திருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013

சென்ற வெள்ளிக்கிழமை [6-12-2013] அன்று திருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா ஆரம்பித்தது. நான் அன்று மகாபலிபுரத்தில் இருந்து நாகர்கோயில் கிளம்பினேன்.அஜிதன் ஏழாம்தேதியே கிளம்பி திரைவிழாவுக்குச் சென்றுவிட்டான். நான் 9,10,11 மூன்றுநாட்கள் மட்டும் திருவனந்தபுரம் சென்று படவிழாவில் கலந்துகொண்டேன்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xlk8yHE_lUA

திரைப்படவிழாவின் முக்கியமான அம்சமே அது ஒரு விழா என்பதுதான். இப்போதுதான் எல்லா படங்களும் டிவிடியிலும் டொரொண்டிலும் கிடைக்கின்றனவே என்பவர்கள் அந்த விழாமனநிலையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள். விழா நம்மை கொண்டாட்ட மனநிலையில் வைக்கிறது. நாம் சினிமாவுக்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்ற எண்ணம் வேறெல்லா நினைவுகளையும் அகற்றிவிடுகிறது.

ரிதுபர்ணோ கோஷ்

நான் பொதுவாக படங்களை பார்க்கும் மனநிலை கொண்டவன் அல்ல. நான் வாசித்துக்கொண்டிருக்கும் நூல்களை ஒட்டியே மேற்கொண்டு வாசிக்கவும் பேசவும் விரும்பக்கூடியவன். ஆனால் திரைவிழாவில் முழுக்கமுழுக்க படம்பார்க்கும் மனநிலையிலேயே இருந்தேன். ஒருநாளில் நான்கு திரைப்படங்களைப்பார்ப்பதென்பது விழாவின்போது கூடும் மனநிலையால் மட்டுமே சாத்தியமாவது. அத்துடன் இந்தப்படவிழாவில் நான் பார்த்த மெதுவாக ஓடும் படங்களை வீட்டில் இத்தனை பொறுமையாக பார்த்திருப்பேனா என்பதே ஐயம்தான்

பதினெட்டாவது திருவனந்தபுரம் திரைவிழாவில் 9000 பங்கேற்பாளர்கள் பதிவுசெய்துகொண்டார்கள். நாநூறு ரூபாய் கட்டணம். மாணவர்களுக்கு 200 ரூபாய்தான். அஜிதன் கட்டணம் செலுத்தி ஒரு பை, ஒரு டி ஷர்ட், ஒரு சினிமாபுத்தகம் ஆகியவற்றைப் பெற்றதாகச் சொன்னான். அவையே இருநூறு ரூபாய்க்குக் குறையாது. எஞ்சிய தொகையில் நாளொன்றுக்கு ஐந்துபடம் வீதம் முப்பது படம் வரை பார்க்கலாம். ஒருபடத்துக்கான டிக்கெட் பத்துரூபாய்கூட ஆவதில்லை

கேரளம் முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்திருந்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள பல கல்லூரி விடுதிகள் அவர்களால் நிறைந்து வழிந்தன. லாட்ஜ்களில் ஒரே அறையில் பலர் தங்குவதை அனுமதித்தார்கள். பன்னிரண்டு அரங்குகளும் நடந்தே செல்லக்க்கூடிய தொலைவில் இருந்தமையால் ஒரு திருவிழா மைதானத்தின் கொண்டாட்டம் தம்பானூரைச்சுற்றி இருந்தது. கனவு மிதக்கும் கண்கள், பரபரப்பான பேச்சுகள், சிரிப்புகளுடன் ஜீன்ஸ் அணிந்த பையன்களும் பெண்களும் எங்கும் தெரிந்தனர்.

நான் விருந்தினராகக் கலந்துகொண்டேன். விருந்தினர் அனைவருக்கும் உயர்தர விடுதிகளில் தங்க இடம், உணவு, திரையரங்குக்குச் செல்ல கார் ஆகியவை ஏற்பாடாகியிருந்தன. பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த தன்னார்வப் பணியாளர்களான மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக உபசரித்தனர். காரில் கொண்டு சென்று அரங்கில் அமரச்செய்தனர்.

கேரள அரசின் முதன்மையான பண்பாட்டுச்சேவைகளில் ஒன்றாக திருவனந்தபுரம் திரைவிழா மாறியிருக்கிறது. திருச்சூர் நாடகவிழா இதற்கிணையான இன்னொரு திருவிழா. ஓணம், நவராத்திரி பண்டிகைகளை கலைவிழாக்களாக மாற்றியிருக்கிறார்கள். இவ்விழாக்கள் அனைத்துமே தரமாக நடத்தப்படுகின்றன. இங்குள்ள அரசியல் தலையீடற்ற தன்மை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு, அறிவுஜீவிகளின் மேலாதிக்கம் போன்றவற்றை இன்று வேறெங்கும் காணமுடியாது.

