காந்தியும் தொழில்நுட்பமும்

அன்புள்ள ஜெ,

நான் ஒரு கணிப்பொறியியல் ஊழியன். எனக்கு காந்தி என்னவகையாகப் பொருள்படுகிறார் என்று பார்த்தேன். அவர் நவீனத்தொழில்நுட்பத்தை எதிர்த்தவர். சர்க்கா வைத்து நூல் நூற்றவர். நான் என் கணிப்பொறியை விட்டுவிட்டு சர்க்கா ஏந்தி நூல்நூற்கச் செல்லவேண்டும் என்று காந்தி சொன்னால் என்னால் அதைக் கடைப்பிடிக்க முடியுமா என்ன? அல்லது சிலேட்டில் எழுதித்தான் கணக்குபோடவேண்டும் என்றால் நடக்கிற காரியமா என்ன?

காந்தி தொழில்நுட்பத்தைப்பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அதை எதிர்த்த ஒரு பழமைவாதி. இதுதான் நான் புரிந்துகொண்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஜெகன்னாதன்

அன்புள்ள ஜெகன்நாதன்,

காந்தியை புரிந்துகொள்வதற்கான தொடக்க வரியாக அமையவேண்டியது, அவர் ‘நவீனத்துவத்தின் மீது ஐயம் கொண்டு அதைத்தாண்டி சிந்தனைசெய்ய முயன்றவர்’ என்பதே.

நவீனத்துவம் [Modernism] என்ற சொல்லை மீண்டும் வரையறைசெய்கிறேன். நவீனத்தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகநோக்குதான் நவீனத்துவம். தொழில்நுட்பம் என்பது கால இடம் அடையாளம் இல்லாதது, ஆகவே நவீனத்துவம் அனைத்தையும் உலகுதழுவியதாகவே உருவகம்செய்துகொண்டு சிந்தனை செய்தது. கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மானுடப்பொதுவாக கற்பனை செய்து வளர்த்தது.

பகுப்பாய்வுசெய்தலும் தொகுத்து நோக்குதலும் தொழில்நுட்பத்தின் வழிகள்.  அவ்வாறு பகுப்பாய்வுசெய்து குறைத்தெடுக்கப்படும் விதிகளும் கோட்பாடுகளும்தான் தொழில்நுட்பத்தின் அடிப்படை. ஆகவே அனைத்தையும் விதிகளாகவும் கோட்பாடுகளாகவும் மாற்றிச் சிந்தனை செய்தது நவீனத்துவம். நவீனத்துவம் தர்க்கபூர்வமான ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் என்று எண்ணியது

இயந்திரவியல் இயக்கவிதிகளைச் சார்ந்து அனைத்தையும் நோக்கியது தொழில்நுட்பம். இயற்கையையும் பெருவெளியையும் இயந்திரவிதிகளின் படி ஆராய்ந்தது.  வரலாற்றையும், சமூகத்தையும், அரசாங்கத்தையும்,மானுட மனத்தையும், உடலையும், சிந்தனைகளையும் கூட அது அவ்வாறே ஆராய்ந்தது. அவ்வாறு அமைக்கவும் முயன்றது.

இவ்வாறு இயந்திரவிதிகளின்படி ஆராயவும்சரி, அவ்வாறு ஆராய்ந்தறிந்தவற்றின் அடிப்படையில் பெரும் கட்டுமானங்களை உருவாக்கவும் சரி தரப்படுத்தல் அல்லது சீராக ஆக்குதல் இன்றியமையாதது. ஒரு காரின் சக்கரம் உலகமெங்கும் ஒரேபோலத்தான் இருக்கும். அதன் உதிரிஉறுப்புகளும் அவ்வாறே தரப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல கல்வி, உழைப்பு, வினியோகம் போன்ற அனைத்தையும் தரப்படுத்தி ஒரேமாதிரானதாக ஆக்கியது நவீனத்துவம்.

நவீனத்துவம் எப்போது உருவாகியதோ அப்போதே அதற்கு எதிரான ஐயமும் மேலைநாட்டுச் சிந்தனையாளர்களில் உருவாகிவிட்டது. அந்த முன்னோடிச்சிந்தனையாளர்களிடம் மானசீகமான தொடர்புகொண்டிருந்தார் காந்தி. குறிப்பாக தல்ஸ்தோய், ரஸ்கின், தோரோ போன்றவர்களிடம். நவீனத்துவம் தொழில்நுட்பத்தின் மீது கொண்டிருந்த அபாரமான நம்பிக்கையைத்தான் அவர் ஐயப்பட்டார்

காந்தி நவீனத் தொழில்நுட்பத்தின் சாதனைகளை காணாதவர் அல்ல. குறைந்தபட்சம் நவீனத்தொழில்நுட்பம் பொங்கி எழுந்த பிரிட்டனில் அந்த காலகட்டத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தவர் என்பதையாவது நீங்கள் கருத்தில் கொண்டாக வேண்டும். நவீனத்தொழில்நுட்பத்தின் சாதனையான புறவயமான பகுப்பாய்வுமுறை மேல் அவருக்கு ஈடுபாடுண்டு. தன் வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களை அவர் புறவயமாக விளக்க முயன்றார்.

