வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்

தமிழில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளே சர்வதேசத்தன்மையானவை.

இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வகையான எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப்படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் சாதாரண மனிதர்களின் யதார்த்தம்.

மனிதவாழ்வின் யதார்த்தம் இல்லாத இலக்கியப்படைப்பை என்னைப் பொறுத்தவரையில் மனமொன்றி கிரகிக்க முடியாது போகிறது. இந்த யதார்த்தம் புறவாழ்வுகளின் செயல்பாடுகளில் மட்டும் இருக்க வேண்டியதில்லை. மனவியல்ரீதியான யதார்த்தமாகவும் அதாவது டொலரோஸ்வ்ஸ்கியின் டபிள் என்ற நாவலைப்போலவே இருக்கமுடியும்.

உளவியல் ரீதியில் விளிம்புகளில் நிற்கும் பாத்திரப்படைப்புகள் மிகவும் பசுமரத்தாணியாக மனதில் பதிவதுடன் இரசிக்கக்கூடியதாக இருக்கிறது

தெளிவத்தை ஜோசப். எழுதிய மனிதர்கள் நல்லவர்கள்(http://www.jeyamohan.in/?p=41396) என்ற சிறுகதையில் மலையக தோட்டத்து மக்களின் சமூக பொருளாதார நிலையை எந்தவொரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் நமது ஊர் தபால்காரர் வருவது போல் வந்து – அதே நேரத்தில் முக்கியமான தந்தியைத் தருவதுபோல் ஆழமான செய்தியையும் சொல்லுகிறது.

பிச்சைக்காரனுக்கு உதவ மறுத்தவர்களை சாதாரண மனிதர்களாக எம்மிடம் சொல்லிவிட்டு – மறுபக்கத்தில் உதவி செய்தவனை கொடையாளன், பெரிய கண்ணியவான் என்று காட்டாமல் அவனது ஒரு கணநேரத்து நினைப்பே அந்த ஒரு ரூபாயை போடவைக்கிறது என்கிறார்.

இந்தச் சிறுகதையின் உச்சம் – பிச்சை போட்டவன் பெருமிதம் அடையாமல் தன்னில் சந்தேகப்பட்டு சுயவிசாரணையும் செய்கிறான். தன்னை சமாதானப்படுத்த முயல்கிறான். இவையெல்லாம் எந்த நாட்டினருக்கும் உரிய மனவியல். கடைசியில் தனக்கு அறிமுகமான முதலாளி அந்த ரூபாயை தன்னிடம் இருந்து திருடி இருப்பான் என நினைத்து பிச்சைக்காரனை அடித்தவிடயம் கேட்டு மனம் பதைபதைத்தாலும் அதை வெளிக்காட்டாமல் முதலாளியும் சமூகத்தின் அங்கத்தவர் என அறிமுகப்படுத்திவிட்டு பிச்சைக்காரனையும் முதலாளியையும் நாம் அன்றாடு உறவாடும் மனிதர்களாக அழகியல் யதார்த்தத்துடன் எம்முன்வைக்கிறார். சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு தானே விடைகூறுவதைத் தவிர்த்து வாசகனது சிந்தனைக்கு வேலை கொடுக்கிறார்.

பிச்சைக்காரனை அவன் என ஒருமையில் முதலாளி விளித்தபோது அந்தப் பிச்சைக்காரன் வயதில் முதிர்ந்தவனா சிறுவனா என அறிய ஆவல்கொண்டு நான் சிறுகதையின் உள்ளே தேடவேண்டியிருந்தது. அவனது தோற்றத்தைச் சொல்லி வயதை சொல்லாமல் விடும்போது அந்த இடத்தில்; தேர்ந்தவாசகனுக்கு சந்தேகத்தை (Ambiguity) அளிப்பது இலக்கியவாதியின் சிறந்த உத்தி. அதேபோல் மலையகக் குளிரை பல எழுத்தாளர் பக்கம் பக்கமாக குளிரை வர்ணித்து குளிரை உரித்துக் காட்டுவார்கள். ஆனால் தெளிவத்தை ஜோசப் குளிப்பவர்களை மட்டும் சொல்லிவிட்டு மிகுதியை வாசிப்பவனது சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். முழுக் கதையின் படிமமே ‘உழுத்துப் போயிருக்கும் ஓலைக்குடிலுக்கு ஓடுபோடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்றத்துக்காக மனம் என்னை வதைத்தது’ என்ற வார்த்தையில் அடங்கிவிட்டது.

