காந்தி புதிய கடிதங்கள்

இன்று காந்தியும் சாதியும் உங்கள் வலைப்பூ  பக்கங்களை வாசித்தேன்.காந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் காந்திவாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை நேரில் கண்டவுடன் அந்த எளிமைஎன்னைக் கொஞ்சம் அதிர வைத்தது உண்மை.

 

அவர் ஜாதி குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் எழுதியிருந்த
கட்டுரைகளை வாசிக்கும் போது ஓர் அறிவியல் தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அவர் தீர்வுகளும் சமத்துவம் குறித்த அவர் பார்வையும் யதார்த்தத்திலிருந்து விலகி வாழ்ந்த அவருடைய கனவுலகம்.
இந்தக் கனவுலகம் தான் மகாத்மாவின் பலமும் பலகீனமும் என்று நினைக்கிறேன். நேரு போன்றவர்களை காந்தியின் இம்மாதிரியான கனவுலக கற்பனைத் தீர்வுகள்
எரிச்சல் அடைய வைத்திருக்கின்றன.  தன்னை எந்த விதத்திலும் காந்தியின் கனவுலக பிரமைகள் பாதித்துவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் கவனமாகஇருந்திருக்கிறார். nehru maintains the distance. இந்தியாவின் எதிர்காலத்தை நேரு காப்பாற்றினார்என்று தான் சொல்லவேண்டும்!
அம்பேத்கர் தன் அறிவியல் பூர்வமான வாதங்களை முன்வைக்கும் போதெல்லாம் காந்தியின் கனவுலக மாயைத் திரைகள் அம்பேதக்ரையும் சினமூட்டியிருக்கின்றன.
மகாத்மா என்ற தன் பிம்பத்தை குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிலைநிறுத்த காந்தியும்காந்தியைச் சார்ந்தவர்களும் நிறைய மெனக்கெட்டார்கள் என்பதை அவருடனிருந்த சரோஜினிதேவி நாயுடுஎழுதியிருக்கிறார்.
அண்மையில் கூட காந்தியைப் போல எல்லோரும் மூன்றாம் வகுப்பில் இரயிலில் பயணம் செய்ய வேண்டும்என்ற வாசகமும் அதன் பின் பல அமைச்சர்கள் விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணித்தது செய்தி ஆனது
மறந்திருக்காது என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோரும் மறந்தது இதைத்தான்.. காந்தி இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த போதுஅவர் பாதுகாப்புக்காக அந்த மூன்றாம்வகுப்பு பெட்டி முழுவதும் காலியாக இருந்தது என்பதைத்தான்.அதாவது கிட்டத்தட்ட 72 பேர் பயணிக்கும் இடத்தில் காந்தியின் எளிமைக்காக 70 பேரின் இடங்கள்
நிரப்பப்படாமல் இருந்தது. கணக்குப் பார்த்தால் காந்தியின் எளிமை பிம்பத்தை நிலைநாட்ட கொடுத்த விலை அதிகம்தான்!
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை

 

அன்புள்ள புதியமாதவி,
நன்றி. காந்தியின் கருத்துக்களில் இலட்சியவாதம் உண்டு, ஆனால் கனவுமயக்கம்இருந்ததுஎன நான் நினைக்கவில்லை. மாறாக நேருதான் கனவையும்இலட்சியவாதத்தையும் குழப்பிக்கொண்ட கற்பனாவாதி

காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் குறித்து நான் விரிவாகவே ஒருகட்டுரை எழுதியிருக்கிறேன். காந்தியின் எளிமையின் செலவு என்று.இணையத்தில் பார்க்கலாம்

ஜெ

 