அதாவது,  பரவலாக எண்ணப்படுவதுபோல காந்தி நவீனத்துவத்தை அறியாமல் அதற்குப் பின்னால் நின்ற பழைமைவாதி அல்ல. மாறாக நவீனத்துவத்தின் மையத்தில் வாழ்ந்து, அதை நுட்பமாக அறிந்து, அக்காலத்தின்  ஆகச்சிறந்த மனங்களுடன் தொடர்புகொண்டு அதை ஆக்கபூர்வமாக ஐயப்பட்டவர்.
*
எப்படி காந்தி தொழில்நுட்பத்தை ஐயப்பட ஆரம்பித்தார்? லண்டனில் வசித்தபோது காந்தி தொழிற்புரட்சியின் மானுடக்கழிவுகள் என்று சொல்லத்தக்க கீழ்மட்ட உழைப்பாளிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்.  அவர்களுடன் தன்னை அடையாளம் கண்டவர் காந்தி. பின்னர் இந்தியாவின் கோடானுகோடி உழைப்பாளர்களிடம். அதாவது நவீனத் தொழில்நுட்பம் மேலான வாழ்க்கையை உருவாக்கும் என நம்பியவர்கள் அதை மேலே இருந்து பார்த்தார்கள். காந்தி அதை கீழே இருந்து பார்த்தார்.

காந்தி தொழில்நுட்பத்தில் உள்ள வன்முறையை உணர்ந்தார். அது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் வலிமைப்படுத்துவதை கவனித்தார். அவருக்குக் கண்கூடான உதாரணங்கள் ஏராளமாக இருந்தன. பிரிட்டனின் நெசவாலைகள் இந்திய கைத்தறி நெசவை முற்றாக அழித்து கோடிக்கணக்கான மக்களை தெருப்பிச்சைக்காரர்களாக ஆக்கி பல்லாயிரக்கணக்கில் சாகவிடுவதை அவர் கண்டார். தொழிற்சாலைக்குரிய கச்சாப்பொருட்களான அவுரியும் சணலும் பயிடுவதற்காக விளைநிலங்கள் பயன்படுத்தப்பட்டமையால் வங்கப்பஞ்சத்தில் பல லட்சம்பேர் செத்ததை கண்டார். இந்தப் பேரழிவுகள் தொழில்நுட்பம் இல்லாத காலங்களில் இல்லை என்பதை அவர் கவனித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய ஆதிக்கத்தை தொழில்நுட்பம் மூலமே பெற்றது அவருக்குத்தெரியும். அனைத்துக்கும் மேலாக உலகின் பல கண்டங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிபெறாத பலலட்சம் மக்களின் ஒட்டுமொத்த சமூகங்களையே நவீனத்தொழில்நுட்பம் கொன்றழித்ததை அவர் அறிந்திருந்தார்.காந்தி தொழில்நுட்பத்தின் குறியீடாகக் கண்டது துப்பாக்கியையே.  ஆப்ரிக்காவில் வாழ்ந்தமையால் அவர் பெற்ற அந்த விழிப்பை மேலைநாட்டு சாலைகளையும், பாலங்களையும், மின்சாரத்தையும், விமானத்தையும் மட்டுமே கண்ட நேருவும் அம்பேத்காரும் பெற்றிருந்தார்களா என்பது ஐயத்துக்குரியதே.

தொழில்நுட்பத்தின் சாராம்சமான இரு தரிசனங்களை காந்தி மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். ஒன்று, பொருள்வழிபாடு. இரண்டு,  பேராசை. இன்பம், நாகரீகம், வெற்றி, அழகு அனைத்தையுமே பொருள்களில் காணும் மனநிலையே நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படைநோக்காகும். இன்பம் என்பது மேலும் மேலும் பொருட்களை அடைவது. நாகரீகம் என்பது ஏராளமான முக்கியமான பொருட்களில் வாழ்வது. உலகின் பொருட்களை அடைவதே வெற்றி. அழகு என்பது பொருட்களின் தோற்றமே —  இதுதான் இன்றுவரை நவீனத்தொழில்நுட்பம் நமக்குக் கற்பிப்பது

உண்மையில் பொருள் என்பது ஒரு மனநிலையின் புறவய விளக்கம் மட்டுமே. ஒருபொருள் ஏன் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, ஏன் நாகரீகமானதாக தெரிகிறது, ஏன் அதை அடைவதை வெற்றியாக எண்ணுகிறோம்? அந்தவினாவுக்கான பதிலை நம் அகத்தில்தான் தேட முடியும். அந்த அகத்தை முற்றாகப் புறக்கணித்து புறவயமான பொருட்களில் ஈடுபடும் மனம் தன்னை முற்றாகவே இழந்துவிடுகிறது. அதன் பின் பேரசை மட்டுமே எஞ்சுகிறது.

நவீனத்தொழில்நுட்பத்தில் இருந்து பேராசையை தவிர்க்கவே முடியாது என காந்தி எண்ணினார். இன்றும் இந்த உண்மையை அப்பட்டமாகவே காணலாம். மேலும் மேலும் என விரியத்துடிப்பதே அதன் இலக்கு. ஆகவே நவீனத்தொழில்நுட்பத்தில் இருந்து வணிகத்தை பிரிக்கவே முடியாது. பேராசை கொண்ட வணிகம் என்பது ஈவிரக்கமற்ற சுரண்டலே. ஆகவே நவீனத்தொழில்நுட்பத்தில் இருந்து சுரண்டலை தவிர்க்க முடியாது. வன்முறை இல்லாமல் சுரண்டல் சாத்தியமில்லை. ஆகவே நவீனத்தொழில்நுட்பம் வன்முறை இல்லாமல் நீடிக்க முடியாது.

