அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், மற்ற திண்ணை வாசகர்களுக்கும், கார்த்திகேயனாகிய (திண்ணை வாசகன்) நான், நினைத்தது எனக்கும், எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கும் நடந்த கடித விவாதங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று. ஜெயமோகன் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மிகவும் சிரத்தையுடன் எனக்கு பதில்களை எழுதினார். எனவே அவரது முயற்சி அனைவரையும் சென்று அடைவது பொற் குடத்திற்கு பொட்டிட்டது போலிருக்கும். மேலும் அவரது உண்மையான உழைப்பையும் {ஒரு கடிதம் 12 பக்க நீளம் உடையது}, இலக்கியத்தில் அவரது நேர்மையையும் அனைவரும் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இதற்கு அவரிடம் அனுமதி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு விட்டார். –கார்த்திகேயன்
கடிதம் 1.
திரு ஜெயமோகன் அவர்களுக்கு கார்த்திகேயன் எழுதிக்கொள்வது,தங்களைப் பற்றி சமீபத்தில் தெரிந்து கொண்டு உஙகளோடு கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ள ஆசைப் பட்டேன்.முதலில் என்னைப் பற்றி :பெயர்: மேலே உள்ளது.ஊர்: சென்னை.(தற்போது USA ல் வசித்து வருகிறேன்)வயது:27வேலை:computer consultant ஞானத்தேடல்: அளவற்றது.(உங்களுக்கு கடிதம் வரைய தூண்டுதல் இதுவே) நிற்க!தங்களுடைய சில எழுத்துக்களை திண்ணையில் படித்தேன். நான் உங்களைப் பாராட்ட இந்தக் கடிதம் எழுதவில்லை. நான் உங்களைப் பற்றி புரிந்து கொண்டதையே இங்கு எழுத விரும்பினேன். நீங்கள் எழுத வேண்டுமே என்று எழுதும், சாமியல்ல என்று சில வரிகளில் புரிந்து கொண்டேன். உஙகள் உணர்வுகளையே (NOT EMOTIONS, REACTIONS TO YOUR UNDERSTANDINGS) வெளிக் கொணர முயற்சிக்கிறீர்கள் என்று நினைக்க தோன்றியது.’தமிழ் தான் என் மன பாஷை ‘ இந்த உங்களுடைய வரி என்னை சற்று உஙகள் பால் ஈர்த்தது. ‘ஜெ.மோ வின் ஞானத்தேடலே விஷ்ணுபுரத்தில் உள்ளது ‘ என்று சிலர் குறிப்பிட்டனர் திண்ணையில். இந்த வரியே என்னை, அட! இந்த ஆளு நம்ம கேசு(CASE) என்று சிந்திக்க வைத்தது. மேலும் குறள் பற்றி தாங்கள் எழுதியதில் திருவள்ளுவரைப் பற்றி இறைவனுக்கு சமமாக மதிப்பதாக குறித்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும், உஙகளை மிக சமீபமாகவும், இந்த ஆளை நாம விட்டு விட கூடாது என்றும் யோசிக்க வைத்தது. (நான் நினைப்பது போல் நீங்கள் என்னை சமீபமாக நினைக்க முடியாது என்பதை நினைத்தால் வருத்தமாகத் தான் உள்ளது)ஒரு வழியாக தட்டுத் தடுமாறி தமிழில் கடிதம் எழுதிவிட்டேன். எனக்கு உஙகளோடு கருத்து பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் உங்கள் நேர அவகாசங்களைப் பற்றி எனக்கு தெரியாது. உஙகள் பதில் கிடைத்த பிறகு உங்களைப் பற்றி என்னென்ன தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று எழுதுகிறேன்.இப்பொழுது FORUM HUB-ல் உங்கள் உரையாடலைப் படித்து கொண்டிருக்கிறேன்.This is my personal email id.அன்புடனும் உஙகள் பதிலுக்கான ஆவலுடனும்,இரா.கார்த்திகேயன்.
கடிதம் 2.
அன்புள்ள நண்பருக்கு,உங்கள் கடிதம் உங்கள் தொனியை அறிகிறேன்.[இங்கு குறிப்பிடப் படும் கடிதம் திண்ணை வாசகர் கடிதம் பகுதியில் நாயேன் பேயேன் என்ற பேரில் பிரசுரமானது.] ஆனால் என் செயல்களில் எப்போதுமே எனக்கு ஆழமான நம்பிக்கையும், அவற்றில் உண்மையுணர்வும் உண்டு. அவற்றை செய்வதில் நிறைவும் உண்டு. ஒவ்வொரு செயலையும் ஒரு வரலாற்றுக் கடமையாக எண்ணும் போது எதிர்வினைகள் கோப தாபங்களெல்லாம் நம்மை பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆகவே இக்கடிதம்.என்னைக் குறித்து மிகத் தவறாகவே எடை போட்டிருக்கிறீர்கள். என் அளவுக்கு மத அமைப்புக்கு எதிராக எழுதிய எழுத்தாளர் வேறு இல்லை. என் கதைகளை, நாவல்களை படித்துப் பாருங்கள். ஒருவரைப் பற்றி ஐயம் ஏற்படும் போது அப்படி செய்வது தானே நியாயமானது?மத அமைப்பு, தத்துவம், ஆன்மீகப் பயணம் மூன்றுமே வெவ்வேறானவை. பிந்தைய இரண்டுமே எப்போதுமே நகர்ந்து கொண்டு இருப்பவை.வளர்பவை. நேரடி அதிகாரம் அற்றவை. மாற்றுத் தரப்பையும் சேர்த்தே பொருள் படுபவை. தமிழ் நாட்டில் ஆன்மீகம் என்ற பெயரில் மத அமைப்பும், அதன் மீதான விசுவாசமும் பக்தியும் மட்டுமே பிரச்சாரம் செய்யப் படுகிறது. ஆன்மீகம் என்பது எப்போதுமே அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சாராம்சமாக பார்க்கும் அணுகுமுறையே. ஐன்ஸ்டைன் அளவுக்கு ஆன்மீகமானவர்கள் குறைவு. அதை அவர் ‘சமயம் கடந்த இறையுணர்வு’ என்கிறார். அதை மேற்கத்திய சூழலில் அப்படித் தான் விளக்க முடியும். இந்திய மரபில் இரு சொற்களுக்குமே அவசியமில்லை. சமயம் என்ற இறுக்கமான அமைப்பு இங்கு எந்த மதத்துக்கும் இல்லை. இங்குள்ள ஆன்மீகத்துக்கு இறைவன் ஓர் அவசியத் தேவையுமில்லை. முழுமைக்கும், சாராம்சத்துமான தேடலே ஆன்மீகம்.மதத்துக்கு எதிரான போராட்டம் கொச்சையாக இங்கு ஆன்மீகத்துக்கும் எதிராக செய்யப் பட்டது. ஆன்மீக அடிப்படை இல்லாமல் ஒரு பழங்குடிச் சமூகம் கூட வாழ முடியாது. காரணம் வாழ்க்கையின் அற அடிப்படைகள் ஆதாரமான நம்பிக்கைகள் அங்கிருந்தே வர முடியும். நான் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், நான் ஏன் கருணையுடன் இருக்க வேண்டும்? அதற்கான எல்லா பதில்களையுமே நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தே எடுக்கமுடியும். இன்றைய அறிவியலும் சரி, வரலாறும் சரி புறவயமான உண்மை என்பதையே மறுக்கும் எல்லை அளவுக்கு சென்றுள்ளன. உங்கள் நோக்கம், உங்கள் எல்லைகள் ஆகியவையே அத்துறைகளில் இன்று மையப் பிரச்சினை. அவையோ ஆன்மீக [மெய்யியல்] நோக்கில் மட்டுமே அறியப் படுபவை, விளக்கப் படுபவை, நிலை நாட்டப் படுபவை. அவையே நம் சிந்தனைகளை உருவாக்குபவை. சிந்தனையே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அதிலிருந்தே செயல்கள்.