நாளைய உலகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நேற்று உங்களை வெள்ளை யானை வெளியீட்டு விழாவில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி ..விழா மிக சிறப்பாக இருந்தது .. நான் முதல் முறை இப்படி பட்ட விழாவிற்கு வருகின்றேன் .. யாரையும் முன்பே அறிமுகம் இல்லாத கூட்டங்களுக்கு செல்ல ஒரு தயக்கம் … நண்பர் தங்கவேல் வருவார் என அறிந்ததால் வந்து விட்டேன் .. வருமுன் இப்படிப்பட்ட விழாக்களில் , பொதுவாக பேச்சாளர்கள் விழாவுக்கான தலைப்பை விட்டு சம்பந்தம் இல்லாத பேச்சுக்களை பேசுவார்கள் , தேவையான நேரத்தை விட அதிக நேரம் பேசுவார்கள் என ஒரு எண்ணம் என்னிடம் இருந்தது … (முன் காரணம் எதுவும் இல்லை ..) .. ஆனால் நேற்றைய விழாவில் பேசிய அனைவரும் கச்சிதமாக பேசியதாக தோன்றியது… சிலர் சிறிது புத்தக மைய கருவில் இருந்து விலகி பேசினாலும் முடிவில் புத்தகத்தின் கருத்துக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தி வேண்டுகோளையோ , வாழ்த்துரையோ கூறி முடித்திருந்தார்கள்.. மிக நன்றாக இருந்தது ..

தங்கள் பேச்சு மிக அழுத்தமாகவும் உணர்வுகளை எழுப்புவதாயும் இருந்தது … ஆரம்பிக்கும் போது மிக மென்மையாக ஆரம்பித்து.. பின் மிக உணர்ச்சி வேகமாக பேசினீர்கள்…முதல் முறை உங்களை நேரில் பார்த்து பேச்சையும் கேட்கின்றேன் ..மிக நன்றாகவும், உணர்ச்சி பூர்வமாகவும், கருத்துபூர்வமாகவும் இருந்தது…

அதே உணர்ச்சி (மேலும் தீவிரமாக ) இன்று பனுவல் கூட்டத்திலும் அனுபவித்தேன்…

காந்தியை பற்றியும் சமரசங்கள் பற்றியும் நீங்கள் சொன்ன கருத்து மிக சரியாக உணர்கிறேன்.. என் தனிப்பட்ட உத்யோக , தனி வாழ்க்கையிலும் அந்த போராட்டமும் (conflict ) ம் சமரசமும், மனதை ஆறுதல் படுத்திக்கொள்கிற காரண உற்பத்திகளும் நடப்பதை உணர முடிகிறது …

கூட்டத்தில் கேட்க நினைத்த , கேட்காமல் விட்ட கேள்வி ….. இப்போது கேட்கிறேன்…நேரம் கிடைக்கும் போது தங்கள் கருத்தை அறிய ஆவல்..

தங்களது மண்ணும் ஞானமும் பதிவை படித்தபோது ஏற்பட்ட சந்தேகம், இன்று தங்கள் இந்து மதம் பற்றியும், உலகமயமாதல் பற்றியும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் பேசும் போது தோன்றியது …உலகமயமாதல் இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது.. அதன் பலனாக படித்த இளைஞர்கள் , படித்தவர்கள் , மேலை நாடுகளில் புலம் பெயர்வதோ , பல வருடங்கள் பணி நிமித்தமாக வாழுமிடம் மாறுவது இயல்பாகவே நடக்க கூடியது … இப்படி இடம் பெயர்பவர்கள் தங்கள் பண்பாட்டு கூறுகளை இழக்கத்தான் வேண்டுமா? .. தங்கள் கருத்தை அறிய ஆவல்..

தங்கள் அன்புள்ள
வெண்ணி

அன்புள்ள வெண்ணி

ஏற்கனவே மண்ணும் ஞானமும் என்ற கட்டுரையில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன்.

உலகமயமாக்கலை எவரும் தடுக்கமுடியாது. இனக்குழுக்கள் அரசுகளானதுபோல சிற்றரசுகள் பேரரசுகளானதுபோல அவை நாடுகளானதுபோல இது இன்றியமையாத ஒரு வளர்ச்சிப்போக்கு. இதன் தொடர்ச்சியாக என்ன நிகழும்?

இப்படி ஊகிக்கலாம். ஒன்று, வட்டாரத் தனித்தன்மைகளில் உள்ள சாராம்சமான பகுதி வெவ்வேறுவகையில் குறியீடுகளாக மாறி நாளைய உலகப் பண்பாட்டில் எஞ்சியிருக்கும். இன்று நாம் நம் பழங்குடிவாழ்க்கையை இழந்துவிட்டாலும் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் அவை எஞ்சியிருப்பதுபோல.

ஆனால் இன்று அந்தப்பழங்குடியம்சம் மதத்திலும் இலக்கியத்திலும் கலையிலும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அன்றாட வாழ்க்கை வெகுவாக விலகி பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைப்போல எதிர்காலத்தில் இந்த வட்டாரப் பண்பாட்டுக்கூறுகள் கலையிலக்கியங்களில் மட்டும் எஞ்சக்கூடும். அன்றாட வாழ்க்கை உலகப்பொதுவானதாக மட்டுமே இருக்கும்

தொழில்நுட்பம் வணிகம் சேவைத்துறைகள் சார்ந்து செயல்படுபவர்களிடம் எந்த வட்டார அம்சங்களும் எஞ்சியிருக்காது. வட்டார மொழிகளே கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. உலகமொழியாக கடைசியில் உருக்கொண்டிருக்கும் ஒரு சிலமொழிகள் மட்டுமே புழக்கத்திலிருக்கும். மற்றவை கலையிலக்கியத்துக்கான சிறப்புமொழிகளாக மட்டுமே வாழும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14
அடுத்த கட்டுரைபுராணங்களும் படிமங்களும் -வெண்முரசு