நவீனத்தொழில்நுட்பம் மூலதனக்குவிப்பை மட்டுமே உருவாக்குகிறது என காந்தி எண்ணினார். மூலதனம் இல்லாமல் பெருமளவு உற்பத்தி சாத்தியமல்ல. பெருமளவு உற்பத்தி பெரும் மூலதனக்குவிப்பை உருவாக்குகிறது. இது ஒரு விஷச்சுழல். ஒரு கட்டத்தில் ஒரு பொருள் உற்பத்திசெய்யப்படுவதற்கும் நுகரப்படுவதற்கும் தேவைக்குப்பதிலாக சிலரது இலாபம் மட்டுமே காரணமாக அமைகிரது. அவர்களுக்காக பிறர் வாழ்கிறார்கள்.

இன்றைய உலகின் நவீனத்தொழில்நுட்பத்தில் பெரும்பகுதி போருக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். நீங்கள் ஈடுபட்டிருக்கும் கணிப்பொறித் தொழில்நுட்பம் உட்பட.  நவீனத்தொழில்நுட்பத்தில் ஊன்றிய இன்றைய பொருளாதாரமே போர்ப்பொருளாதாரம்தான். போரில்லாமல் நவீனத்தொழில்நுட்பம் சிலவருடங்கள்கூட நீடிக்க முடியாது. போர் மூலமே நவீனத்தொழில்நுட்பம் கோரும் பெரும் முதலீட்டை திரட்டமுடியும்.

இந்த அப்பட்டமான உண்மை இன்று கொஞ்சம் நவீன உலகை நோக்கினாலே தெரியும். இன்று தன்னிறைவுள்ள சமூகங்களாக கருதப்படும் முதல் உலகம் மிச்ச உலகத்தை எந்தவித அற அடிப்படையும் இல்லாமல் சுரண்டித்தான் அந்த தன்னிறைவை அடைந்துள்ளது. அவற்றின் செல்வம் ஆயுத உற்பத்தியைச் சார்ந்தது. பிறநாடுகளில் போர் நிகழாவிட்டால் முதல் உலகநாடுகள் தள்ளாட ஆரம்பிக்கின்றன. பிறநாடுகளின் எண்ணையை, கனிவளத்தை, நில நீர் வளங்களை அவை சுரண்டுகின்றன. அந்நாட்டு மக்களை தங்களின் சந்தையாக ஆக்கி அவை செழிக்கின்றன.

நவீனத்தொழில்நுட்பமும் தொழிற்புரட்சி நூற்றாண்டு கண்டபிறகு இன்றுகூட அதன் பலன்களை உலக மக்களில் ஒரு சிறுபான்மையினரே அனுபவிக்கிறார்கள். உலக மக்களில் பெரும்பகுதியினரை சுரண்டப்படும் ஒடுக்கப்படும் மக்களாக வைத்திருக்கவே அந்த தொழில்நுட்பம் இந்த நிமிடம் வரை பயன்பட்டிருக்கிறது. உலகத்துக்கு நவீனத்தொழில்நுட்பம் அளித்த மீட்புதான் என்ன? குறைந்தபட்சம் மானுடத்தின் பசியையாவது அது குறைத்திருக்கிறதா? இன்றைய உலகை நோக்கி அதை நாம் சொல்ல முடியுமா?

மாறாக அந்த நவீனத்தொழில்நுட்பத்தை சொந்தமாக வைத்திருக்கும் மக்களின் எல்லையற்ற நுகர்வுவெறிக்கு உலகத்தின் இயற்கையின் பெரும்பகுதியை அழித்துவிட்டிருக்கிறது. உலகின் கால்பகுதியின் நலனுக்காக முக்கால்பங்கு குப்பைக்கூடையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த யதார்த்தத்தை தொழில்நுட்பத்தின் தொடக்கத்திலேயே கண்டவர் காந்தி. லண்டனின் சுரங்கத்தொழிலாளர்களின் கரிபடிந்த வீடுகளில் அதை அவர் கண்டார்.

