அன்புள்ள ஜெயமோகன்,
வனக்கம். ’மீண்டும் புதியவர்கள் கதைகள்’ வரிசையில் வெளிவந்த பதினோரு இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துவிட்டேன். வேலைச்சுமைகளின் காரணமாகவும் இடைவிடாத பயணங்களின் காரணமாகவும் விட்டுவிட்டுத்தான் படித்தேன். முதல் வரிசையைப்பற்றி எழுதியதைப்போலவே இவ்வரிசையைப்பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைத்தேனே தவிர, செயல்படுத்த ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். நேற்று கிடைத்த சில மணி நேர ஓய்வில்தான் எழுதி முடித்தேன். எழுதும் முன்பு மீண்டுமொருமுறை எல்லாக் கதைகளையும் புத்தம்புதிதாகப் படிப்பதுபோல மறுபடியும் படித்துமுடித்தேன். படிக்கப்படிக்க பல புதிய அழகுகள் புலப்பட்டபடியே இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு பல புதிய உலகங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
பூவைப்போலவே பல உள்ளடுக்குகளைக் கொண்ட அழகான ஒரு சிறுகதை போகன் எழுதிய ‘பூ’. கிருஷ்ணன் என்பவனும் கதைவிவரணையாளனும் மாறிமாறி முன்வைக்கிற விவரிப்புகளை இணைத்து முன்னகர்கிற அமைப்பில் கதை சிறப்பாக விரிவுபெறுகிறது. காலம்காலமாக வழங்கிவரும் ஒரு தொன்மத்தையும் எதார்த்தத்தையும் ஒரு பூவின் வழியாக இணைத்து, ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சிவிட்டு முடிவடைந்து விடுகிறது.
சிக்கிமுக்கிக்கற்களை ஒன்றுடன் ஒன்றை உரசினால் வரும் நெருப்பைக் கண்டறிந்த ஆதி மனிதன் அதை வணங்கி, பிறகு குளிருக்கு அரணாகப் பயன்படுத்தினான். ஏதோ ஒரு தருணத்தில் இறைச்சியைச் சுட்டுப் பொசுக்கி உணவாகப் பயன்படுத்தினான். மற்றொரு கட்டத்தில் நெருப்பைக் கொண்டு சமைக்கவும் கண்டுபிடித்தான். வயல்வெளிகளின் உருவாக்கத்துக்காக நெருப்பின்மூலம் காட்டை அழிக்கவும் மனிதனே கண்டறிந்தான். மரத்தைச் சுட்டழிக்கும் நெருப்பு மனிதர்களையும் சுட்டழிக்கும் வலிமை கொண்டது என்பதை அக்கட்டத்தில்தான் அவன் புரிந்துகொண்டிருக்கக்கூடும். பிறகு, வேறொரு கட்டத்தில் தனது தூய்மையை நிரூபிக்க பெண்களை நெருப்பில் இறக்கி நடக்கவைப்பதை ஒரு விதியாக வகுத்துவைத்துக்கொண்டான். அக்கினிப்பரீட்சையில் தேறிவந்த சீதையை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது. மற்றொரு கட்டத்தில் தம்மை அழிக்க நீளும் கைகளிலிருந்து தம் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ள நெருப்பில் இறங்கி தன்னுயிரைத் துறப்பதை பெண்களே ஒரு தீர்வாக உருவாக்கிக்கொண்டார்கள். பெண்ணின் உடல்மீது ஆண்கொள்ளும் தீராத மோகத்துக்கு முடிவே இல்லை. நெருப்பாலும் நஞ்சாலும் இன்னும் பல வழிகளாலும் தன் உடலை அழித்து அந்த மோகத்தின் வெறுமையை மரணத்தின்மூலம் உணர்த்துகிறாள் பெண். இறுதியில், தம்மை அழித்துக்கொண்ட பெண்ணைக் கடவுளாக்கி அவளை வழிபடுவதன்மூலம் இச்சமூகம் மன்னிப்புக்காக மன்றாடுகிறது. பாதுகாப்புக்காக கைகுவிக்கிறது.
