அன்புள்ள ஜெ அவர்களுக்கு,..
ஒரு பழைய நாவலைப் புரட்டிக்கொண்டு இருந்தேன்..தீனதயாளு என்ற நாவல் . எழுதியவர் நடேச சாஸ்திரியார்.அதன் முன்னுரையில் இதுதான் தமிழின் முதல் நாவல் என்கிறார் அவர் ( 8.10.1902 ). ஆனால் தமிழின் முதல் நாவலாக இதை சொல்வதில்லையல்லவா..
அந்த காலத்தில் இது குறித்தி சர்ச்சை ஏதும் எழுந்ததா?
அன்புடன்,
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
நாவல் சிறுகதை நவீனகவிதை மூன்றிலுமே முதல் ஆக்கம் எது என்பது எப்போதும் சர்ச்சைக்கு இடமானதாகவே உள்ளது. உண்மையில் திட்டவட்டமாகச் சொல்லவே முடியாது
ஏனென்றால் சிறுகதை,நாவல், நவீனகவிதை என்றெல்லாம் நாம் சொல்வது வடிவத்தை வைத்து. அந்த வடிவத்தை எப்படி தெளிவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வரையறை செய்வது? தோராயமாகவே சொல்லமுடியும்.நம்முடைய வரையறைக்கு ஏற்ப எதுமுதல் நாவல் அல்லது சிறுகதை அல்லது நவீன கவிதை என்ற அடையாளமும் மாறுபடும்.
ஆகவே இச்சூழலில் எது முதல் படைப்பு என்ற விவாதம் கல்வித்துறை சார்ந்த ஒன்றாகவே இருக்கமுடியும். கவனிக்கப்படாத ஏதேனும் படைப்புகள் இருந்தால் நம் கவனத்துக்கு வர நாம் அந்த விவாதத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
தமிழின் முதல் சிறுகதை என்று வ.வெ.சு.அய்யர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற கதைதான் என்பது தமிழில் இன்றுள்ள பொதுவான கருத்து. இக்கருத்தை வலியுறுத்தியவர்கள் ஆரம்பகாலத் திறனாய்வாளர்களான ஏ.வி.சுப்ரமணிய அய்யர் மற்றும் ரா.ஸ்ரீ.தேசிகன்.பின்னர் க.நா.சு அதை நிலைநாட்டினார்.
சிறுகதை என்பது ஒற்றைப்படையான வேகமும், இறுதித்திருப்பமும் கொண்ட நேரடிச்சித்தரிப்புள்ள கதை என்ற இலக்கணத்தின் அடிப்படையிலேயே இக்கதையை முதல்கதை என்றார்கள். பாரதி அதற்கு முன்னர் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவையெல்லாம் இந்த வடிவ இலக்கணத்துக்குள் வரவில்லை. அவை வெறும் கதைகள்தான் என்றார்கள்.
ஆனால் அதன்பிறகு இதுவரை சிறுகதை அடைந்துள்ள வளர்ச்சியைக்கொண்டு பார்த்தால் அந்தச்சிறுகதை இலக்கணம் உடைந்துவிட்டது. எல்லாவகையிலும் சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். இன்றைய இலக்கணப்படி பாரதியின் ரயில்வேஸ்தானம் சிறுகதைதான்.