காந்தியின் தொழில்நுட்ப எதிர்ப்பை அவரது உரையாடல்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து ஒட்டுமொத்தமாக திரட்டிப்பார்க்கலாம். அவை தொழில்நுட்பத்தின் பேராசையையும் சுரண்டலையும் வன்முறையையும் நிராகரிப்பவையாகவே இருக்கும். மனசாட்சியும் வரலாற்றுணர்ச்சியும் உடைய ஒருவர் அந்த வினாக்களை ஒதுக்கிவிட்டுப்பேச முடியாது.
*
அவர் இயந்திரங்களை வெறுக்கிறாரா என்ற கேள்விக்கு காந்தி சொன்னார் : “என்னுடைய இந்த உடலேகூட ஒரு சிக்கலான நுண்ணிய இயந்திரம்தான் என்று உணரும்போது நான் எப்படி இயந்திரத்தை நிராகரிக்க முடியும்? இந்த ராட்டை ஒரு இயந்திரம். இந்த சிறிய பல்குச்சியேகூட ஒரு இயந்திரம்தான். நான் இயந்திரங்களை அல்ல, இந்த இயந்திர மோகத்தைத்தான் எதிர்க்கிறேன்.  உழைப்பை மிச்சப்படுத்தும் இயந்திரங்கள் என்கிறார்களே அந்த மோகத்தைத்தான்.  ஆயிரக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் பட்டினியுடன் சாலைகளில் வீசபப்டும்போது அவர்கள் உழைப்பை மிச்சப்படுத்துவதைப்பற்றி பேசுகிறார்கள். நான் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தவே விரும்புகிறேன், மக்களில் ஒருசாராருக்கு மட்டும் அல்ல. மனித குலம் முழுமைக்கும். நான் செல்வம் சேர்வதை விரும்புகிறேன். சிலருடைய கரங்கள் அல்ல, அனைவரின் கரங்களிலும். இன்று இயந்திரங்கள் சிலர் லட்சக்கணக்கானவர்களின் முதுகில் சவாரிசெய்வதற்கே உதவுகிறது”

ஆம், காந்தி நவீனமயமாதலுக்கு [Modernization]  எதிரி அல்ல. தொழில்நுட்பத்தை மீட்புக்கான வழியாக, கடவுளாக முன்வைப்பதையே அவர் எதிர்த்தார். ஏனென்றால் அவரது நோக்கில் மீட்பு என்பது அவ்வாறு ‘வெளியே’ இருந்து வரமுடியாது. அது மனிதர்களின் அகம் சார்ந்த ஒன்று. மானுட அகம் பேராசை கொண்டதாக இருக்கும்போது தொழில்நுட்பம் அப்பேராசையையே பிரதிரிதித்துவம் செய்யும் என எண்ணினார்.

வரலாறெங்கணும் மனிதன் கருவிகள்மூலமே தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத மூடரல்ல காந்தி. கருவிகள்மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. உண்மையில் காந்தி நவீனத்தொழில்நுட்பத்தின் பல விஷயங்களை ஏற்றுக்கொண்டவர். நீங்கள் சொல்வதுபோல ஒரு சமரசமாக அல்ல, தேவையாகவே.

போக்குவரத்துக்கு ரயிலையும் பேருந்துகளையும் கப்பலையும் காந்தி பயன்படுத்தினார். பயணம்செய்த கப்பலில் இயந்திர அறைக்குள் சென்று அதன் இயக்கத்தை கற்றுக்கொண்டவர் அவர். கருத்துப்பரிமாற்றத்துக்கு ஒலிப்பெருக்கிக் கருவியையும் அச்சு இயந்திரங்களையும் அவர் பயன்படுத்தினார். அவை இன்றியமையாதவை என்றே அவர் எண்ணியிருந்தார். ஆனால் அவர் இயந்திரமயமாதலுக்கு எதிரியாகவும் இருந்தார்.

காந்தி கருவிகளை எவ்வாறு மதிப்பிட்டார் என்பதில் இருந்தே இந்த முரண்பாட்டை நாம் பார்க்க வேண்டும். கருவிகள் மனித உடலின் நீட்சிகள். மனித உடலை கற்பனைமூலம் பெரிதுபடுத்திக்கொண்டவை அவை . மனித உடல் செய்வதை மேலும் நுட்பமாகச் செய்யக்கூடியவை. கையாலேயே நூலை திரிக்க முடியும். சர்க்கா அதை மேலும் சிறப்பாகச் செய்கிறது! இந்த தளத்தில் மனிதனின் படைப்பூக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது இயந்திரம்!

ஆனால் நவீன இயந்திரமயமாக்கல் மனிதனை இயந்திரவரிசையின் ஒரு சிறு பகுதியாக ஆக்குகிறது. குறிப்பாக ஹென்றி ·போர்டு உருவாக்கிய தொகுப்புவரிசை [Assembly line] உற்பத்திமுறையில் மனிதன் இயந்திரத்தின் குற்றேவலாள் மட்டுமே. அந்த நிலையில் மனிதனின் படைப்பூக்கம் முழுமையாக அழிகிறது. அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கும் அவனுக்கும் இடையே தொடர்பே இல்லாமல் ஆகிறது!

மேலும் இயந்திரமயமாதலின் விளைவாக உருவாகும் அதீதமான உற்பத்தி என்ற கருதுகோள் சமூகத்தை அதீத நுகர்வு என்ற தளத்துக்கு தள்ளிச்செல்கிறது. உற்பத்தி செய்தபின் அதை விற்கும் பொருட்டு விளம்பரம் மூலம் தேவை உருவாக்கப்படுகிறது.  இது பொருளியல்ரீதியாக பார்த்தால் தலைகீழாக நடப்பது போன்றது. இந்தவகையான உற்பத்திவெறியை இயற்கை தாங்காது, இதன் மூலம் எதிர்விளைவுகளே உருவாகும் என்று காந்தி எண்ணினார்.