இருபது வருடங்களாக ஊர்ப்பக்கமே போகாதவன் ஊருக்குள் செல்கிறான். அவன் மனத்தில் மறைந்திருந்த மர்மங்களின் புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன. தன் தாய் தீயிட்டுக்கொண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள் என்கிற செய்தியின் உண்மைப்பின்னணியை அந்த வாசம் அவனுக்கு உணர்த்துகிறது. அவர்கள் வழிபடும் தெய்வமும் தீப்பாய்ந்த ஒரு பெண். தெய்வத்தின் வடிவில் அம்மாவையும் அம்மாவின் நினைவில் தெய்வாம்சத்தையும் உணர்கிறான் மகன். நெருப்பில் எரிந்த இரண்டு பெண்களின் மரணத்தை கண்ணால் பார்த்த ஆண் யாரும் பொருட்படுத்தாத விளிம்பில் நிற்கிறான். அந்த ஆணால் பெண்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்தெய்வங்களை வழிபடும் சமூகத்தையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஜெயம் கோபாலகிருஷ்ணனின் ‘அப்பாவின் குரல்’ மனப்போராட்டத்தின் கதை. வாழும் காலத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பாவே முன்மாதிரி. தன் அருகிலேயே இருக்கும் அப்பாவை ஓர் உதாரண புருஷனாகவே காண்கிறது குழந்தை. அப்பாவின் பலவீனங்கள் ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்த்து புரிந்துகொள்ளும் வயது வந்ததும், அதே மகன் அப்பாவை பலம், பலவீனங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறான். தன் மனத்தில் அவருக்கான இடம் என்ன என்பதை அக்கணம் வரையறுத்துவிடுகிறது. மதிப்பீடுகளில் சரிந்துபோகும் அப்பாவை மெளனமாக நிராகரிக்கும் பிள்ளைகள் ஏராளம். வாயிலிருந்து உதிர்க்கும் வசைகள்மீது எவ்வித வாய்க்கட்டுப்பாடும் இல்லாத ஓர் அப்பாவையும் அதனாலேயே தம் மதிப்பீட்டில் அவர் சரிந்துபோனதாக நினைக்கும் மகனையும் சித்தரிக்கிறார் கோபாலகிருஷ்ணன். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அப்பா பயன்படுத்திய கொச்சையான வசைசொற்களை ஒருபோதும் மனைவியின்மீது பிரயோகிக்கவே கூடாது என்று முடிவெடுக்கிறான் மகன். அது ஒரு சபதமாக அவன் நெஞ்சில் பதிந்துவிடுகிறது.
சபதத்தை உடைத்து அவனை வசைச்சொல் பேசவைக்கும் நோக்கத்தோடு பின்னாலேயே அலைகிறது அப்பாவின் குரல். அக்குரலை அவன் செவிமடுப்பதில்லை. அப்பாவை உள்ளூர நிராகரித்து இயல்பான மனிதனாக வாழ்கிறான். ஆனால் வீட்டுச்சூழல் அவனுக்குச் சாதகமாக இல்லை. பணத்தேவை அவனை அலைக்கழிக்கிறது. அவசரத் தேவைக்காக அடகுவைக்க நகைகளைத் தரமறுக்கிறாள் அவன் மனைவி. மனைவியின்மீது கோபம் பொங்குகிறது. மனைவியின்மீது கோபம் கொப்பளிக்கிற தருணங்களையே வாழ்க்கை மீண்டும்மீண்டும் உருவாக்கி அவனைச் சோதிக்கிறது வாழ்க்கை. இயலாமையில் தத்தளிக்கும் மகனிடம் ஒவ்வொரு கட்டத்திலும் வசைச்சொற்களைப் பயன்படுத்தும்படி தூண்டிக்கொண்டே இருக்கிறது அப்பாவின் குரல். ஒவ்வொரு முறையும் அதைக் கடந்துகொண்டே வருகிறான் மகன். பொய்யைச் சொல்ல மறுத்து வாழ்வில் சரிவுகளைச் சந்திக்கும் அரிச்சந்திரனை, ஒவ்வொரு கட்டத்திலும் அவன் முன்னால் தோன்றி பொய் சொல்லத் தூண்டுகிற விசுவாமித்திர முனிவரைப்போல அப்பாவின் குரல் தூண்டுகிறது. மனைவியை சம்மதிக்க வைக்கவும் வழி தெரியாத, பின்னிருந்து தூண்டும் அப்பாவின் குரலிடமிருந்து தப்பிக்கவும் வழி தெரியாத ஒரு கட்டம் உருவாகிறது. அக்கட்டத்தில் மகன் தன் நாக்கை அறுத்து தன் நிலைப்பாட்டின் உறுதியைப் புலப்படுத்துகிறான்.