ஓர் உதாரணம் காலா காலமாக காட்டை மரங்களாக வழிபட்டு வந்த சமூகம் நம்முடையது. இயற்கையை நுகரும் நோக்கம் கொண்ட மேற்கத்திய அறிவியல் இங்கு வந்த 50 வருடங்களில் நம் காடு 75 சதவீதம் அழிக்கப்பட்டது. ஏன்? இதுவே சிந்தனை துறையில் உள்ள அடிமைத்தனம். இன்று நம் மரபில் உள்ள இயற்கை வழிப்பாட்டை மேற்கத்திய சூழலியளார் ஏற்கும் போது நாமும் ஆகா என்கிறோம். ஆனால் அதற்குள் நம் காடுகள் அழிந்து, விவசாயம் பெரும் நஷ்ட மாக ஆகிவிட்டது. சுய சிந்தனையில்லாத சமூகத்துக்கு, எந்த அறிவியலும் ஆபத்தையே அளிக்கும் இங்கு ஆன்மீகம் நிராகரிக்கப் பட்டபோது ஓர் வெற்றிடமே ஏற்பட்டது. ஆகவே மத எதிர்ப்பின் தற்காலிக அலை எழுந்து ஓய்ந்த பிறகு தமிழகம் மீண்டும் மேலும் வலிமையுடன் மூட பக்தியை நோக்கி பாய்ந்தது [பார்க்க சி ஜெ ஃபுல்லர் எழுதிய ‘தேவியின் திருப் பணியாளார்கள். ‘தூய சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை வெளியீடு].நேர் மாறாக நாராயண குருவும் அம்பேத்காரும் தங்கள் மக்களுக்கு மேலும் உக்கிரமான ஆன்மீகத்தை அளித்தார்கள். அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அம்மாதிரி ஒரு மேம்பட்ட ஆன்மீகமே இன்றைய மூட மதச்சார்புக்கு எதிரான ஆயுதம். அதையே நான் வலியுறுத்துகிறேன். அதற்கு எனக்கு மறைந்த நித்ய சைதன்ய யதி ஓர் தூண்டுகோல். அவர் மதச் சார்பு உள்ளவரல்ல. இறை நம்பிக்கை உடையவருமல்ல. ரஸ்ஸலுக்கும், கார்ல் பாப்பருக்கும் நெருங்கிய நண்பர் அவர். எனக்கும் இறை நம்பிக்கை கிடையாது. இங்கு கணிசமான பேருக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு புது விஷயங்களை அறியும் திராணி இல்லாமலாகி விடுகிறது. ஒவ்வொன்றையும் ஏற்கனவே தாங்கள் அறிந்த அச்சுக்குள் போட்டு புரிந்து கொள்கிறார்கள். ஒரே சூத்திரத்தை எல்லாவற்றுக்கும் பயன் படுத்துகிறார்கள். என் கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் மிக குறைவே. பெரும்பாலோர் திரிக்கிறார்கள். சிலர் அவதூறில் இறங்குகிறார்கள். அவற்றின் மூலம் மேலும் பலர் என்னைப் பற்றிய பிம்பங்களை உருவாக்குகிறர்கள். அதற்கு நான் இடதுசாரிகள் உட்பட இங்குள்ள அனைத்து சிந்தனை அமைப்புகளையும் பற்றி முன்வைத்த கடுமையான விமரிசனங்களே காரணம் என நான் அறிவேன்.இன்றைய தேவை நமது மரபார்ந்த சிந்தனைகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் / மறு ஆக்கம் செய்வதே. ஏன் செய்ய வேண்டுமென்றால் சிந்தனையின் மிக விரிந்த சாத்தியங்கள் பல இப்போது தவற விடப் பட்டுள்ளன. பழைய சிந்தனை, புதிய சிந்தனை என்ற வேறுபாட்டையெல்லாம் தத்துவம் தெரிந்தவர்கள் சொல்ல மாட்டார்கள். எல்லா சிந்தனைகளும், வரலாற்றுக் காலம் முதல் உள்ள சில அடிப்படைகளில் இருந்து முளைப்பவையே. அதனால் தான் சாக்ரட்டீஸ் மேற்கே மீண்டும், மீண்டும் மறு கண்டு பிடிப்பு செய்யப் படுகிறார். நாம் நமது மரபை கற்காமலேயே உதாசீனம் செய்யப் பழகி விட்டிருக்கிறோம். மேற்கின் அடிமைகளாகவே நாம் இன்று சிந்தனைத் துறையில் இருக்கிறோம். வெள்ளைக்காரனுக்கு குமஸ்தாவாக இருந்தோம். இன்று கணிப்பொறி குமாஸ்தாவாக இருக்கிறோம். நமது மரபை கற்று, ஏற்றும், நிராகாரித்தும், வளர்த்தெடுப்பதன் மூலமே நமது சிந்தனை நிகழ முடியும். 17 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது இதுவே. நான் வலியுறுத்துவது இதையே. திண்ணை கட்டுரையில் இதில் உள்ள பிரச்சினைகளை விரிவாகச் சொல்லியுள்ளேன். [மு தளைய சிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும். http://www.thinnai.com/ar0610025.html]உண்மையான அறிவியல் போன்றதே உண்மையான ஆன்மீகமும். அதுவும் விடைகளால் அல்ல, வினாக்களாலேயே இயக்கப்படுகிறது.ஜெயமோகன்
கடிதம் 3.
]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,தங்கள் கடிதத்தை எதிர்பார்த்தேன். (நேரமின்மை காரணமானால் இன்னும் காத்திருப்பேன்). என்னுடைய முந்தைய கடிதம் சரியாக உங்களுக்கு கிடைக்காததை நினைத்து வருத்தப்பட்டேன்/படுகிறேன்.(I hope you have received my attachment correctly) மேலும் என்னுடைய தொடர்ந்த மன ஒட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ எழுதுகிறேன்.1. ‘உண்மையான அறிவியல் போன்றதே உண்மையான ஆன்மீகமும். அதுவும் விடைகளால் அல்ல, வினாக்களாலேயே இயக்கப் படுகிறது’ என்று நீங்கள் குறிப்பிட்டதை முழுவதும் ஒப்புக் கொள்கிறேன்.சென்ற கடிதத்தில் நான் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்த்தவை:2.ஜெ.மோ. கூறியது: ‘ஆன்மீகத்துக்கு இறைவன் ஓர் அவசியத் தேவையுமில்லை. முழுமைக்கும், சாராம்சத்துமான தேடலே ஆன்மீகம். ‘கார்த்திக்: இவை இன்றைய அளவில் ‘ஆன்மீகமும்’ ‘இறைவனும்’ புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறையில் இருப்பதற்கும், ‘ஆன்மீகம் ‘ பற்றிய உங்களது புரிதலுக்கும் உட்பட்ட கருத்து. ‘முழுமை’ என்று நீங்கள் எதை குறிக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.3. ஜெ.மோ. கூறியது: ‘மரபு மீதான வழிபாடு போலவே அதன் மீதான அறியாமை நிரம்பிய உதாசீனமும் ஆபத்தமானதேயாகும். ‘ இதையும் முழுமையாக ஏற்கிறேன். இக்கருத்து கீதையிலும் இருப்பதை நினைவு கூறுகிறேன். (அறிவற்ற, சிரத்தை இல்லாத சந்தேகவாதி அழிகிறான். சந்தேகவாதிக்கு இந்த உலகமும் இல்லை, அந்த உலகமும் இல்லை, சுகமும் இல்லை.)என் தரப்பு: பயன் (உதாரணம்: சமூகத்தில் நல்லொழுக்க மாற்றம்) அல்லது பங்களிப்பு இல்லாத வரை மேற்கூறிய இரண்டுமே ஒரே மதிப்புக்கு உரியவை என்று சொல்வது சரியா?4. உங்களுடைய கலாச்சாரம் பற்றிய விவாதங்களையும் படித்தேன் திண்ணையில்.கலாச்சாரம் பற்றிய எனது சிந்தனை: கலாச்சாரம் என்பது மனவியல் (அல்லது உளவியல்??) கருத்துககளை மையமாகக் கொண்ட செயல் பாடுகளின் வெளிப்பாடு என்றே நம்புகிறேன் அல்லது புரிந்து கொள்கிறேன். பெரும்பாலும் இந்த மனவியல் கருத்துக்களின் உள்ளார்ந்த நோக்கங்கள்அ. இறைக் கொள்கை அல்லது வழிபாடு ஆ. தனி மனிதனின் சமூக இயக்கம் (உதாரணம்: தொழில், குடும்பவியல், அரசியல்) – இவற்றில் ஒன்றின் மீது எழுப்பப் பட்டவையாக உள்ளதுஇது தனிமனிதர் ஒருவராலோ அல்லது ஒரு கூட்டத்தாலோ உருவாக்கப் பட்டவையாக இருப்பதற்கு சான்றுகள் நம்மிடம் உள்ளன. இங்கு இவை எழுப்பபட்ட காலம், இடம், தேசம், மனநோக்கு இவற்றினால் வெவ்வேறு வடிவம் பெற்று உள்ளது.* அனைத்து காரணங்களும் காலத்தால் கரைக்கப் படுகின்றன (மறக்கப் படுகின்றன!).