அன்னியர்கள் அளித்த வரலாறு

என் வீட்டு நூலகத்தில் நானே நூல்களைத் தேடிப்பிடிப்பது ஓர் இனிய அனுபவம். வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது ‘தமிழக வரலாறு’. நெல்லை சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1954இல் வெளியிட்ட நூல்24-1-1954ல் தருமையருள்பெறு நெல்லை அருணகிரி இடைக்கழகத்தின் எட்டாம் தமிழ்த் திருவிழாவில் நிகழ்த்திய உரைகளின் தொகுதி இது. என்னிடம் வந்துசேர்ந்திருப்பது முதல்பதிப்பு. நெல்லையில் 1989இல் பழைய புத்தகக் கடையில் வாங்கி படிக்காமல் ஜோதியில் கலக்கவிடப்பட்ட நூல்

இந்த நூல் உருவான காலகட்டத்தை வைத்தே இதைப்புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரப்போராட்ட அலை ஓய்ந்தபின்னர் ஒவ்வொரு இந்திய மொழிவட்டாரமும் தன்னை ஒரு தனித்த கலாச்சார தேசியமாக உருவகித்து வளர்த்தெடுக்க முயன்ற காலகட்டம் இந்தியாவெங்கும் ஏறத்தாழ. ஒரேகாலகட்டத்தில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முக்கியமாக நான்கு படிகள் உள்ளன.

ஒன்று, ஐரோப்பிய அறிஞர்கள் ஒருமொழியின் தனித்தன்மையை கண்டறிந்து நிறுவுதல். தமிழில் வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல் என ஒரு வரிசை ஐரோப்பியத்தமிழறிஞர்களால் தமிழின் தனித்தன்மை நிறுவப்பட்டது. மலையாளத்தில் இதே பணியை ஹெர்மன் குண்டர்ட் ஆற்றினார்

இரண்டு, ஆங்கிலக்கல்வியும் அச்சுமுறையும் உருவாக்கிய விழிப்புணர்ச்சி காரணமாக பழைய நூல்களை அச்சுக்குக் கொண்டுவரும் இயக்கம். தமிழில் உவே.சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம்பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றபலரால் இவ்வியக்கம் முன்னெடுக்கப்பட்டது

மூன்று, வட்டாரமொழிகளில் தனித்த நவீன இலக்கிய இயக்கம் உருவாகி வலுப்பெறுதல். தமிழில் பாரதியைப்போல மலையாளத்தில் குமாரனாசானையும் வள்ளத்தோளையும் கன்னடத்தில் குவெம்புவையும் குறிப்பிடலாம்

நான்கு, சுதந்திரத்திற்குப்பின்னர் உருவான கலாச்சார சுயத்தேடல். இந்தியா மொழிவழி மாநிலங்களாக பிரிந்தபோது உருவான எண்ண ஓட்டம் இது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனிவரலாறு, தனிக்கலைமரபு, தனிப்பண்பாட்டுக்கூறுகள் என ஒவ்வொன்றாக உருவகித்து நிலைநாட்டப்பட்டன. ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்பதிப்பியக்கம் தமிழ்நூல்களை புத்துயிர் பெறச்செய்தது என்றால் இந்த இரண்டாவது இயக்கம் அந்நூல்களில் இருந்து இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரலாற்று, பண்பாட்டு கருத்துருவாக்கங்களை திரட்டி எடுத்து முன்வைத்தது

அந்தக்காலகட்டத்தில் தமிழில் இந்நோக்குடன் பல்லாயிரம் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. செந்தமிழ்ச்செல்வி போன்ற இதழ்கள் அவ்வியக்கத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன. பதிப்பகம் என்றவகையில் அதில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் பங்களிப்பு மிகமுக்கியமானது. இந்நூலும் அதில் ஒன்று

இந்நூலை இன்று வாசிக்கும்போது அன்று எப்படியெல்லாம் வரலாற்று உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கமுடிகிறது. இந்நூல் முழுக்கமுழுக்க தமிழாசிரியர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்று நூல் என்பது சுவாரசியமான விஷயம். அன்றைய தமிழக வரலாற்று ஆய்விலும் வடிவாக்கக்கத்திலும் தமிழாசிரியர்களுக்கு முக்கியமான பங்களிப்பு என ஏதுமில்லை. வரலாற்றாய்வுக்கான முறைமையோ அடிப்படைத்தேவையான சமநிலைப்பார்வையோ தமிழாசிரியர்களிடமிருக்கவுமில்லை. அவர்கள் தமிழின்பெருமையை நிலைநிறுத்தும்பொருட்டு தமிழ்வரலாற்றை கற்றவர்கள். ஆனால் அவர்களே இன்றும் புழக்கத்தில் இருக்கும் தமிழ்வரலாற்றுச் சித்திரத்தை மக்களிடையே நிலைநாட்டியவர்கள். அது எப்படி நிகழ்ந்தது என்பதற்கான சான்றாக இந்நூலைக் கொள்ளலாம்.

