காந்தி இன்னும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

காந்தி பற்றிய உங்கள் சமீபத்திய பதிவுகள் மிக பயனுள்ளவை. காந்தி என்றதலைவரை பற்றி ஓரளவு எனக்கு தெரியும். ஆனால் காந்தி என்ற சிந்தனையாளரைபற்றி அதிகம் தெரியாது. அவரது சிந்தனையை ஆராய்ந்து பேசும் புத்தகங்கள்,கட்டுரைகளை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன்.

தொழில் நுட்பம் கட்டுரையில் மட்டும் இன்று பேசும் appropriatetechnology -ஐ நீங்கள் காந்தியிடம் பலவந்தமாக பொருத்திப் பார்க்கிறீர்களோஎன்று தோன்றுகிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

கிலாஃபத் இயக்கம் காந்தியின் தவறில்லையா என்று உங்களை ஒரு மெயிலில்கேட்டிருந்தேன். அது தவறு என்பதில் எனக்கு மாற்றம் இல்லை. துருக்கியில்என்ன ஆட்சி முறை வேண்டும் என்று இந்தியர்கள் போராடுவது அபத்தமாகஇருக்கிறது. தேவை என்றால் கலீஃபாவை இந்தியாவுக்கு அழைத்து இங்கே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் காந்தியின் தவறுகள் என்ற ஒரு சுட்டியில்நீங்கள் எழுதி இருந்த விளக்கம் என் கேள்விக்கு விடை தந்தது.  ஒரே கேள்விமீண்டும் மீண்டும் வரும்போது எரிச்சல் அடைந்திருக்கலாம். பல நூறுகட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள், எது எங்கே இருக்கிறது என்றுதெரியவில்லை, மன்னிக்கவும்.

காந்தி ஒரு நடைமுறைவாதி, அதே நேரத்தில் அவர்தான் மிக உன்னதமான லட்சியவாதிஎன்று நீங்கள் எழுதி இருப்பது சரியான பேச்சு. அவர் ஒரு empiricist கூட.சிந்தனை, அதை சிறு அளவில் செயல்படுத்தி பார்ப்பது, திருத்தங்களுக்குபிறகு அதையே பெரும் அளவில் செயல்படுத்துவது, என்ன எதிர்ப்பு வந்தாலும்அந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் பிடிவாதம் – அற்புதமானசெயல்பாட்டு முறை.

காந்தியை பற்றி – குறிப்பாக அவரது சிந்தனைகளை பற்றி அதிகம் தெரியாத என்போன்றவர்களுக்காக நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஜே.சி. குமரப்பாபோன்றவர்களை பற்றியும் கூட. எனக்கு குமரப்பா பேர் மட்டுமே தெரியும்!

நீங்கள் எழுதிய பல பதிவுகளை இங்கே தொகுக்க முயற்சி செய்திருக்கிறேன்.
http://koottanchoru.wordpress.com/2009/09/27/காந்தி-பற்றி-ஜெயமோகன்/
பாருங்கள்.

அன்புடன்
ஆர்வி

 

அன்புள்ள ஆர்வி

 

நலமா?

 

காந்தி குறித்த நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை. என்னுடைய கட்டுரைகள் நூலாகும். அவை மேல்வாசிப்புகென பல நூல்களை சு ட்டுவனவாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

 

காந்தி பொருத்தமான தொழில்நுட்பம் பற்றி பேசவில்லை என்றீர்கள்…நேர்மாறாக அந்த கருத்தின் விதையே அவர்தான். அதைப்பற்றி பேசிய எல்லாருமே  அதைச் சொல்லியிருக்கிறார்கள். வே ண்டுமானால் பத்து பக்க பதி வு போடுகிறேன்)))

 

தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த இயற்கைவாதிகள், கிறித்த மதக்குழுகக்ள் போன்றவை மட்டுமே காந்தியின் காலத்தில் இருந்தன. காந்தியும் அங்கிருந்தே தொடங்கினார். ஆனால் அவர் மேலே சென்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பதற்கான தத்துவ அடிப்படைகளை தேடினார். அந்த அடிப்படைகளுடன் மோதாத தொழில்நுட்பம் சிறந்ததே என்று கண்டார். அவர் மின்சாரத்தை எதிர்த்தவரல்ல. தவிடு எடுக்காமல் நெல்லை அரிசியாக்கும் கருவியை ஆதரித்தார். காகிதம்செய்யும் கருவியை வரவேற்றார். தொழில்நுட்பம் நுகர்வை அதிகரித்து இயற்கையை சுரண்டக் கூடாடு என்று மட்டுமே சொன்னார்.

