மன்மோகன்சிங்:ஒரு கடிதம்

அன்புள்ள நண்பர் விபா,

மன்மோகன் சிங் பற்றிய கட்டுரை படித்தேன். உங்கள் மதிப்பீட்டை நடுநிலை மாறாமல் சொல்லியிருக்கிறீர்கள். [ http://www.thinnai.com/?module=displaystory&story_id=20805014&format=html  ]

சென்ற இரு வருடங்களாக தொடர்ந்து கார்களிலும் ரயிலிலுமாக நண்பர்களுடன் இந்தியப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். புள்ளிவிவரங்கள் ஆய்வுகளை விட நேரடியான காட்சிகள் அளிக்கும் நுண்ணிய மனப்பதிவுகளில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் அதிகமும் கிராமப்புறங்களிலேயே பயணம்செய்தேன்.

இப்பயணங்களில் இந்தியாவில்- குறிப்பாக தென்னிந்தியாவில்- உருவாகி வந்திருக்கும் பொருளியல் வளர்ச்சியின் காட்சி வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. கொடூரமான கிராமப்புற வறுமை பெருமளவுக்குக் குறைந்திருப்பதை நான் மீண்டும் மீண்டும் கண்கூடாகவே காண்கிறேன். தெருக்களில் காணும் மனிதர்களின் உடைகளும் முகங்களுமே சான்று.  வீடுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதைக் காணலாம்.பள்ளிசெல்லும் குழந்தைகளின் உடைகள் முகங்களில் அப்பகுதியின் நிலை தெளிவாகவே தெரியும். பீரார் போன்ற மிகப்பிந்தங்கிய பகுதிகளில் கூட குக்கிராமங்களில் பிள்ளைகள் ஆங்கிலப்பள்ளிக்குச் செல்லும் காட்சிகளைக் கண்டேன்.
இந்த மாற்றங்களுக்கு மன்மோகன் சிங்  ஆட்சிக்கு வந்தபின்னர் ஏற்பட்ட பொருளியல் மாற்றங்களே காரணம் என்பதை நான் உணர்கிறேன். அடுத்து வந்த பாரதிய ஜனதா ஆட்சியும் அதே கோட்பாடுகளைப் பின்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது. யஷ்வந்த் சின்கா, முரசொலி மாறன், அருண் ஷ¥ரி ஆகியோரின் பங்களிப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். அதிகாரிகளின் பிடிகளில் இருந்து உற்பத்தித்துறை விடுவிக்கப்பட்டமையே இந்திய வளர்ச்சியின் முக்கியமான காரணம்.

இந்த மாற்றங்கள் உருவான தொடக்க காலத்தில் இவற்றுக்கு எதிராக ஒரு தொழிற்சங்கவாதியாக நானும் சிந்தாபாத் அடித்திருக்கிறேன்- எழுதியிருக்கிறேன். ஆனால் சீனாவின் மாற்றங்களை ஆதரித்தோம். வங்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவும் முயன்றோம். உலகம் இந்தியாவை விழுங்கிவிடும் என நாங்கள் சொன்னோம். இந்தியாவுக்கு உலகை எதிர்கொள்ளும் ஆற்றலுண்டு என இன்று நிரூபணமாகியிருக்கிறது. பி.எஸ்.என்.எல் போன்ற அரசு மேலாதிக்கம் உள்ள துறைகளில் இன்று நிகழ்ந்துவரும் வளர்ச்சியை நான் மிகவிரிவாகவே சொல்லமுடியும். மூலதனம், வணிகவிரிவு மட்டுமல்ல வேலைவாய்ப்புகளில்கூட .

ஆனால் வேளாண்மை திட்டங்களில் மன்மோகன் சிங் யுகம் கவனம் தவறவிட்டமையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதில் எதிர்காலத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பெரியதோர் சமநிலையின்மை உருவாகும் என்பதும் உண்மையே. அவ்வகையில் இந்த விஷயத்தை அரசாங்கத்தின் செவிகளை நோக்கி ஓங்கி ஒலிக்கச் செய்யும் குரல்களை நான் ஆதரிக்கிறேன்.

ஆனால் விவசாயிகளின் மரணம் ஒரு மாபெரும் கிராமப்புற அவலமாக இப்போது முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. கிராமப்புற வறுமை உச்சகட்டத்தை அடைந்திருப்பதன் சித்திரமாகவே இது குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இடதுசாரிகளினால். இதைப்பற்றிக் கூட எனக்கு நேரடியான ஒரு புரிதல் உண்டு. நான் 20 வருடங்கள் முன்பு கண்ட இந்திய வேளாண்மை அடிமட்டத்தில் , பட்டினியுடன் இணைந்த ஒன்றாக இருந்தது. இன்று இந்தியக் கிராமங்களில் பட்டினி மறைந்திருப்பதை நான் கண்கூடாக மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன்.

உண்மையில் இதுவே இன்றைய வேளாண்மையின் சிக்கல். இந்திய வேளாண்மை என்பது அரைக்காசுக்கு உழைப்பை விற்கும் விவசாய உதிரித்தொழிலாளர்கள்– பெரும்பாலும் தலித்துக்கள்- மேல் கட்டப்பட்டது. அவர்களை சுரண்டி, பட்டினியில் போட்டு வேளாண்மை லாபகரமாக நடந்துவந்தது. அவர்களுக்கு முறையான கூலி கொடுத்தாலே வேளண்மையை லாபகரமாக செய்ய முடியாது  என்ற நிலை. இடுபொருள் செலவு இதனால் பலமடங்காகிறது– அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை.

