அன்புள்ள ஜெயமோகன்
வெள்ளையானை என்ற நூல் நாவலின் தலைப்பில் வெள்ளை யானை என்று நடுவில் இடைவெளி விடப்பட்டிருக்கவேண்டும், இது இலக்கணத்தவறு என்று ஒரு நண்பன் சொன்னான். நீங்கள் அந்தத் தலைப்பை எப்படி அனுமதித்தீர்கள்?
சாந்தகுமார்
சாந்தகுமார்,
யார் அந்த மடையன்? அவனையெல்லாம் திருவிளையாடல்புராணத்தை ஒருமுறை முழுக்க வாசிக்கச் சொல்லவேண்டும், அப்போதுதான் அடங்குவான்.
தமிழில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களை விட இலக்கணமேதைகள் அதிகமாகிவிட்டனர் . அரசு கொசுமருந்து மாதிரி ஏதாவது புகை கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்களை விமர்சிப்பதற்காகக் கேட்கவில்லை. எனக்கு உண்மையிலேயே தெரியாது, அதனால்தான் கேட்டேன். மன்னிக்கவும்.
சாந்தகுமார்
அன்புள்ள சாந்தகுமார்,
தமிழிலக்கண மரபில் சீர்பிரிப்பதற்குத்தான் இலக்கணம் உண்டு, சொற்களைப் பிரிப்பதற்குக் கிடையாது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை அச்சுக்கு வந்தபோதுதான் சொற்களைப் பிரித்து எழுத ஆரம்பித்தனர்.
அப்போதுகூட தமிழறிஞர்கள் சொற்களைப் பிரிக்காமல்தான் எழுதிக்கொண்டிருந்தனர். எண்பதுகளில்கூட பல தீவிரத் தமிழியச் சிற்றிதழ்கள் சொற்களைப் பிரிப்பதற்கு எதிரானவர்களாக இருந்தனர்.நானே அப்படிப்பட்ட மணிமொழி என்ற சிற்றிதழில் பழந்தமிழ் இலக்கியம்பற்றி நிறைய எழுதியிருக்கிறேன் மொத்தச் சொற்றொடரையும் ஒன்றாகவே போட்டிருப்பார்கள்.
சொற்களைப் பிரித்து எழுத ஆரம்பித்தபிறகுதான் ஒற்றுப்புள்ளி எங்கே எப்படி போடுவது என்பது பெரிய சிக்கலாக ஆகியது. தமிழாசிரியர்கள் இயந்திரகதியில் வல்லினம் புணரும் இடங்களில் எல்லாம் சகட்டுமேனிக்கு ஒற்றை போட்டு தாளிப்பார்கள். மொத்த அர்த்தமும் தலைகீழாக ஆவதைப்பற்றி கவலைகொள்ள மாட்டார்கள்.
உதாரணமாக மேலே உள்ள வரிகளிலேயே ’எங்கே எப்படி போடுவது ’ என்ற இடத்தில் ’எப்படிப் போடுவது’ என்று எழுதுவார்கள். பொருள் மாறுபாடு வராது. ஆனால் ஒலியமைப்பு பேசுவதற்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அதே சமயம் ’சகட்டுமேனிக்கு ஒற்றை போட்டு தாளிப்பார்கள்’ என்ற சொல்லாட்சியில் ‘ஒற்றைப் போட்டு’ என எழுதினால் அர்த்தமே மாறிப்போகும்.
ஒற்று போடுவதில் இன்று எந்தவிதமான பொது இலக்கண நெறியும் இல்லை. ஆளுக்கொரு வகையில் போடுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு அவர்களின் நூல்கள் அச்சில் வரும்போது வேறு எவரோ போட்ட ஒற்றுகளினால் மொத்த அர்த்தமும் மாறிப்போன சொற்றொடர்களைப் பார்க்கும் பெருந்துன்பம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வெள்ளையானை நாவலிலும்கூட.
என் இணையதளத்திலேயே கூட வெவ்வேறு நபர்கள் பிழைதிருத்துவதனால் ஒற்று போடுவதில் [ஒற்றுப்போடுவது என ப் சேர்த்தால் பொருளே வேறு] விதவிதமான குளறுபடிகள் உள்ளன. கூடுமானவரை ஆசிரியர் போட்ட ஒற்றுக்களை மட்டும் வைத்துக்கொள்வதே சரியானது என்பது என் எண்ணம். ஒற்று குறைந்தால் தமிழன்னை ஒன்றும் சினந்துவிடமாட்டாள். ஒற்று மிகுந்தால் பொருளே மாறிவிடும்.