ரயிலையே எடுத்துக்கொள்வோம். போக்குவரத்துக்கு ரயில் இன்றியமையாதது. அது நிலங்களை இணைக்கிறது. ஆனால் நாம் ரயிலை ஏன் பயன்படுத்துகிறோம்? ராஜஸ்தானத்து சலவைக்கல்லை வெட்டி கன்யாகுமரியில் வீட்டில் தரைபோடுவதற்கு ரயில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உருவாகும் உழைப்புச்செலவும் எரிபொருள்செலவும் அர்த்தமே இல்லாதவை. ஏன் இதைச் செய்கிறோம் என்றால் ரயில் இருப்பதனால்தான். அதாவது தொழில்நுட்பம் நுகர்வை உருவாக்குகிறது. இது ஓர் அழிவுப்போக்கு என்றார் காந்தி.

காந்தியின் காலகட்டத்தில் வாழ்ந்த அனேகமாக அனைவருமே நவீனத்தொழில்நுட்பத்தின் பக்தர்களாகவே இருந்தார்கள். நேரு, அம்பேத்கார், தாகூர். அனைவருமே காந்தியின் தொழில்நுட்பம்சார்ந்த கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். சொல்லப்போனால் அவர்கள் காந்தியை ஏளனம்தான் செய்தார்கள். அவர்களைப்பொறுத்தவரை நவீனத்தொழில்நுட்பம் என்பது மானுட சாதனை, மானுடத்தை அதன் அனைத்து சரிவுகளில் இருந்தும் மீட்க வந்த வரம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்தான் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்புரட்சியைப்பற்றிய ஐயங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைத்தது. அதன்பின்னர்தான் காந்தியை மேலெடுத்துச் செல்லும் சிந்தனைகள் பல தளங்களில் உருவாயின. அந்தச் சிந்தனைகளில் இருந்து பின் நவீனத்துவ சிந்தனைகள் உருவாயின. பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் காந்தி மறு கண்டுபிடிப்புசெய்யப்பட்டார்.

நவீனப் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சிந்தனையாளர்களில் காந்தியின் சிந்தனைகளுடன் பெருமளவுக்கு ஒத்துப்போகும் பலரை இன்று நாம் அடையாளம் காணலாம். அவர்கள் முறையான ஆய்வாளர்கள் என்பதனால் காந்தி சொன்ன ஐயங்களையும் மறுப்புகளையும் மிக விரிவான தரவுகள் மூலம் மேலும் ஆழமாக முன்வைத்திருக்கிறார்கள். காந்தியின் சிந்தனைகளை விரிவாக முன்னெடுத்திருக்கிறார்கள்.

மூன்று சிந்தனையாளர்களின் பெயர்கள் அவற்றில் முக்கியமானவை. ஒருவர் இ.எம்.ஷ¤மாக்கர். [ Ernst Friedrich Schumacher ] பிரிட்டிஷ் பொருளியல் நிபுணரான இவர் உலகமெங்கும் உள்ள பசுமைவாதிகளுக்கு மிக பிரியமான பொருளியலாளர். உலகப்போருக்குப் பின்னர் உலகை பாதித்த நூறு நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இவரது ‘சிறிதே அழகு’ [ Small Is Beautiful] என்ற நூல் மேற்கத்திய தொழில்நுட்பத்தின் மீதான காந்தியின் விமரிசனங்களை இன்னும் விரிவாக முன்வைத்து அதற்கு மாற்றுவழிகளை முன்வைக்கிறது.

அந்த மாற்றுவழிகூட காந்தி குறிப்பிட்ட வழியையே பெரிதும் ஒத்திருக்கிறது. மையப்படுத்தப்பட்ட பெருந்தொழில் உற்பத்திக்குப் பதிலாக அந்தந்த இடங்களில் அங்குள்ள சூழல் மற்றும் தேவைக்கு ஏற்ப சிறிய அளவில் உற்பத்திசெய்வது என்று அதைச் சொல்லலாம். ‘பொருத்தமான தொழில்நுட்பம்’ என்று அதை அவர் சொல்கிறார். ஒரு சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப உருவாக்கப்படும் தொழில்நுட்பம் அது.

இரண்டாவது சிந்தனையாளர் இவான் இலிச் [ Ivan Illich ] நவீனத்துவத்தின் இரு பெரும் அமைப்புகளான மருத்துவம், கல்வி, ஆகியவற்றின் மீது கடுமையான விமரிசனங்களை முன்வைத்தவர் இலிச். பள்ளிநீக்கம் [ Deschooling Society] என்ற அவரது முதல் நூல் நவீனக்கல்வி என்பது எவ்வாறு நிறுவனப்படுத்தப்பட்டு பொதுமைப்படுத்தப்பட்டு சமூகத்தை இயந்திரமயமாக்குகிறது என்று விவரிக்கிறது.

அவரது அடுத்த நூல் ‘மருத்துவநோய்’ [ Medical Nemesis ] நவீன மருத்துவம் எவ்வாறு நோய்களை உருவாக்குவதாக ஆகியிருக்கிறது என்றும் மருத்துவர்கள் அதீதப்பயிற்சிகொண்ட தனி வற்கமாக ஆகி நோயாளிகள்மீது அதீதமான ஆதிக்கம் கொண்டவர்களாக ஆகிறார்கள் என்றும் விவரிக்கிறது. நவீன மருத்துவம் குறித்து இன்று உருவாகியுள்ள எல்லா சொல்லாடல்களுக்கும் அடிப்படை அமைத்த நூல் இது.