கிறிஸ்டோபரின் ’கடலாழம்’ நட்பின் ஆழத்தையும் மனத்தின் ஆழத்தையும் வாழ்க்கையின் ஆழத்தையும் மறைமுகமாக உணர்த்தும் கச்சிதமான சிறுகதை. கடல் பயணம் பற்றிய அழகான சித்தரிப்புகள் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் உள்ளன. சொந்தமான பிளைவுட்டுடன் மீன்களுக்காக கடலில் இறங்குகிறான் ஒருவன். பிளைவுட்டில் அவனோடு அவனுடைய மூன்று நண்பர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் கடலைப்பற்றிய புரிதலும் ஞானமும் இருப்பவர்கள். ஏதோ ஒரு பிழையின் காரணமாக, டெக்குக்குள் நீர் புகுந்து நிரம்பி விடுகிறது. மூழ்கிவிடுவது திண்ணமென்று எல்லோருக்குமே புரிந்துகொள்கிறார்கள். டீசலையும் மண்ணெண்ணெயையும் வைத்திருந்த பெரிய கன்னாசிகளை உருட்டி வந்து, அவற்றைக் கடலில் கொட்டி, காலி செய்து விடுகிறார்கள். அனைவரும் ஒருபக்கம் சாய்ந்ததும் படகு நீரில் மூழ்கிவிடுகிறது. படகிலிருந்து நீரில் குதித்து கன்னாசைப் பிடித்தபடி கரையை நோக்கி நீந்துகிறார்கள். கரை எப்பக்கம் என்றே சரியாகத் தெரியாத நிலையில் உயிர்பிழைக்க கடலில் நீந்தும் நண்பர்களின் சித்திரத்தை கிறிஸ்டோபர் உருவாக்குகிறார். ஒரு கட்டத்தில் தன் நண்பன் சக்தியிழந்துவருவதைப் பார்க்கிறான். அவன் உயிர் பிழைக்கவேண்டும் என்கிற ஆவலில் தன் கன்னாசை அவனிடம் தள்ளிவிட்டு கீழே கடலின் ஆழத்தைநோக்கி நழுவிச் செல்கிறான். தன் இறுதிக்கணங்களில் அவன் நினைத்துக்கொள்வதாக இடம்பெறும் ஒரு யானைக்கதையின் சித்தரிப்பு, கதையின் மையத்தோடு இணைத்து யோசிக்கத் தூண்டும்வண்ணம் உள்ளது. தாயைவிட்டுப் பிரிந்து கடல்கடந்து எடுத்துச் செல்லப்படும் குட்டி யானை, புதிய தேசத்தில் வாழ்ந்து, அங்கிருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, அங்கேயே இறந்துபோகிறது. பிரிவு தற்செயலாக நேர்ந்த அபத்தம். பிரிவுக்காலத்தைப் பொருள்பொதிந்த ஒன்றாக மாற்றிக்கொள்ளும்போது வாழ்வின் அர்த்தம் நிரந்தரமாகிறது. அபத்தத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசவாதமே வாழ்வின் ஆழம். உயிருக்குத் தத்தளிக்கும் கட்டத்தில் நண்பனிடம் நிகழும் ரசவாதம் முக்கியமான ஒரு திருப்பம். படகு உடைவது அபத்தம். தன்னுடன் வந்தவன் உயிர்பிழைக்க தன்னுடைய பிடியில் இருந்த பாத்திரத்தை அவனைநோக்கித் தள்ளிவிட்டு தன் உயிரை இழப்பதற்காக ஒருவன் எடுக்கும் முடிவு, அவனுடைய வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றிவிடுகிறது.
