உச்சவழு -கடிதம்

அன்புள்ள ஜெ,

உச்சவழு கதையைப்பற்றி எழுதியிருந்ததனை வாசித்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். அதேசமயம் ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். உணர்சிகரமான கதைகளை வாசிக்கக்கூடியவர்கள் உடனே தங்களுடைய உணர்ச்சிகரமான எதிர்வினையை எழுதிவிடுவார்கள். அதேபோல சிந்தனைகொண்ட கதைகளை வாசிப்பவர்கள் அதைப்பற்றிய எண்ணங்களை எழுதுவார்கள். பார்த்தீர்கள் என்றால் எந்தக்கதைக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதோ அதற்குத்தான் வாசகர்கடிதம் அதிகம் வரும்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி படிமங்களால் எழுதிய கதைக்கு உடனடியாக வாசகர்கள் எதிர்வினை கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உங்கள் கனவை பகிர்ந்துகொண்டாலும் கூட அந்த அனுபவத்தை உடனடியாக வார்த்தைகளாக மாற்ற அவர்களால் முடியாது. அவர்கள் விமர்சகர்கள் கிடையாது. எழுத்தாளர்களும் கிடையாது. அது அவர்களுக்கு அனுபவமாகும். ஆனால் எழுதமுடியாது.இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமெனெ நினைக்கிறேன்

உச்சவழு உங்கள் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக அனுபவமாகக்கூடிய கனவுதான். எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நனவிலியில் உள்ள ஆர்க்கிடைப்ஸ் சிலது இருக்கும். ஆர்க்கிடைப் என்று சொல்வது ஒரு பேச்சுக்குத்தான். எனக்கு ஆர்க்கிடைப் கிரிட்டிசிசத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. கனவில் சில விஷயங்கள் திரும்பத்திரும்ப வருமே அதைமாதிரி.அவ்வளவுதான்.

உங்கள் கனவில் சில சமவாக்கியங்களை வாசகன் காணமுடியும். மரணம்= இருட்டு, இருட்டு= காடு, காடு=யானை, யானை=மேகம், மேகம்= சிறகு இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சமவாக்கியங்கள் உங்கள் படிமங்களிலே இணைகின்றன. இந்தக்கதையில் ஒருவன் மலையுச்சிக்குப் போகிறான். அது யானைமலை. உச்சியில் நிற்கும்போது கால் பதறும். குதிக்கவேண்டும் என்று தோன்றும். ஆழத்தின் ஈர்ப்புவிசை அதுதான். அதுதான் டாப் ஸ்லிப். அதாவது உச்சவழு. இங்கே காட்டுக்குள் ஈர்ப்பு. யானையை நோக்கிய ஈர்ப்பு.

ஆரம்பத்திலேயே காடும் யானையும் ஒன்றாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. காட்டுக்குள் உள்ள காட்டின் பார்வைதான் யானை என்று அவன் உணர்கிறான்.முதலில் மலை யானையாக தெரிகிறது. கடைசிவரியில் யானை மலைமாதிரியும் தெரிகிறது. இப்படி வாசிப்பதற்கு நிறைய இருக்கிறது

உச்சித்தருணத்திலே காடு வந்து அவனை கூட்டிச்செல்கிறது. நான் இந்தக்கதையை வாசிக்கும்போது கால்தவறி ஒருவன் மேலே செல்வதுபோல என்று நினைத்துக்கொண்டேன். அதையும் நீங்கள் வேறு கதைகளில் எழுதியிருக்கிறீர்கள்.

இதெல்லாம் நான் புரிந்துகொண்டதற்கான அடிப்படைகள்தான். நான் அடைந்தது ஒரு கனவுதான். எனக்கு மேகம் முற்றத்தில் இறங்கி நின்றதுபோலத் தோன்றியது. அப்படி எவ்வளவோ கனவுகள் தோன்றின. அவை எல்லாமே இந்தக்கதையுடன் தொடர்புடையவை.அவற்றை நான் பேச ஆரம்பித்தால் கதையை விளக்க ஆரம்பிப்பேன்

அதோடு புரியாத வாசகர்களை விட்டுவிடவேண்டியதுதான். அவர்கள் வாசகர்கடிதம் வாசித்து மட்டும் என்ன புரிந்துகொள்ளப்போகிறார்கள்? இன்னொருத்தரின் வாசிப்பை தெரிந்துகொள்வார்கள். சொந்தமாக வாசித்து சொந்தமாக கனவைக் கண்டால்தானே கதையின் அனுபவம் கிடைக்கும்? இதை விவாதிப்பதே தப்பு.

தமிழிலே எந்த நல்ல எழுத்தாளனுக்கும் வாசகன் இல்லாமல்போனது கிடையாது. உங்களுக்கு முந்தைய எழுத்தாளர்களைவிடவும் பலமடங்கு வாசகர்கள் உண்டு. அதற்கு நீங்கள் பரவலாக அறியப்பட்டிருப்பதுதான் காரணம். வாசகர்கடிதங்கள் ஒரு அடையாளமே இல்லை. இந்தக்கடிதத்தை நான் எழுதுவதுகூட நீங்கள் எழுதியதனால்தான்

அன்புடன்
சண்முகம்

அன்புள்ள சண்முகம்

நன்றி

நான் எழுதியதும் அதுதான். நல்ல வாசகர்கள் உள்ளனர் என எனக்குத்தெரியும், ஆனால் இத்தகைய கதைகளுக்கு உடனடி வாசகர்கடிதங்களை எதிர்பார்ப்பதில்லை என்றுதான். அந்தவாசகர்கள் சிலநூறுதான் என்றும் அதுவே பெரிய அதிருஷ்டம் என்றும்தான் எழுதியிருந்தேன்

ஜெ

முந்தைய கட்டுரைஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் இந்துத்துவமும்