மதிப்பிற்குறிய திரு. ஜெயமோகன் அவர்களே,
வணக்கம், கடந்த சில தினங்களாகவே காந்தியைப்பற்றிய உங்கள் எதிர்வினைகளை உங்கள் வலைத்தளத்தில் படித்துவருகிறேன். மிகவும் தேவையான தகவல்களைச் சொல்கிறீர்கள். காந்தியைப் பற்றி அறிவுப்பூர்வமான விவாதத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். அதற்கு முதற்கண் என் நன்றிகள்.
மஹாத்மா காந்தியை கொன்றது கோட்சே, அவரைக் கொல்ல அவன் சொன்ன காரணங்கள் வரலாறு. காந்தி தன் கொள்கைகளை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி ஆராய்ந்த பின்பு தான் அதை அவர் பின்பற்றுகிறார் என்கிறீர்கள். ஒரு வேளை கோட்சே மஹாத்மாவைக் கொல்லாமல் இருந்து,  நேரு அவர்கள் ஆரபித்து வைத்த சில  சொதப்பலகளை அவர் கண்டிருந்தால், (எ.டு., கஷ்மீர் சொதப்பல்)  என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள் ?
என்னுடைய மற்ற கேள்விகள்.
காந்தி இப்படி பல விஷயங்களில் சுயபரிசோதனை மேற்கொண்டு எடுத்த முடிவுகள் தவறாகும் பொழுது அதை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறாரா ? தன் முடிவு தவறானது என்று ஒத்துக்கொண்டுள்ளாரா ? 1938ல் யூதர்களை நாஜிப்படைகள் கொன்று குவித்த காலத்தில் எந்த அடிப்படையில் மஹாத்மா யூதர்களுக்கு அஹிம்சையை போதித்தார் ? (அதே அடிப்படையில் தான் 1946-7ல் பாகிஸ்தான் வாழ் இந்துக்களுக்கும் அவர் அஹிம்சையைப் போதித்தார் என்பது வரலாறு. இவர் பேச்சைக் கேட்டிருந்தால் பாகிஸ்தானில் இன்று எவ்வளவு இந்துக்கள் மிஞ்சியிருக்கிறார்களே அதில் 100ல் ஒரு பங்கு யூதர்களே மிஞ்சியிருப்பார்கள் என்பது என் துணிபு)
ஷங்கர்.

 

அன்புள்ள சங்கர்

இந்த வகையான வாதங்கள் எல்லாமே மனப்பதிவுகளை அடிபப்டையாகக் கொண்டவை.இவற்றுக்கு நாம் வந்தடைவதற்கு முன்னால் உண்மையான தகவல்களை புரிந்துகொள்ளவேண்டும். அவற்றைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் ஓரளவு விரிவாக
வாசிக்கவேன்டும். அதுவரை நம் உறுதியான முடிவுகளை ஒத்திப்போடுவதே நல்லது

காந்தி இட்லருக்கு எழுதிய கடிதங்களைப்பற்றியும் யூதர்களுக்கு அவர்சொன்னவற்றைப் பற்றியும் கெய்ன்ராட் எல்ஸ்ட் அவரது Return Of The Swastikain India.  .    Koenraad Elst. நூலில் விரிவாகவே பேசுகிறார். உங்கள்பொதுவான கோணத்துக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர் அவர் என படுகிறது. அது கிட்டத்தட்ட உங்கள் தரப்பில் இருந்தே எழும் விளக்கம்.உங்கள் ஐயங்களுக்கு அதில் பதில் உள்ளது
ஜெ

 

 

வணக்கம் ஜெயமோகன்.

நலமா? 2 மாத பயணக்களைப்பு தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். இனி அசோகவனத்தின் கீழ் கொஞ்சம் உட்காருங்களேன். காத்திருக்கிறோம் :)

”காந்தியும் தொழில்நுட்பமும்” கட்டுரை படித்தேன். காந்தியின்
சிந்தனைகளில் எனை மிகவும் பாதித்தது அவரது சிறுதொழில் குறித்த நோக்கே. சிறுதொழில் குறித்தும் கிராம அமைப்பு குறித்தும் ஒரு சமூக விஞ்ஞானியாக அக்கரையுடன் பேசினார். இவரது குரல் தான் பின்னால் லோகியாவின் கிராமம்
சார்ந்த சமூக அரசியல் தொழிற் சிந்தனைகளிலும் எதிரொலித்தது. ஆனால் அது இப்போது சாத்தியமா?

 

20 வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுவனாக நான்
பார்த்ததற்கும் இன்றைக்கு உள்ள நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் மிகப்பெரியது. நான் வசித்த பகுதியை [முகப்பேர் மேற்கு] பற்றி மட்டும் சொல்கிறேனே. தெருமுனையில் அண்ணாச்சி கடை ஒன்று இருந்தது. அங்கு தான் மளிகை சாமான்கள், காய்கறி வாங்குவோம். உருளைக்கிழங்கு வறுவல், கைமுறுக்கு, கோலி சோடா, பன்னீர் சோடா என பல வஸ்துக்கள் அப்பகுதியிலேயே
உற்பத்தி செய்யப்பட்டன. இரண்டு தெரு தள்ளி ஒரு பால் பண்ணை இருந்தது. அதைநடத்தியவர் காலையில் வந்து பால் ஊற்றிச் செல்வார். மாவு அரவை கூடம் ஒன்றுஇருந்தது. மிளகாய் பொடி, ரவை, கோதுமை மாவு, சீயக்காய் பொடி (உலர்ந்த செம்பருத்தி சேர்த்து) என வீட்டுக்கு தேவையான அனைத்தையும் அங்கே தான் அரைத்துக்கொண்டு வருவோம்.எப்போது போனாலும் பெரிய வரிசை நிற்கும்.
காத்திருந்தே அரைக்க முடியும்.

