வெள்ளையானை -கடிதங்கள்

அன்பின் ஜெ..

ஞாயிறு காலை பனுவல் புத்தக சாலை வரவில்லை.

குழுவில் வெள்ளையானை வந்த போது, முதலிரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகு படிக்க வில்லை. அதன் ஓட்டத்தை ஊகிக்க முடிந்தது. அது அப்போது கொஞ்சம் உரத்துப் பேசுவது போல் இருந்தது

உங்களுடன் பனுவல் வந்து சம்பிரதாயமாக உரையாடிக் கொண்டிருப்பதை விட, வெள்ளை யானையைப் படித்து முடிப்பது, அதை விட உங்களுடன் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

படித்தேன். இன்னும் சில முறை படிக்க வேண்டும். அப்போதுதான் நாவலின் பல கோணங்களும் தோன்றும். இப்போதைக்கு என் மனதில் பட்டதை உங்களுக்கு எழுதுகிறேன்.

முதலில் தோன்றியது இது பின் தொடரும் நிழலின் முன் வரலாறு என்பது தான்.

காத்தவராயன், ஒரு பெரும் புயலின் மைய, இயக்கு விசை. தலைவன். அருணாச்சலம், அப்புயல் மழையாய்ப் பொழிந்து, பெரும் சுவர் கட்டித் தேக்கப் பட்ட அணையின் கங்காணிகளுள் ஒருவன்.

சாதி என்னும் உள் வட்டத்தால் குறுக்கப்பட்ட மதத்தில் தன் வாழ்நாளுக்குள் அங்கீகரிக்கப் படுவோம் என நம்பியது காத்தவராயனின் அதீத எதிர்பார்ப்பு. ஆச்சாரங்களும், கட்டுப் பாடுகளும் “இயலாதவனின் காமம்” தான். முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்பு, பௌத்தத்தை நோக்கி நகர்வது, பிரியமான இன்னொரு சரித்திர ஆளுமையை நினைவுபடுத்தாமல் இல்லை. போரின் தோல்விக்குப் பிறகு, எஞ்சிய தளவாடங்களைச் சேகரித்துக் கொண்டு, போரை இன்னொரு தளத்துக்கு நகர்த்தும் காத்தவராயன் ஒரு பெரும் ஆளுமை..

தன் நம்பிக்கைகள் தளர்ந்ததும், நிலை பிறழ்ந்து விடும் அருணாச்சலம் மத்திம வர்க்கக் கங்காணி அல்லது கணக்குப் பிள்ளை மட்டுமே. அவனுக்கு அவன் நிறுவனம் தாண்டிய உலகம் தெரிய நாள் பிடிக்கும். இதுவரை நம்பிக்கொண்டிருந்த சில கொள்கைகள், அதன் மேல் தன் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருந்த “அகங்காரம்” அவ்வளவு சீக்கிரம் விடாது. ஆனால், காத்தவராயனுக்குக் கொஞ்சம் எளிது. ஏனெனில் அவன், அவனுக்கான பாதையைச் சமைக்கும் தலைவன். எங்கோ ஒரு பனி பொழியும் நாட்டில் இருந்த புரோகிதர்கள் அனுப்பிய ஆச்சாரங்கள் அவன் தலைமேல் பெரும்பாரமாக இருக்காது. இருக்க விடவும் மாட்டான்.

ஏய்டனுக்கு ஏன் காத்தவராயன் பேரில் பிரியம்?? தன்னைப் போன்ற ஒடுக்கப் பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்பதாலா? சமூக அடுக்கில், தன்னை அடுத்த அடுக்கில் இருக்கும் மனிதர்களைத் தாண்டி, மூன்றாவது அடுக்கில் இருப்பவர்களைப் பார்த்து வருகின்ற பரிதாபமா? அதையும் தாண்டி, காத்தவராயனில் அவன் கண்ட பெரும் தலைமைப் பண்பு என்று தான் தோன்றுகிறது. எல்லைகளைத் தாண்டி யோசிக்கும் தன்மை, வெறும் சதைக் குவியல்களைத் திரட்டி, பெரும் நோக்குக்காகப் போராடவைக்கும் திறன், போரில், நிலை தாழும் போது, நெகிழ்ந்து, நிலையில் இருந்து, தயங்காமல் கீழிறங்கிப் பேசும் நடைமுறை யதார்த்தம்..

நிறுவனங்கள், ஏய்டன் போன்ற ஆளுமைகளைக் கழிவறைக் காகிதமாகவே உபயோகிப்பதே நடைமுறை யதார்த்தம். பக்கிங்காம் பெரும் செல்வந்தராக அதுவே வழி. பஞ்சத்தைப் போக்க தொரை காவாய் வெட்டுச்சு என்னும் பாமர வரலாறு மாற்றியெழுதப் பட வேண்டியதின் அவசியத்தை சொல்லும் கதை..

இன்னும் எழுதுகிறேன். இப்போது வேலைக்குப் போக நேரமாகிவிட்டது.

அன்புடன்

பாலா

அன்புள்ள ஜெ

வெள்ளையானையை நேற்றுத்தான் வாசித்துமுடித்தேன். நீங்கள் பனுவல் அரங்கிலும் தனியாக என்னிடமும் பேசியதுபோல இதை பைரன் – ஷெல்லி என்று வாசிக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இயற்கையைப் பார்க்கும்போது பைரனின் வரிகளும் மனிதர்களைப்பார்க்கும்போது ஷெல்லியின் வரிகளும் ஏய்டனுக்கு நினைவு வருகின்றன

எனக்கு இப்போது மிகவும் சுவரசியமாகப் படுவதெல்லாம் பல்வேறு ஆங்கிலேயர்களின் சித்திரங்கள்தான். ஏய்டன் ஒருவகை. ஷெல்லியை வாசிக்கும் வெள்ளைக்காரன். மக்கின்ஸி சரியான ஆங்கில சிப்பாய். ரஸ்ஸல் இன்னொரு மாதிரி. அவர் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் அதிகாரி. இன்றைக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். பக்கிங்ஹாம் இன்றைக்குள்ள அரசியல்தலைவர்கள் போல இருக்கிறார். அல்லது அரசியல்தலைவர்கள் பக்கிங்க்ஹாமை காப்பிஅடிக்கிறார்கள். அந்த பகட்டு பந்தாக்கள் எல்லாமே அற்புதமான நுட்பத்துடன் சொல்லப்பட்டுள்ளன

அதேமாதிரி இரண்டு வெள்ளைச்சாமியார்கள். ஆண்ட்ரூ உண்மையான கதாபாத்திரம் என்றும் அலெக்ஸ் அவரைப்பற்றி எழுதியிருப்பதாகவும் சொன்னீர்கள். அந்த உணர்ச்சிகரத்தன்மையும் இளமையும் ஒரு விஷயம் என்றால் பிரண்டனின் நிதானமும் கிண்டலும் முதுமையும் இன்னொரு விஷயம். இந்தவேறுபாடுகள்தான் இதை ரசிக்கத்தக்க நாவலாக ஆக்குகின்றன

நன்றி

சுந்தர்

முந்தைய கட்டுரைதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013
அடுத்த கட்டுரைஉச்சவழு ஏன் வாசிக்கப்படவேயில்லை?