ஜெயமோகன் ஒருமுறை பேசும்போது தெளிவத்தை யோசப் தனது சமூகத்தை முன்னிறுத்தி பாடும் குலப்பாடகன் என்றார். அந்த வார்த்தையில் மிகவும் உண்மையுள்ளது. இலங்கை மலையக சமூகம் அக்காலத்தில் தொண்டமான் போன்ற பெரியவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது. தொண்டமானை வெறுத்த சிங்களவர்கள்கூட அவரை எதிர்க்க முடியாததை நான் நேரில் பார்த்தேன்.

அவரது அமைச்சின் கீழ் நாலு வருடங்கள் மிருக வைத்தியராக இருந்ததால் சிலதடவை சந்தித்துமிருக்கிறேன். நெருங்கிப் பழக சந்தர்ப்பம் இல்லாத போதும் பலர் சொல்லி கேள்விப்பட்டு நான் மதிப்பு வைத்திருந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி தொண்டமான்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா போன்ற மிக சாமர்த்தியமான அரசியல்வாதியிடம்கூட தனியாக நின்று போராடி மலையக மக்களைப் பாதுகாத்தவர். தற்பொழுது அப்படிபட்ட அரசியல்வாதிகள் இல்லாததால் இலக்கியவாதிகள், சமூகசேவையாளர் மற்றும் கல்விமான் போன்றவர்களின் வழிநடத்தலில் மலையக சமூகம் தங்கியிருக்கிறது.

முதலையின் பல்லிடுக்குகளில் இருந்து உணவு தேடும் பறவையின் நிலையில் மலையகத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் போன்றவர்கள் மலையக சமூகத்திற்கு முக்கியமானவர்கள். தெளிவத்தை ஜோசப்பை மதித்து கௌரவிப்பதன் மூலம் ஆக்கபூர்வமாக இயங்குவதற்கு பலரை மலையக சமூகத்தில் தயார் செய்யமுடியும்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் அழைப்பு மூலம் தெளிவத்தை ஜோசப் மெல்பன் வந்தபோது அவரை முதல் முதலாக நண்பர் முருகபூபதியின் இல்லத்தில் சந்தித்தபோது நான் அவரை ஒரு முதிர்ந்த எழுத்தாளராகக் காணவில்லை. பாடசாலை மாலையில் முடிந்தபின் விளையாட்டு மைதானத்தில் சந்தித்த பத்து வயது சிறுவனாகத்தான் பார்த்தேன். அழகான சிரிப்புக்குரிய அந்த மெல்லிய மனிதர் என்னை வரவேற்றவிதம் எனக்கு இன்னமும் நெஞ்சில் தங்கியிருக்கிறது.

அதன்பின்பு இலங்கையில் சில நிகழ்ச்சிகளில் சந்தித்தாலும் நேர அவகாசமில்லாமல் சில நிமிட நேரத்தில் உரையாடல் முடிந்துவிடும். ஆனால் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் இருதய சத்திரசிகிச்சை செய்ததாக தகவல் வந்ததும் அவரது வீட்டுக்குச்சென்று நலம் விசாரித்தேன்.

அவுஸ்திரேலியாவில் இருதயசிகிச்சை செய்தவர்கள் பல காலம் நெஞ்சில் வெட்டிய இடத்தில் வலிப்பதாக சொல்வார்கள். ஆனால் ஜோசப் மிகவும் உற்சாகமாக எந்தக் குறையும் சொல்லாமல் இருந்தது எனக்கு வியப்பானது. ‘நான் பார்த்த எவரை விடவும் விரைவாக குணமாகிவிட்டீர்கள்’ எனச்சொன்னதும் அதற்கு சிரித்தபடி மலையக இலக்கிய வரலாற்றை கூறினார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இருந்து பேசிவிட்டுத்தான் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

இதுவரையில் எந்தவிருதுகளைப் பற்றியும் எழுதாத நான் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருக்கிறது என அறிந்ததும் இதுபற்றி எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. அவருக்கு விருது கொடுப்பதற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்த ஜெயமோகனும் விருதைப்பெறும் தெளிவத்தை ஜோசப்பும் எழுத்தாளர்கள் என்பதற்கும் அப்பால் நான் நேசமுடன் மதிக்கும் இருவர். இதனால் எனக்கு இரட்டைச் சந்தோசத்தை இந்த விருது தருகிறது.

முந்தைய கட்டுரைவெள்ளையானை வெளியீட்டுவிழா சென்னையில்
அடுத்த கட்டுரைவெள்ளையானை- கடிதங்கள்