அன்புள்ள ஜெ,
”எழுத்து முதிரும் புள்ளியில் அடுத்த சொல் நிகழாமலிருக்கக் கற்ற பெரும் கலைஞன்”
நேற்று படித்த “கனிதல்” பதிவில் வந்த இந்த வரி மிக அருமை! அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் ஒரு கச்சிதம் உள்ளது. அதை மிக மிக துல்லியமாய் உணர்த்தியமைக்கு நன்றி :-)
இதை ஒரு வெறும் தொழில்நுட்பமாக நான் பார்க்கவில்லை. எதை கூறுவது, எதை சொல்லாமல் விடுவது என்பது ஒரு வகை தொழில்நுட்பம் தான். இந்த சொல்லுக்கும் சொல்லாமைக்கும் நடுவில் தான் கலை நிகழ்கிறது. ஆனால், சொல் நிகழாமலேயே தடுத்து விடுவது நிச்சயம் “கலை” தான்.
உங்களைப்போன்று, அமு போன்று, ஒரு சிலரே இந்த கலை அம்சம் கை வர பெற்றவர்களாக இருக்கிறீர்கள். ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் நினைப்பது இது தான். உங்களால், ஒரு படைப்பை அதனிலிருந்து வெளியே நின்று பார்க்க முடிகிறது. அப்படி ஒரு பார்வையை படைப்பு நிகழும்போதே பெற முடிகிறது. நான் நினைப்பது சரிதானா?
உங்களுடன் உரையாட மேலும் சில விஷயங்கள் உள்ளன. அதன் context வேறு. என் தமிழின் போதாமை காரணமாக அதை இன்னொரு மடலில், ஆங்கிலத்தில் அனுப்புகிறேன்.
அன்புடன்,
ஸ்கந்தா
அன்புள்ள ஸ்கந்தா,
எழுதுவதை ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது எழுத்தாளர்களின் இயல்பு. கனி தின்னும் கிளியை கவனிக்கும் அந்தக்கிளிதான் அந்தக்கட்டுப்பாட்டை நிகழ்த்துகிறது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிறிய வயதில் என்னுடைய ஐயன் (தாத்தா) எனக்கு நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார். ராமாயணம், மகாபாரதம், நள தமயந்தி என ஆரம்பித்து பல நூறு கதைகள். சில சமயம் புத்தகங்களில் கதைகள் படிக்கும்போது கூட எனக்கு அவர் குரல் தான் காதில் ஒலிக்கும். அவ்வளவு நேர்த்தியாக யார் சொல்லியும் நான் இது வரை கேட்டது இல்லை. ஓடை நீர் ஆர்ப்பாட்டமில்லாது மெதுவாக ஒவ்வோரிடமாக கடந்து போவது போல, குழப்பம் இல்லாது, திணறல் இல்லாது சொல்வார். கதையை முடிக்கும் போது ஒரு நீண்ட அமைதியான படகு பயணம் வந்தது போல ஒரு நிறைவு தோன்றும். என்னுடைய அம்மா, அப்பா இருவரின் வழி தாத்தாக்களும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எப்படியோ அந்த கலை இலக்கிய உணர்வு எனக்கும் தொற்றி கொண்டது ஒரு ஆறுதல் (படைக்க தெரியா விட்டாலும் படித்து ரசிக்க தெரிவதிலாவது எனக்கு நிம்மதி). என் தாத்தா சொல்லிய கதைகளை நினைத்தால் நாக்கு மட்டுமே சுவையை உணர முடியும் என்பது உண்மை அல்ல என தோன்றும். என்னுடய அண்ணன் குழந்தைக்கு கதைகள் சொல்ல முயன்றிருக்கிறேன். அதை கேட்ட பின்பும் அவள் இனி கதை கேட்க முயற்சிப்பாளா என்பது சந்தேகமே. அவ்வளவு மோசமாக சொன்னேன். அந்த கலை எனக்கு அவ்வளவாக கை கூடவில்லை.
நீங்கள் அஜிதனுக்கு கதை சொல்வது பற்றி எழுதி இருந்ததை படித்தேன். இதையே எல்லா குழந்தைகளுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி நீங்கள் யோசிக்கலாம்தானே. “cartoon” மாதிரி என்றில்லாமல் vedio(youtube or dvd) வழியாக சொல்லலாம் தானே (நிறைய முடியாவிட்டாலும் ஏதோ சில கதைகள்). என்னதான் இருந்தாலும் நேரில் சொல்வது போல ஒரு பிணைப்பு வராது என்பது உண்மை தான். ஆனால் அந்த ரசனையாவது வரும் தானே. TV க்களில் வரும் கதைகள் (கதை சொல்லிகள்) வெறும் செய்திகளாக இருக்கிறது. அதில் ஒரு உணர்வு இல்லை. ரசனை இல்லை.
எனக்கு என்னமோ இம்மாதிரி ரசனைகளை குழந்தைகளிடம் உருவாக்க எங்களை போன்றவர்கள் முயன்றாலும் அவ்வளவாக நேர்த்தியாக செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இம்மதிரி கதை சொல்வது இயல்பாக குழந்தைகளிடம் ஒரு கலை ஆர்வமும், படிக்கும் ஆர்வமும் உருவாக உதவும் அல்லவா. தமிழ் மேல் ஆர்வமும் வரும் தானே. எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் நான் அந்த இன்பத்தை அனுபவித்து இருந்தும் என்னாலேயே அதை சரியான தேர்ச்சி இன்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியவில்லையே என ஆதங்கமாக இருக்கிறது.
நன்றி
தமிழினி
அன்புள்ள தமிழினி,
ஒரு பார்வையில் நீங்கள் சொல்வது சரி, எல்லாராலும் கதை சொல்லிவிடமுடியாதுதான். ஆனால் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளிடமாவது சிறப்பாகக் கதை சொல்ல முடியும். ஏனென்றால் குழந்தைக்குப்புரியும் ஒரு மொழியை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதைசொல்வதன் வழியாகவே நாமும் குழந்தையும் ஓர் உலகில் வாழ ஆரம்பிக்கிறோம். அந்த உரையாடல் நம் வாழ்நாளின் கடைசிவரை நீடிக்கும். அதற்கு நிகராக எதுவும் ஆகமுடியாது. நூல்களும் பதிவுசெய்யப்பட்ட கதைகளும் எல்லாம் இரண்டாம் கட்டம்தான்
ஜெ