அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இளமைப்பருவம் முழுவதும் இப்படி வாழ்ந்த பிறகும் அவர் வாழ்கையை வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் இப்போது கற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் இதுதான் சரி என்று அடுத்த தலைமுறைக்கும் அதே வாழ்க்கை முறையைத் திணிக்கும் சிலரைப் பார்த்து வருத்தப்பட்டு இருக்கிறேன். இது ஒரு வியாதி போல் யாருக்கும் தெரியாமல் சமூகத்தில் ஊடுருவிக் கொண்டிருப்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
தமிழினி
அன்புள்ள ஜெயமோகன்,
அந்த மகனின் அத்தனை உணர்வுகளும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் , இது ஒரு சமூகப் பிரச்சினை தானே ??. அதில் , அவர் தந்தை ஒரு அப்பாவி நடுத்தர அப்பாவாகவே தெரிகிறார். தன்னை ,தன் அப்பாவின் காலத்தில் வைத்து யோசித்தால் .. அப்பாவைப் புரிந்து கொள்ளலாம்… ஒரு வேளை , அவர் அப்பா இன்னும் கொஞ்சம் extreme ஆக இருந்திருக்கலாம்.
உங்கள் கட்டுரையைப் படிக்கும் போது , மகனின் இந்திய வரவு சிரமங்களை விட அவர் பெற்றோரின் வருடம் முழுக்க தனிமை துயரமே , என்னை உறுத்துகிறது …
இதை, மகனைக் குற்றம் சாட்ட எழுதவில்லை . நானும் அவர் மகன் வகையறாதான்.
அருண் .
அன்புள்ள ஜெ,
‘நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?’ கட்டுரை வாசித்தேன்.
அந்த வாசகர் அமெரிக்க-இந்தியப் பானையிலிருந்து ஒரு சோறு. அவர் குறிப்பிடும் இளமைக்கால இயந்திர வாழ்க்கை ஒரு ‘கன்வின்சிங்’கான நியாயப்படுத்தும் காரணம். அவ்வளவுதான். மற்ற பெரும்பான்மையானோருக்கு வேறு காரணங்கள் இருக்கும். குடிநுழைவுத் தகுதிகள் பாதிக்கும் என்பார்கள், பிள்ளைகள் படிப்பு கெடுகிறது என்பார்கள், நகரமுடியாத வேலை என்பார்கள், பதவி உயர்வை இழக்க நேரிடும் என்பார்கள், இன்னும் என்னென்னவோ. முடிவு ஒன்றுதான். அவர்கள் இந்தியா வர விரும்புவதில்லை. தங்கள் பெற்றோரை வேண்டுமானால் அங்கு வந்துவிடச்சொல்வார்கள். இது அனுபவ உண்மை. அவர் மகிழ்ச்சியுடன் வாழும் அமெரிக்காவில் அனைவருமே அவருக்கு அன்னியர்கள்தானே? அவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு வாழமுடியும்போது, அன்னியமாகத் ‘தோன்றக்கூடிய’ பெற்றோரிடமும் பிறந்து வளர்ந்த ஊருடனும் ஏன் சில மணிகளில் ஒவ்வாமை அல்லது ஒட்டாமை வந்துவிடுகிறது? அதன் உளவியல் வேறு என்பதுதான் காரணம்!
சிறுவயதில் பெற்றோர் ‘விளையாடாதே; படி’ என்று வற்புறுத்துவது மறைமுகமாக ‘you are in my control’ என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்திவிடுகையில், அவர்களே வல்லந்தமாக படிப்பு சொல்லிக்கொடுக்கிறேன் பேர்வழி என்று இறங்குவது ‘உனக்குத் தெரியாது; எனக்குத் தெரியும்’ என்பதையும் சேர்த்தே பிஞ்சுமனங்களில் விதைக்கிறது. பிள்ளைகள் பிற்காலத்தில் இப்பொழுது ‘நீங்கள் என் கட்டுப்பாட்டில்’ இருக்கிறீர்கள் என்றும் ‘உங்களைவிட அதிகமாக எனக்குத்தெரியும்’ என்றும் பெற்றோருக்குக்காட்டிவிட கங்கணம் கட்டிக்கொள்கின்றன. இதற்கு இடமளிக்கும் அல்லது வாய்ப்பளிக்கும் பெற்றோரிடம் இப்பிள்ளைகள் நெருக்கமாகவே உணர்வார்கள். அந்த வாய்ப்பு அதிகம் படிக்காத, உலக அறிவும் அதிகமில்லாத பெற்றோர்களிடமிருந்துதான் கிடைக்கும். விவரமான பெற்றோரிடம் இவர்கள் காட்டிக்கொள்ள ஏதுமில்லை. ஒருவேளை அவர்களுக்குப்பழகிப்போன -இவர்களுக்கு முற்றிலும் புதிதான- அமெரிக்காவுக்கு பெற்றோர்கள் சென்றால் அதற்கு ‘வெளி’யிருக்கிறது.
