வெள்ளை யானை பற்றிய ஆரம்பகட்ட வாசிப்பனுபவங்கள் வர ஆரம்பித்துவிட்டன. வாசிப்பதற்கு முந்தைய தயக்கங்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.
நாம் இலக்கியம் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் சுயமான அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்வதற்கு முன்னரே பிறரால் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் அபிப்பிராயங்களை அறிகிறோம். நம் சாய்வுகளுக்கேற்ப அந்த அபிப்பிராயங்களில் ஒன்றை நம்முடையதாக முன்னரே ஏற்றுக்கொள்கிறோம். அதன்பின் அதை நாமே நம் அபிப்பிராயமாகச் சொல்லவும் செய்கிறோம். பலர் அந்த முன்னபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்குமோ என்ற ஐயத்தில் அதன் பின் அந்த ஆசிரியரை வாசிப்பதையே தவிர்த்துவிடுகிறார்கள்.
யுவ கிருஷ்ணா எழுதிய இந்தப்பதிவில் எல்லா முன்னபிப்பிராயங்களும் வரிசையாகத் தொகுக்கப்பட்டிருப்பதை ஆச்சரியமாக உணர்ந்தேன். இந்த முன்னபிப்பிராயங்களில் இருந்து உருவாகும் எல்லா கருத்துக்களும் மாறாத இரண்டு டெம்ப்ளேட்டுகளாக இருக்கும். எல்லாப் படைப்புகளுக்கும் அவையே சொல்லப்படும். இடதுசாரி, திராவிட டெம்ப்ளேட்டுகள். ஒரேவாதங்கள் மட்டுமல்ல ஒரேவகை சொற்றொடர்களும்கூட ஒரேவகையான முகபாவனை மற்றும் கையசைவுகளுடன் சொல்லப்படும்.
அவற்றில் சிலவற்றை நானே தெளிவாக்கிவிடுகிறேன். இந்நாவல் இடதுசாரிகளைப்பற்றியோ அல்லது திராவிட அரசியல் பற்றியோ அல்லது காங்கிரஸ் அரசியலைப்பற்றியோ பேசவேயில்லை. அதற்கான தருணமே நாவலுக்குள் இல்லை. ஏனென்றால் அந்த அரசியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்நாவல் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஆகவே ‘ரெடிமேட்’ அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்டு இந்நாவலை மதிப்பிட முடியாது.இல்லை, வலிந்து கண்டுபிடித்தே தீர்வோமென்பவர்கள் கோலத்துக்குள் பாய்ந்து பார்க்கலாம்.
இரண்டாவதாக , சிற்றிதழ்ச்சூழலில் உள்ள முன்முடிவுகள். சிற்றிதழ்ச்சூழல் என்பதில் இருந்து கூரியவாசிப்பையோ நுண்ரசனையோ கற்றுக்கொள்ளலாமோ இல்லையோ , சில எளிய முன்முடிவுகளை அடையலாம். எப்படி வணிக எழுத்துச்சூழலில் எழுதும் பலர் ஏற்கனவே அங்கே எழுதப்பட்டவற்றை ஒரு ‘டெம்ப்ளெட்டில்’ திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்களோ அதேபோல சிற்றிதழ்ச்சூழலிலும் பலர் முன்னர் எழுதப்பட்டவற்றில் இருந்து ஒரு ‘டெம்ப்ளேட்டை’ உருவாக்கிக்கொண்டு அதிலேயே எழுதிக்கொண்டிருப்பார்கள். சிற்றிதழ்களில் மிகப்பெரும்பாலும் காணப்படுவது எந்தவிதமான படைப்பூக்கமும் இல்லாத இந்தவகையான சமையல் எழுத்துக்களையே
இவற்றை எழுதுபவர்கள் தங்கள் எழுத்துக்களை நியாயப்படுத்த இரண்டு வகை வாதங்களை முன்வைப்பதுண்டு. ஒன்று, அவர்கள் அபூர்வமாக எழுதுகிறார்கள், ஆகவே அவை இலக்கியம். இரண்டு, அவர்கள் ‘தூயபிரக்ஞை’ நிலையில் மொழியில் செயல்படுகிறார்கள். அவற்றில் எழுத்தின் தொழில்நுட்பம் இல்லை.அக்காரணத்தால் அவை இலக்கியம். இரண்டு வருடம் சிற்றிதழ்களை வாசித்தவர்கள் இந்தப்பம்மாத்துக்களை எளிதாகத் தாண்டிவரமுடியும்.
மேற்குறிப்பிட்ட எழுத்துக்களை நியாயப்படுத்தும் போக்கில் இவர்கள் எல்லா இலக்கிய முயற்சிகளுக்கும் எதிராக சில முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை நம்பக்கூடிய முதிரா வாசகர்கள் அவ்வப்போது உருவாகி கொஞ்சநட்களில் வெளியே சென்றுகொண்டும் இருப்பார்கள்.