மூன்றாவதாக மசானபு ·புகுவேகாவைச் [Masanobu Fukuoka ] சொல்லலாம். அவரது ;’ஒற்றை வைக்கோல் புரட்சி [The One-Straw Revolution] தமிழிலும் வெளிவந்துள்ளது. நவீன வேளாண்மை எப்படி நிலத்தைச் ற்றண்டி தரிசாக்குகிறது என்று விவாதித்து இயற்கைவேளாண்மைமுறையை முன்வைக்கும் இந்நூல்தான் இயற்கைவேளாண்மை என்ற கருதுகோளை உருவாக்கியது.

இன்றைய பசுமைவாதிகள் உலகமெங்கும் முன்வைக்கும் பெரும்பாலான கோட்பாடுகளை காந்தி இந்த நவீனத்துவ யுகத்தின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். ஆகவேதான் உலகமெங்கும் உள்ள பசுமைவாதிகள் அவரை முன்னோடியாக எண்ணுகிறார்கள். நவீனத்துவ காலகட்டத்தின் தொழில்நுட்ப வழிபாட்டுக்கு எதிராக எழுந்த பின்நவீனத்துவ யுகச் சிந்தனைகளுக்கு வேர்மூலமாக அமைந்த தத்துவ வாதியாகவே காந்தியை நாம் அணுகவேண்டும்.
*

நவீனத்தொழில்நுட்பத்தில் இல்லாதது என்ன என்று சிந்தனைசெய்த காந்தி அது ‘தன்னிறைவு’தான் என்று சொன்னார். ஒருசமூகம்  அடிப்படைத்தேவைகளில் நிறைவடைவதே மேலான வாழ்க்கை என்றார். அந்த மேலான வாழ்க்கையை நவீனத்தொழில்நுட்பம் உருவாக்க முடியாது. ஏன் என்றால் பலகோடிப்பேர் சுரண்டப்பட்டாலொழிய நவீனத்தொழில்நுட்பம் நீடிக்க முடியாது. ஆகவே தன்னிறைவான ஒரு சமூகத்தை உருவாக்க நவீனத்தொழில்நுட்பத்தினால் முடியாது என்று நினைத்தார் காந்தி

பிறரைச் சுரண்டாத ஒரு தன்னிறைவுக்காக காந்தி சிந்தனைசெய்தார். அக்காலத்தில் அவர் எழுதிய ஹிந்துசுயராஜ் என்ற நூலில் அதற்காக ஒரு வரைவை அவர் உருவாக்கினார். நவீனத்தொழில்நுட்பம் இல்லாத கைத்தொழில் கிராமங்களின் கூட்டமைப்பான நாடு என்பதே அந்தக் கனவு. இயற்கையில் இருந்து தன் தேவைக்கானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு வாழும் ஒரு வாழ்க்கையை அவர் அதில் முன்வைத்தார். அத்தகைய ஒரு தேசம் பிற நாடுகளைச் சுரண்டாமல் தன்னிறைவை அடைய முடியும் என்று எண்ணினார்.

ஆனால் காந்தி வெறும் பிடிவாதக்காரர் அல்ல. என்றும் விவாதித்துக்கொண்டே இருந்தவர் அவர். ஆரம்பத்தில் ஒட்டுமொத்தமாக இயந்திரங்கள் மேல் இருந்த நிராகரிப்பை அவர் மாற்றிக்கொண்டார். இயந்திரங்கள் மனிதனின் படைப்பூக்கத்தை முன்னெடுத்துச்செல்லும் வரை, அவனுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றும்வரை அவை தேவைதான் என்று எண்ணினார். அதாவது  ‘பொருத்தமான தொழில்நுட்பம் [Appropriate technology] என்று ஷ¤மாக்கர் சொல்லும் என்ற கருதுகோளுக்கு அருகே அவர் வந்து சேர்ந்தார்.

குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவரான ராமச்சந்திரன் கடைசிக்காலத்தில் காந்தியுடன்  இருந்தார். அவருக்கும் காந்திக்குமான நீண்ட உரையாடலில் காந்தி தொழில்நுட்பத்தை அவர் எப்படிப்பார்க்கிறார் என்று சொல்கிறார். சிங்கர் தையல் இயந்திரம் ஒரு அருமையான கருவி என்கிறார் காந்தி. அது மனிதனின் கற்பனைத்திறனை வளர்க்கிறது. அவனை மேலும் மேலும் உற்பத்திசெய்பவனாக ஆக்குகிறது என்கிறார்.

”இயந்திரங்களுக்கு அதற்கான இடம் உண்டு. அவை கண்டிப்பாக இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் இன்றியமையாத மனித உழைப்பை தவிர்ப்பதற்கு அவை அனுமதிக்கப்படக்கூடாது. மேம்படுத்தப்பட்ட ஒரு கலப்பை சிறந்ததே. ஆனால் ஒரு மனிதன் ஏதேனும் ஒரு தொழில்நுட்பம் மூலம் மொத்த இந்தியநிலத்தையும் உழுதுவிடமுடியும் என்றால் லட்சக்கணக்கானவர்கள் ஒன்றும்செய்வதற்கில்லாமல் இருப்பார்கள் என்றால், அவர்கள் பட்டினியால் அழிவார்கள்” இதுதான் காந்திக்கு இயந்திரங்கள் மீது இருந்த பார்வை.