பெரும்பாலான சிறு நில உரிமையாளர்களான விவசாயிகளால் தங்கள் வேளாண்மையை நவீனபடுத்திக் கொள்வதற்கான முதலீட்டை திரட்ட முடிவதில்லை. அதற்கு கடன் வாங்குகிறார்கள். அதுவும் பெரும்பாலும் கந்துவட்டிக்கு. வேளாண்மையின் ஏற்ற இறக்கங்களில் அவர்கள் கடனாளியாகிறார்கள். வேளாண்மையை ஒரு பெருந்தொழில் போல செய்ய ஆரம்பிக்கும் பெரு விவசாயியும் இதே சிக்கல்களில் இன்னும் அதிகமாக மாட்டிக் கொள்கிறான். இதெல்லாம்தான் தற்கொலைக்குக் காரணங்களாக அமைகின்றன.

மூன்று கருத்துக்களை நாம் கவனம் கொள்ள வேண்டும். 1. தற்கொலை செய்துகொள்பவர்கள் யுகங்களாக பட்டினியால் மரித்துவந்த உதிரி விவசாயக்கூலிகள் அல்ல,  நில உடைமையாளர்களே 2. பாரம்பரிய வேளாண்மை செய்தவர்கள் அல்ல, பணப்பயிர் வேளாண்மை செய்தவர்களே தற்கொலை செய்கிறார்கள் 3. கடும் வரட்சி நிலவும் பகுதிகளில் அல்ல செழிப்பான நிலப்பகுதிகளிலேயே தற்கொலைகள் நிகழ்கின்றன. ஆகவே தற்கொலைகள் கிராமியப் பொருளாதாரச் சீரழிவால் நிகழவில்லை என்பது தெளிவு. அவை நிகழ்வது நவீனகாலத்தேவைக்காக வேளாண்மையை மாற்றியமைக்க முடியாத காரணத்தால்தான். அங்கே இனி கவனம்செலுத்தப்பட வேண்டும்.

உங்கள் கட்டுரை ஒரு சமகால சித்திரத்தை எளிமையாக அளித்திருக்கிறது. பொதுவாக இடதுசாரி நிலைபாடு எடுப்பது பாதுகாப்பாக கருதப்படுகிறது. எழுதுபவரின் குற்றவுணர்வுக்கு அது வடிகாலாக அமைகிறது. அவர் தன்னை மறைத்துக் கொள்ள உதவுகிறது. தப்போ சரியோ அது ‘அரசியல் சரி’ யாக இருக்கிறது. வேண்டுமென்றால் போலி அறசீற்றத்துடன் பொங்கி எழவும் செய்யலாம்– இணையத்தில் ஆளை யார் கவனிக்கப்போகிறார்கள். ஆகவேதான் நம் சூழலில் எப்போதும் சமநிலையோ ஆய்வு நோக்கோ இல்லாத இடதுசாரிக்குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. உங்கள் கட்டுரையில் உள்ள நேர்மையே அதன் வலிமை. அதை ஓரளவு கவனிப்பவர்கள் உணர முடியும்.

உங்கள் கட்டுரையின் குறைபாடு என்றால் பொதுவாக இணையத்தில் உள்ளவர்கள் எழுதும் எழுத்தில் சகஜமான தன்மை வரவேண்டும் என்பதற்காக விளையாட்டுத்தனத்தைச் சேர்ப்பது போல நீங்களும் சேர்த்திருப்பதுதான். சகஜத்தன்மை சாதாரணமாக நிகழவேண்டும். மெல்லிய அங்கதோ பகடியோ இருக்கலாம். அவை வெளிப்படையாக தெரியலாகாது. அப்போதுதான் கட்டுரைக்கு ஒரு அழுத்தம் நிகழ்கிறது.

குறிப்பாக நரசிம்மராவை ‘வழவழ’ என்று ஒரே சொல்லில் சொல்லியிருக்கிறீர்கள். நரசிம்மராவ் எடுத்த எந்த முடிவுமே வழவழ இல்லை. அவரளவுக்கு துணிவான முடிவுகளை எடுத்த தலைவரே வேறு இல்லை.அவர் மேடைகளில் கர்ஜனைசெய்யாதவர், பத்திரிகையாளர்களிடன் கொஞ்சாதவர், அவ்வளவுதான். விளையாட்டான எழுத்துமுறை இம்மாதிரியான தவறுகளை தன்னையறியாமலேயே செய்துவிடும். இம்மாதிரியான கட்டுரைகளில் இது ஆபத்தானது.

இத்தகைய ஒரு கட்டுரை புள்ளிவிவரங்களின் தொகையாக ஆவதை எப்படி தவிர்க்க வேண்டுமோ அதேயளவுக்கு புள்ளிவிவரங்கள் தேவையான அளவுக்கு இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மற்றபடி இன்றைய சூழலில் யோசிக்கவேண்டிய ஒரு கோணத்தை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

ஜெயமோகன்.

முந்தைய கட்டுரைஊட்டி கவிதையரங்கம்:பி.ராமன்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்