*நாம், நமது கலாச்சாரங்களின் மீது கேள்வி எழுப்புவது இல்லை. மேலும் கேள்விகளுக்கு விடை தர இயலவில்லை. இதன் காரணம், நமது கலாச்சாரங்களின் உள்நோக்கங்களை நாம் சரியாக புரிந்து கொண்டோமா? என்ற கேள்வியில் முடிகிறது. மேலும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் ஒரு பொதுவான, திடமான காரணம் இல்லாமல் இருக்குமா?இவற்றை நமக்கு விளக்கிச் சொல்லியவர்கள் சரியாக சொன்னார்களா? ஒரு கருத்தின் வடிவம் பெரும்பாலும் தப்பாக கற்பிக்கப் படுவது இந்த இடத்தில்தான். உதாரணமாக, உங்கள் பெயர் ஜெயமோகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதை நீங்கள் லட்சம் முறை உபயோகித்திருப்பீர்கள் ஆனால் நான் அதற்கு ஒரு விளக்கம் தருகிறேன்.ஜெய என்றால் வெற்றி, மோக என்றால் காமம், காமத்தை வெற்றி கொண்டவன். அவனே ஈசன், எனவே உங்கள் பெயர் ஈசனின் பெயர். காமத்தை வெற்றி கொள்ளும் செயலே தவம். இப்போது ஒரு கேள்வி உங்களை கேட்கிறேன். எத்தனை முறை உங்கள் பெயரை உபயோகிக்கும் போது இந்த கருத்தை நீங்கள் நினைவு கூறுகிறீர்கள்? என்று கேட்டால் பதில் என்ன என்று உங்களுக்குத் தெரியும்.எனவே நான் சொல்ல வந்தது என்னவெனில், சொற்களின் பின் உள்ள முழுமையான உள்ளர்த்தம் தெரிந்து கொள்வதே கலாச்சாரம் மற்றும் இறை பற்றி நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் முயற்சி என்று தோன்றுகிறது. இதற்கு உங்கள் பதில் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.எனக்கு, உஙகளுக்கு நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எழுதலாமா?அன்புடன்,கார்த்திகேயன்
கடிதம் 4.அன்புள்ள ஜெயமோகன்,உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. உஙகள் கருத்துக்களை படித்தேன். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் (உங்கள் நேரத்திற்கு நன்றி).உங்கள் கருத்துடன் நான் பலவாறு ஒத்து போகிறேன். என்னுள் எழுந்த எண்ணங்கள் கீழே.1. மேற்கத்திய மெய்யியல் நான் படித்ததில்லை. 2. இன்றைய மத அமைப்புகளை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் நான் அதற்கும் ஓருபடி மேலே. அதாவது இன்றைய மத அமைப்புகள் மீது ஒரு துளியும் எனக்கும் உடன்பாடு கிடையாது. இதில் என் தரப்பு: நான் எனது 23ம் வயதில் கோவில்களுக்கு செல்லும் பழக்கத்தை கைவிட்டவன். (இது சரியா, தவறா என்பது பற்றி முனைப்படையவில்லை) அதற்கு முன்னரும் கோவில் செல்லும் நாட்களில் காசு போடும் பழக்கம் அறவே இருந்ததில்லை. ஏனெனில் பணத்தால் கடவுளை -அப்போதைய புரிதலுக்கு உட்பட்ட ‘கடவுளை ‘- அடைய முடியாது என்ற உறுதிப்பாடு இருந்ததுவே காரணம்)நான் உங்களை எடை போட்டது மிகவும் சரியே. நான் உங்கள் ஞானத் தேடல் அல்லது அறிவுத் தேடல் (seeking knowledge thru books and other means) பற்றியே குறிப்பிட்டேனே தவிர, உங்களை மத சார்பு உள்ளவர் என்றோ மத அமைப்பை ஆதரிப்பவர் என்றோ ஒருபோதும் நினைக்க வில்லை (அது போன்று ஏதும் எழுதியதாக நினைவில்லை).3. நான் இன்றைய மத அமைப்புக்களை பற்றி புரிந்து கொண்ட விதமாவது:ஒருசார் மனிதர்கள், லெளகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தாங்கள் புரிந்து கொண்ட வழியில் (அல்லது விதத்தில்) செய்து வந்த பழக்கங்களே அவை. இதற்கு அவர்கள் காட்டிய மிக உயர்வான காரணமே ‘இறைவன்’. சுருங்கச் சொன்னால், ஒரு வித வணிப நோக்கே (just another business approach). இதில் கிராமத்து கருப்பண்ணசாமியும் உண்டு, பக்தி வேதாந்த சாஸ்திரிகளும் உண்டு, பில்லி சூனியக்காரர்களும் உண்டு. இவர்கள் அனைவரின் பொதுவான ஒரே நோக்கம் பணமே. இதைத் தவிர இந்த பழக்கங்களினால் அறிவு விரிந்தவர்களோ அல்லது ஆழ்நிலை மன, அமன (மனமற்ற) அனுபவங்களை பெற்றவர்களோ இல்லை. மாறாக அறிவு குறைந்து போனவர்களையும், மற்ற கருத்துக்களை அறிந்து, அலசி ஒத்துக் கொள்ளவும் அல்லது தள்ளவும் தேவையான மன விஸ்தரிப்பை பெறாதவர்களையும் நான் கண்டதுண்டு.4: ஜெ.மோ. கூறியது: ஆன்மீகத்துக்கு இறைவன் ஓர் அவசியத் தேவையுமில்லை. முழுமைக்கும் சாராம்சத்துக்குமான தேடலே ஆன்மீகம்.கார்த்திக்: இவை இன்றைய அளவில் ‘ஆன்மீகமும் ‘ ‘இறைவனும் ‘ புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறையில் இருப்பதற்கும், ‘ஆன்மீகம்’ பற்றிய உங்களது புரிதலுக்கும் உள்ள வேறுபாடு. முழுமை என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.அதைவிட ஆன்மீகத்தினால் (அல்லது ஆன்மீக அறிவால்) ஒவ்வொரு மனிதனுக்கும் ஆகவேண்டியது எது (result?) ஆன்மீகம் அல்லது ஆன்மீக அறிவு ஒருவனுக்கு என்ன அவசியத்தினால் தேவை என்று தெரிந்து கொண்டோமா? கட்டாயம் ஆன்மீகம் சமுகத்திற்கு தேவையா? என்பது என்கேள்வி.இதை சற்று விளக்க (அல்லது சரியாக கேட்க) முயற்சிக்கிறேன்.ஆன்மீகம் என்பது பற்றி நம்மால் முழுவதும் சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை என்பது என் கருத்து. அதற்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும், சரியாக புரிந்து கொள்ளப் படாத அல்லது தவறாக புரிந்து கொள்ளப் பட்ட ஒரு பொருள் (கருத்து) இடத்துக்கும், சூழ்நிலைக்கும், கால நீட்சிக்கும், ஏற்ப வடிவம் கொள்கிறது. இதில் எந்த வடிவத்தை நாம் பின்பற்றுகின்றோம்? நாம் பின்பற்றும் இந்த வடிவத்தை திருத்தவோ, இடித்துரைக்கவோ ஒரு source அல்லது மூலம் சமூகத்தில் இல்லை. அப்படியே திருத்தினாலும் அதை நம் முறையின் ஒன்றோடு ஒப்பிட்டு எதிர் கருத்தை மட்டம் தட்டுகிறோம். இதில் கவனிக்கப் படவேண்டியது இரண்டு. ஒன்று, எதிர் கருத்து உண்மையில் வெற்ற்றிடம் கொண்டு இருக்கலாம். இரண்டாவதும் முக்கியமானதும் அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் நாம் இழந்தது பெரியதாக இருக்கலாம். எனவே எதிர்கருத்தை சீர்தூக்கி பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமே ஆன்மிகத்தை விட இங்கு எனக்கு முக்கியமாகப் படுகிறது. இன்னொன்று எதிர் கருத்தை அளவிட ஒரு அளவுகோல் ஒன்று அவசியம் தேவை. இது RESULT அடிப்படையில் இருப்பதுவே சரி. எனவே சரியாக புரிந்து கொள்ளுதலுக்கும் ஒரு RESULT BASED அளவுகோல் தேவை.குழப்பி எழுதியிருந்தால் மன்னிக்கவும். இதைத் திருத்தி எனக்கு எடுத்துரைக்க உங்களுக்கு எல்லா அதிகாரமும் உண்டு. உங்கள் நாவல்களை அவசியம் படிப்பேன். அவை எங்கு கிடைக்கும்?அன்புடன்,கார்த்திகேயன்.
