மோகன் தாஸும் மகாத்மாவும்

அன்புள்ள ஜெ,

இங்கே ஒரு நண்பனிடம் நீங்கள் எழுதும் காந்தியக் கட்டுரைகளை காட்டினேன். அவன் ஒரு விஷயம் சொன்னான். என்னை மிகவும் பாதித்தது அது. இந்திய அரசியலில் காலில்விழும் கலாச்சாரத்தை காந்திதான் புகுத்தினார் என்றான். மகாத்மா என்று எண்ணி அவரது காலில் மக்கள் விழுந்ததை அவர் ஆதரித்தார், அந்த கலாச்சாரம் இன்றுவரை தொடர்கிறது என்று சொன்னான். என்னால் அதை மறுக்க முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரவணன்

***

அன்புள்ள சரவணன்,

காந்தி தன்னை ஒரு மகாத்மாவாக எண்ணிக்கொண்டாரா? தன்னை ஒரு மகாத்மாவாக முன்வைத்தாரா? இரண்டும் வேறு வேறு கேள்விகள்.

காந்தி ஒரு நவீன மனிதர். ஐரோப்பியநவீனத்துவம் உருவாக்கிய பல விஷயங்களை தன் ஆதார இயல்பாகக் கொண்டவர். எதிலும் நடைமுறை அறிவியல் நோக்கு, நாசூக்கு என. அவரைச் சந்தித்த ஐரோப்பியர்கள் பழக்க வழக்கங்களில் அவர் மிகமிக ஐரோப்பியத்தனமானவர் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் தன்னை ஒரு மகாத்மா என்று சொல்லிக்கொண்டிருப்பாரா என்பதே நாம் கேட்டுக்கொண்டாக வேண்டிய முதல் கேள்வி.

அதற்குப் பதிலாக நமக்குக் கிடைப்பது ஓர் உண்மை. காந்தி ஒரு தருணத்திலும் தன்னை மகாத்மா என்று சொல்லிக்கொண்டதில்லை. பிறர் அப்படிச் சொல்வதை ஊக்குவித்ததில்லை. தன்னிடம் அவ்வாறு பிறர் சொல்லும்போது அதை கேட்டுக்கொண்டதும் இல்லை. நேர் மாறாக தன்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக்கொள்ளவே அவர் ஆசைப்பட்டார்.

அதுகூட அவர் தன்னை மகாத்மாவாக எண்ணிக்கொண்டமையால் எடுத்த நிலைபாடாக இருக்கலாமல்லவா என்று கேட்கலாம். காந்தி தன்னை ஒரு ஞானியாக அல்லது அவதார புருஷராக அல்லது அசாதாரணமான மனிதராக எண்ணிக்கோண்டாரா? அவர் தன்னைப்பற்றிக்கொண்டிருந்த மன உருவகம் என்ன? காந்தி தன் வாழ்நாள் முழுக்க தன்னை எதுவாக ஆக்க முயன்றார்?

அதற்கு காந்தியின் மரபுக்கும் அவரது தனிப்பட்ட உளவியலுக்கும் நாம் சென்றாக வேண்டும். காந்தி குஜராத்தி வைணவ பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர். குஜராத்திய வைணவம் சமணத்தில் இருந்து தன் அடிப்படை மனநிலைகளைப் பெற்றுக்கொண்டது. காந்தியின் மனநிலை என்பது பல்லாயிரம் வருடங்களாக இந்த மண்ணில் சமணத்தால் உருவாக்கப்பட்டதே.

‘பவ்யம்’ என்ற சொல் வழியாக சமணம் அனைத்து மானுடமேன்மைகளையும் சொல்லிவிடும். பவ்யம் என்றால் எளிமை,சமர்ப்பணம் என்று சமணத்தில் பொருள்படும். மானுடனுக்கு சாத்தியமாகவேண்டிய உச்சகட்ட நிலை அதுவே. தன்னை எளிமைப்படுத்திக்கொள்வதன் வழியாகவே பாவங்களில் இருந்து விடுபட இயலும் என்றும் அதுவே முக்தி என்றும் சொல்கிறது சமணம்.

ஏனென்றால் ஒரு மனிதன் வென்றாகவேண்டிய எதிரி அவனே. அவனுடைய காமகுரோதமோகங்களே அவனை கீழிறக்கி கட்டுண்டு வாழச்செய்கின்றன. இந்த ஆசீவக– சமணக் கருத்து ஈராயிரம் வருடத்து தமிழ்ச்சொற்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘தீதும்நன்றும் பிறர்தர வாரா’ என.

ஆர்.கெ.நாராயணனின் காந்தி கார்ட்டூன். இந்த முகம்தான் அவரது ‘சாமானியனின்’ முகம்.

