். உங்களை ஆசிரியராக நினைத்துதான் ஒவ்வொரு முறையும் எழுதுவேன். இன்றும் அப்படிதான். நீங்கள் என்னிடம் நிருபிக்க ஒன்றும் இல்லை என்பதும் தெளிவே.

பாவனையாக இவ்வாறு இருக்கிறேனா என தெரியவில்லை. வாசித்ததை வைத்து தர்க்கம் உருவாக்கி கொள்ளவும், மறுவாசிப்பு செய்யவும் பல முறை உறுதியாகவே இருக்கிறேன். உங்களோடு முற்றிலும் ஒரே போல் எண்ணம் கொள்ளாத இடங்களும் இருக்கலாம். அங்கெல்லாம் என்ன வித்தியாசம் எனவும் பல முறை புரிந்து கொள்ள முயல்வேன். இது விஷ்ணுபுரம் படிக்க ஆரம்பித்த 2003ஆம் ஆண்டில் இருந்தே உண்டு. எனக்கு புரியவில்லை என்றால் விளக்கம் கேட்டு உங்களுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளேன். நீங்களும் பதில் எழுதியுள்ளீர்கள்

இந்த முறை கசப்பான உணர்வாகி விட்டது. மீண்டும் மன்னிக்கவும். நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உண்டு என்பதை நிரூபிக்க மற்றொரு தினம்.

அன்புடன்
நிர்மல்

முந்தைய கட்டுரைபிராமண ஞானம்
அடுத்த கட்டுரைஏ.ஏ.ராஜ்- ஒருகடிதம்