அப்படி பாரதி எழுதியவை கதைகள் என்றால் வீராச்சாமி செட்டியாரின் வினோதரசமஞ்சரியின் கதைகளும் சிறுகதைகளே என்று சொல்லவேண்டியிருக்கும். அப்படியே பின்னுக்குச் சென்றுகொண்டே இருக்கலாம். எங்கோ ஒரு புள்ளியில் நவீனச் சிறுகதையின் பிறப்பை உறுதிசெய்துகொள்ளவேண்டியதுதான். அது ஓர் உருவகப்புள்ளி, அவ்வளவே
நாவலுக்கும் அப்படித்தான். ஆரம்பகாலநாவலாசிரியர்களான சித்திலெப்பை மரைக்காயர் [அசன்பே சரித்திரம் 1885] பண்டித நடேச சாஸ்திரி [ தீனதயாளு,1900 ] மாயூரம் வேதநாயகம்பிள்ளை [பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ] அ.மாதவையா [பத்மாவதி சரித்திரம் 1898] ராஜம் அய்யர் [கமலாம்பாள் சரித்திரம் 1893 ] ஆகிய அனைத்துமே ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தை சார்ந்தவை
புஷ்பரதச் செட்டி எழுதிய அகல்யா பாய் [1885] ஸ்ரீநிவாச ஐயங்கார் எழுதிய சிவாஜிரௌஸினாரா [1903], திரிசிரபுரம் பொன்னுசாமி பிள்ளை எழுதிய கமலாட்சி [1910] போன்ற பலநூல்கள் பல காலங்களில் முதல்நாவல்கள் என்று சுட்டப்பட்டுள்ளன
[http://tamilelibrary.org/biblio/list_novels.php என்ற பக்கத்தில் நாவல்களின் பட்டியல் ஒன்றுள்ளது. தட்சிண பயங்கரன்,தஞ்சை நாயகம் தாழ்வு அல்லது விதியின் வலிமை, சூது நாணயக்காரர் சூழ்ச்சி அல்லது மோகன சுந்தரி,சுயமரணத்தின் மர்மம்,சினிமா இரத்தினம் சுநீதா தேவி போன்ற அற்புதமான தலைப்புகளை பார்க்கையில் ஒரு காலகட்டமே கண்ணில் விரிகிறது. இவற்றில் முக்கால்வாசியை நான் வாசித்துத் தொலைத்திருக்கிறேன் என்ற பீதியையும் அடைந்தேன்.]
இவற்றில் பிரதாபமுதலியார் சரித்திரமே முதல்நாவல் என்று சொல்லப்படுகிறது. இதையும் ஏ.வி.சுப்ரமணிய அய்யர்தான் நிறுவினார். காரணம் நாவல் என்பது ‘சமகால வாழ்க்கையைப்பற்றிய யதார்த்தச்சித்தரிப்பை அளிக்கும் உரைநடையால்ஆன நீண்டகதை’ என்ற பொது இலக்கணம்தான்.
ஆனால்பிரதாப முதலியார் சரிதித்திரம் இன்றைய நோக்கில் ஒரு நாவலே அல்ல. அதிலிருப்பது ஒருவகையான நாட்டார்கதைசொல்லும் முறை. எந்த திசையும் இல்லாத சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு அது
இந்தக்கோணத்திலேயே சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய கதைகள் நாவல் அல்ல என்று சொல்லப்பட்டன. நடேச சாஸ்திரியின் கதைகள் பெரும்பாலும் ரெயினால்ட்ஸ் போன்றவர்கள் எழுதிய கதைகளின் தழுவல்கள் என்பதனாலும் அவற்றில் கதைச்சித்தரிப்பு தொடர்ச்சியாக இல்லாததனாலும் தவிர்க்கப்பட்டன.இதுபற்றி ஒரு விவாதம் அன்று நடந்து காலப்போக்கில் பிரதாபமுதலியார் சரித்திரம் ஏற்கப்பட்டது
எண்பதுகளில் மீண்டும் அவ்விவாதம் எழுந்தது.நாவல் என்றால் அது செய்யுளிலும் அமையலாம் , நவீனச்சித்தரிப்பு இருந்தால் போதும் என்று வாதிட்ட சிட்டி-சிவபாதசுந்தரம் இருவரும் ஆதியூர் அவதானி சரித்திரம் [1875]என்ற கதையை தமிழின் முதல் நாவல் என தாங்கள் எழுதிய ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் நூலில் வாதிட்டார்கள். அப்படியென்றால் பாஞ்சாலங்குறிச்சிக் கதைப்பாடல் நாவல் அல்லவா என்று கேட்டால் பதில் சொல்லமுடியாது
ஆகவே முதல்நாவல் என்றால் அது வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் என்று சொல்லும் மரபை ஏற்றுக்கொள்வதே முறை. கூடவே அது ஒரு உருவகம் மட்டுமே என்றும் நினைத்துக்கொள்ளலாம்
தனிப்பட்டமுறையில் நாவல் என்ற கலையின் தொடக்கம் கமலாம்பாள் சரித்திரத்திலேயே தமிழில் நிகழ்ந்தது என நான் நினைக்கிறேன்.
ஜெ
ஆதியூர் அவதானி சரித்திரம்- பெருமாள்முருகன்
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Nov 23, 2013