கடிதம் 5.திரு கார்த்திகேயன் அவர்களுக்கு,தங்கள் கடிதம் இம்முறை தான் முழுமையாக கிடைத்தது.முதலில் நீங்கள் குறிப்பிடும் படி பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கும் விரிவான ஆய்வுப் பார்வையுடன் உங்கள் கருத்துக்கள் உள்ளனவா என நீங்கள் பார்க்க வேண்டும்/ மாற்றுத் தரப்பை வசை பாடவும் அதற்கான தரமற்ற சொற்களை எழுதவும் செய்கிறீர்கள். [இங்கு குறிப்பிடப் படுவது திண்ணையில் பிரசுரமான முதல் வாசகர் கடிதம்] எல்லா தரப்புக்கும் கருத்துலகில் இடமுண்டு என அறிவுத் துறைகளில் உள்ள அடிப்படையான புரிதல் உங்களுக்கு இருந்திருக்குமெனில் ஒரு கருத்து குறித்து இம்மாதிரி வெறுப்பைக் கொட்டியிருக்க மாட்டீர்கள். இதனால் யாருக்கு என்ன இலாபம்? உங்கள் கருத்துக்களை விட கடுமையான மத, ஆன்மீக எதிர்ப்புக் கருத்துக்கள் கொண்டவர்கள், வாழ்நாளின் பெரும் பகுதியை அதைப் பிரச்சாரம் செய்வதற்காக செலவழித்தவர்கள் -உதாரணமாக குமரி மைந்தன் – என் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களை நானே சொந்த முயற்சியில் வெளியிட்டதுமுண்டு. கருத்தியல் இயக்கத்தில் எதிர் தரப்பு என்பது நமது தரப்பின் குறை பாடுகளை களையும் மறுபக்கம். நம்மை ஓயாது முன்னகர்த்தும் இயங்கியல் சக்தி. தமிழில் எதிர் தரப்பை வசை பாடுவதும் ஒரு விவாத உத்தி என நம்புகிறார்கள். அதையே விவாதமாக செய்பவர்கள் பொதுவாக பெரியாரியர்களோ, முதிர்ச்சியில்லா மார்க்சியர்களோ தான்.இரண்டாவதாக உங்கள் கருத்துக்களை இப்போது ஒரு முழு முற்றான குரலில் முன் வைக்கிறீர்கள். அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது இது. இப்போது நாம் இருக்கும் கருத்துக்கு இன்னின்ன காரணங்கள் உள்ளன என்று மட்டுமே நாம் கூற முற்பட வேண்டுமேயொழிய, இது என் இறுதியான கருத்து, என்றல்ல. அதன் பின் விவாதமே இல்லை.ஆன்மீகம் /மதம் முதலியவற்றை மேலும் விரிவான,வரலாற்றுப் பார்வையுடன் பார்க்க வேண்டுமென்பது என்கருத்து. இது குறித்து விரிவாக பேசும் பல நூல்கள் உள்ளன.கலாச்சாரத்துக்கு மனிதன் வரும்போது வாழ்க்கையையும், இயற்கையையும் புரிந்து கொள்ள பல கோணங்களில் முயல்கிறான். ஒன்று தர்க்க பூர்வ அணுகுமுறை. அறிந்தவற்றில் இருந்து பெற்ற தர்க்கத்தை வைத்து, அறியாதவற்றை வகுத்துக் கொள்ள முயல்வது இது. பழம் சிவப்பாக இருக்கும், ஆகவே சிவப்பான காய், பழம் என்பது ஒரு தருக்கம்.தருக்கம் மட்டுமே உலகத்தை அறிய போதுமானதல்ல என்ற உணர்வு எல்லா தரப்பிலும் உண்டு. இன்றைய அறிவியலாளர்களில் பலர் தருக்கம் மட்டுமே தனித்து ஒருபோதும் இயங்க முடியாது என எண்ணுகிறவர்கள். அறிதலின் இரண்டாவது வழி முறையாக உள்ளது கற்பனை. மனிதன் தான் இருந்து கொண்டிருக்கும் எல்லைக்கு அப்பால் என்ன என்று இடைவிடாது கற்பனை செய்து கொண்டே இருக்கிறான். இப்போது அவன் கருந்துளைகள் குறித்தும், வேற்று கிரக வாசிகள் குறித்தும், நூல்சித்தாந்தம் குறித்தும் கற்பனை செய்கிறான். கற்பனையே அழகியலை உருவாக்குகிறது. அழகியல் அனைத்து அறிதல்களையும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இணைக்கவும், தொகுக்கவும் முனைகிறது. பழம் சிவப்பு நிறம்.வெப்பம் பெறும் ஒவ்வொன்றும் பழுத்து சிவக்கின்றன. ஆகவே அதுவும் ஒரு வகை கனிதல்தான். வேக வைத்த பொருள் கனிந்தது. ஆகவே பழம் இயற்கையாகவே வெந்த உணவு. வேக வைப்பது எது? ஆகவே நாம் அறியும் அக்கினிக்கு அப்பால் அறியாத சூட்சுமமான அக்கினிக்களும் உலகில் உள்ளன. பழத்தில், பூக்களில் எல்லாம் அந்த அக்கினியே குடிகொள்கிறது. ஆகவே அக்கினி பல வகையானது. உலகமெங்கும் நிரம்பியிருப்பது……..இப்படி போகிறது கற்பனையின் பாதை. அப்பயணத்தை நாம் ரிக் வேதத்திலும் சாம வேதத்தின் ஆக்னேய காண்டத்திலும் காணலாம். இது ஒரு வகை அறிதல் முறை. இங்கு அனுபவ தளத்தில் உள்ள தீ என்பது அனுபவ தளத்துக்கு அப்பாற்பட்ட சக்தி [energy] என்ற தளம் நோக்கி நகர்ந்திருப்பதைக் காணலாம். இப்படி நகர்வதன் மூலம் தான் நாம் அறியும் அடிப்படைக் கருதுகோள்கள் அனைத்துமே உருவாகியுள்ளன. இதன் தொடர்ச்சியே அழகியல். அக்கினியின் நிறம் பொன்சிவப்பு. ஆகவே அந்நிறம் அழகானது. தங்கம் அழகியது. அதில் நகைகள் செய்ய வேண்டும். பொன்னிற சரிகை உடைகள் அணியவேண்டும்….தருக்க அறிவை விட ஏன் கற்பனை மேலும் ஆழமானது? தருக்க அறிவு மனத்தின் மேல்த் தளமான பிரக்ஞையை மட்டும் சார்ந்தது. பிரக்ஞை நமது அகத்தின் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டுமே ஆள்வது. அது அலை. கடல் பின்னால் உள்ளது. ஆழ்மனம் [நனவிலி /Unconscious] அது படிமங்களினாலானது. [Image]. நாமறியாதவற்றையும் நமது கனவு அறியும். பெரும்பாலான அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒன்று கனவுகளாக வெளிப் பட்டவை. அல்லது ஒரு பொருளை பார்த்து அதை ஒரு படிமமாகப் பார்க்கும் மனத் தூண்டல் பெற்று அதன் வழியாகப் பெறப் பட்டவை. ஐன்ஸ்டைன் சோப்புக் குமிழிகளைப் பார்த்து அகத்தூண்டலை அடைந்ததாக சொல்வார்கள். இலக்கியம் தர்க்கத்தால் ஆனதல்ல. கற்பனையால் உருவாக்கப் பட்டதும், கற்பனையைத் தூண்டுவதுமான படிமங்களால் ஆனது. சொற் படிமங்கள், காட்சிப் படிமங்கள் என அது பலவகை. அது உருவாக்கப் பட்டு, வினியோகிக்கப் படும் ஒரு கனவு.