ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

 

ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். . . உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்கவேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக்கூடாது? அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன்வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின் நோக்கம். . .

 

லோகித்தாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை உருவாக்க முடியாதவர்களின் சமாதானம் அல்லது சப்பைகட்டுதான் இது.

ஜெயமோகன்: நீங்கள் கூறுவதுபோல ஒரு நோக்கம் இருக்கும்போது கலைக்கு ஒருமை உருவாகிறது. ஆனால் ஒருமையை மறுக்கக்கூடிய சிதைவை, முன்வைக்கக்கூடிய கலைப் படைப்புகள் உள்ளன.

லோகித்தாஸ்: அத்தகைய படைப்புகளை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தில் நேர்ந்த சிறு வட்டத்தில் அவை அதிர்வுகளை உருவாக்கலாம். சினிமா போன்ற பெரிய கலைவடிவில் அவை வெறும் சலசலப்பாக மட்டுமே முடியும். கலைஞனின் நோக்கமும் கலைப் படைப்பின் விளைவும் மிக மிக முக்கியமானவை.

 

ஜெயமோகன்: ஆனாலும் கலைஞர்களில் இருவகை உண்டு. சமன் குலைலக்கும் கலைஞர்கள் சால்வதார் டாலி போல, விளாடிமிர் நபக்கோவ் போல, சமன் உருவாக்கும் கலைஞர்கள் டால்ஸ்டாய் போல….

 

லோகித்தாஸ்: சமன் குலைப்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நோக்கியே செய்ய முடியும். டால்ஸ்டாய் இன்றும் உயிர்வாழ்கிறார். மேலான கலை உருவாக்குவது சமன்தான். ஒரு நல்ல கச்சேரி கேட்டு வெளியே வந்தால் மனம் சட்டென்று கோபப்பட முடியாது. மனம் சாந்தியடைகிறது. இது முன்பே கூறப்பட்ட விஷயம்தான். ரசங்கள் ஒன்பது. பிற அத்தனை ரசங்களும் சரியாக இணைந்தால் உருவாகும் ரசம் கடைசி ரசமான ‘சாந்தம்’தான். எல்லா ரசங்களும் அலையடிக்கும் மகாபாரதம் சாந்த ரசத்தை உருவாக்கும் இதிகாசம்.

 

ஜெயமோகன்: உங்கள் எழுத்தில் மகாபாரதம் உருவாக்கிய பாதிப்பு என்ன?

 

லோகித்தாஸ்: இரு இதிகாசங்களும்தான் என் கற்பனைக்கான அடிப்படை. மகா பாரதத்தில் ஒரு துளி போதும் எனக்கு ஒரு கதையை உருவாக்கமுடியும். மகாபாரதம் கடல். ஆகவே எனக்கு கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. முன்பு என் கதைகளுக்கு என்ன மூலம் என்ற சர்ச்சை வந்தது. ஒரு கதாபிரசங்கக்காரர் அவரது கதையை நான் திருடி விட்டதாகச் சொல்லி நீதி மன்றம் போனார். நான் நீதிமன்ற மேடையில் நின்று அக்கதையின் மகாபாரத மூலவடிவைச் சொன்னேன்.

ஜெயமோகன்: சரி, ஒரு நேரடியான கேள்வி. நடிகர்களுக்காக நீங்கள் கதை எழுதியதுண்டா?

 

லோகித்தாஸ்: இல்லை. அதே சமயம் கதா பாத்திரங்களுக்கு நடிகர்கள் மனதில் தெரிவது, ஒருவரை உத்தேசித்து எழுதுவது மிகவும் வசதியானது. ஒன்று படமாக்கும்போது பிரச்சினை இருக்காது. இரண்டாவதாக ஒரு மனித உடல், ஒரு முகம் நம் முன் தெரிகிறது. அது மிகவும் திட்டவட்டமானது.

 

ஜெயமோகன்: நீங்கள்  திரைக்கதையாசிரியர். வெற்றிகரமானவர். எப்போது, ஏன் இயக்குநராக வேண்டுமென்று தோன்றியது?

 

லோகித்தாஸ்: இயக்குநர் ஒரு படத்தின் தலைவர். ஒருங்கிணைப்பாளர். திரைக்கதையாளன் உருவாக்கும் சட்டகத்தை நிரப்புபவர். அந்த இடம் அனைவராலும் விரும்பப்படுவதாகவே இருக்கும். என் திரைக்கதைகளை என் விருப்பப்படி படமாக்க விரும்பினேன்.

 

ஜெயமோகன்: நீங்கள் அடிப்படையில் ஒரு திரைக்கதையாசிரியர்.  உங்களால் தொழில் நுட்ப ரீதியாக இயக்குநராக ஏதேனும் சிரமம் இருந்ததா?

