அவன் இவன் என்பது…

ஜெயமோகன் அவர்களுக்கு

காடு வாசிச்சேன். முடிச்சதும் சூட்டோட சூட்டா வெள்ளையானையையும் முடிச்சேன். அடுத்ததா, கொற்றவை ஆரம்பிக்கனும்.

காடு, பல காலம் காட்டிலேயே வாழ்ந்த ஒரு ராட்சசன் போல எழுதியிருக்கீங்க. பொதுவா, கதைக்கு முக்கியம் இல்லாத வர்ணனைகளை அதிகமா வாசிக்க மாட்டேன். ஸ்கிப் பண்ணிடுவேன். இதில், காட்டை பற்றின வர்ணனைகள் எதையும் ஸ்கிப் பண்ண முடியல. முன்னாடி எல்லாம் வாரத்துக்கு ஒரு தடவை மணிமுத்தாறு, காளிகேசம் போவோம். அந்த நினைவுகளை மறுபடியும் மறுபடியும் எண்ணிக் கொண்டேன். பழக்கப்பட்ட மொழியாக இருந்தது எனக்கு ஒரு ப்ளஸ் ப்யாண்ட். நான் ரசித்த மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று. தேங்க்ஸ்.

காடு முடிச்சதும் வெள்ளையானை ஆரம்பிச்சதுனாலயோ என்னவோ, வெள்ளையானை அவ்வளவாக ஈர்க்கவில்லை. சாரி. இன்னொரு முறை வாசிக்கனும்.

ஒரு டவுட். பொதுவா தமிழில் வாசிக்கும்போது வரும் குழப்பம் தான். இந்த சிக்கல் ஆங்கிலத்தில் இல்லை. சில கேரக்டர்ஸ்க்கு வந்தா’ன்’, சில கேரக்டர்ஸ்க்கு வந்தா’ர்’ன்னும் எழுதறீங்க. இந்த மரியாதை, எழுத்தாளருக்கும் கேரக்டர்ஸ்க்குமான வயசு வித்தியாசத்தால, இல்ல குணாதிசயங்களால, இல்ல தொழில்முறையால, இல்ல பண வசதியால மாறுதா? ஒரு பெரிய மனிதரின், சிறு வயது நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போதும் ‘ர்’ போட்டுத்தான் எழுதனுமா?

இதற்கு பதில் ஏற்கெனவே நீங்க எழுதிருந்தா லிங்க் தரவும்.

தேங்க்ஸ்.

சுரேஷ்.

அன்புள்ள சுரேஷ்,

இதைப்பற்றி நானும் சிந்தித்திருக்கிறேன். தமிழில்தான் இப்பிரச்சினை உள்ளது என்று நினைக்கிறேன். மலையாளத்தில் இதை வேறுவகையில் கடந்துசெல்கிறார்கள்

எழுதும்போது ஆசிரியனை அறியாமல் தன்னிச்சையாக அவன் அல்லது அவர் என்று கதாபாத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஏன் அப்படி வந்தது என்று பார்த்தால் தெளிவான காரணத்தைச் சொல்லமுடிவதில்லை. நம் சூழலில் உள்ள மனநிலைகளும் நம் ஆழ்மனப்பதிவுகளும் எல்லாம் அதில் பங்கு வகிக்கின்றன.

இதைக்கொண்டு சாதி, ஆதிக்கம் போன்றவற்றை ஆராய்ந்து சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இப்பிரச்சினையை குறைத்துச் சுருக்கி மேலே பேசுபவர்கள். அவர்கள் சொல்வதுபோல எளியதல்ல இது

சாதாரணமாக , ஆசிரியரால் குனிந்துபார்க்கப்படும் கதாபாத்திரங்கள் அவன் என்றும் மேலே நிமிர்ந்து பார்க்கப்படும் கதாபாத்திரங்கள் அவர் என்றும் சொல்லப்படுகின்றன.. அது உண்மை அல்ல.ஆசிரியரால் வெறுக்கப்படும் கதைமாந்தர் பலர் அவர் என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். பிரியமான கதாபாத்திரங்கள் அவன் என்று சொல்லப்பட்டுள்ளன.

ஆசிரியனுக்கு ஏதோ ஒருவகையில் நெருக்கமான, சமானமான கதாபாத்திரம் அவன் என்று சொல்லப்படும் என்பதே ஓரளவேனும் வெளிப்படும் பொதுவிதி எனலாம். ஆசிரியன் எந்தக்கதாபாத்திரம் வழியாகப் பேசுகிறானோ அந்தக்கதாபாத்திரம் பெரும்பாலும் அவன் என்றே சொல்லப்பட்டிருக்கும்

ஆசிரியனை விட வயதில் இளைய கதாபாத்திரங்கள் அவன் என்று சொல்லப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆசிரியன் பார்வையில் ஒரு தொன்ம அந்தஸ்துள்ள கதாபாத்திரங்களும் அவன் என்று சொல்லப்பட்டிருக்கும். பாரதியை அவன் என்று சொல்வதுபோல.

இதை இன்னொரு இடத்திலும் பார்க்கலாம். மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளில் அந்த மொழிபெயர்ப்பாளர் அவன் அவர் என்பதை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று. ராஸ்கால்நிகாப் அவன்தான். நெஹ்லுயுடோ அவன் தான். மார்மல்டோப் அவன்தான். ஆனால் எதிர்மறையம்சம் மேலோங்கிய பிரபு அவர் எனப்படுகிறார்.

இலக்கியப்படைப்பில் சில விரிசல்கள் இருக்கும், அவை ஆசிரியன் அனிச்சையாக விடுபவை. அவற்றின் வழியாகவே ஆசிரியனை நெருங்கமுடியும் என்பார்கள். அதில் ஒன்றாக இருக்கட்டுமே இது

ஜெ

முந்தைய கட்டுரைடெல்லி சம்பவம்- சில பதில்கள்
அடுத்த கட்டுரைமீண்டும் ஓர் இந்தியப்பயணம்