நூலுக்கான அணிந்துரை இராம கனகசபாபதிப்பிள்ளை- நெல்லை அருணகிரி இசைக்கழக அமைச்சர். முன்னுரை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை. சங்ககலம் பற்றி மண்டித வித்வான் தா.மாசில்லாமனிநாடார் எழுதியிருக்கிறார். பல்லவர்காலம் வ. பொன்னுச்சாமிப்பிள்ளை -துணைத்தலைவர் ம.தி .தி.தா. இந்துக்கல்லூரி திருநெல்வேலி. சோழர்காலம் ரெ.சேஷாசலம் .பாண்டியர்காலம் அவ்வை ஞா. துரைசாமிப்பிள்ளை -சாஃப்டர் உயர்நிலைப்பள்ளி திருநெல்வேலி . நாயக்கர்காலம் ஆ.செபாரத்தினம்- தூய யோவான் கல்லூரி பாளையங்கோட்டை . ஆங்கிலேயர் காலம், சிவ இராமச்சந்திரன் -ம தி தா இந்துக்கல்லூரி திருநெல்வேலி.

கா. அப்பாத்துரை

முன்னுரையிலேயே தங்கள் நோக்கம் தமிழர்களுக்கு ‘ஒளிமிக்க’ வரலாற்றை கண்டு அளிப்பதுதான் என சொல்லிவிட்டே ஆரம்பிக்கிறார்கள். ‘வரலாறு கண்ட முதல் நிலம் தமிழகம். ஆனால் நாம் அதற்கு இன்னும் முழுதுறழ் வரலாறு காணவில்லை. அது எந்நாட்டுக்கும் முற்பட்ட, எந்நாட்டையும் விட நீடித்த தொடச்சியான வரலாறு உடையது’ என ஆரம்பிக்கிறார் கா.அப்பாத்துரை. அனேகமாக அத்தனை தமிழறிஞர்களும் இதே முன்முடிவை முதலில் சொல்லிவிட்டே பேச ஆரம்பிக்கிறார்கள்.

மாசில்லாமணி நாடார் மட்டும் விதிவிலக்கு. அவர் விவிலியத்தின் தொன்மையில் இருந்து ஆரம்பிக்கிறார் ‘வானும் வளியும் நெருப்பும் நீரும் நிலமும் முறையே தோன்றின’ என விவிலியத்தை ஆதாரம் காட்டி விளக்கும் நாடார் ‘நிலம் தோன்றிய காலத்தே உடன் தோன்றியது தமிழகம்’ என வரையறைசெய்கிறார் ஒப்புநோக்க சமநிலை கொண்ட வரலாற்று நோக்கு என்பது வ.பொன்னுச்சாமிப்பிள்ளை பல்லவர் காலம் பற்றி எழுதியது மட்டுமே.

அக்காலத்திலேயே தமிழகத்தின் வரலாற்று வரைபடம் முன்னோடி தமிழ் வரலாற்றாய்வாளர்களான ஜெ.எச்.நெல்சன், நீலகண்டசாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், சத்தியநாதய்யர் போன்றவர்களால் எழுதப்பட்டுவிட்டது. அந்த வரலாற்றுவரைபடத்தில் இன்றுவரை நம் வரலாற்றாய்வாளர்கள் மேலதிகமாக எதையும் எழுதிச்சேர்க்கவுமில்லை. சில கள ஆய்வுகள் மட்டுமே மேலதிகமாக நிகழ்ந்துள்ளன. இந்நூல் அந்த முன்வரைவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த தரவுகளை ஏராளமான கற்பனைகளுடன் கலந்தும், விருப்பப்படி விளக்கியும் இடைவெளிகளை வெறும் ஊகங்களால் நிரப்பியும், ஒரு தமிழ்ப் பொன்னுலக வரலாற்றை உருவாக்க முயல்கிறது.

இந்நூல் முழுக்க கால்டுவெல், ஹீராஸ்பாதிரியார் முதலியவர்கள் கிட்டத்தட்ட மறுக்கமுடியாத வரலாற்று மாமேதைகளாக முன்வைக்கப்பட்டு அனைத்து ஆய்வுகளும் அவ்வெளிச்சத்திலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. குமரிக்கண்டம், லெமூரியா போன்றவை எல்லாம் உறுதிசெய்யப்பட்ட வரலாறாகவே எழுதப்பட்டுள்ளன.