 

லோகித்தாஸ்: இயக்குநர் வேலை என்பது அந்த அளவுக்கு தொழில்நுட்ப வேலை அல்ல. அது அதிகமும் நிர்வாக ஒருங்கிணைப்பு சார்ந்த வேலை. பலரிடமிருந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வது. அதற்கும் மேலாக உள்ள மூன்று விஷயங்கள் நடிப்பை வெளிக்கொணர்வது, காட்சிக் கோணங்களை அமைப்பது, காட்சிகளை வெட்டித் தொகுக்கும் பிரக்ஞையுடன் இருப்பது. இது மூன்றும் திரைக்கதை ஆசிரியனிடமும் இருந்தாக வேண்டும். நல்ல திரைக்கதையாசிரியன் உள்ளூர நல்லநடிகனாக, நல்ல காட்சியமைப்பாளனாக இருப்பான். கதையை வெட்டித் தொகுப்பது எந்த எழுத்தாளனிடமும் இயல்பாக இருக்கும் பிரக்ஞைதான்.

 

ஜெயமோகன்:  திரைக்கதையை வசனத்துடன் சேர்த்து எழுதக் கூடாது என்கிறார்களே. அப்படி எழுதினால் காட்சியமைப்புக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்களே. . .

 

லோகித்தாஸ்: அது சரியல்ல. ஒரு சினிமவில் வசனமும் காட்சியும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அதை உருவாக்கும்போதே முழுமையாக எழுதிவிடுவதே நல்லது. அப்போதுதான் சரளமான ஓட்டம் இருக்கும். சிலர் ஒரு கதையோட்டத்தை மட்டும் எழுதிவிட்டு அவ்வப்போது வசனத்தை எழுதுகிறார்கள். அப்போது வசனம் இயல்பாக, திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்காது. திரைக்கதை ஒரு இலக்கியப் படைப்பு. இலக்கியமாகவே அது எழுதப்படவேண்டும்.

ஜெயமோகன்: இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் பல வகையான கதை சொல்லும் முறைகள் உள்ளன. யதார்த்தவாதம், மிகுபுனைவு, ஆவணப்பதிவு என்றெல்லாம் நான் எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறேன். ஆனால் சினிமாவில் இன்றும் ஒரே கூறுமுறைதான். யதார்த்தவாத அணுகுமுறை. சமீபத்தில் ஈரானியப் படங்களைப் பார்க்கும்போது யுபை சைக்கிள் தீவ்ஸ்ருன் அதே அழகியல்தான் இன்றும் உள்ளது. வெவ்வேறு கூறுமுறைகள் ஏன் இன்னும் சினிமாவில் பிரபலமாகவில்லை?

 

லோகித்தாஸ்: சினிமாவிலும் ·பாண்டஸி, ஆவணமுறை போன்றவை உள்ளன. அவை யதார்த்தவாத கூறுமுறையின் ஒரு பகுதியாகவே உள்ளன. ஏன் என்று யோசித்தால் கிடைக்கும் விடைதான், சினிமா வெகுஜனக் கலை. இங்குள்ள ஒரு சிறிய மாறுதல்கூட மொத்த சமூகத்தில் ஏற்படும் ஒரு உளவியல் மாற்றத்தின் விளைவுதான். சினிமா தன் விருப்பப்படி மாற முடியாது. கூடவே மக்களும் மாறவேண்டும். ஒரு தரப்பு இன்னொன்றை பாதித்து இருவரும் சேர்ந்து மாற வேண்டும்.

 

இன்று மக்கள் யதார்த்த வாழ்வை சினிமாவில் காண விரும்புகிறார்கள். சொல்லப்போனால் யதார்த்த உணர்வு வலிமை பெற்றே வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த ·பாண்டஸி அம்சம்கூட இன்று சினிமாவில் இல்லை. ஏன் வெகுஜன எழுத்திலும் யதார்த்தவாதம்தானே உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வைப் போன்ற ஒன்றை திரையில் காணும்போதுதான் அதனுடன் ஐக்கியமாகிறார்கள்.

 

ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் தோன்றி வீழ்ந்த காலகட்டம். ஏராளமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் அதனால் பாதிப்பு அடைவில்லையா?

 

லோகித்தாஸ்: கட்சி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உண்மையான அரசியலில் ஆர்வம் உண்டு. அது கருத்துக்களின், அதிகாரத்தின் அரசியல். அப்படிப்பட்ட அரசியலை ஒரு படத்தில் எழுத திட்டம் உள்ளது. பொதுவாக என் கவனம் எப்படியோ சமூகத்திடம் மோதி அன்னியமாகும் தனிமனிதர்களின் அவலத்திலேயே உள்ளது. இது என் இயல்பு சார்ந்ததாக இருக்கலாம்.