ஆகவே காந்தி தன்னுடைய கிராமசுயராஜ்யம் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். ”கிராமங்களை மீட்டமைப்பது என்பது அவை இனிமேலும் சுரண்டப்படமாட்டாது என்ற நிலையிலேயே சாத்தியம். தொழில்மயமாக்கலும் பெருமளவிலான உற்பத்தியும் போட்டி மற்றும் தீவிரமான சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உருவாக்கி கிராமத்தினரை மேலும் சுரண்டுவதற்கே வழிகோலும். ஆகவே நாம் கிராமங்களை தன்னிறைவுகொண்டவையாக, தங்கள் தேவைக்கு தாங்களே உற்பத்திசெய்வனவாக, அமைப்பதில் கவனம்செலுத்தவேண்டும்’

ஒரு சிறு தீவான பிரிட்டன் தொழில்மயமாவதற்கு இந்தியாபோன்ற பத்துநாடுகள் தேவைப்பட்டன. இந்தியா அவ்வாரு தொழில்மயமாகவேண்டுமென்றால் உலகமே போதாது என்றார் காந்தி. இன்று இந்தியா தொழில்மயமாகிறபோது அமெரிக்கா நமக்கு எதைச்செய்ததோ அதை நாம் ஆப்ரிக்காவுக்குச் செய்கிறோம் என்பது கண்முன் உள்ள யதார்த்தமாக உள்ளது.

நவீனத் தொழில்யுகத்தில் நாம் பிரவேசிக்கும்தோறும் கிராமங்கள் அழிவதை விவசாயிகள் தற்கொலைசெய்துகொள்வதை கண்டுகொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசிக்கே உரிய ஆவேசத்துடன்  காந்தி அதை மீள மீள எச்சரிக்கிறார் . அது நவீனத்தொழில்நுட்பத்தின் எல்லைகளை உணர்ந்த ஒரு தத்துவவாதியின் குரல்.
*

காந்தி கையில் எடுத்த சர்க்கா என்பது இரண்டு தளங்கள் கொண்டது. ஒன்று, அது ஒரு பொருளியல் ஆயுதம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதீத உற்பத்தியால் வேலையிழந்த கோடானுகோடி இந்திய நெசவாளிகளை மீட்க காந்தி உருவாக்கிய வழிமுறை அது. முப்பதுவருடத்துக்குமேல் அது மிக வெற்றிகரமான பொருளியல் இயக்கமாக இருந்து மக்களுக்குச் சோறுபோட்டது என்பது வரலாறு.

இன்னொரு பக்கம் அது ஒரு குறியீடு. காந்தி முன்வைத்த பொருத்தமானதொழில்நுட்பத்துக்கு ஓர் அடையாளம் அது. எனக்குரியதை நானே செய்துகொள்ள முடியும் என்ற உறுதிப்பாட்டின் சின்னம். உலகை விழுங்கவரும் பெருந்தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செய்யப்படும் எந்த ஒரு தனிநபர்ச் செயலுக்கும் சர்க்கா அடையாளமாக ஆகும். கணிப்பொறித்துறையில்கூட!

காந்தி அவரது வழிமுறைகளில் மீண்டும் மீண்டும் சொன்னது நுகர்வை குறைப்பதைப்பற்றி. அதன் வழியாக இயற்கையில் இருந்து எடுப்பதை தேவைக்காக மட்டுமே செய்வதைப்பற்றி. ‘மனிதனின் தேவைக்கு இயற்கை அளிக்கும், பேராசைக்கு அளிக்க அதனால் முடியாது’ என்றார் காந்தி. இயற்கையில் இருந்து எடுப்பதை இயற்கைக்கே திருப்பிக் கொடுப்பதைப்பற்றி பேசினார். சர்க்காவும் கதரும் அந்த மனநிலையின் குறியீடுகள்.

காந்தியை பழைமைவாதி என நிராகரித்து முன்னால்சென்ற நவீன அறிவியலால் நம் நிலத்தடி நீரில் பெரும்பகுதி அரை நூற்றண்டுக்காலத்தில் காலியாகிவிட்டிருக்கிறது. வனவளம் முக்கால்பங்கு அழிக்கப்பட்டிருக்கிறது. நம் நிலம் முழுக்க அழியாக்குப்பைகளால் நிறைந்திருக்கிறது. அணுக்கழிவுகள் புதைந்த மண் மீது வாழ்கிறோம்! வேளாண்மை முற்றிலும் நஷ்டவியாபாரமாக ஆகி அரசு மானியங்களைச் சார்ந்து நிகழ்கிறது. இத்தனைக்குப்பின்னரும் இந்தியாவில் இன்னமும் பட்டினி இருந்துகொண்டிருக்கிறது.