ஆகவே புலன்களை வெல்லுதல் [குறள் மொழியில் ஐந்தவித்தல்] சமணத்தின் முதல் நெறியாக எப்போதும் முன்வைக்கப்பட்டது. உலகிலிருந்து ஒடுங்குதலே ஆன்மீகமாக வளர்தல் என்ற கருத்து சமணத்தின் மையம். சமணம் விரதங்களையே நெறியாகக் கொண்ட மதம். அதிலிருந்து வைணவம் அதைப் பெற்றுக்கொண்டது. காந்தியின் இளமைப்பருவத்தைக் கவனித்தால் அவரது அம்மா அவருக்களித்த சிந்தனை என்பதே கடுமையான விரதங்கள்தான் என்பது தெரியவரும்.

தன் இளம் வயதிலேயே தன்னை ஒடுக்கிக்கொள்ள ஆரம்பித்தார் காந்தி. அவரது முதல்கட்ட சோதனைகள் லண்டனில் அவர் சைவ உணவுக்காக நடத்திய கடுமையான போராட்டங்களில் இருந்தன. பட்டினியால் தன்னை உச்சகட்ட வதைக்கு ஆளாக்கிக்கொண்டு விரதத்தை காத்துநின்றார். அப்படி காத்ததன்மூலம் தன் அகம் கூர்மை கொள்வதைக் கண்டார். தன் உடல்மீதும் மனம் மீதும் தான் கொள்ளும் கட்டுப்பாடு தன்னை வலிமைமிக்கவராக ஆக்குகிறது என்று கண்டடைந்தார். அதுவே அவரது தொடக்கம்.

அவரது சமண- வைணவ ஆழ்மனம் கண்டடைந்த கண்டுபிடிப்பில் இருந்து காந்தி தன் மதம்சார்ந்த தளங்களுக்கு நகரவில்லை. மாறாக, அதை அன்றைய ஐரோப்பிய நவீன ஆன்மீக சிந்தனைகளுடன்தான் பிணைத்துக்கொண்டார். அச்சிந்தனைகளை அவர் அங்கே வாசிக்க நேர்ந்த இயற்கைஉணவுநிபுணர்கள், இயற்கைமருத்துவநிபுணர்கள் ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவர்கள் வழியாக இயற்கைவழிபாட்டாளர்களுக்கு, தோரோவுக்கும் ரஸ்கினுக்கும் தல்ஸ்தோய்க்கும், சென்று சேர்ந்தார். இதுவே அவரது பயணம்.

அரசியலுக்கு வந்த காந்தி இத்தகைய ஐரோப்பிய மாற்று ஆன்மீகப் பயிற்சி கொண்ட மனிதராக இருந்தார். தியாகம் மூலம் வெல்வது என்பதே அவரது மெய்ஞானத்தின் சாரமான வாக்கியம்.இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நுகர்வு மறுப்பு, சுயகட்டுப்பாடு ஆகியவை அவரது வழிமுறைகளாக அமைந்தன. அவற்றில் இருந்து அவர் உருவாக்கிக்கொண்ட சத்யாகிரகப் போராட்ட வழிமுறை அவரது அரசியலை தீர்மானித்தது.

காந்தியை பின்னர் மகாத்மாவாக பிறருக்குக் காட்டிய இந்த அம்சங்களை அவர் எந்தவகையிலும் கவனிக்கப்படாதவராக இருந்த காலத்தில் மிகுந்த தீவிரத்துடன் தனக்காக வளர்த்தெடுத்துக்கொண்டார். தென்னாப்ரிக்காவிலேயே அவரது ஆளுமையின் கட்டுமானம் ஏறத்தாழ முழுமை அடைந்துவிட்டிருந்தது. தன் ஆளுமைச்சோதனைகளுக்காகவே அவர் தல்ஸ்தோய் பண்ணை என்ற ஒன்றை உருவாக்கி நடத்தினார்.

இக்காலகட்டத்தைப் பற்றி காந்தி விரிவாக எழுதியிருக்கிறார். இரு ஆசைகள் அவரை அலைக்கழித்தன. ஒன்று காமம், இன்னொன்று உணவு. இவ்விரு இச்சைகளையும் வெல்லாமல் தனக்கு தன்மீதான வெற்றி கைகூடாது என்று உணர்ந்த அவர் அவற்றை தீவிரமான விரதங்கள் மூலம் ஒடுக்கினார். நூற்றாண்டுகளாக சமணமுனிவர்கள் செய்து வந்த செயல்தான் அது. நாராயணகுருவின் சுயசரிதைப்பாடல்களில் கூட கிட்டத்தட்ட இதே மாதிரியான போராட்டமும் பரிணாமமும் காணப்படுகிறது.