காட்சனின் ‘பரிசுத்தவான்கள்’ மக்களிடம் நிறைந்துள்ள போலித்தனங்களை அனிதா- ஜான்சன் வாழ்க்கையை முன்னிறுத்தி தோலுரித்து எடைபோட முயற்சி செய்யும் கதை. அன்பும் ஒருவரை ஒருவர் மதித்துப்பழகும் பண்பும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக்குணங்கள். அவை இயற்கையாகவே ஊறிப் பெருகவேண்டியவை. அத்தகையவர்கள் இயற்கையாகவே சந்தோஷத்தின் மடியில் இருப்பவர்கள். யாருடனும் தம்மை ஒப்பிட்டு நிறுத்தி, தம் சந்தோஷத்தைப் பறைசாற்றிக்கொள்ளும் அவசியம் எதுவும் இல்லாதவர்கள். அப்பண்புகள் எதுவும் இல்லாதவர்கள் அல்லது அவற்றைப் புறக்கணிப்பவர்கள் தம்மை உயர்வாகவும் மதிப்புள்ளவர்களாகவும் காட்டிக்கொள்ள நாடகமாட ஆரம்பிக்கிறார்கள். மற்றவர்களைவிட தம்முடைய சுத்தம் மதிப்புக்குரியது என்று முன்வைக்க நினைக்கிறார்கள். உடைகளின் சுத்தம், வீடுகளின் சுத்தம், சுற்றுப்புறங்களின் சுத்தம், உணவுப்பொருள்களின் சுத்தம், கையாளும் பாத்திரங்களின் சுத்தம், ஒழுக்கத்தின் சுத்தம், எண்ணங்களின் சுத்தம், கருத்துகளின் சுத்தம், பேச்சின் சுத்தம் எனத் தொடங்கி சாதியின் சுத்தம், மதத்தின் சுத்தம் என வெகுதொலைவு நீள்கிறது அந்த நாடகம்ட். சுத்தவான்களின் சத்தம் உள்ளூர தமக்குள் உள்ள வெற்றிடத்தை மறைத்துக்கொள்வதற்காக எழுப்பப்படும் போலித்தனம் நிறைந்த சத்தம்தான். ஆனால், வரலாறு நெடுக, சுத்தவான்களின் குரல்கள் ஒலித்தபடியே இருந்த சுவடுகளைக் காணலாம். அனிதாவின் அழுகைக்கான காரணத்தைத் தேடிச் செல்லும் அவள் தோழி அந்தப் பரிசுத்தவான்களின் முகங்களையும் குரல்களையும் அடையாளம் கண்டுகொள்ளும் தருணமே காட்சனின் கதையாக விரிவடைந்திருக்கிறது.
ஒரு மர்மக்கதையின் பரபரப்புடன் திகில் தன்மையோடும் எழுதப்பட்டிருக்கும் துரோணாவின் ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ சிறுகதை விறுவிறுப்பின் இறுக்கம் குறைவுபடாத படைப்பு. ஆற்றோரம் இருக்கிற ஒரு பாழ்மண்டபம்தான் கதாபாத்திரங்களின் பிரதேசம். அப்படிச் சொல்பவன் மண்டபத்தில் ஏற்கனவே ஒதுங்கி தன் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டவன். அவன் சொல்வதை ஆர்வத்தோடும் திகிலோடும் கேட்டுகொள்பவன் ஆற்றோடு அடித்துவரப்பட்டு அந்த மண்டபத்தோரம் ஒதுங்கிவந்த சூழலில் காப்பாற்றப்பட்டவன். காப்பாற்றியவனும் காப்பாற்றப்பட்டவனும் அந்த மண்டபத்துக்கு வரும் முன்பிருந்தே, அம்மண்டபம் பல மரணங்களைப் பார்த்திருக்கிறது. கதைநெடுக பல மரணக்காட்சிகள் முன்னும் பின்னுமாக வந்துவந்து போகின்றன. இறுதிக்கட்டத்தில் மரணமே ஒரு பாத்திரமாக வந்து யட்சன் மண்டபத்தில் ஒரு கொலையைச் செய்துவிட்டுச் செல்கிறது. அதைப் பின்தொடர்ந்து செல்பவனை ஆறு இழுத்துச் செல்கிறது.