அடுத்தது உள்ளுணர்வு[Intuition] அதன் அடிப்படை என்ன? முக்கியமான நியாயம், எதைப் பற்றி மனிதன் அறிய முயல்கிறானோ அதன் ஒரு பகுதிதான் அவன் என்பதே. தருக்கம் அறியப் படுவதில் இருந்து விலகி நின்று பார்க்கிறது என்றால் உள்ளுணர்வு அதில் முற்றிலும் கரைந்து நின்று பார்க்க விரும்புகிறது. ஒரு மிருகத்தை கூர்ந்து கவனித்து அதன் இயல்புகளை தொகுத்து பதிவு செய்து அதை புரிந்து கொள்வது ஒரு முறை. இதுவே அறிவியலின் முறை, தர்க்கத்தின் முறை. தன் சுய அடையாளத்தை கொஞ்ச நேரமேனும் ரத்து செய்து, ஒரு கணத்தில் அம்மிருகத்துடன் தன்னையும் ஒரு மிருகமாக உணர்வதும் அதன் மூலம் அதையும் தன்னையும் உள்ளடக்கிய ஓரு முழு உண்மையை அடைவதும் இன்னொரு முறை. இதையே தியானம் என்று நான் சொல்வது. தியானம் என்றால் தர்க்க அறிவை, நமது தனித்துவ பிரக்ஞையை, உதறுவது என்பதே. இது சாத்தியம் என்பதற்கு எனக்கு திடமான சுய அநுபவ ஆதாரம் உண்டு.இதைப் பற்றி கீழை அறிஞர்கள் சொல்வதில் நம்முடைய இளைஞர்கள் ஒரு சாராருக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அவர்கள் பெற்ற தொழில் நுட்பக் கல்வி கீழை நாட்டை சேர்ந்த அனைத்துமே அபத்தமான பழைமை வாதங்கள் என்ற புரிதலை அவர்களுக்கு அளித்துள்ளது. நீங்கள் மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் [நீல்ஸ் போர், ஏ. என். வைட்ஹெட், ஐன்ஸ்டைன், சி. ஜி. யுங்….] உள்ளுணர்வு குறித்து என்ன சொன்னார்கள் என்பதை கூர்ந்து படிக்க வேண்டும். இப்போது நரம்பியல் அறிஞர்கள், தருக்க அறிவை விட மிகப் பெரியதான உள்ளுணர்வின் இயக்கத்துக்கு நரம்பியல் விளக்கம் தர முற்பட்டுள்ளனர். எளிதாக படிக்க வேண்டிய முதல் நூல்களில் ரிச்சர்ட் ரீஸ்டாக் எழுதிய The brain has its own mind என்ற நூல் முக்கியமானது. பிறகு ஆலிவர் சாக்ஸ் நூல்கள்.உள்ளுணர்வுக்கு வெளியே உள்ள மற்ற அறிதல்கள் பொதுவாக தனித் தனியாக இருப்பவை [ Fragmented truths] அறிவியலின் கருதுகோள்கள், கருத்துக்கள் எல்லாமே அப்படித் தான். அவற்றின் தளத்துக்குள் மட்டுமே முழு உண்மையாக ஆகக் கூடியவை அவை. அவற்றைத் தொகுத்துக் கொள்ளும் அடிப்படைகளை நாம் உள்ளுணர்விலிருந்தே அடைய முடியும். அவ்வாறு உள்ளுணர்வு மூலம் அனைத்தையும் தொகுக்கும் பொது அடிப்படைகளை உருவாக்கும் பார்வையையே ‘மெய்யியல் பார்வை’ என்கிறோம். அதை ‘ஆன்மீக அணுகுமுறை’ என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் Spiritual /holistic approach என்றெல்லாம் இதை கூறுவதுண்டு. ‘ வசுதைவ குடும்பகம் ‘[ரிக் வேதம்] அல்லது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற தரிசனம் அப்படிப்பட்டதுதான். அதிக பட்சம் பத்தாயிரம் பேருக்கு அதிகமில்லாத சிறு குலங்கள் இடைவிடாது போரில் ஈடுபட்டு தங்களை அழித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், தங்கள் இனம், தங்கள் இடம் தவிர வேறு எதுவுமே கண்ணில் படாத காலகட்டத்தில், ஒரு மனிதன் இந்த மாபெரும் உலகப் பார்வையை பெறுவதே ஆன்மீகம் என்பது. அனைத்து தத்துவங்களும், அறிவியல்களும் அந்த தரிசனத்தை பின்தொடர்ந்து வந்தவையே என்பதை வ்ரலாற்றை நோக்கினால் உணரலாம். எந்தத் தத்துவவாதியும் அவனுக்கு முன்னோடியாகிய ஒரு ஞானியின் தொடர்ச்சியே. இன்றைய அதி நவீனச் சிந்தனைகளுக்கெல்லாம் அப்படி மூல தரிசனங்கள் எங்கிருந்து, எப்படி முளைத்து வந்தன என்பதெல்லாம் ஏராளமாக பேசப் பட்டுள்ளதுசிவப்புக்கு வருவோம். கற்பனையின் ஒரு கணத்தில் தன்னை இழந்து பொங்கிய ஒரு மனம் வானவிரிவு நோக்கித் திறந்து கொள்கிறது. செவ்வானம், ஒளி பரந்த பெருவெளி. வான் சுடர்கள்.மண்ணின் ஆழத்தில் சுடரும் அக்கினி. நீருக்குள் அலையடிக்கும் பிரகாசம். தளிர்களில், பூக்களில் ததும்பும் பிரகாசம். அனைத்துக்கும் சாரமாக விளங்கும் ஒரு பேரொளியை /முடிவற்ற சக்திப் பிரவாகத்தை அது உணர்கிறது. அத்தரிசனத்தை பற்பல சொற்கள் மூலம் அது முன் வைக்க முயல்கிறது’ஒளிமயமானவனே! நீயே சிரஞ்சீவியான சூரியனை வான் பயணத்துக்கு அனுப்பியவன். மனிதனுக்குள் ஒளி நிரப்பியவன். பேரொளியே, நீயே மனிதர்களுக்கு வழிகாட்டும் பிரகாசம். அனைத்து மேன்மைகளுக்கும் உரியவன்! நீ எங்கும் நிரம்பியவன்!'[ரிக் vii:7.3]ஒரு எளிய கனவைக் கூட நாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த சொற்களால் தான் சொல்ல முடியும்.அது இம்மாதிரி பேரனுபவங்களில் மேலும் சவாலாகிறது. ரிக் வேதத்தில் ‘சொல்ல முடியாமை’ பல இடங்களில் உக்கிரத்துடன் வெளிப்படுகிறது. தந்தை / அரசன் / மரம் / நீர் /மண்/ தீ போன்ற ஏற்கனவே தெரிந்த படிமங்களை பயன் படுத்தித்தான் அதைச் சொல்ல முடிகிறது. அவை குறிப்புணர்த்துவதற்கான கருவிகளே. இறை அல்லது ஈசன் என்பது கூட வேதங்களிலும் வேதாந்தத்திலும் வேறு ஒரு அறியமுடியாத பிரம்மாண்டத்தை சுட்டும் குறியீடு மட்டும்தான். ஆயினும் மனம் திறக்க முடிபவர்களுக்கு அது அளிக்கும் பிரபஞ்ச தரிசனம் மகத்தானது. பிறருக்கு எப்படி, தெரியாது; எனக்கு மூல மத நூல்கள் எல்லாமே மாபெரும் மானுட தரிசனங்களின் வெளிப்பாடுகளாகவே தெரிகின்றன.சிவப்புக்கு வருவோம். ஒளியேயாக பிரபஞ்சத்தை நிரப்பியிருக்கும் முடிவற்ற வல்லமையை ரிக் வேதம் ஹிரண்ய கர்ப்பன் என்றது. ஹிரண்யம் என்றால் பொன், ஒளி, செம்மை என்றெல்லாம் பொருள். ஒளியில் கருவாக இருப்பவன், ஒளிமூலம் கருவாகிறவன் என்பது அவ்வுருவகம். ஒளியில் உறையும் சக்தி. ஒளி மூலம் பிரபஞ்சமெங்கும் பரவி முளைக்கும் சக்தி என தன் தரிசனத்தை விளக்க முயல்கிறது வேதம். பிராமணர்கள் வேதங்களை சடங்குகளுக்கான மந்திரமாக மாற்றிக் கொண்ட பின்பு ஹிரண்ய கர்ப்பனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்றார்கள். அந்த சடங்கைச் செய்யும் மன்னர்கள் பிராமணர்களுக்கு பொன்னை தானம் செய்ய வேண்டும் என்றார்கள். ஆயிரம் வருடம் பல்லாயிரம் மன்னர்களை சுரண்டினார்கள்.