இவ்வாறு உரைநடை அச்சுக்குள் வந்தபோதுதான் குறியடையாளங்களும் போடப்பட்டன. காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, நிறுத்தல்குறி போன்றவை சொற்றொடர்களின் அமைப்பையே மாற்றியமைக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மாற்றத்தையும் மரபுவாதிகள் எதிர்த்தனர். பாரதியில் இருந்து சுந்தர ராமசாமி வரை அவர்களால் இலக்கணமறியாதவர்கள் என வசைபாடப்பட்டனர்.
ஏனென்றால் இலக்கணப்படி தமிழ் குறியடையாளங்கள் இல்லாமல்தான் எழுதப்படவேண்டும், அதுவே ஏட்டுச்சுவடி வழக்கம். குறியடையாளங்கள் நாம் ஆங்கிலத்தில் இருந்து எடுத்துக்கொண்டவை. [மணிமொழி போன்ற இதழ்கள் முற்றுப்புள்ளியைக்கூட போடுவதில்லை]
அந்த வகையான எதிர்ப்புகளையெல்லாம் மீறித்தான் தமிழ் வளர்ந்து இன்றைய வடிவில் நம் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. மரபுவாதிகள் அந்த மாற்றத்தை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டு அடுத்த மாற்றத்துக்கு எதிராகச் சத்தம் போடுவார்கள்.
உண்மையில் பழந்தமிழைக் கற்று, தமிழின் பரிணாமங்களை அறிந்து, அதன்பின் மரபுசார்ந்த நிலைப்பாடு எடுக்கும் இலக்கணவாதிகள் மேல் எனக்கு மதிப்புதான். வெறுமே ஒன்றரையணா நூல்களை வாசித்துவிட்டு சத்தம்போடும் அரைவேக்காடுகள்தான் குமட்டலெடுக்கச் செய்கிறார்கள்.
சொற்களைப் பிரிப்பதற்கு வருவோம். அதற்கு நமக்கு இலக்கண விதி இல்லை. ஆங்கிலத்தைக் கண்டு நாம் உருவாக்கிக்கொண்ட முறை அது. ஆங்கிலத்தில் அனைத்துச் சொற்களையும் பிரித்தே எழுதவேண்டும், அவ்வெழுத்துக்களின் இயல்பு அது. சேர்த்து எழுதினால் சொல் இன்னொன்றாக மாறிவிடும். தமிழில் எல்லா சொற்களையும் அவ்வாறு பிரிக்கமுடியாது. பிரித்தால் பொருள் மாறுபடும்.
அப்படியென்றால் சொற்பிரிப்புக்கான விதி என்ன? காதும் நாக்கும்தான். நவீன உரைநடை பேச்சுமொழியை முடிந்த அளவுக்கு நெருங்கி ஒழுக முயல்வது. எந்த உரைநடை எழுத்தின் செறிவும் பேச்சின் ஓட்டமும் ஒருங்கே கொண்டிருக்கிறதோ அதுவே நல்ல உரைநடை. அதற்காகவே என்றும் எழுத்தாளர்கள் முயல்கிறார்கள். அதன் வழியாகவே அவர்கள் மொழியை மாற்றியமைக்கிறார்கள்,முன்னெடுத்துச்செல்கிறார்கள்.
இரண்டுசொற்கள் இணைந்து ஒரு பெயரை உருவாக்குமென்றால் அச்சொற்களை இணைத்துச் சொல்வதே சிறப்பாகும். வெள்ளையானை என்பது ஒரு பெயர்ச்சொல்.முழுநிலவு போல தேன்மொழி போல.திருவிளையாடற்புராணத்தில் வெள்ளையானை சாபம் தீர்த்தபடலம் என ஒரு பகுதி வருகிறது. இச்சொற்களை எவரும் பிரித்து எழுதுவதில்லை.
மேலே சொன்ன வரியிலேயே ‘இரண்டுசொற்கள்’ என்பதை இரண்டு சொற்கள் என பிரித்து எழுதலாம். அப்படி எழுதினால் ஒலி மட்டுமல்ல பொருளிலும் நுட்பமான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. அதை உணரக்கூடியவனே உரைநடைபற்றிப் பேச தகுதிபடைத்தவன். அந்த நுண்ணுணர்வை மட்டும் நம்பி உரைநடையை எழுதுங்கள். அதில் உங்கள் மனதில் ஓடும் மொழியின் ஓசையும் பொருளும் வந்திருந்தால் அது சரிதான்.
இன்று தமிழில் எழுதும் புனைகதையாசிரியனின் உரைநடையை இலக்கணநோக்குடன் அணுகும் தகுதிகொண்ட தமிழறிஞர்கள் மிகச்சிலரே. மற்றமடையர்களுக்கு அது அன்றாட வெட்டிவேலை, அவ்வளவுதான்.
ஜெ