கிரிதரனின் ‘நிர்வாணம்’ தந்தை- மகன் உறவின் சிக்கலை முன்வைத்திருக்கும் சிறுகதை. இரண்டு மனைவிகளின் கணவன், தோல்வியடைந்த வணிகத்தை நடத்தும் நிர்வாகி, பெண்பிள்ளைகளை வளர்த்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருப்பவர் என பல முகங்களைக் கொண்ட ஒரு சராசரித் தந்தை பகல்வேலையில் வீட்டின் தனியறையில் தன் மகனை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததால் அடைந்த பதற்றத்தால் நடக்கக்கூடாத முறையில் நடந்துகொள்கிறார். அது ஒரு கட்டம். வீட்டைவிட்டு வெளியேறிய மகன் எங்கோ தங்கி படித்து வேலை பார்த்து, இரண்டாம் மனைவியைத் துரத்திவிட்டு மீண்டும் முதல் மனைவியோடுமட்டும் இல்லறத்தைத் தொடர்ந்து துவண்டுபோன தந்தையை பழைய நினைவுகளின் சுமை எதுவுமின்றி ஆதரித்துத் தாங்கி நிற்கிறான். இது இன்னொரு கட்டம். கதையின் மையம் உடல்நிர்வாணமல்ல. மனநிர்வாணம் என்றே தோன்றுகிறது. மனத்தின்மீது வந்து விழுகிற சுமைகளை உதறி இயல்பான நிலைக்குத் திரும்பும் மகன், மனத்தின்மீது ஏற்றிவைத்திருக்கும் ஏராளமான சுமைகளை இறக்கிவைத்துவிட்டு இயல்பான நிலைக்குத் திரும்பும் தந்தை என இருவருமே அத்தகு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள்.
துரோணாவின் இன்னொரு சிறுகதை ‘நீர்க்கோடுகள்’ ஆண்-பெண் உறவுச்சிக்கலின் ஓர் இழையைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்யும் படைப்பு. ஹென்றி ஸ்டெல்லா தம்பதியினரின் இல்லறம் சீரான படகுப்பயணம்போல நல்லபடி போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்பிள்ளைகளைத் தொடர்ந்து பிறந்த பெண்குழந்தை சரியான மனவளர்ச்சியில்லாமல் வளர்ந்து இறந்துபோகிறது. அதன் பிறகு, அவர்கள் உறவு சற்றே நிலைகுலையத் தொடங்குகிறது. பள்ளி ஆசிரியரான அவர் தன்னிடம் படித்து கல்லூரியில் படிப்பைத் தொடரும் மித்ராவுடன் கொண்டிருக்கும் பழக்கத்தால், மெல்லமெல்ல சரியவும் தொடங்குகிறது. தொடக்கத்தில் மித்ராவின் உருவில் மகளைக் கண்டு பழகத்தொடங்கிய ஹென்றி, மெல்லமெல்ல அவள் நெருங்கியிருக்கும் தருணங்களில் வசமிழக்கத் தொடங்குகிறார். ஹென்றி தன் மனத்தை பழையபடி மனைவியின்பக்கமும் திசைதிருப்பமுடியாமல், மகள் வயதே உள்ள ஒரு பெண்ணிடம் தன் மனத்தில் உள்ளதைச் சொல்லும் வகைதெரியாத குழப்பம் வதைத்தாலும் அவள்மீதிருக்கும் ஈர்ப்பிலிருந்து பின்வாங்கவும் முடியாமல் தத்தளிக்கும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. தேவாலயத்தில் இருக்கும்போது கைப்பேசியில் அழைத்து தன் மனத்தில் இருக்கும் வேறொரு இளைஞனிடம் காதலுக்கான சம்மதத்தைத் தெரிவித்துவிட்டதாக மித்ராவே சொல்லி அவர் தத்தளிப்பை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகிறாள். அவர் கண்களில் வழியும் நீர்க்கோடுகள் அவளை இழந்ததை நினைத்து வழிவதாகவும் இருக்கலாம். தான் பின்னிய வலையிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் சிக்கித் தவித்திருந்த நிலையில் தானாகவே கிடைத்த விடுதலையுணர்வால் வழிவதாகவும் இருக்கலாம்.