ஒரு ஆளுமை எந்த அளவுக்கு வீரியம் உள்ளதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது காமமும் உணவில்ருசியும் கொண்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். அவை அடிப்படை இச்சைகள். அதேயளவுக்கு தன்மைய நோக்கும் நகைச்சுவை உணர்ச்சியும் அதற்கு இருக்கும் என்றும் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்த மனிதர் தன்மைய நோக்காலும் நகைச்சுவையாலும்  அவ்விச்சைகளை விலக்கி சிதறும் தன் ஆளுமையை  ஒருங்கிணைத்துக்கொள்கிறாரோ அவரே எங்கும் சாதனையாளனாகிறார். இதற்கு பெரிதாக ஒன்றும் உலகவரலாற்றைப் படிக்கவேண்டியதில்லை. பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்குக் கூட அந்த அளவில் புலன் ஒறுப்பு தேவை என்பதை நாம் அறிவோம்.

இந்திய அரசியலுக்குள் காந்தி நுழையும்போது இருதளங்களில் அவர் இடைவிடாத சோதனைகள் மூலம் தன்னை கண்டடைந்தவராக இருந்தார். ஒன்று, கடுமையான விரதங்கள்மூலம் தன் மீதான கட்டுப்பாட்டை அடைதல். இரண்டு, பொதுவாழ்க்கையில் விழுமியங்களை உண்மையுடன் முன்வைத்தல். இவ்விரு விஷயங்களையும் அவர் மிகுந்த புறவய நோக்குடன் நடைமுறைத்தளத்தில் சோதித்து அவற்றின் பயன்களைக் கண்டடைந்தவராக இருந்தார்.

இந்தியாவுக்கு திரும்பியபின்னரும் இந்த இரு தளங்களிலும் ஒரேசமயம் காந்தி ஈடுபட்டிருந்தார். சபர்மதி ஆசிரமத்தை நிறுவி அங்குதான் அவர் தன் மீதான தன் ஆற்றலை வளர்த்துக்கொண்டார். தன் உடல் மற்றும் மனம் மீதான சோதனைகள் மிக விரிவானவை. தன் உடலை அவர் கூர்ந்து கவனித்தார். அதற்கான உணவுகளையும் மருத்துவத்தையும் தானே உருவாக்கிக் கொள்ள முயன்றார். தான் நம்பிய எளிய இயற்கைவாழ்க்கையை, மானுடர்களுக்குள் பேதம் இல்லாத வாழ்க்கையை, நடைமுறைப்படுத்த முயன்றார்.

அத்துடன் அந்த விழுமியங்களை முன்வைத்து உருவாக்கிய ஒரு போராட்ட முறையை, சத்யாக்ரகத்தை, மிகவெற்றிகரமாக சம்பாரனில் நடத்தியும் காட்டினார். அந்தப்போராட்டத்தில் இருந்த நேர்மையும், துணிவும் எளிமையும் அவரை அது வரை இந்தியாவில் இல்லாதிருந்த ஒரு புதிய சக்தியாக அடையாளம் காட்டின.

இங்கேதான் இந்தியர்களால் காந்தி மகாத்மாவாக அடையாளம் காணப்பட்டார். அவரை அப்படி அடையாளம் கண்டது பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இந்திய உளவியலே. காந்தி தன் ஆளுமைமேல் தன் முழுக்கட்டுப்பாட்டுக்காக செய்த சோதனைகளும், விரதங்களும், பொதுவாழ்க்கையில் அவர் முன்வைத்த விழுமியங்களும் அவற்றில் அவருக்கிருந்த அபாரமான பிடிவாதமும் இந்தியாவில் மிக எளிதாக ஓரு சமணத்துறவியுடன்தான் அவரை அடையாளம் காட்டும். அவரது நோக்கு மேற்கத்திய சோதனைமுறையில் ஊறியது என்பதை அது கருத்தில்கொள்ளாது.

இந்தியவரலாற்றை அறிந்தவர்களுக்கு காந்தியின் போராட்டம்கூட இங்குள்ள மக்களுக்குப் புதியதல்ல என்று தெரிந்திருக்கும். நூற்றாண்டுகளாக சமணத்துறவிகள் கடைப்பிடித்த சாத்வீகமான போராட்டம்தான் அது. தமிழக வரலாற்றில் அஞ்சினான் புகலிடம் வகிக்கும் இடத்தைப் பார்த்தால் அதைப்புரிந்துகொள்ள முடியும்.