இது எல்லா அறிவுக்கும் நிகழக் கூடியது தான். அதிகாரமாக, அநீதியாக, அழிவாக மாற்றப் படாத அறிவு எதுவுமே இவ்வுலகில் இதுவரை இல்லை. பிரபஞ்ச பெருங்கடலின் கரையில் ஐன்ஸ்டைன் பொறுக்கிய முத்து சக்தி-ஜட கொள்கை. [E =MC2] அதுதான் ஹிரோஷாமாவில் வெடித்தது. நீங்கள் ஒரு அறிவியலாளர் என்றால் உங்கள் உழைப்பும் மனிதர்களை சுரண்ட, அடிமைப் படுத்த, அழிக்க பயன் படுத்த படுகிறது என்பதையும் உணருங்கள். ஆகவே அறிவையே நிராகரிக்க முடியுமா? காட்டுக்கு திரும்பிப் போக முடியுமா? ஸ்டாலினின் செயல்கள் மார்க்ஸை மறுக்காது என்பவர்கள் பிராமணப் புரோகிதர்களால் பயன் படுத்தப் பட்டது என்பதனால் வேதங்களையும் வேதாந்தங்களையும் அறியக் கூட முற்படாமல் நிராகரிக்கும் விந்தை இங்கு தான் காண முடிகிறது. ஆனால் அப்படி செய்வது தத்துவ அடிப்படை ஏதுமில்லாத பெரியாரியத்திலிருந்து கற்க முற்படும் மேலோட்டமான தமிழ் நாட்டு மார்க்ஸாயர்கள்தான். கெ. தாமோதரனின் Indian Thought படித்துப் பாருங்கள். உண்மையான மார்க்ஸிய அணுகு முறை ஒரு போதும் சமநிலையை இழப்பதில்லை என்று புரியும். அது மெய்யறிவை நிராகரிப்பதல்ல, மேலும் செம்மைப் படுத்த முற்படுவதே என்பது தெளிவாகும்.மதம் என்பது நிறுவப் பட்ட அறிவு. நிலைத்த தேடல். ஆகவே அது உயிரிழந்து, அழிய ஆரம்பித்து விட்டது. எந்த மதமானாலும் சரி ஆதிக்கமே அதன் செயல்முறை, அதிகாரமே இறுதி இலக்கு. ஆனால் அதிகாரத்தை அது எங்கிருந்து பெற்றுக் கொள்கிறது? மனித வரலாற்றின் இது வரையிலான வரலாறு காட்டுவது அதிகாரம், இலட்சியவாதத்தை கொன்று, அதன் சடலம் மூலமே கட்டப்பட முடியும் என்று தான். கிறிஸ்து இல்லையேல் புனித ரோம பேரரசு இல்லை. மார்க்ஸை வைத்தே ஸ்டாலின். இன்று உலகை அடக்கி சுரண்டி பட்டினியின் மீது தன் மாளிகைகளை எழுப்பும் அமெரிக்க ஆயுத வியாபாரம் ஜனநாயகம், மனித உரிமை என்ற சென்ற நூற்றாண்டு கனவுகளின் மீது கட்டப் பட்டது. லிங்கனும், வால்ட் விட்மனும், எமர்சனும் அதற்கு அடிப்படை அமைத்து தந்திருக்கிறார்கள்.ஆன்மீகத் தேடல்களையே எப்போதும் மதம் பயன் படுத்திக் கொள்கிறது. சமீப கால உதாரணங்கள் பல. ராமானுஜர். மத்வர், பசவண்ணர் போன்ற மாபெரும் சமூக சீர்திருத்த வாதிகள், ஞானிகள், சாதிக்கு எதிராக போர் தொடுத்தவர்கள். ராமனுஜர் அதற்காகவே கொல்லவும் பட்டார். ஆனால் அவர்கள் பல ஜாதியினரை சேர்த்து உருவாக்கிய உதாரண சமூகங்கள் பிற்பாடு தென் கலை அய்யங்கார், மாத்வர்கள், லிங்காயத்துகள் ஆகிய தனி சாதிகளாகவே மாறின. நாராயண குருவும் அந்த அபாயத்தில் இருக்கிறார். கத்தோலிக்க சபையின் வன்முறைக்கு எதிரான எல்லா அமைப்புகளும் அதைப் போன்ற வேறு சபைகளையே உருவாக்கின. இது மானுட இயல்பு.இவ்வியல்புக்கு எதிராக என்ன செய்யக் கூடும்? நிலைத்து நிற்காமல் முன்னகரும் உயிர்த் துடிப்புள்ள ஆன்மீகத்தை மட்டுமே முன் வைக்க முடியும் என நான் எண்ணுகிறேன். அது இரு வகையிலானது. மத நூல்களில், மத அமைப்பால் உறைய வைக்கப் பட்டுள்ள ஆன்மீகத் தேடலை மீட்டெடுப்பது. நவீன வாழ்வின் எல்லா தளங்களையும் இணைக்கும் அடிப்படைத் தேடலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது.இந்திய மதங்களால் பயன் படுத்தப் படும் பல மூல நூல்கள் உதாரணமாக உபநிடதங்கள், ஆறுதரிசன சூத்திரங்கள், தம்ம பதம் போன்றவை மத நூல்களே அல்ல. அவை தொடர்ச்சியான மறு விளக்கம் மூலமே மத நூல்களாக ஆயின. பாஷ்ய [உரை] மரபு என்பது இந்திய சிந்தனைப் போக்கின் உள்ளே மிக வலுவான ஒரு ஓட்டம். கண்ண தாசன் வரை அது தொடர்கிறது. [உரைகளுக்கு மறு உரை அளிக்க முற்பட்டவர்கள் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும்] இவற்றை அறிவு நூல்களாக மட்டுமே கூட நம்மால் பயில முடியும் என்பதை நான் உறுதியாக கூற முடியும். பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை அறிவியல் நூல்களாகவும். மூர்க்கமான மரபெதிர்ப்பு மூலம் இப்பெரும் பணியை தவற விடுவோமெனில் மதவாதிகளின் பிடியில் சிந்தனையின் சாரமான ஆன்மீக மதிப்பீடுகள் சிக்கவே வழியாகும். ஏனெனில் ஆன்மீக அடிப்படை மானுட வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உயிர்த் துடிப்பான ஆன்மீகம் இல்லையேல் செத்த ஆன்மீகத்துக்குத் தான் சமூகம் சென்று சேரும்.ஆன்மீகம் எதற்கு? தருக்க அறிவு அல்லது காரணிய அறிவு [Rationality] மனிதனுக்குப் போதாது, அது வாழ்க்கையை முழுமையாக விளக்காது என்பதனால்தான். [இக்கருத்தை மிக விரிவாக நான் சோதிப்பிரகாசம் அவர்களின் நூலுக்கு எழுதிய மூன்னுரையில் சொல்லியிருக்கிறேன். திண்ணையில் பிரசுரமாகியுள்ளது] தர்க்க அறிவு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அறிபவனின் சூழல், அவனது இச்சை, அவனை இயக்கும் தேவை, அவனை உருவாக்கியுள்ள அடிப்படை கருத்துக்கள் [அதாவது அவனது சுயம் அல்லது ஈகோ] போன்ற பலவற்றால் அது கட்டுப் படுத்தப் படுகிறது. நிபந்தனையற்ற அறிதல் என்பதே ஆன்மீக அறிதலின் இலக்கு. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது வேறு வினா. ஆனால் அறிபவன் இல்லாமலாகும் ஒரு கணத்தின் அறிதலே முழுமையானது என அது உருவகம் செய்கிறது எனலாம்.