இளங்கோ மெய்யப்பனின் ‘அழைத்தவன்’ குற்ற உணர்வின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் சிறுகதை. மனவளர்ச்சி இல்லாத பிள்ளையை முப்பத்திரண்டு ஆண்டு காலம் இடைவிடாமல் வைத்துக் காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல. அதில் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. கழிப்பறைக்கும் குளியலறைக்கும் அழைத்துச் செல்வது, துணிமாற்றுவது, உணவூட்டுவது, உறங்கவைப்பது, தூக்கி நிற்கவைப்பது போன்றவையெல்லாம் உடல்சக்தியால் செய்துமுடிக்கக்கூடிய வேலைகள். இவற்றைத் தாண்டி இன்னும் நுட்பமான பல சிரமங்கள் உண்டு. முப்பத்திரண்டு ஆண்டுகள் அவற்றைச் செய்துசெய்து உருவான சலிப்பாலும் எஞ்சிய கொஞ்ச வாழ்க்கையையாவது புருஷனும் மனைவியுமான நிம்மதியாக கழிக்கலாம் என்ற ஏக்கத்தாலும் மகனை தனியார் நடத்தும் மையமொன்றில் சேர்க்கிறார்கள். பிறகு, அம்மையம் அனுமதிக்கும் ஒரு நாள்மட்டும் அங்கே சென்று அவனோடு பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்புகிறார்கள். அருகில் இருக்கும்போது உருவான சலிப்பு அகன்று, அதற்குப் பதிலாக குற்ற உணர்வு இருவரையும் வாட்டத் தொடங்குகிறது. தூக்கமற்ற இரவுகளில் அக்குற்ற உணர்வு பல மடங்காகப் பெருகி அவர்களுக்கு மனச்சுமையைக் கொடுக்கிறது. சுமையின் பாரம் தாங்கமுடியாத அவர்கள் ஒரு கணத்தில் அவனை மீண்டும் வீட்டுக்கே அழைத்துவந்து வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்கள். தன் மனபாரத்துக்கு அவர்கள் ஒரு தீர்வைக் கண்டறிந்த கணத்தில் மையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வருகிறது. அழைத்தவன் சொல்லப்போகும் செய்தி, அவர்களுடைய குற்ற உணர்வை அதிகரிக்கவைப்பதா அல்லது குற்ற உணர்விலிருந்து விடுவிப்பதா என்னும் புதிரோடு கதை முடிவடைகிறது. தவிப்பின் வலியை உணர்த்தும் வரிகள் கதைமுழுதும் சிறிதும் மிகையின்றி விரவியுள்ளன.
லூசிஃபர் ஜே வயலட் எழுதிய ‘நூலகத்தில்’, கனவையும் நனவையும் இணைக்கும் ஒரு புள்ளியை உருவாக்க முயற்சி செய்யும் சிறுகதை. கனவில் வந்து தினமும் தன்னைக் கொலைசெய்துவிட்டுப் போகிற ஒரு முகத்தை முதன்முதலாக நனவுலகிலும் பார்க்கிறான் ஒருவன். கனவில் மட்டுமே நிகழ்ந்துவந்த கொலை, உண்மையாகவே நிகழ்ந்திருக்கக்கூடுமோ என்கிற திகிலை அக்கணம் அவனுக்கு உணர்த்துகிறது. பரபரப்புக்கு பொருத்தமான மொழியும் கச்சிதமான விவரணைகளும் கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்கள்.
