நாளை [ டிசம்பர் 22 ] கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் இன்று [21-12-2013] காலை கோவைக்கு வருகிறேன்.
இருபத்தைந்தாண்டுக்காலமாக இலக்கிய உலகில் என் அனுபவம் உள்ளது. நினைவுகளில் இன்று தங்கியிருப்பவை படைப்பூக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்த நாட்களும் நண்பர்களுடன் விதவிதமான ஊர்களில் சந்தித்துப்பேசியவையும்தான்
அதிலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. புதிய ஊர்களில் சந்திப்பதைவிட மீண்டும் மீண்டும் ஒரே ஊரில் சந்திப்பது உற்சாகமூட்டுகிறது. ஏனென்றால் முந்தைய சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவில் ஒரு பின்புலமாக அமைகின்றன. 2010 இல் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அத்தனைபேர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆகவே இரவில் கால்வாசிப்பேர் தூங்க இடமில்லை. இரவெல்லாம் கோவையில் ரயில்நிலையத்தைச் சுற்றி நடந்து நடந்து டீக்கடைகளை தேடித்தேடி டீ குடித்து [கோபி ராமமூர்த்தி செலவில்] இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம்
சென்றவருடம் திருமண மண்டபம் ஏற்பாடு செய்துவிட்டோம். பெரிய கூடத்தில் ஜமுக்காளங்கள் விரித்து நூறுபேர் வரை படுத்துக்கிடந்தோம். வெவ்வேறு நண்பர்கள் பாடினார்கள். ஆனால் படுத்திருந்தவர்கள் எவரும் தூங்கவில்லை. மறுநாள் நிகழ்ச்சியில் அத்தனைபேரும் வீங்கிய முகத்துடன் இருப்பதைப்பார்த்தேன்.
நினைவுகள் பெருகியபடியே செல்கின்றன. சென்றமுறை இளையராஜா வந்ததனால் ஏற்பட்ட நெரிசல்கள். இம்முறை அவ்வளவு கூட்டமிருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.
நினைவுகூர்வதற்காக பழைய விஷ்ணுபுரம் விழா நிகழ்ச்சிப்பதிவுகள்.
விழா கோபிராமமூர்த்தி
விழா 2010
விழா அழைப்பிதழ்
2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நாள் 22. 12. 2013
இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை
நேரம் மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்
விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி
தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு
வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு
தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு
வெளியிடுபவர் இயக்குநர் பாலா
தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்
தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்
வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]
சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி
வாழ்த்துரை இயக்குநர் பாலா
கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு
பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்
வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு
வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்
வாழ்த்துரை வி சுரேஷ்
வாழ்த்துரை ஜெயமோகன்
ஏற்புரை தெளிவத்தை ஜோசப்
நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]
அரங்கில் எழுத்து, நற்றிணை, சொல்புதிது நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும் .21 காலைமுதல் நண்பர்கள் கூடுவார்கள். இலக்கிய அரட்டைகள் நிகழும்.