இணையமும் நம் சிந்தனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். தி இந்து நாளிதழில் உங்களுடைய ”தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ கட்டுரையைப் படித்தேன். இதைப் பற்றி சில கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள ஆர்வம்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அந்தத் துறையில் அந்நாளில் இருந்த புரிதலின் எல்லைக்கருகே இருந்தார்கள் என்று கொள்ளலாம். இன்றோ டாக்டரேட் பெற்றாலன்றி எந்தத்துறையிலும் கருத்துக்கூற முனைவது கூட இயலாது. இதனால் அறிவியலின் ஆரம்பக்கோட்டைக்கூடத் தொடாமல் பலர் கல்வியை முடித்து வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றனர்.

பரவலாகப் படித்ததால் பின்னாளில் படித்த விவரங்களுக்கிடையேயான தொடர்பைப் பற்றி சிந்திக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் மிகவும் அத்தியாவசியமானவையன்றி மற்றவை இணையத்தில் தேடிக்கொள்ளலாம் என்ற வசதியால் பரவலாகப் படிப்பது வழக்கத்தில் இல்லை. இதனால் நாம் நிபுணத்துவம் அடைந்த துறையில் நிகழும் மாற்றல்கள் மற்ற துறைகளில் நிகழும் மாற்றங்களோடு எவ்வாறு ஒத்துள்ளன, எவ்வாறு வேறுபட்டுள்ளன என்று ஒப்பிட்டு நோக்குவது இயலாது போகிறது.

கூகிள் இணைய தளத்தில் கிடைக்கும் தேடுதல் வசதி மட்டுமல்லாமல் அந்தத்தளத்தின் செயல்பாட்டுத் தொழில்நுட்பமே அறிவியலின் தர்க்க முறையை பாதிக்குமோ என்ற ஐயம் எழுகிறது. எந்தப் பொருட்களைப் பற்றியோ, நிகழ்வுகளைப் பற்றியோ, கருத்துக்களைப் பற்றியோ, தேவையான புள்ளி விவரங்கள் கிடைத்துவிட்டால், அந்தப் புள்ளி விவரத் தொகுப்பை அலசி, இவற்றின் தனித்தன்மை என்ன, இவை அடுத்து எந்தப் பாதையில் செல்லக்கூடும் என்று அனுமானம் செய்து, அந்த அனுமானத்தை நிரூபணத்துக்குள்ளாக்கி அறிவியல் முன்னேறத் தொடங்கியிருக்கிறது. இதற்கு அந்தப் பொருள், நிகழ்வு, கருத்து போன்றவற்றின் அடிப்படைத்தன்மையையோ, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு விடையையோ, தேடி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை.

கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்:
http://www.wired.com/science/discoveries/magazine/16-07/pb_theory

உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் என்னுடைய கருத்தைக் கூற முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

– கே ஆர் வைகுண்டம்

அன்புள்ள வைகுண்டம் அவர்களுக்கு

முக்கியமான கருத்து சிந்திக்கவேண்டிய கட்டுரை. மிகுந்த நன்றி.

நான் இதை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்திருக்கிறேன். தரவுகளுக்கான தேடல் என்பது ஒவ்வொரு பண்பாட்டுக்கும் ,ஒவ்வொரு அறிவுத்துறைக்கும், ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஏற்ப வேறுபடுகிறது.எது முதன்மையான தகவல், எதிலிருந்து ஆரம்பிப்பது என்பதெல்லாம் இவ்வாறு முடிவில்லாத புதிய சாத்தியங்களைக் கொண்டவை

ஆனால் இன்றைய தரவுகளை இணையத்தேடல்பொறிகள் தீர்மானிக்கின்றன. முக்கியத்துவத்தை அவை உருவாக்குகின்றன. உதாரணமாக, கூகிள் அதிகம்பேர் தேடியடைந்தவற்றையே முதலில் அளிக்கிறது. ஆகவே நாம் தேடும்போது அதிகம்பேர் அறிந்ததே நமக்கும் கிடைக்கிறது. இயல்பாக நாம் அறியவருவதெல்லாமே எல்லாரும் அறிந்துகொண்டிருப்பவற்றைத்தான்

இதை ஒரு சிறந்த கல்லூரி வகுப்புடன் அல்லது ஓர் அறிஞருடனான தனிப்பட்ட உரையாடலுடன் ஒப்பிட்டால் வேறுபாடு புரியும். அங்கே மிகத் தனிசிறப்பான தரவுகள், வேறெங்கும் கிடைக்காத தரவுகள் கிடைக்கும். அவையே கேட்பவனின் சிந்தனைக்குத் தனித்த பாதையை உருவாக்கும். எண்பதுகளில் நான் பி.கே.பாலகிருஷ்ணனிடமிருந்துதான் இவான் இலியிச் பெயரை கேள்விப்பட்டேன். அப்போது பொது உரையாடலில் அவர் இடம்பெற வாய்ப்பே இருக்கவில்லை

என் தனிப்பட்ட தேடலில் நான் தேடுபவை பற்பல பக்கங்களுக்கு அப்பால், பலவகையில் சொற்களைக் கோர்த்து கோர்த்துத் தேடினால் மட்டும் கிடைப்பவையாக உள்ளன. இதுவே அறிவுலகத்தேடலில் உள்ள தனிச்சிறப்பைச் சொல்கிறது. அதாவது பொதுத்தரவுகள் அல்ல தனித்தன்மை கொண்ட தரவுகளே நமக்குத்தேவை.