 

இரண்டு தையல் கடைகள் இருந்தன. தீபாவளி பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பே துணி எடுத்து கொடுத்துவிடுவோம். ராவுத்தர் மட்டன், சிக்கன் ஸ்டால் என்று ஒரு கறிக்கடை. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே சென்று நின்றால் தான் கறி கிடைக்கும். இவற்றை தவிர, வீதியில் மீன் விற்பவர், வண்டியில் காய்கறிகள் விற்பவர், பித்தளை பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர் என நடமாடும் சிறுதொழிலாளர்கள் சிலர்.
(இயேசுவை போலவே ஆடை அணிந்து நீள்முடி, தாடி வைத்துக்கொண்டு இயேசுவேஉங்களை ரட்சிப்பார் என்று அச்சிட்ட காதிகம் வினியோகித்த ஒருவரும் உண்டு).

 

இன்று நிலமை அப்படியே தலைகீழ். மிளகாய் பொடி முதல் கோதுமை மாவு வரைஎல்லாம் அருகில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ்ஷில் பாக்கட்டுகளில் வாங்கிக்கொள்ளலாம். கிட்டத்தட்ட எல்லோருமே ஆரோக்கியா/ஹெரிட்டேஜ் இத்தியாதி பாக்கெட் பால்களுக்கு மாறி விட்டனர். இன்றும் தாக்குப்பிடித்து நிற்பது அந்த கறிகடை மட்டும் தான் என்று தோன்றுகிறது. ரிலையன்ஸ் மற்றும்
சுகுணா இறைச்சி வியாபாரம் இந்த பகுதியில் பிக்கவில்லை.

இன்று சிறுதொழில் முனைவோருக்கு முன் நிற்கும் சவாலாக இந்த பெரும் நுகர்வுகலாச்சாரம் இருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இந்த வட்டார(?) சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்கும் என்று நினைக்கின்றீர்களா?
rangde.org போன்ற முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால் பெருந்தொழில்கள் முதலீட்டு பலத்துடன் களத்தில் நிற்கும் பொழுது சிறுதொழில்கள் எத்தனை தூரம் செல்ல முடியும்?

சித்தார்த்.

அன்புள்ள சித்தார்த்

உண்மை என்னவென்றால் இன்றைய உலகமயமாக்கம் உருவாக்கும் ஆபத்துகளை நான் காண்கிறேன். அதன் சாதகமான அம்சம் என்னவென்றால் நிலப்பிரபுத்துவம் உருவாக்கும் நேரடியான சுரண்டலுக்கு அது ஒரு மாற்று என்பதே

 

இவ்விரண்டுக்கும் காந்தி ஒரு மாற்று சொல்கிறார். ஆனால் அது எனக்கு எவ்வகையில் ந்டைமுறைச் சாத்தியம் என தெரியவில்லை

 

அதைப்பற்றி விரிவாகவே எழுந்த வேண்டும்

 

ஜெ

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு..,
தங்களின் காந்தியும் சாதியும் என்ற கட்டுரை படிதேஅன். ஒரு படைப்பாளியின்  மிக கனமான வரலாற்று ஆய்வு நோக்கு உடன் சொல்லப்பட்ட வரிகள் நிறைய; . காந்தி குறித்த தற்புரிதல்கள் இன்னும் அதிகமாகி விட்டிருக்கிறது .காந்தி அவருக்குள்ளாகவே நடைமுறையின்  சமநிலை யுடன்  முரண் இயக்கத்தை நடத்தி பார்த்து இருகிறேஅர் என்று உணர்கிறேஅன். .உங்கள் இந்த கட்டுரையை படித்த உடன் சில விஷியங்கள் விளங்கியது ஏன் அவர்  தன் சுயசரிதையின் தலைப்பில்  experiment என்கின்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று.

தினேஷ் நல்லசிவம்

அன்புள்ள தினேஷ்,

நாம் இன்னமும் காந்தியை சரிவர புரிந்துகொள்ளவில்லை. ஏன் என்றால் நாம் கவனிக்கவில்லை. வழக்கம்போல அக்கப்போர்களை மட்டுமே சிந்தனைகளாக நம்பிக் கொண்டிருக்கிறோம். வெற்றி கொண்டான் தரத்துக்கு மேல் எழுதபப்ட்ட கட்டுரைகளே தமிழில் குறைவு. [எஸ்.வி.ராஜதுரை என்ற மகா வெற்றி கொண்டான்!]
ஜெ

 

 

காந்தி கடிதங்கள்

காந்தியும் இந்தியும்

காந்தியும் சாதியும்

முந்தைய கட்டுரைமோகன் தாஸும் மகாத்மாவும்
அடுத்த கட்டுரைகலாப்ரியா கருத்தரங்கம்