இன்றுவரை தமிழ்வரலாற்றை நிதானமான பார்வையில் எழுதமுடியாமல் தடுக்கும் நோய்க்கூறுகளாக உள்ளவை அனைத்தும் இச்சிறுநூலில் உள்ளன. பல்லவர்காலம் பற்றிப்பேசும் பொன்னுச்சாமிப்பிள்ளை ‘பல்லவர்காலம் தமிழர் வரலாற்றில் மிக முதன்மைவாய்ந்ததொரு காலமாகும். தமிழகம் தமிழகமாக உருவான காலகட்டம் அது’ என்கிறார்

அவ்வை துரைசாமிப்பிள்ளை

ஆனால் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் முன்னுரையில் ’இதன்கண் நம் பழந்தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர சோழ பாண்டிய மன்னர்களின் செங்கோல் மாட்சிச்சிறப்பும்,பிற்கால பல்லவர் நாயக்கர் ஆட்சிநிலைகளையும், அப்பால் ஆங்கிலேயர் ஆட்சித்தன்மைகளையும்’ இந்நூல் விளக்குகிறது என்கிறது பல்லவர்களும் நாயக்கர்களும் அன்னியர்கள் என்ற பிரக்ஞை, அவர்களின் ஆட்சிக்காலச் சாதனைகளை பின்னுக்குத்தள்ளி மூவேந்தர்களை மட்டுமே கொண்டு ஒரு தமிழ்பொன்னுலக வரலாற்றை உருவாக்கும் முனைப்பு அன்று முதல் வலுவாக நீடிக்கிறது.

இதன் நீட்சியே நாயக்கர்கள் பற்றிய ஆ.செபாரத்தினம் அவர்களின் கட்டுரை. அப்பட்டமான இனவெறுப்பு மட்டுமே கொண்ட எழுத்து. ‘திராவிட நாடுகள் நாயக்கர் காலத்தில் பிளவுபட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் மீண்டும் ஒருவாறு சேர்க்கப்பட்டன. இப்போது மீண்டும் பிரிந்து இயங்குகின்றன. ஆனாலும் திராவிடர் என்ற போர்வையில் நாயக்கர் இயக்கம் ஒன்று தமிழகத்தில் நிலவுகிறது. அண்மையில் நெல்லையில் நடந்த சென்னைமாகாணத் தமிழ்ச்சங்க மாநாட்டிலே புலவர் அவைக்கு தலைமைதாங்கிப்பேருரை நிகழ்த்திய நாவலர் சோமசுந்தர பாரதியார் தற்காலத்தில் தமிழுக்கு அயலான நாயக்கர் ஒருவர் தமிழ் மக்களுடைய எழுத்துக்களையும் இலக்கியங்களையும் சிதைக்க முன்வந்திருப்பதை எடுத்துரைத்தது இங்கே நினைக்கற்பாலது. மொழியழித்த சமூகம் எங்கேனும் வாழ்ந்ததுண்டோ?’ என்று தன் கட்டுரையை முடிக்கிறார்

அவர் சொல்லும் திராவிட நாடுகள் வரலாற்றுக்காலம் முழுக்கவே தனித்தனி நாடுகளாகவே இயங்கின என்றும் சாதவாகனப்பேரரசுக்குப்பின் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மட்டுமே அவை ஒருகுடைக்கீழ் ஆளப்பட்டன என்றும் தென்னகத்தின் அத்தனை கலாச்சாரச் சின்னங்களும் நாயக்கர்களின் கொடைகளே என்றும் அவர்கள் இல்லையேல் அத்தனை கலாச்சாரச் சின்னங்களும் அழிந்து வட இந்தியாபோல ஆகியிருக்கும் தமிழகமும் தென்னாடும் எனறும் எவரேனும் அன்று சொல்லியிருப்பார்களா? வெள்ளையர்கள் திராவிடத்தை ஒன்றுசேர்த்த புண்ணியவான்கள் என்ற செபாரத்தினத்தின் கூற்றை எவரேனும் மறுத்திருப்பார்களா?

அன்றுமுதல் இன்று வரை தமிழறிஞர்கள் அன்னியர்களைக் கண்டுபிடிப்பதன் வழியாகவே தங்கள் பண்பாட்டுசெயல்பாட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். அன்னியர்களை களப்பிரர் காலம் வரைக்கும் சென்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்னியர்களைக்கொண்டு தமிழகத்தை வரையறைசெய்ய முயலும் ஒரு வரலாற்று நூல் என இதைச் சொல்லமுடியும்

முந்தைய கட்டுரைவிழா வாழ்த்துக்கள் யோசனைகள்
அடுத்த கட்டுரைவெள்ளையானை – கடிதங்கள்