கூகிள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நான் மறுக்கவில்லை. கூகிள் இல்லையேல் இன்றைய பாய்ச்சல் சாத்தியமாகியிருக்காது. எண்பதுகளில் புதியசிந்தனைகளைப்பேசும் ஒரு புத்தகம் மிகச்சில கல்லூரி நூலகங்களில் மட்டுமே வரும். அதை எடுத்து ஒளித்துவைத்துக்கொள்ளும் பேராசிரியர் சில ஆண்டுகள் அந்த நூலின் உள்ளடக்கத்தைப்பேசி தன்னை ஒரு சிந்தனையாளனாக முன்வைக்க முடியும். தமிழில் அது நடந்திருக்கிறது. எண்பதுகளில் தமிழில் அதிகம் பேசிய பலர் வெறும் தகவல்களை மட்டுமே சொன்னவர்கள். கூகிள் வந்ததுமே அவர்கள் காலாவதியானார்கள்

இன்று அதற்குப்பதில் உருவாகியிருக்கும் போக்கு ஒன்று உண்டு. இங்கே அசலாக எழுதப்படும் ஒரு கட்டுரையை வாசித்ததுமே அதன் அடிப்படைச்சொற்களை ஆங்கிலத்திலாக்கி கூகிளில் தேடுவார்கள். அப்படி கிடைக்கும் சில நூல்களையும் கட்டுரைகளையும் சுட்டி கொடுத்து அவற்றையெல்லாம் தான் முன்னதாகவே வாசித்துவிட்டதாகவும் அவற்றை வாசித்துவிட்டுப் பேசும்படியும் எதிர்வினை செய்வார்கள். மொத்த விவாதமே அதன்பின் திசைதிரும்பி பொருளிழக்கும்.

அவ்வாறு அந்நூல்களையெல்லாம் முன்னதாக வாசித்த ஒருவர் அவற்றைப்பற்றி முன்னரே என்னதான் எழுதியிருக்கிறார், அவரது கட்டுரையின் தரம் என்ன என்று பார்த்தால் உண்மை தெரியும். இந்தப்போக்கு
இன்றைய கல்வித்துறையை முழுக்க ஆக்ரமித்திருக்கிறது என்கிறார்கள்.

1990களில் விஷ்ணுபுரம் நாவலை எழுத நான் பத்தாண்டுகள் ஆய்வுசெய்தேன். 2012இல் வெள்ளையானையை வெறும் மூன்றுமாத ஆய்வில் முடிக்கமுடிந்தது. கூகிள் புக்ஸ் என்ற தொகுப்பு ஒரு பெரும் மானுடச்செல்வம். சரியானபடி பயன்படுத்துவதே முக்கியம். ஆனால் பெரும்பாலானவர்கள் சரியானபடி பயன்படுத்துவதில்லை. பொதுவழியாகச் செல்வதே வசதியானது, தன்னிச்சையானது. கவனமெடுத்தால் மட்டுமே தனிவழியே செல்லமுடியும்.

விஷ்ணுபுரத்துக்காக மூலநூல்களை வாசித்த நாட்களில் சம்பந்தமில்லாத புதியபாதைகளுக்கெல்லாம் நான் திருப்பப்பட்டேன். பலமாதங்கள் ரசவாதம் பற்றி வாசித்திருக்கிறேன். அந்தச் சாத்தியங்களை கூகிள் குறைத்துவிடுகிறதோ என்பதுதான் என் எண்ணம்.

இன்றையசூழல் மிக அதிகமாக கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒரு தனிவாசகன் தலைமேல் கொட்டுகிறது. ஆகவே அவன் அக்கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சார்ந்து மட்டுமே சிந்திக்கமுடிகிறது. அவற்றுக்கிடையேயான ஓயாத விவாதத்தில் அவன் சிக்கிக்கொள்கிறான். சொந்த வாசிப்பை, அனுபவத்தை, சிந்தனையை முன்வைத்து பரிசீலிக்க, மறுக்க அவனுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை.

சிந்தனைக்கான அச்சுவடிவங்கள் கண்முன் ஆயிரக்கணக்கில் கிடக்கும்போது சுயமாக எதைச் சிந்திப்பது? இந்த அச்சுவடிவங்களை இணையத்திலிருந்து எடுத்து எல்லா விவாதங்களிலும் அள்ளிக்குவிப்பவர்கள் அறிஞர்கள் என தங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் கூச்சல்களை எப்படித் தவிர்த்துச்செல்வது?

மிதமிஞ்சிய தரவுகள் உருவாக்கும் போலிக் கோட்பாடுகள் பற்றிய கட்டுரை ஒன்றை, தமிழில் கோட்பாடுகள் அதிகமாகப்பேசப்பட்ட காலத்தில், 1999இல் நான் எழுதியதை நினைவுகூர்கிறேன். அதன்பின் தொடர்ச்சியாக இவ்விஷயத்த்தைப் பேசிவந்திருக்கிறேன்.

கட்டுரையின் முகப்புவரியே ஒரு பெரிய திறப்பாக இருந்தது ‘All models are wrong, but some are useful’ புன்னகையையும் பின்னர் தொடர்சிந்தனையையும் உருவாக்கிய வரி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதச் சொற்கள்- வெண்முரசு