சைவம் ஒரு கடிதம்

“ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:சைவசித்தாந்த முன்னோடி” படித்துக் கொண்டிருக்கையில் சைவம் என்பது அந்த வருடங்களில் எவ்வாறெல்லாம் விரிந்தன என பட்டது. மேற்கொண்டு தேடுகையில் “தம்மம்” கட்டுரை போலவோ ” பதஞ்சலி யோகம்” பகுதிகளைப் போலவோ எதுவும் படவில்லை.
நீங்கள் சிவேந்திரன் கடித பதிலில் சொல்லியது போல் பல தளங்களில் இயங்கும் சைவத்தை உங்களின் பார்வையில் ஆழமான ஒரு பதிவு தரும் வாய்ப்பு உள்ளதா ?

அன்புடன்
லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

நான் எழுதவேண்டியவை என நினைப்பவை மலைபோல கண்முன் நிற்கின்றன. எழுதவேண்டும், பார்ப்போம் என்பதே இப்போதைக்கான பதில்.

சைவம் பற்றி தமிழில் எழுதப்பட்ட அளவுக்கு வேறு எந்த துறைபற்றியும் எழுதப்படவில்லை. இத்தனை நூல்கள் எழுதப்பட்டமைக்கான காரணம் ஒன்றுதான். சைவசித்தாந்தம் என்பது இந்து ஞானமரபில் உள்ள தத்துவசிந்தனைச்சரடுகளில் கடைசியாக முளைத்தது. அதிகமாகச் செல்வாக்கு பெறவும் இல்லை. ஆகவே அதன் ஆதரவாளர்கள் அதை முக்கியமானதாகக் காட்டவும் ஆழமாக நிலைநாட்டவும் ஆவேசமாக முயன்றனர். ஒரு தலைமுறைக்குப்பின்னர் அந்த அலை அப்படியே அடங்கியது. நூலகத்தில் நூல்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. ஆய்வுகள் கூட இன்று மிகமிகக்குறைவுதான்

சைவசித்தாந்தத்தின் உள்ளடக்கம் இரு முந்தையமரபுகளில் இருந்து கிளைத்தது. ஒன்று, வேதாந்த மரபு.பிற்கால வேதாந்தங்களின் தரிசனங்கள், தர்க்கமுறை ஆகியவற்றில் இருந்து சற்று முன்னகர்ந்து அடையப்பெற்றது சைவசித்தாந்தத்தின் தரிசனமும் தர்க்கமுறையும். இரண்டாவது, யோகமரபு. இந்திய யோகமரபு பதஞ்சலியில் தொடங்கி பல்வேறுகிளைகளை இணைத்துக்கொண்டு விரிவது.அவற்றின் இறுதிக்காலத்தில் பல்வேறு தாந்திரீக மரபுகளும் யோகமரபுடன் இணைந்தன. சைவசித்தாந்தம் தன் உருவகங்கள் முதலியவற்றை இந்தயோகமரபிலிருந்து எடுத்துக்கொண்டது

என்னுடைய அணுகுமுறை எப்போதுமே கறாரான ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொண்டு உள்ளடக்கம் பற்றி மேலே பேசுவது. இவ்வாறு வரலாற்றை உருவாக்கத் தடையாக இருப்பவை முன்னர் நிகழ்ந்த சைவ அலைதான்.சைவசித்தாந்தத்தின் தொன்மை மற்றும் தனித்தன்மையை நிறுவும்பொருட்டு அவர்கள் தடுக்கிலும் கோலத்திலும் கோலத்துக்கு அடியிலும் நுழைந்து உருவாக்கி வைத்திருக்கும் பல்லாயிரம் பக்கங்களை எதிர்கொள்வது எளியவிஷயமல்ல.

இந்நூல்களை மேலோட்டமாகப் புரட்டிப்பார்த்துப் பேசுபவர்கள்தான் இன்று அதிகம். தங்கள் குறைவான கல்வியை மறைக்க அதிநுட்பமான விவாதங்களில் ஈடுபடுவார்கள். சொல்விவாதங்கள் திரிபுகள் என நீண்டு போகும் அவ்விவாதங்களைப்போல சலிப்பூட்டுபவை வேறில்லை. மேலும் உலகின் மையச்சிந்தனை சைவசித்தாந்தமே, முதல் குரங்கே சைவன்தான் என்பது போன்ற நம்பிக்கைகள். பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்களிடம் உரையாடுவது இவர்களிடம் விவாதிப்பதைவிட சற்று எளிது.

ஆகவே ஒரு தயக்கம். என்றாவது எழுதலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஇளங்கனவின் வண்ணங்களில்…
அடுத்த கட்டுரைவினவுவின் அடித்தளம்?