இவ்வாறு சிற்றிதழ்ச்சூழலில் இருந்து சொல்லப்படும் கருத்துக்களிலும் இதேபோன்று ஒரு ‘டெம்ப்ளேட்’ உண்டு. கடந்த முப்பதாண்டுகளாக கையாளப்பட்டு வரும் டெம்ப்ளேட்கள் அவை. முதல் வரி ‘ரொம்பநீளம், சுருக்கியிருக்கலாம்’ எந்த ஒரு படைப்பைப்பற்றியும் இதைச் சொல்லிவிட்டு கம்மென்று இருந்துவிடலாம். அடுத்த டெம்ப்ளேட் ‘இது வெறும் கதைதான்’. சரி மேலே என்ன இருக்கவேண்டும்? – என்ற வினா எழாதவரை பாதுகாப்பான கூற்று இது.
‘இது திட்டம்போட்டு எழுதப்பட்டிருக்கு’ ‘இது வெறும் டெக்னிக்’ என்றெல்லாம் டெம்ப்ளேட் கருத்துகள் சென்ற முப்பதாண்டுக்காலமாக மாறாமல் சொல்லப்படுகின்றன. எந்த ஒரு கலைப்படைப்பும் அதற்கான தொழில்நுட்பத்துடன் மட்டுமே இருக்கும். சொல்லப்போனால் கலை என்பது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்து தொடங்கி மேலே செல்கிறது. வெளி, வண்ணம் பற்றிய திட்டமிடல் இல்லாத ஓவியம் இருக்கமுடியாது. அந்தத் திட்டம் கலைஞனில் நிகழும்போது அது கலையின் அடித்தளமாக அமைகிறது.
தொண்ணூறுகளில் திட்டமிடப்பட்ட நாவல் வெள்ளையானை. அதன் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். அதன் தொழில்நுட்பச்சிக்கலாக முதலில் எழுந்து வந்தது அக்காலப் பேச்சுமொழியை எழுதுவது எப்படி என்பதே. அதனாலேயெ நாவலைஎழுதமுடியவில்லை. அக்காலப்பேச்சுமொழியை ‘அப்படியே’ பதிவுசெய்தால் அது கலையழகுடன் இருக்காது. அந்தக்கால மொழி என நம்பவைக்கக்கூடிய அளவுக்கு ஒரு பேச்சுமொழியை ‘உருவாக்குவதே’ கலையின் சவாலாக இருக்கும். அந்தச்சவாலை சந்திக்குமளவுக்கு நாவலில் பக்கங்கள் இல்லை.நாவல் அந்தப் பக்கங்களைவிட அதிகமாக நீண்டுசெல்லுமென்றால் அந்த கடைசிப்போராட்டம் மையமிழக்கும்.
ஆகவே மொத்த நாவலும் தமிழறியாதவனின் கோணத்தில் திறக்கிறது, உரையாடல்கள் முழுக்கவே ஆங்கிலத்தில் நிகழ்கின்றன, அல்லது மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஓரிருநாட்களில் நாவல் நடந்து முடிகிறது. இதுவே நாவலின் தொழில்நுட்பம் என்பது. இதை ’யோசித்து’ அடையமுடியாது. செய்து பார்க்கும்போது வரும் பிழைகள் வழியாக கற்றுக்கொண்டு வேறு ஒருவடிவில் எழுதிப்பார்ப்பதே ஒரேவழி. வெள்ளையானை மூன்றாவது வடிவம். இவ்வாறுதான் உலகில் எல்லா மகத்தான நாவல்களும் எழுதப்படுகின்றன. அதை மகத்தான எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதியுமிருக்கிறார்கள்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதி எதிர்வினைகளை கண்டு வருபவன் என்பதனால் எனக்கு டெம்ப்ளேட் எதிர்வினைகள் எல்லாமே முன்னரே தெரியும். புன்னகையுடன் அவற்றைத்தாண்டிச்சென்றுவிடுவேன். ஆனால் எப்போதுமே ஓர் ஆச்சரியம் எதிர்வினைகளில் நிகழும். எதிர்பாராத இடத்தில் இருந்து மிகநுட்பமான ஒரு வாசிப்பு நிகழும். ஒரு புதிய அவதானிப்பு எழுந்துவரும். அப்படி ஒரு புதிய அவதானிப்புடன் வராத கருத்துக்களுக்கு ஆசிரியனாக என்னுள்ளே மதிப்பும் எழுவதில்லை. அவற்றுக்காக எப்போதுமே காத்திருக்கிறேன்