 

ஜெயமோகன்: நீங்கள் ஏன் ஓர் அரசியல் படம்கூட எடுக்கவில்லை? சொல்லப்போனால் உங்கள் படத்தில் அரசியலே இல்லை.

 

லோகித்தாஸ்: நான் எழுதவிருப்பது அதைப் பற்றித்தான். அந்தக் காலகட்டம் என்னிலும் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றுள்ளது. அவற்றை என் கோணத்தில் பரிசீலிக்க விரும்புகிறேன்.

 

ஜெயமோகன்: வணிகப் படங்களைப் பார்ப்பீர்களா?

 

லோகித்தாஸ்: எல்லா நல்ல படங்களையும் பார்ப்பேன். திரைப்படம் என்னுடைய ஊடகம். அதன் மீது எனக்கு மோகம் உண்டு. கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற பிரிவினையே இல்லை. அது ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. கமர்ஷியல் நோக்குடன் எடுக்கப்படும் படங்களில் பத்துக்கு ஒன்பது படங்கள் தோல்விப்படங்கள்தான். அப்படியானால் எப்படி அவற்றை கமர்ஷியல் படம் என்கிறீர்கள்? கலைப்படங்களுக்கு கமர்ஷியல் நோக்கமே இல்லையா என்ன? இரு வகையிலும் சில மாடல்களையும் ·பார்முலாக்களையும் வைத்திருக்கிறார்கள். அதையே பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். கமர்ஷியல் படமென்றால் பாட்டு, சண்டை, கதாநாயகனின் வீரதீர பிரதாபங்கள், கலைப்படமென்றால் இருட்டு, மந்தத்தன்மை.

 

ஜெயமோகன்: பள்ளிக்கூடத்தில் சினிமாவைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே?

 

லோகித்தாஸ்: கற்றுக்கொடுக்கலாம். ஆனால் முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லா கலைகளுக்கும் அடிப்படை கற்பனை. இங்கே நம் கல்வியின் பிரச்சினை சினிமாக் கல்வி இல்லாமையோ இசைக்கல்வி இல்லாமையோ அல்ல. கற்பனை இலலாமைதான். சில சமயம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்பனை இல்லாதபோது கலைகள் ரசிப்பதற்கான இயல்பே இல்லாமல் போய்விடுகிறது. சினிமாவுக்கு மட்டுமா ரசனை தேவை? இசைக்கு, ஓவியத்திற்கு? நம் கல்வி அமைப்புகளில் கற்றுத் தேறியவர்களில் எத்தனை பேருக்கு அத்தகைய ரசனை உள்ளது?

 

இங்கே ரசனை உள்ளவர்கள் சுயமாகவே அதை அடைந்தார்கள். தங்கள் உழைப்பால் அதை வளர்த்துக் கொண்டார்கள். இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களும் எல்லாம் அப்படித்தான். நமது கல்விமுறையில் கற்பனை இல்லாமலிருப்பதனால் அது உலர்ந்து, வறண்டு காணப்படுகிறது. அதில் கருணைக்கும் கனிவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. இதுதான் இன்றுள்ள முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

 

ஜெயமோகன்: மலையாள சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்? திரைக்கதையாசிரியர்?

 

லோகித்தாஸ்: இயக்குனர் பரதன். அவருடைய இலக்கிய ஞானம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும் பயிற்சியும் உடையவர் அவர். இந்த மூன்று கலைகளையும் தன் சினிமாவில் அவர் இணைத்தார். அவரது படச் சட்டகங்கள் மிகவும் அழகானவை. திரைக்கதையை உள்வாங்குவதில் அவர் மிகவும் நுட்பமானவர்.

 

திரைக்கதையாசிரியர் பத்மராஜன். இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்ற பிறகு சினிமாவுக்கு வந்தார் அவர். மிக இயல்பான வசனங்களிலும் நுட்பமான யதார்த்த சித்தரிப்பும், வலிமையான கதாபாத்திரங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. பத்மராஜனின் வசனம் ஒருபோதும் பத்மராஜனுடையதாக இருக்காது. அது அந்தக் கதாபாத்திரம் கூறுவதாகவே இருக்கும். ஒரு முறை என் படத்தைப பார்த்த பிறகு பத்மராஜன் என்னுடைய கதாபாத்திரங்கள் சொந்த ஆத்மாவால் உரையாடுவதாக கூறினார்.