 

அப்படி சுரண்டாத எல்லா தொழில்நுட்பத்தையும் வரவேற்றார். அதிர்ச்சி ஆக மாட்டிர்களென்றால் ஒன்றை சொல்கிறேனே, கிட்டத்தட்ட ‘appropriate technology என்ற சொல்லையே பயன்படுத்தினார். பியாரிலாலுக்கும் அவருக்குமான உரையாடலில் காந்தி அந்தச்சொல்லை பயன்படுத்தினார் –‘ஸாத்வீக யந்திரம்’ என்று!

 

பிரமைளில் இருந்துவிடுபட்டு காந்தியை அணுகவேன்டியிருக்கிறது

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த இரண்டு கட்டுரைகளும் நிறைய தெளிவை அளிக்கும் விதமாக இருந்தன. காந்தி என்கிற தலைவரை, தீர்க்கதரிசியை  காழ்ப்புகள் ஏதுமின்றி அணுகி புரிந்துகொள்ள வகை செய்தன, நன்றி.

1920 – 40களில்  காந்தி பேசுவதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக  இந்தியாவெங்கும் ஏராளமானோர்  ஹிந்தி படித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (என் தாத்தாவும் அதில் ஒருவர்).  இத்தகைய வசீகரம் வேறெந்தத் தலைவருக்கு வாய்த்திருக்கும் ?  தமிழகத்தில் முதன்முதலில் ஹிந்தி வகுப்பு நடத்த இடம் தந்தது ஈவேரா, அந்த வகுப்பில் ராஜாஜியும் உடனிருந்தார் என்று  சென்னை ஹிந்தி பிரசார சபை வரலாறு பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்..  அப்போது காந்தியின் சமூக நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக இருந்த ஹிந்தி பிரசாரத்தை   பின்னாளில் கடும் ஹிந்தி எதிர்ப்பாளர்களாக மாறிய இவர்களே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சாதி பற்றிய தன் கண்ணோட்டத்தில் காந்தியே  தனது நடைமுறை அனுபவங்களில் கற்று மாற்றங்கள் ஏற்படுத்திக்  கொண்டார் என்பதற்கு நீங்கள் தந்த தரவுகள் ஆதாரபூர்வமாக இருந்தன. // இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும் //

இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர்கள். 10% இதைச் செய்பவர்களில்   நேதாஜி/சாவர்க்கர் அபிமானிகளும்,  இடது சாரிகளின் ஒரு தரப்பினரும் அடங்குவர்; ஆனால் அவர்கள் புதிய அவதூறுகள் எதையும் தோண்டித் துருவி கிளப்பவில்லை.  மீதி 90%  நீங்கள் குறிப்பிடுபவர்களே.  கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரான காந்தியின் கருத்துக்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றன  (காங்கிரஸ் கட்சி அவற்றை விட்டு  வெகுதூரம் வந்து விட்டாலும்),  எனவே கிறிஸ்தவ மதப்பிரசார அமைப்புக்கள் காந்தியை தங்கள் எதிரியாகப் பாவிப்பதில் வியப்பொன்றுமில்லை.

அன்புடன்,
ஜடாயு

 

அன்புள்ள ஜடாயு

நன்றி. காந்தியைப் பற்றிய இலக்கு என்பது காந்திக்கானதாக இல்லாமல் இப்போது இந்தியாவுக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிரது. இன்று எந்த உலகத்தலைவருக்கும் சிந்தனையாளருக்கும் எதிராக இத்தனை பெரிய ஒரு பிரச்சாரம், பெரும் பொருட்செலவில்,செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்

ஜெ

காந்தியும் சாதியும்
———————
இன்று காந்தியும் சாதியும் உங்கள் வலைப்பூ  பக்கங்களை வாசித்தேன்.
காந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் காந்திவாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை நேரில் கண்டவுடன் அந்த எளிமைஎன்னைக் கொஞ்சம் அதிர வைத்தது உண்மை.

 