மரபணு ஆய்வளரான எரிக் லாண்டர் அளித்த ஒரு பேட்டி[Technology Review 2001] சொல் புதிதில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது. அதில் அவர் மரபணுவியல் லாப வெறி கொண்டவர்களிடம் சிக்குவது பற்றியோ, அதனால் மானுட குலத்துக்கு வரச் சாத்தியமான அழிவுகளை பற்றியோ அவருக்கு எதுவுமே சொல்வதற்கில்லை என்கிறார். சமூகம் விழிப்புடன் இருந்து உரிய சட்டங்களை உருவாக்கலாம் என்கிறார். சட்டங்களை எந்த அடிப்படையில் உருவாக்குவார்கள்? சமூகத்தின் ‘அற ‘ உணர்வின் அடிப்படையில். அந்த அறம் எப்படி வந்தது? அறம் என்றால் என்ன? — நீங்கள் ஆன்மீகத் தேடலுக்குள் இறங்கி விட்டார்கள் ! நீங்கள் வெற்று விவாதம் புரிபவராக இல்லாமல் ஏதாவது ஒரு துறையில் படைப்பூக்கத்துடன் செயல் படுபவர் என்றால், அதைப்பற்றி ஆழமாகச் சிந்திப்பவர் என்றால் ஆன்மீகத் தேடல் இல்லாமல் இருக்க முடியாது. அத்தேடல் இல்லாத அறிவியலாளர் இல்லை, இலக்கியவாதி இல்லை, கலைஞர்கள் இல்லை. நீங்கள் வெறும் தொழில் நுட்ப நிபுணர் என்றால் உங்களுக்கு அது தேவை இல்லை.நீங்கள் செய்யும் செயலின் அடிப்படைகளை ஆன்மீகத் தேடல் மூலமே வகுத்துக் கொள்ள முடியும். என் செயலுக்கும் மானுடத்துக்குமிடையேயான உறவு என்ன, என் செயலுக்கும், இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவு என்ன, எனக்கு இப்பிரபஞ்சத்தில் என்ன இடம், எனக்கு சக மானுடர்களுடன் உள்ள பொறுப்பு என்ன என்ற வினாக்களை நீங்கள் தருக்க பூர்வமாக மட்டும் எழுப்பிக் கொண்டால் சுய நியாயத்தின்,சுய நலத்தின் எல்லை வரை மட்டுமே போக முடியும். தன் துறையின், தன் வாழ்வின் எல்லைக்குள் மட்டுமே நிற்க முடியும். எரிக் லாண்டரைப்போல!. ஆன்மீகமாக அவ்வினா எழுப்பப்படும் போதே நீங்கள் ஐன்ஸ்டீன் சென்ற தூரம் வரை செல்ல முடியும்.உங்கள் கேள்விகள் அனைத்துக்குமே நேரடியாக இல்லாவிட்டாலும் சாத்தியமான விளக்கம் இதில் உள்ளது என நினைக்கிறேன்.உங்கள் வரி :‘ஒரு தரப்பு மனிதர்கள் தங்கள் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தாங்கள் புரிந்து கொண்ட வழியில் (அல்லது விதத்தில்) செய்து வந்த பழக்கங்களே மதம் அல்லது ஆன்மீகம். இதற்கு அவர்கள் காட்டிய மிக உயர்வான காரணமே ‘இறைவன் ‘. சுருங்கச்சொன்னால், ஒருவித வணிக நோக்கே (just another business approach). இதில் கிராமத்து கருப்பண்ணசாமியும் உண்டு, பக்தி வேதாந்த சாஸ்திரிகளும் உண்டு, பில்லி சூனியக்காரர்களும் உண்டு. இவர்கள் அனைவரின் பொதுவான ஒரே நோக்கம் பணமே’.நான் :ஏன் அறிவியல் பற்றி அப்படி சொல்ல கூடாது? ஏன் தத்துவம் பற்றி சொல்லக் கூடாது? இவை அனைத்துமே இப்போதும் சுரண்டலுக்கான கருவிகள் தானே? நவீன அறிவியல் இன்று மேற்கின் சுரண்டல் ஆயுதமல்லாமல் வேறென்ன? நண்பரே! நீங்கள் வடிவமைக்கும் கணிப் பொறி நிரல்கள் கூட எதன் ஆயுதம்? மானுட அறிவையே ஒட்டு மொத்தமாக அப்படி சொல்லி விடலாமே!சுரண்டல் இல்லாமல் அறிவு இல்லை. விவசாயியையும், தொழிலாளியையும் சுரண்டித் தான் கணிப் பொறியாளனுக்கு சம்பளம். ஆனால் அறிவு என்பது, சுரண்டலுடன் இரண்டறக் கலந்தது அல்ல. சுரண்டல் மூலம் உருவான அறிவே சுரண்டலை எதிர்க்கும் ஆயுதமும் ஆகும். ‘அடிமை முறை இல்லாவிட்டால் கிரேக்கக் கலாச்சாரம் இல்லை. கிரேக்கக் கலாச்சாரம் இல்லையேல் சாக்ரட்டீசும், பிளேட்டோவும் இல்லை. அவர்கள் இல்லா விட்டால் மேற்கத்திய தத்துவ சிந்தனை இல்லை. மேலை தத்துவம் இல்லாவிட்டால் ஹெகல் இல்லை. ஹெகல் இல்லாமல் மார்க்ஸ் இல்லை.ஆகவே அடிமை முறை இல்லாமல் மார்க்ஸியம் இல்லை ‘ –கார்ல் மார்க்ஸ்அதே போலத் தான் ஆன்மீகமும், கலைகளும். அவற்றையும் சுரண்டல் ஆயுதமாகவே சமூகம் பயன் படுத்துகிறது.உங்கள் வரி:“இதைத் தவிர இந்த பழக்கங்களினால் அறிவு விரிந்தவர்களோ அல்லது ஆழ்நிலை மன, அமன (மனமற்ற) அனுபவங்களை பெற்றவர்களோ இல்லை. மாறாக அறிவு குறைந்து போனவர்களையும், மற்ற கருத்துக்களை அறிந்து, அலசி ஒத்துக் கொள்ளவும் அல்லது தள்ளவும் தேவையான மன விஸ்தரிப்பை பெறாதவர்களையும் நான் கண்டதுண்டு.”என் பதில்:என்னுடைய கட்டுரைக்கு, நீங்கள் திண்ணையில் எழுதிய மறுப்பைப் படித்து பாருங்கள். ஏற்கனவே ஆனந்தன் என்ற ஒருவர். இப்போது ஒரு ஆசாமி சின்னக்கருப்பனுக்கு எழுதும் மறுப்பில் உள்ள மூர்க்கத்தை பாருங்கள். உங்களையெல்லாம் விடவா மதவாதிகள் மூர்க்கமும் புரிந்து கொள்ளமையும் உடையவர்கள்?காந்தி, நாராயண குரு, அம்பேத்கார் முதல் ஐன்ஸ்டீன் வரையிலானவர்களை நீங்கள் எந்த அணியில் சேர்க்கிறீர்கள்?மன/ அமன அனுபவங்களைப் பெற்றவர்களை நீங்கள் காணாமல் இருக்கலாம். அதனால் நீங்கள் அப்படி யாரும் இல்லை என்கிறீர்கள். நான் கண்டிருக்கிறேன்.உங்கள் வரி :ஆன்மீகத்தினால் (அல்லது ஆன்மீக அறிவால்) ஒவ்வொரு மனிதனுக்கும் ஆகவேண்டியது எது? ஆன்மிகம் அல்லது ஆன்மீக அறிவு ஒருவனுக்கு என்ன அவசியத்தினால் தேவை என்று தெரிந்து கொண்டோமா? கட்டாயம் ஆன்மிகம் சமுகத்திற்கு தேவையா?என் பதில்:ஆன்மீகத்துக்கு நீங்கள் அளிக்கும் அர்த்தம் என்ன என்பதே பிரச்சினை. நான் ஒவ்வொரு தடவையும் அதை தெளிவாக விளக்குவது உண்டு. ஆயினும் இங்குள்ள பாமர மனங்கள் அதை சாமி கும்பிடுதல் என்றே புரிந்து கொள்கின்றன. ஆன்மீகம் என்றால் ஒட்டு மொத்தமான ஒரு அறிவு. ஒவ்வொன்றையும் அதன் முழுமையில் வைத்துப் பார்ப்பது. அணுகுண்டு தயாரிப்பது மட்டுமே என் வேலை, அதன் விளைவுகள் எனக்கு பாத்தியப் பட்டவையல்ல என்று சொல்லும் அறிவியலாளனின் பார்வை அல்ல அது.