சமணத்துறவிகள் ஒரு நிலப்பரப்பை தங்கள் பகுதியாக அறிவிக்கிறார்கள். பீலியும்முக்குடையும் கொண்ட எல்லைக்கல் நாட்டப்படுகிறது.,அந்த எல்லைக்குள் ஆயுதமெடுக்க எவரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. உயிருக்கு அஞ்சி ஒருவன் அங்கே நுழைவான் என்றால் அவனுக்கு அந்த துறவிகளே காப்பு. அவனது எதிரி ஒரு மாமன்னனாக இருந்தால்கூட அவனை அங்கே நுழைந்து பிடிக்க முடியாது. அவ்வாறு பிடித்தான் என்றால் அம்மன்னனின் வாசலில் அத்தனை சமணத்துறவிகளும் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பார்கள். அந்தப்பெரும்பழிக்கு அஞ்சாத மன்னனே இந்தியாவில் இருந்ததில்லை.

சமணத்துறவிகள் பொறுமைமூலம், சகிப்பதன் மூலம், உயிர்துறப்பதன் மூலம், தங்கள் தார்மீகத்தை ஆழமாக நிலைநாட்டிய போராட்டங்களை  கண்டு உருவாகி வந்த ஒரு பண்பாட்டு மரபு எளிதில் காந்தியை அந்த தொடர்ச்சியில் வைத்துப் பார்த்ததை, அவரை மகாத்மா என்று சொன்னதை, புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

காந்தியை முதன்முதலாக மகாத்மா என்று சொன்னவர் தாகூர் என்று ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் 1920ல் அவர் இந்தியாவுக்கு வந்து அரசியல் பணியாற்ற ஆரம்பித்த காலத்திலேயே மத்தியப்பிரதேசப் பழங்குடிகளான கோண்டுகள்தான் அவரை முதன்முதலாக மகாத்மா என்றார்கள். அப்படிச் சொல்வதை காந்தி ‘வெறுப்புக்கும் கண்டனத்துக்கும் உரியது’ என்றார். அப்படிசொல்பவர்களை அவர் அருகே விடவில்லை. ஆனால் அந்த எளியமனிதர்கள் அவ்வாறு கட்டுப்படுத்தப்படக்கூடியவர்கள் அல்ல.

மகாத்மா என்ற பட்டம் அவரைச் சங்கடப்படுத்தியது. காந்தியின் பேச்சுகளில் அவருக்கே உரிய மென்மையுடன் அவர் அந்தசொல்லை கிண்டல்செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவர் தன்னுடைய படத்தை ஒருவர் வைத்திருந்ததைக்கூட விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி அதை தூக்கிப்போடச் செய்தார் என்று அவருடனேயே இருந்து அவரை ஒவ்விருநாளும் கண்காணித்து அற்புதமான வரலாற்றை எழுதிய வின்செண்ட் ஷீன் சொல்கிறார் [Mahatma Gandhi- A great life in Brief, Vincent Sheen] அவரைக் கண்டமையால் தன் நோய் தீர்ந்தது என்று ஒருவர் சொல்லக்கேட்டு காந்தி அவமானமும் வருத்தமும் அடைந்தார்.

நீங்கள் ஏன் மகாத்மா என்று அழைக்கபப்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு காந்தி சொன்னார் : மகாத்மா என்ற பட்டம் என்னை பலமுறை கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. எனக்கு இநத உலகத்திடம் சொல்ல புதியதாக ஏதும் இல்லை. உண்மையும் அகிம்சையும் புராதனமான மலைகளைப்போன்றவை. என்னால் முடிந்தவரை நான் அவ்விரண்டையும் என் சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயன்றேன் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆனால் நான் அச்சோதனைகள் மூலம் அடைந்த அனுபவங்களை விளக்குவதற்கு எப்போதுமே தயாராக இருப்பேன். அதன் மூலம் நான் அரசியலில் செயல்படுவதற்கான வலிமையை அடைதேன். ஏராளமான மனிதர்கள் என்னை மதிப்பதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் நான் வேறு எவரையும் விட அவர்களை புரிந்துகொண்டிருக்கிறேன்..”

காந்தியின் மனம் அதன் மேல்தளக்கட்டுமானத்தை மேலைச்சிந்தனைகளைச் சார்ந்தே உருவாக்கிக் கொண்டது. தன் வாழ்நாளின் கடைசிக்கணம் வரை எப்போதுமே சுய எள்ளலுக்கு அவரிடம் இடமிருந்தது. தன்னையே நக்கல் செய்து வாய்விட்டு உற்சாகமாகச் சிரிக்கக்கூடியவர். லண்டன் தெருவில் ஒரு வெள்ளைச் சிறுவன் ‘ஏய் காந்தி உன் டிரவுசர் எங்கே?” என்று கேட்டபோது உற்சாகமாக வாய்விட்டு சிரித்து மகிழ்ந்த மனிதர் அவர் என வின்செண்ட் ஷீன் பதிவுசெய்கிறார்.