மரணத்தின் விளிம்பில் ஒருவனுக்குப் பார்க்கக் கிடைத்த தரிசனத்தைச் சித்தரிக்கும் சிறுகதை விஜய சூரியனின் ‘கடைசிக்கண்’. சிறுகதைக்குள் விஜயசூரியன் மையப்படுத்தும் அப்பா, வழக்கமான பாசக்கார அப்பா அல்ல. கொடுமைக்கார அப்பா. அம்மாவைக் கொடுமைப்படுத்துபவர். சிறுமைப்படுத்துபவர். மனைவியும் பிள்ளைகளும் தற்கொலைசெய்துகொள்ளச் செல்லும் அளவுக்கு மனிதாபிமானமே இல்லாமல் நடந்துகொள்பவர். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. உறவுமுறையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சகோதரசகோதரிகளுடன் சிரித்துப் பழகுகிறவர். அவர்களிடையே ஹீரோவாக வலம்வருபவர். இரக்கம், அன்பு, கனிவு, பாசம், மனிதாபிமானம் என எதையுமே அவர் மனம் அறிந்ததில்லை. அவருடைய அகங்காரம் அவற்றை அறியும் தருணங்களை அவருக்கு வழங்கியதே இல்லை. புற்றுநோயின் கொடுமையால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் ஒன்று அவர் வாழ்வில் நேர்கிறது. அவர் படுக்கைக்கு நேர் எதிராக இன்னொரு நோயாளியின் படுக்கை. உயிருக்குப் போராடும் இளம்பெண்ணொருத்தி அதில் படுத்திருக்கிறாள். வலியிலிருந்து மீள அவள் போராடுவதையும் உதவிக்கு அவள் தன் மகனை அழைப்பதையும் முகமறியாத அந்தச் சகோதரிக்கு அவன் உதவுவதையும் அந்த உதவியையும் மீறி அவள் உயிர் பிரிந்துபோவதையும் அவர் நேருக்குநேர் பார்க்கிறார். அக்கணம் அதுவரை அவர் அறியாதிருந்த இரக்கம், அன்பு போன்றவற்றின் உண்மையான பொருளை அறிந்திருக்கக்கூடும். அதுவே அவர் கண்ட கடைசிக்காட்சி. அத்துடன் அவர் உயிரும் பிரிந்துபோகிறது. எளிமையும் இயல்பான சித்தரிப்பும் பொருந்திவந்திருக்கும் சிறுகதை.
அரவிந்த் எழுதியுள்ள ‘சீர்மை’ குறுநாவலின் வாசிப்பனுபவம் மகத்தானது. சீர்மை தத்துவத்தை ஆராய்ச்சி செய்கிறவன் கென். அதுவே அவன் இலட்சியம். இறையியல், இயற்பியல், மரபியல், மானுடவியல், உளவியல், தத்துவம், சமயம் என எல்லாத் தளங்களிலும் ஆட்சி செய்யும் சீர்மையை அவன் சாராம்சப்படுத்தி, ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அவனுடைய கட்டுக்கடங்காத ஆவல். ஆண்டுக்கணக்கில் அவன் உழைக்கிறான். ஓவியக்கலைஞரான த்ரேயாவின் காதலும் அவளுடனான திருமணமும் அவனுக்கு உந்துசக்தி அளிக்க இன்னும் கூடுதலாக உழைக்கிறான். உறவில் ஏற்படும் சரிவுகள் அவன் ஆய்வுகளிலும் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக புற்றுநோய்க்கு அவளை அவன் பறிகொடுக்கிறான். பல ஆண்டுகள் எதிலும் ஈடுபாடில்லாமல் வாழத் தொடங்குகிறான். எதிர்பாராத ஒரு தருணத்தில் அவளுடைய பழைய ஓவியங்களைப் பார்வையிடும்போது, அவன் மனம் திடீரென விழித்துக்கொள்கிறது. காலமெல்லாம் அவன் தேடியலைந்த புதிரின் விடையை அந்த ஓவியத்திலேயே காண்கிறான் அவன். சிக்கல்களுக்கு நடுவில் மையமான ஓர் ஒழுங்கமைவைச் சாத்தியப்படுத்தும் சக்திதான் சீர்மை என்பதை அவன் மனம் கண்டடைகிறது. அந்த மகத்தான கண்டுபிடிப்பை மேலும் மூன்றாண்டுகள் உட்கார்ந்து எழுதிமுடிக்கிறான். ஆட்டிப்படைக்கும் இலட்சியத்தின் பித்து பற்றி ஆயிரம் படைப்புகள் எழுதப்பட்டாலும் அவற்றின் வசீகரம் மனத்தைக் கவர்கிறது. வாசகன் மனத்திலும் ஓர் இலட்சியப்பித்தின் தீபம் எரிந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் காரணம்.
புதிய படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதட்டும் நண்பர்கள். புதிய திறமைசாலிகளை அடையாளப்படுத்தும் உங்கள் பணியும் தொடரட்டும். வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்