காந்தி நவீனத்தொழில்நுட்பத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து பழையகாலகட்டத்துக்குத் திரும்பிச்செல்வதைப்பற்றிச் சொன்னவரல்ல. அவர் நவீனத்துவம் உருவகித்த ‘உயர்தொழில்நுட்பம் -பெருந்தொழில் – உச்சகட்ட நுகர்வு’ என்ற அமைப்பின் அழிவுத்தன்மையைச் சுட்டிக்காட்டியவர். அந்த அம்சம் அவருக்குப் பின்னால்வந்த மேலைநாட்டு ஆய்வாலர்களால் மேலும் விரிவாக காட்டப்பட்டிருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் சார்ந்துசெயல்படும் எவரும் அவரது மனசாட்சியின்முன் வைக்கப்படும் இந்த வினாக்களை ஏதேனும் ஒருவகையில் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை காந்தி சொன்ன தீர்வுகள் பொருத்தமற்றவையாக இருக்கலாம். அவரது கேள்விகள் அதனால் பொருளிழந்து போகிறது என்று சொல்ல முடியாது.

காந்தியின் இடம் இதுவே. அவர் நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுத்தன்மையைச் சுட்டிக்காட்டியவர். நுகர்வுவெறியின் தீங்கைச் சொல்லி எச்சரித்தவர். அதற்கான மாற்றுவழிகளை தேடுவதற்கான தொடக்கமாக அமைந்தவர். இன்று அல்லது நாளை உலகம் அந்த வழிகளை தேடிச்சென்றுதான் ஆகவேண்டும். அந்தப்பயணத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று காந்தி.

இந்த கோணத்தில் காந்தியை ஆராயும் நூல்கள் சமீபகாலமாக பெருவெள்ளம்போல வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்தையும் வாசிப்பதென்பது என்னைப்போன்ற ஒரு இலக்கிய வாசகன் நினைத்தே பார்க்கமுடியாது. நண்பர்கள் பரிந்துரைசெய்து வாங்கியனுப்பிய நூல்களை மட்டுமே நான் வாசிக்கிறேன். அவ்வகையில் ராபர்ட் ஹண்ட்  எழுதிய அமெரிக்க பார்வையில் காந்திய சிவில்போராட்டமும் சத்யாக்கிரகமும் ஒரு குறிப்பிடத்தக்கநூல்.காந்தியின் எல்லைகளையும்  விரிவாகபேசுகிறது   [An American Looks At Gandhi: Essays In Satyagraha, Civil Rights And Peace ,Robert W. Hunt]அவரது Mohandas K. Gandhi: Citizenship and Community for an Industrial Age என்ற கட்டுரை காந்தியின் தொழில்நுட்பநோக்கு குறித்து பேசுகிறது

நாளை என்ன நிகழும்? இன்றைய அதீத இலாபவெறியை கட்டுப்படுத்த சர்வதேச நுகர்வுக் கட்டுப்பாடுகள் உருவாகி வரக்கூடும். தொழில்நுட்பம் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு மானுடமளாவிய நிபந்தனைகள் உருவாகி வரக்கூடும். குறைவான எரிபொருள்தேவை கொண்ட சமூக உருவகங்கள் பிறக்கலாம். உதாரணமாக மிகையான போக்குவரத்தை குறைப்பது நடைமுறைக்கு வரக்கூடும்.

நாளை ஒருவேளை குப்பைமலைகளை உருவாக்கும் பெருநகரங்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறிய, தன்னிறைவுகொண்ட நவீன கிராமங்கள் உருவாகி அவை நாகரீகத்தின் மையங்களாக ஆகக்கூடும். அக்கிராமங்கள் சூரியவெப்பம் முதலிய ‘பொருத்தமான தொழில்நுட்பத்தை’ பயன்படுத்துபவையாக மலரக்கூடும். அதாவது நவீனத்தொழில்நுட்பமே மெல்லமெல்ல பரிணாமம் அடைந்து இன்றைய நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுப்போக்குக்கு மாற்றுகளை உருவாக்கக் கூடும்.

தன்னிறைவுகொண்ட கிராமங்கள் என்ற காந்தியின் கனவென்பது அவரால் அன்று ஊகிக்கமுடியாத அளவில் பின்நவீனத்துவ சாத்தியப்பாடுகள் கொண்டதென்று இன்று ஆய்வாளர் சொல்கிறார்கள். குறிப்பாக மிகச்சமீபத்தில் நான் வாசித்த பின் நவீனத்துவ காந்தி மற்றும் பிறகட்டுரைகள் [Postmodern Gandhi and Other Essays] என்ற நூலில் சிகாகோ பல்கலை மூத்த பேராசிரியரான லாயிட் ருடால்ப் மற்றும் சூசன் ரூடால்ப் காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்த விவாதத்தில் இவ்வாறு சொல்கிறார்கள். [ Susanne Hoeber Rudolph, Lloyd I. Rudolph]

அந்தபிரக்ஞையுடன் அணுகுபவர்களுக்கு காந்தி முக்கியமானவர். பெருவணிகர்கள் சொல்வதை உற்பத்திசெய்து  அவர்கள் எதை வாங்கச்சொகிறார்களோ அதை வாங்கி குப்பைகளை மூன்றாமுலகங்களில் கொண்டுசென்று கொட்டிவிட்டு கவலையில்லாமல் இருக்கும் முதலுலகத்துச் சராசரி மனிதனுக்கு காந்தி சொன்னதில் எந்த பொருளும் இருக்காது. அவர் அவனுக்கு எதிரான சக்தியும்கூட!

ஜெ

முந்தைய கட்டுரைதேசியம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதம் கடிதங்கள்