ஆனாலும் ஒரு தேசமே அவரது காலில் விழுந்து கிடந்தது. அவர் காலில் தொட்டுவணங்கியவர்களால் அவர் பாதங்கள் புண்ணாக ஆயின. அவரைக்கேட்டுப் புரிந்துகொண்டு அல்ல அவரை கண்டு உள்வாங்கியே கோடிக்கணக்கானவர்கள் அவர் பின்னால் சென்றார்கள். அவர் சொல்வது சரி  என்று புரிந்துகொண்டதனால் அல்ல, அவர் சரியானவர் என்று புரிந்துகொண்டதனால் !

அந்த மாபெரும் விந்தையை என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? ஒரு தொன்மையான தேசம். குறைந்தது முப்பது நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவம் விளங்கிய பகுதி. முக்காற்பங்குக்குமேல் நிலத்தில் மன்னராட்சி அப்போதும் நிலவிய மண். அங்கே வெறும் பதினைந்து வருடங்களுக்குள் ஒரு தனிமனிதர் மொத்த சமூகத்தையே ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவருகிறார்! காந்தியின் காங்கிரஸ்தான் இந்தியவரலாற்றிலேயே அதிகமான பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்த இயக்கம் தெரியுமா? அதனுடன் ஒப்பிடும்போது கம்யூனிஸ்டு இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலுமெல்லாம் பெண்களின் பங்கேற்பு என்பது அனேகமாக எதுவுமே இல்லை.

காந்தியை நம்பி லட்சக்கணக்கில் எளிய நடுத்தரவர்க்க மக்கள் அலையலையாகச் சிறைக்குச் சென்றார்கள். லட்சக்கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். வீட்டைவிட்டு வெளியே செல்வதே பெரும் பாவம் என விலக்கப்பட்டவர்களாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த பெண்கள்! அவர் சொன்னார் என்று அப்பட்டமான சாதிவெறிப்பின்னணியில் பிறந்து வளர்ந்த லட்சக்கணககனவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் கழிவறைகளைச் சுத்தம்செய்ய வந்தார்கள்.

இந்தியாவின் முதல் மக்களியக்கம் காந்தியின் ஒத்துழையாமைப்போராட்டமே. அந்த அலைமூலம்தான் நிலப்பிரபுத்துவ மனநிலையில் அரசியிலின்றி பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்திருந்த இந்திய சமூகம் அரசியல்மயமாக்கப்பட்டது. அந்த அரசியலின் சில துண்டுகளையே கம்யூனிஸ்டுக் கட்சியும் திராவிட இயக்கங்களும் ஏன் முஸ்லீம் லீகும்கூட  தங்களுக்காக வெட்டிக்கொண்டன. கேரள விடுதலைப்போர் குறித்த தனது நூலில் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு அதைப்பற்றி பேசுகிறார்.

அந்த அரசியல் எழுச்சியை உருவாக்கியது எது? இன்று தகவல்தொழில்நுட்ப அலையில்கூட இந்தியாவை முழுக்க தொடர்புகொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. அன்றைய இந்தியாவில் அச்சு ஊடகங்கள் மிகமிகக் குறைவு. வானொலி இன்னும் பரவலாக ஆகவில்லை. ஆயிரக்கணக்கான ஊர்களில் மின்சாரம் இல்லை, ஆகவே ஒலிப்பெருக்கி இல்லை. எப்படி காந்தி இந்த தேசத்துடன் பேசி அதை கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைத்தார்?

அவர் தன்னையே தன் செய்தியாக ஆக்கிக்கொண்டார். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று கூற ஒரு தலைவனுக்கு அபாரமான மனத்தைரியம் தேவை. என் தனி வாழ்க்கையில் ரகசியங்கள் இல்லை என்று அறிவிக்க, ‘என்னை ஆய்வுசெய்துபார்’ என வரலாற்றின் முன்பு வந்து நிற்க,  தன்நேர்மைமேல் ஆணித்தரமான நம்பிக்கை தேவை. எல்லையற்ற ஆன்ம வல்லமை தேவை. இந்திய அரசியலின் நூறுவருட வரலாற்றில் ஒரே ஒரு மனிதனைத்தவிர எவருமே அப்படிச் சொல்ல முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் நம்பும் எந்த ஒரு தலைவனுடைய அந்தரங்க வாழ்க்கையையும் காந்தியின் அந்தரங்க வாழ்க்கை ஆராயப்பட்டதுபோல தோண்டித்துருவிப்பாருங்கள். அவரது ஆன்மா கதறும்!

தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டுசென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி. அதுவே இந்த நாட்டை ஒன்றாகத்திரட்டி ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவந்த கருத்தியல் பேரலை. அந்த இடத்தை அவருக்கு அளித்தது அவரது மகாத்மா என்ற அடைமொழி.

இந்த தேசத்துக்கு அதற்கான ஒரு மெய்யியல்தர்க்கம் உள்ளது.கண்ணில் காணும் அனைத்து மேன்மைகளிலும் கடவுளைக் காணுதல் என அதைச் சொல்லலாம். ஆகவே ஒருநாய் சிங்கத்தை துரத்தியது என்றால் அதை தெய்வமாகக் கும்பிடுவதில் இந்திய மனத்துக்கு தடையே இல்லை. ‘வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவனே’ தெய்வம் என்று நம்பிய மரபு அவரை மகாத்மாவாக ஏற்றுக்கொண்டது. வழிபட்டது. அவர் அந்த மாபெரும் உணர்ச்சியலைமேல் மிகுந்த மனச்சங்கடத்துடன் அமர்ந்திருந்தார்.

காந்தியின் எளிமை ஒரு பாவனை என்று சொல்பவர்களிடம் அவர்கள் எளிமை என்று எதைத்தான் சொல்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். காந்தியின் எளிமை அவர் வெளியே காட்டிக்கொண்டது அல்ல என்பதற்கு அவரது மொத்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சான்றாகும். காந்தி புலன்நிராகரிப்பையே தன் யோகமாகக் கொண்டவர். புலன்களுக்கு வசப்படுதல் என்பது அகவலிமையை இழத்தல் என்று எண்ணியவர். ஆகவே எப்போதும் எந்த ஒரு வசதியையும் ஆடம்பரத்தையும் நிராகரிப்பவராகவே காந்தி இருந்தார்

தனிப்பட்ட முறையில் இதில் காந்தியிடம் இருந்த தீவிரம் எனக்கு ஏற்புடையதல்ல. அவரது எளிமைவாதம் கலையை நிராகரிக்கும் இடத்துக்கு அவரைக் கொண்டுசென்றதைக் காணலாம். இசை, ஓவியம், நடனம் எல்லாமே அவருக்கு புலன்சார் ஆடம்பரங்களாகவே தோன்றின. அதாவது, இரண்டாயிரம் வருடங்களாக சமணமுனிகள் கொண்டிருந்த அதே எண்ணம்.

காந்தி மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தது விளம்பரம் என்று இன்று சொல்கிறார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் அழுக்கும் பிசுக்கும் நிறைந்த மூன்றாம் வகுப்பில் எளிய மக்களுடன் இணைந்து மாதக்கணக்கில் இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறார் என்பதையும், அப்படி இந்தியாவின் எளிய மக்களை நெருங்கி நோக்கிய ஒரே அரசியல் தலைவர் அவர் மட்டுமே என்பதையும், நேருவோ படேலோ, ஜின்னாவோ, அம்பேத்காரோ, ஏன் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளான எம்.என்.ராயோ, பி.சி.ஜோஷியோகூட அப்படி அம்மக்களை அறிந்தவர்கள் அல்ல என்பதையும் அவர்கள் கவனிப்பதில்லை.

சம்பாரன் போராட்டம் போன்றவை நடந்து காந்தி மகாத்மாவாக அறியப்பட்ட பின்னரும்கூட மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம்செய்திருக்கிறார். அவரது முகம் அச்சு வழியாக அறியப்படாதிருந்தமையால் அவரை எவரும் அடையாளம் காணவில்லை. அன்றைய இந்திய மூன்றாம் வகுப்பு பெட்டி எப்படி இருந்திருக்குமென ஊகிக்கலாம். எந்தவிதமான சுகாதாரப்பயிற்சியும் இல்லாத மக்கள். அவர்களைப் பற்றிய கவலையே இல்லாத அரசு. காந்தி தன் பயணங்களில் பெட்டிகளை தானே சுத்தம் செய்திருக்கிறார். கழிப்பறைகளை சுத்தம்செய்திருக்கிறார். அவரால் அப்படிச் செய்யாமல் இருக்க இயலாது. அப்போது அவர் அருகே எவரும் நடந்து அவர் மகாத்மாவா இல்லையா என்று மதிப்பு போடவில்லை.