அறிவுக்கும், ஆன்மீகத்துக்கும் இடையேயான உறவு என்ன? அதன் விளைவு என்ன? என்று விளக்கும் ஓர் அரிய சம்பவம் மாசனபு ஃபுகுவோகா வின் One straw revolution என்ற நூலில் உள்ளது. ஃபுகுவோகா ஒரு வேளாண்மை அறிவியல் அறிஞர். ஜப்பானில் மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் உயர் பதவியில் இருந்தார். அப்போது அவர் ஒரு நாள் குப்பைமேட்டில் ஒரு நெற் செடியை பார்த்தார். அதன் அளவுக்கு செழிப்பான ஒரு செடியை ஆய்வகத்தில் உருவாக்க முடிந்ததேயில்லை. அக்காட்சி அவரை பல மாதங்களாக துரத்தியது. எண்ணற்ற கேள்விகள். நவீன அறிவியலைப் பற்றியும், மானுட அறிவைப் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் எல்லாம்.. ஒரு நாள் தன் பதவியைத் துறந்து நாடோடியாக அலைய ஆரம்பித்தார். அந்நாட்களில் ஒருமுறை மன அழுத்தத்தின் உச்சியில் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பறவையின் சிறகடிப்பொலி அவரை அதிர வைத்து மூர்ச்ச்சையடைய வைத்தது. பின்பு விழித்துக் கொண்ட போது எல்லாமே தெளிவாக இருந்தது. அது ஒரு தரிசனம். ஆன்மீகமான அனுபவம் என்பேன் நான். உளவியளார் அதை ஆழ்மன அனுபவம் எனலாம். அம்மாதிரி அனுபவங்களை ஜென் பெளத்ததில் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள்.தன் கிராமத்துக்கு திரும்பிய ஃபுகுவோகா இயற்கையுடன் இணைந்த விவசாய முறை ஒன்றை படிப்படியாக வளர்த்தெடுத்தார். அது அறிவியல் உலகை உலுக்கியது. உலகம் முழுக்க நவீன விவசாய முறைகள் இன்று நிராகரிக்கப்பட்டிருப்பதற்கு அவர்தான் காரணம். சுற்றுச் சூழலுடன் இணைந்த வாழ்க்கைக்கு போராடும் உலகளாவிய இயற்கைவாதிகளுக்கு அவர் தான் குரு. தமிழ் நாட்டில்கூட பசுமைப் புரட்சியின் விளைவாக கனத்த நஷ்டத்தால் திணறிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சிலர் அதை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறர்கள். இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார் [குமுதத்தில் அவர் எழுதிய தாய்மண்ணே வணக்கம் புகழ் பெற்ற தொடர்] அதற்கென ஓர் இயக்கமே நடத்துகிறார்ஃபுகுவோகா தன் செயல்கள் மூலம் முன்வைத்த தரிசனம் என்ன? மனித கலாச்சாரம், அதன் முதல் கனியாகிய விவசாயம், பிறகு தொழில் அனைத்துமே இயற்கையை ‘வென்றடக்க’ முயல்பவையாக இருந்துள்ளன. ஃபுகுவோகா இயற்கையுடன் இயைந்து வாழும் ஒரு வாழ்க்கையை முன் வைக்கிறார். அடிப்படையில் விவசாயம் பற்றிய நூலான One straw revolution உண்மையில் முழுமையான ஓர் வாழ்க்கைப் பார்வையை முன்வைக்கும் மாபெரும் மெய்யியல் நூலுமாகும். அவர் இறந்தது 1998 ல் தான். நானே அவரை பார்த்திருக்கிறேன். நம் கண்ணெதிரே நடந்த சரித்திரம் அது.மற்ற வேளாண்மை அறிவியல் நூல்களுக்கும் அதற்குமான இடைவெளி அந்த முழுமைதான். அந்த முழுமையான பார்வையைத் தான் நான் ஆன்மீகம் என்கிறேன். ஆன்மீகப் பார்வையே அந்த முழுமையை அளித்தது. அம்முழுமையான பார்வையை அளிக்கும் அனைத்துமே ஆன்மீகம்தான்.ஆன்மீக பார்வை இல்லாத அறிவியலாளர்கள் உரக் கம்பெனிகளுக்கு ஆய்வு வேலை செய்யும் போது, நம்மாழ்வாரை ராஜினாமா செய்ய வைத்து இயற்கை விவசாய பிரச்சாரகராக தமிழகத்தின் தெருக்களில் அலைய வைத்தது ஆன்மீகம். அது மனித குலத்தை, இயற்கையை, பிரபஞ்சத்தை அனைத்தையும் கணக்கில் கொண்டு யோசிக்கும் பைபிள், குர் ஆன் அனைத்திலிருப்பதும் அந்த மாபெரும் ஆன்மீகப் பார்வையே. அது நின்ற இடத்தில் எல்லாம் மதம் முளைக்கும். ஆனால் அதன் முன்னால்தான் மானுட குலத்தின் எதிர்காலமே உள்லது.அன்புடன்,ஜெயமோகன்
கடிதம் 6.
அன்பிற்குரிய கார்த்திகேயன் ராமசாமி அவர்களுக்கு,தங்கள் கடிதம் கிடைத்தது. இருநாவல்கள் தொடர்ந்து வளர்ந்தபடியே உள்ளன. அத்துடன் பல கட்டுரைகள், கடிதங்கள் கூடவே இந்த நாவல். என்ன பிரச்சினை என்றால் காலச்சுவடு இதழில் என்னைப் பற்றி மிக அவதூறான ஒரு கட்டுரை வந்தது. அதை அவர்கள் manipulate செய்தார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. பொதுவாக என்னை அவதூறுகள் எதுவும் செய்வதில்லை. எதிர்மறை அபிப்பிராயங்கள் என் வலிமையை அதிகரிக்கவே செய்வது வழக்கம். ஆனால் அவர்கள் திட்டமிட்டு முற்றிலும் அபாண்டமாக நடராஜ குருவின் மாணவ்ரும், சர்வதேச அளவில் புகழ் பெற்றவருமான வினய சைதன்யாவை இழிவு செய்தது, குருகுலம் குறித்து மிக அபாண்டமாக எழுதியது மிகவும் புண்படுத்தியது. கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆனால் வெறும் வம்பு தான் நடந்தது என எழுத வைக்கிறது காலச்சுவடு. குருகுலம் இடமும் தந்து, சமையல் செய்து பரிமாறி உதவுவதனால் தான் 2600 ரூபாய் செலவில் இந்த மூன்று நாள் மாநாட்டை நடத்த முடிகிறது. ஆக அந்த மன நெருக்கடியை வெல்ல எனக்கு ஒரு இடைவெளி தேவைப் பட்டது. ஆகவே இந்த வேடிக்கை கதையை எழுதினேன். [துப்பறியும் கதை] மற்ற இரு நாவல்களும் மிக தீவிரமானவை.எல்லாவற்றுக்குமே எழுத்து தான் எனக்கு. உங்களுக்கு என் கடிதம் ஒன்று கிடைக்கவில்லை என்று படுகிறது. அதில் எல்லாம் விரிவாக எழுதியிருந்தேன். என் கடிதம் உங்களுக்கு வந்த பிறகு அது உங்கள் சொத்து தான். அதில் எனக்கு உரிமை இல்லை. தாங்கள் விரும்பிய படி செய்யலாம்.என் நூல்கள் அனைத்துமே கவிதா பதிப்பகத்தில் கிடைக்கும். சென்னையில் திலீப் குமாரிடமும் கிடைக்கிறது. பொதுவாக நல்ல தமிழ் நூல்கள் அனைத்தையுமே வெளிநாட்டு தமிழர்கள் வாங்க சிறந்த இடம் திலீப் குமார் கடைதான். நூல்களை பற்றிய கருத்தையும் அறிந்து கொண்டு வாங்கலாம். அவருடன் ஒரு தொடர்பு இருப்பது நல்லது. என் 1] விஷ்ணு புரம் 2] பின் தொடரும் நிழலின் குரல் 3] திசைகளின் நடுவே 4] பனிமனிதன் 5] மண் 6] ஆயிரங்கால் மண்டபம் 7] ரப்பர் ஆகிய நூல்கள் விற்பனையில் உள்ளன. தங்கள் ஆலோசனைப்படி சொல்-புதிதை இணையத்தில் கொண்டு வர முயன்றபடி இருக்கிறேன்.–ஜெயமோகன்.
***