 

நானும் ‘பஞ்ச்’ வசனங்கள் எழுதுவதில்லை. வசனங்களை வைத்து விளையாட மாட்டேன். மிக இயல்பாக காதாபாத்திரங்களை உரையாடவிடுவேன். பத்மராஜனின் கதைக்கருக்கள் விசித்திரமானவை. ‘ஓர் இடத்தில் ஒரு பயில்வான்’ போல. ஒரு ஊருக்கு வரும் பயில்வானின் பிரச்சினைகள். அவற்றை மிக நம்பகமாகவும் சுவாரஸியமாகவும் கூறியிருந்தார். மலையாளத்தில் எனக்குப் பிடித்த படம் அது.

ஜெயமோகன்: பிடித்த நடிகர்?

 

லோகித்தாஸ்: என்னுடைய பல நல்ல கதாபாத்திரங்களை மோகன்லாலும் மம்முட்டியும் செய்திருக்கிறார்கள். மிக மிக வலுவாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியத்திரையின் சிறந்த நடிகர்கள். ஆனால் ஒரு ரசிகனாக மலையாளத்தில் எனக்குப் பிடித்த நடிகர்கள் கோபியும் நெடுமுடி வேணுவும்தான்.

ஜெயமோகன்:  திலகன்?

 

லோகித்தாஸ்: மிக நுட்பமான நடிகர். எனது பல கதாபாத்திரங்களை உயிர்கொடுத்துக் கொண்டு வந்தவர். ‘ஜாதகம்’ படத்தைப் பாருங்கள். அதில் அந்த முதியநாயர்  அடிக்கடி தலையை வருடுவார். தலைக்குள் ஒரு எரிமலை புகைவது படத்தில் கடைசியில்தான் வரும். திலகனின் கண்கள் மாறும்விதம் நடிகர்கள் பார்த்துப் படிக்கவேண்டிய விஷயம்.

 

ஆனால் திலகனுக்கு பல வரையறைகளும் உண்டு. உடல், குரல் என பல எல்லைகள். நெடுமுடியும் கோபியும் அப்படியல்ல. அவர்கள் எங்கும் போகமுடியும். எப்படியும் மாற முடியும்.  ‘மீ£ண்டும் சில வீட்டு காரியங்கள்’ படத்தில் நெடுமுடி வேணு முதலில் தோன்றும்போது பின்பக்கம்தான் தெரியும் பாருங்கள், அவர் ஓர் அற்பர் அயோக்கியர் என்று அந்த பின்பக்கமே சொல்லிவிடும்.

 

ஜெயமோகன்: லோகி மிக மிக உணர்ச்சிகரமான மனிதர். அப்படிப்பட்டவர்கள் குரூரமானவர்களாகவும் சில சமயம் வெளிப்படுவார்கள். . .

 

லோகித்தாஸ்: குரூரமாக நான் நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. சிறு வயதில் நான் குரூரமாக நடத்தப்பட்டதனால் அப்படி இருக்கலாம். இல்லை என் பயம் காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக என் கலை என்னை சுத்திகரிப்பதனால் அது நிகழ்ந்திருக்கலாம்.

 

ஜெயமோகன்: உங்களுக்கு நடிப்புப் பிரச்சினைகள் உண்டா? கலைஞர்களுக்கு அது இருக்கும். . .குரல்கள் கேட்பது, கண்களில் ஒளி தெரிவது, உடல் நடுநடுங்குவது. . .

 

லோகித்தாஸ்: ரொம்ப உண்டு. . . ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மனநோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறேன். உணர்ச்சிகள் என் கட்டுக்குள் நிற்காது. நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பேன். உருக்கமான இடங்களைப் படித்தால் கதறிக் கதறி அழுவேன். சிறிய விஷயத்தில்கூட என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தூக்கத்தில் பயங்கரமாக அழுவேன். என்அழுகையைக் கேட்டு நானே திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.

ஜெயமோகன்: துளை விழுந்த மூங்கில்தான் பாடும் என்று வயலாரின் வரி ஒன்று உள்ளது.

 

லோகித்தாஸ்: இருக்கலாம். ஆனால் துளை விழுவது என்பது மிகவும் வலி தருவது.

 

ஜெயமோகன்: மலையாள இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?

 

லோகித்தாஸ்: பஷீர், மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர்.

 

ஜெயமோகன்: மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள், வள்ளுநாடு.

 

லோகித்தாஸ்: கேரளத்தின் கலாச்சார மையம் அல்லவா அது.

 

[2003 ஆம் வருடம் லீனா மனிமேகலை ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சினிமா இதழில் வெளிவந்த பேட்டி]

முந்தைய கட்டுரைதேவாரம்
அடுத்த கட்டுரைபண்பாடு கடிதங்கள்