துறந்துகொண்டே வந்தார் காந்தி. அது அவரைப்பொறுத்தவரை முன்னேற்றம். ருசிக்கான உணவை, காமத்தை, வசதியான இல்லங்களை. ஒரு கட்டத்தில் அவர் வசதியான ஆடைகளை துறந்து எளிமையான ஆடைக்கு வந்ததும் அந்தப் பரிணாமத்தின் ஒரு கட்டமே. ஓர் இந்திய மனம்  அடையும் இயல்பான வளர்ச்சி நிலை அது. இன்று பலரும் கவனிக்காத ஒன்றுண்டு, நேர்த்தியான உடைகள் மேல் அபாரமான பிரியம் கொண்டிருந்தவரும், அப்படி இந்தியாவெங்கும் அடையாளம்காணப்பட்டவருமான அம்பேத்கார் கூட அவரது வாழ்நாளின் மெய்ஞானம் கனிந்த இறுதிக்காலத்தில் எளிமையான உடைகளை நோக்கியே சென்றார்.

காந்தியின் உடை அவரை இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளில் ஒருவராக அவர்களுக்குக் காட்டியது என்று சொல்லப்படுவதுண்டு. ஒலிப்பெருக்கி வசதி இல்லாத இடங்களில் தன்னைப்பார்க்கவந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு காந்தி வெறுமே காட்சி மட்டுமே அளித்தார். அவரது தோற்றமே அவரது செய்தி ஆயிற்று என்று காந்தியின் வரலாற்றை எழுதிய லூயி ·பிஷர் சொல்கிறார். [Life Of Mahatma Gandhi,  Louis Fischer]

ஆனால் அது ஒரு மேலைநாட்டு நோக்கு. காந்தியின் அந்த உடை அவரை இந்தியாவின் பல்லாயிரம் மெய்ஞானிகளில் ஒருவராக அடையாளம் காட்டியது. ராமகிருஷ்ணபரமஹம்ஸரின், நாராயணகுருவின், ரமணரின், வள்ளாரின் தோற்றம் அல்லவா அது? காந்தி இந்தியக் கண்களுக்கு ஓர் அற்புதம் அல்ல. அவரைப்போன்ற ஆன்ம வல்லமைமிக்க பலர் அப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  உலகம்அறிந்தும் அறியப்படாமலும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் அரசியலுக்கு வந்தார் என்பதே காந்தி.

எளிமையான இந்திய கிராமிய மனம் அத்தகைய ஒருவரை அற்புதங்கள் செய்பவராகவே எண்ணிக்கொள்ளும். அவரை தெய்வமாக வழிபடும். அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களை அப்படி வழிபடலாகாது என்றே சொல்வார்கள். அதையும் மீறி அவர்கள் வழிபடப்படுவார்கள். அந்த வழிபாட்டை அம்மகான்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வதற்குப் பெயர் அறியாமையே.
காந்தியைப்பற்றி லார்ட் இர்வின் அவரது வயதான காலத்தில் சொன்னதை ஒரு இடத்தில் வின்செண்ட் ஷீன் குறிப்பிடுகிறார். காந்தியின் அபாரமான வல்லமை என்பது அனைவரையும் தனக்கு முற்றிலும் சமானமாக நடத்துவதில்தான் இருந்தது என்றாராம் இர்வின். மிக எளிய மனிதர்களை மட்டுமல்ல மிகமிக வலிமையான மனிதர்களையும்கூட அவர் அவ்வாறுதான் நடத்தினார். பட்லர்களை, வைஸ்ராய்களை, சாம்ராஜ்யங்களின் மகாராணிகளை… ஒரு தருணத்திலும் காந்தி பிறரது பணிவை ஏற்றுக்கொண்டவரோ ஊக்குவித்தவரோ அல்ல. ‘பெரியொரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என அவரது அந்த நிலையை நம் மொழியின் கவிஞன் சொல்லிவைத்திருக்கிறான்.

எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? தான் வாழ்ந்த காலகட்டத்தில் காந்தி எத்தனை லட்சம்பேரை ஆழமாகப் பாதித்திருக்கிறார் என்று? அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அளவிலேயே ஒருவகை மகாத்மாக்கள் என்று தெரியுமா உங்களுக்கு? சிலர் அவரிடம் ஒருசில சொற்களே பேசியிருக்கிறார்கள். லாரி பேக்கர் போல. சிலர் அவரை பார்த்தார்கள் அவ்வளவுதான், வைக்கம் முகமது பஷீர்போல. அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரிசனத்தையே அது மாற்றியமைத்திருக்கிறது. எத்தனை சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்! அவர் வாழ்ந்த காலத்தின் மகத்தான மனங்களில் அவரது அழுத்தமான பாதிப்பில்லாதவர்கள் அனேகமாக எவருமே இல்லை. ஐன்ஸ்டீன் முதல் சார்லிசாப்ளின் வரை.