குறிப்பாக இந்திய அரசு நடத்தும் கோவா திரைவிழா வருமான நோக்குடன் வணிகத்திரையுலகத்தின் ஆதிக்கத்துக்குத் திறந்துவிடப்பட்டு சிலவருடங்களாகிறது. இந்நிலையில் இன்று இந்தியாவின் சிறந்த திரைவிழாவாக திருவனந்தபுரம் திரைவிழா மாறிவிட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் திரைவிழாவில் சில மிகச்சிறிய குளறுபடிகள் நிகழ்ந்தன.அஞ்சலி அரங்கில் இருமுறை இரு ஐரோப்பிய மொழிப்படங்கள் யூஎஃப்ஓ இணைப்பின் எண் மாறுபட்டமையால் தொடர்புகிடைக்காமல் தடைபட்டன. அதை கேரள ஊடகங்கள் கொண்டாடியதைப்பார்க்கச் சோர்வாக இருந்தது.

பஸொலினி

பொதுவாக இடதுசார்புள்ள தொலைக்காட்சிகள் திரைவிழாவை தோற்கடிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்வதாகப் பட்டது. திரைவிழா மிகச்சிறப்பாக நிகழவேண்டுமென்ற கவலையுடன் அதைச்செய்வதான பாவனை வேறு. இத்தகைய ஒரு தரமான விழாவை இன்று எந்த மாநில அரசும் இத்தனை கவனம் எடுத்துச் செய்வதில்லை என்பதும் இதெல்லாம் இன்று தமிழகத்தில் உள்ள ஒருவனுக்கு பெரும் கனவுகள் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த விழா ஏதேனும் காரணத்தால் நின்றுபோகும் என்றால், வணிகமயமாகி அழியும் என்றால் இந்த ஊடகங்கள் அதையும் கொண்டாடும்போல.

நான் மூன்றுநாட்களில் பத்து படங்கள் பார்த்தேன். குருதிச்சுவைக்கும் காமத்திற்குமான உறவைச் சொல்லும் குரூரமான படமாகிய Trouble Every Day [கிளேர் டெனிஸ் – Claire Denis – இயக்கியது] ஓர் எல்லை. மறுபக்கம் ஒரு முதியவருக்கும் அவரது பேரனுக்குமான உறவைச் சொல்லக்கூடிய மென்மையான படமாகிய ‘The Japanese Dog'[ டியூடர் ஜிர்கூ Tudor Cristian Jurgiu இயக்கியது] வரை படங்களின் இயல்புகளும் வண்ணங்களும் வேறுபட்டன.

நான் பார்த்தபடங்களில் உச்சமானவை என எனக்குப்பட்டவை ரிதுபணோ கோஷின் ‘சித்ராங்கதா’ உபெர்ட்டோ பஸ்ஸோலினி [ Uberto Pasolini ] இயக்கிய Still Life இரண்டும்தான். ரித்விக் கட்டக்கின் வாழ்க்கையைப்பற்றி எடுக்கப்பட்ட மேக தக தாரா [இயக்கம் கமலேஸ்வர் முகர்ஜீ] மனதைக்கவர்ந்தாலும் சற்று அதிகப்படியாக பேசிவிட்டதோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இப்படங்களைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்

கேரளத்தில் எப்போதும் சில திரைமேதைகளுக்கு அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் உண்டு. முன்பு இங்கே இந்திய மேதைகளில் ரித்விக் கட்டக்கும் உலகத்திரைமேதைகளில் பர்க்மானும் பெரிய நட்சத்திரங்கள். இப்போது ரிதுபர்ணோ கோஷும் கிம் கி டுக்கும் பெரிய அளவில் புகழ்பெற்றிருக்கிறார்கள். கிம் ஒவ்வொரு வருடமும் வருகிறார். இம்முறை இரண்டு படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றுக்கு மிகப்பெரிய கூட்டம் வரும் என்கிறார்கள்

இன்றுகாலை நடைப்பயிற்சிக்காக சாலைக்கு வந்த கிம்மை நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.சாலையில் அவரைக் கண்ட மதுபால் அவருடன் ஒரு படம் எடுத்துக்கொண்டார். அந்தப்படம் உடனே தொலைக்காட்சியில் வர அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.

விழாவுக்கு கோணங்கி வந்திருப்பதைப் பார்த்தேன் என்று அஜிதன் சொன்னான். மேக தக தாரா பார்க்கச் சென்றபோது சுப்ரபாரதி மணியனைப்பார்த்தேன். பேசிக்கொள்ளமுடியவில்லை.நான் அவசரமாக இன்றே திரும்பவேண்டியிருந்தது. அஜிதன் அங்கேயே தொடர்ந்து விழா முடிவுவரை இருப்பான்

திரைவிழாப்படங்களைப் பார்க்கையில் அத்தனைபடங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரு பெரும் கனவுக்கலவையாக ஆகிவிடும் அனுபவம் ஏற்படுகிறது. காரில் திரும்ப வருகையில் அந்தக் கனவில் மிதந்து மிதந்து வந்துகொண்டிருந்தேன்.

முந்தைய கட்டுரைஅறமெனும் சாவி
அடுத்த கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்