அவர் ஜாதி குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் எழுதியிருந்த
கட்டுரைகளை வாசிக்கும் போது ஓர் அறிவியல் தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால் அவர் தீர்வுகளும் சமத்துவம் குறித்த அவர் பார்வையும்
யதார்த்தத்திலிருந்து விலகி வாழ்ந்த அவருடைய கனவுலகம்.
இந்தக் கனவுலகம் தான் மகாத்மாவின் பலமும் பலகீனமும் என்று நினைக்கிறேன்.
நேரு போன்றவர்களை காந்தியின் இம்மாதிரியான கனவுலக கற்பனைத் தீர்வுகள்
எரிச்சல் அடைய வைத்திருக்கின்றன.  தன்னை எந்த விதத்திலும்
காந்தியின் கனவுலக பிரமைகள் பாதித்துவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் கவனமாகஇருந்திருக்கிறார். nehru maintains the distance. இந்தியாவின் எதிர்காலத்தை நேரு காப்பாற்றினார்என்று தான் சொல்லவேண்டும்!
அம்பேத்கர் தன் அறிவியல் பூர்வமான வாதங்களை முன்வைக்கும் போதெல்லாம்
காந்தியின் கனவுலக மாயைத் திரைகள் அம்பேதக்ரையும் சினமூட்டியிருக்கின்றன.
மகாத்மா என்ற தன் பிம்பத்தை குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிலைநிறுத்த காந்தியும்காந்தியைச் சார்ந்தவர்களும் நிறைய மெனக்கெட்டார்கள் என்பதை அவருடனிருந்த சரோஜினிதேவி நாயுடுஎழுதியிருக்கிறார்.
அண்மையில் கூட காந்தியைப் போல எல்லோரும் மூன்றாம் வகுப்பில் இரயிலில் பயணம் செய்ய வேண்டும்என்ற வாசகமும் அதன் பின் பல அமைச்சர்கள் விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணித்தது செய்தி ஆனது
மறந்திருக்காது என்று நினைக்கிறேன்.
அவர்கள் எல்லோரும் மறந்தது இதைத்தான்.. காந்தி இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த போதுஅவர் பாதுகாப்புக்காக அந்த மூன்றாம்வகுப்பு பெட்டி முழுவதும் காலியாக இருந்தது என்பதைத்தான்.அதாவது கிட்டத்தட்ட 72 பேர் பயணிக்கும் இடத்தில் காந்தியின் எளிமைக்காக 70 பேரின் இடங்கள்
நிரப்பப்படாமல் இருந்தது. கணக்குப் பார்த்தால் காந்தியின் எளிமை பிம்பத்தை நிலைநாட்ட கொடுத்த விலை அதிகம்தான்!
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை

 

அன்புள்ள புதியமாதவி,
நன்றி. காந்தியின் கருத்துக்களில் இலட்சியவாதம் உண்டு, ஆனால் கனவுமயக்கம்இருந்ததுஎன நான் நினைக்கவில்லை. மாறாக நேருதான் கனவையும்இலட்சியவாதத்தையும் குழப்பிக்கொண்ட கற்பனாவாதி

காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் குறித்து நான் விரிவாகவே ஒருகட்டுரை எழுதியிருக்கிறேன். காந்தியின் எளிமையின் செலவு என்று.இணையத்தில் பார்க்கலாம்

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
திரு.ஜெபமாணிக்கம் அவர்களுக்கு எழுதிய கட்டுரை படித்தேன், மிக பிரமிப்பாக இருந்தது, மகாத்மாவின் பல அற்புதமான விஷயங்களை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், இந்தியாவின் மொத்த பிணைப்புமே அந்த மனிதனின் ஆன்மாவில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை மிக அழகாக புரியவைத்துள்ளீர்கள், காந்தியைப்பற்றிய தட்டையான விவாதங்களை வைத்துக்கொண்டு உலாவும் ஒரு மோசமானக்கூட்டத்தினருக்கு இந்த கட்டுரை சரியான பதிலைதந்திருக்கிறது.
நீண்ட காலமாக வர்ணங்களைப்பற்றிய காந்திய விமர்சனங்கள் சரியான படி எதிர்கொள்ளபடாமல் இருந்தன, அவைகளை தாங்கள் அழகாக எடுத்துவைத்து விளக்கியுள்ளீர்கள், தனது எல்லா கருத்துக்களையும் திறந்தே வைத்திருந்தார், சரியான மாற்று நிறுவப்பட்டால் அதனை மீண்டும் மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருந்தார், வர்ணங்களைப்பற்றியும் வர்க்கங்களை பற்றியும் அவரின் தெளிவு எவ்வளவு அற்புதமானது என்பது புரிகிறது.
மிகவும் போற்றுதலுக்குரிய கட்டுரை மிக்க நன்றி.
அன்புடன்
செல்வன்

 

அன்புள்ள தவநெறிச்செல்வன்

 

அழகான பெயர்

 

காந்திகுறித்த நம்முடைய மனச்சிக்கல்களில் நம்முடைய இயலாமைகளும் பெரும்பாலும் அடங்கியிருக்கின்றன. தன் வாழ்நாளில் கடைசியில் காந்தி கண்டுபிடித்தார் — இந்தியர்கல் தன் அகிம்சைப்போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்களே ஒழிய புரிந்துகொள்ளவில்லை என்று. அதை ஒரு அமெரிக்க இதழுக்கான பேட்டியில் சொல்கிறார். புரிந்துகொள்ளாதது நம் படித்த நடுத்தர கோழை வற்கம். ஏழை விவசாயிகள் புரிந்துகொண்டார்கள்.

 

இன்றும்  அவர்கள் காந்தியை புரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் அவ ர் பற்றி எது சொன்னாலும் அவர்களிடம் எப்படியோ எடுபடுகிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவடகிழக்கு:கடிதங்கள்