அத்தனைபேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் நீங்கள் ‘உண்மை’ யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்மா என்று நம்பவேண்டும். அல்லது உங்களை நம்பவைத்தவரை அதிமகாத்மா என்று நம்ப வேண்டும். மன்னிக்கவும், அதைவிட காந்தியை நம்புவதற்கே அதிகமான ஆதாரங்கள் இருக்கின்றன.

காந்தியின் ஆகப்பெரிய பிரச்சினையே அவர் ஓர் அசாதாரண மனிதர் என்பது அவருக்குத் தெரியாது என்பதே என்கிறார் வின்செண்ட் ஷீன். அவர் தன்னை சாதாரண அறிவுத்திறனும் சாதாரணமான ஆன்மீக வல்லமையும் கொண்ட ஒருவர் என்றே எண்ணினார். தன்னாலேயே ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்னும்போது ஏன் எல்லாராலும் செய்ய முடியாது என்று கருதினார். அவரது குழந்தை வளர்ப்பின் பிரச்சினையே அவர்  தன் நெறிகளை அவர்களும் சாதாரணமாக கடைப்பிடிக்கமுடியும் என நம்பி அவர்களை வளர்த்ததுதான். அவரது ஆசிரமங்களில் அந்தச் சிக்கல் எழுந்தபடியே இருந்தது. குறிப்பாக ஆண்பெண் உறவு விஷயங்களில்.

காந்தி அரசியலில் ஒரு வெற்றி அல்ல என்றே சொல்ல வேண்டும் என்கிறார் வின்செண்ட் ஷீன். இந்தியாவுக்கு ஓர் அரசியல் சுதந்திரத்தை வாங்குவது அவரது இலக்கு அல்ல. அவரது கனவுகள் மகத்தானவை. அவர் போரில்லாத ஓர் உலகத்தைப்பற்றி எண்ணினார். வளங்கள் சூறையாடப்படாத ஓர் வாழ்க்கைமுறையை கற்பனைசெய்தார். பேதங்கள் இல்லாத மானுடத்தைப்பற்றி உருவகித்துக்கொண்டார். அதற்கு புலன்கள் மேல் கட்டுப்பாடும் சகமனிதர்கள் மேல் பிரியமும் போதுமே என்று என்ணினார். அவை எளியமக்களுக்கு மாபெரும் சவால்கள் என அவர் புரிந்துகொள்ளவே இல்லை. அவர் தன்னை ஒரு சாமானியனாக எண்ணிக்கொண்ட மகாத்மா என்பதே அவரது நடைமுறை தோல்வி என்று சொல்லும் வின்செண்ட் ஷீன் ஏசுவும் அத்தகைய ஒருவரே என்கிறார்

காந்தி அரசியலுக்கு வந்து சிலவருடங்களுக்குள், அவரது மாபெரும் சத்தியசோதனைப்போராட்டங்களை இந்தியா காண்பதற்குள்ளேயே, அவரது மகாத்மா பட்டம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அதை உறுதிசெய்தவர்கள் எளிய மக்கள், மாபெரும் கவிஞர்கள். தாகூர், பாரதி, வள்ளத்தோள், குவெம்பு… அச்சொற்களை ஒரு நுண்ணுணர்வுள்ளவர் எளிதில் புறக்கணிக்க முடியும் என நான் நம்பவில்லை. அவர்களையெல்லாம் வெளிவேடம் கண்டு ஏமாறுபவர்கள் என்றும், நாம் மெய்யறியும் நுண்ணுணர்வாளர் என்றும் எண்ணிக்கொள்ளும் ‘மேதமை’ எனக்கு இல்லை என்பதற்காக உள்ளபடியே உவகையடைகிறேன்.

நான் காந்தியை மகாத்மா என்ற சொல்லால் சொல்வதில்லை. ஒரு மனிதரை நாம் அறிய முயலும்போது அவருக்கு அடைமொழிகள் போடுவதென்பது முன்முடிவுகளை நிறுவி அவரை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்பதனால்தான் அது. காந்தி இந்திய மரபு வகுத்த ஞானமுறைகளில் ஒன்றை, கர்மயோகத்தை, தன் பாதையாகக் கொண்டவர். அதனூடாக கனிந்த ஞானி. ஆனால்எந்த அர்த்ததில் நாம் முமுமனிதர், மெய்ஞானி,பரமஹம்சர் என்று ஒருவரைச் சொல்கிறோமோ அந்த அர்த்தத்தில் காந்தியைச் சொல்லமுடியாது.

ஆனாலும் ”பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க” என என் மொழியின் நவகவிஞனுடன் சேர்ந்து கூத்தாடுவதற்கு எனக்குத் தயக்கமில்லை.

***

முந்தைய கட்டுரைநாகார்ஜுனன் கூட்டம்
அடுத்த கட்டுரைகாந்தி புதிய கடிதங்கள்