பணம் அனுப்பினால் அனுப்பு; இல்லேன்னாலும் பரவால்ல. அதை நம்பி நாங்கள் இல்லை என்னும் நிலையிலுள்ள பெற்றோர்களிடம் மேலே குறிப்பிட்ட முதல் பிடியை இப்பிள்ளைகள் இழந்துவிடுகிறார்கள். ரஹ்மானால் கவரப்பட்டு, ‘என்னாமா போட்ருக்காரு; சும்மாவா குடுப்பாங்க ஆஸ்காரு’ என்று மொட்டையாக இசைபேசும் பிள்ளையிடம் ‘இப்ப என்ன பாட்டு போடுறானுங்க. சுத்தமான கானடாவுல போட்டாம்பாரு முல்லைமலர் மேலேன்னு’ என்று இசையின் நுட்பங்களைக் குறிப்பிட்டுப் பேசும் பெற்றோரிடம் அடுத்தபிடியையும் இழந்துவிடுகிறார்கள். தான் படித்த பொறியியலில் வேண்டுமானால் தன் பெற்றோரைவிட அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு; ஆனால் அதைப்பற்றிப் பேச ஏதுமில்லை; வழியுமில்லை. இந்தியாவில் வாழும் நண்பர்களிடத்தும் இதுவே நடந்துவிட வாய்ப்புகளதிகம். கட்டுக்கட்டாக ஜெயமோகனை வாசித்துவிட்டு நண்பரை தன் வாசிப்பின் ஆழத்தைக்காட்டி அசரடிக்க இவர் சென்றால், ஜெயமோகனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டு தன் வாசிப்பின் விரிவைக்காட்டி நண்பர் இவர் வேகத்தைக் குறைத்துவிடக்கூடும்.
அப்படியே அமெரிக்காவுக்குத் திரும்புங்கள். இவரின் அமெரிக்க-இந்திய (பொறியியல்) நண்பர்களில் பெரும்பாலோருக்கு எந்த(த் தமிழ்) இலக்கிய வாசிப்பும் இருக்காது. இவர் சொல்வது கூர்ந்து கவனிக்கப்படும். எதிர்க்குரல் இருக்காது. ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை படித்துவிட்டுத் திரை இசையின் நுட்பங்களை சரளமாகப் பேசி வியப்பிலாழ்த்தலாம். நீங்கள் காந்தியைப் பற்றியும் இந்திய வரலாற்றைப் பற்றியும் வைக்கும் புதுப்புது பார்வைகளை -சில சமயங்களில் அதைத் தங்கள் சொந்த கருத்துகளாகவும்- ஆங்கிலத்தில் சொல்லி சக ஊழியர்களான வெள்ளையர்களை சாப்பாட்டு மேஜையில் ஆச்சரியப்படுத்தலாம். தன் அதிகாரத்துக்குட்பட்ட மனைவி, குழந்தைகள். இந்தியாவிலுள்ளதுபோல் தனக்குக்கீழ் வேலைபார்ப்பவன் தன் அடிமை என்று கருதாத வேலையிட அதிகாரிகள். எந்த நேரத்திலும் எதையும் செய்யும் சுதந்திரம். சிலருக்கு இரவு வாழ்க்கை. உலகம் தன்னையே மையமாகக்கொண்டு சுழல்வதுபோன்ற உணர்வு. நானே ராஜா, நானே மந்திரி!
இது மனதின் பிரச்சனை என்றால் இந்தியாவில் கூடுதலாக மற்ற பொதுப்பிரச்சனைகள். திருச்சி வந்தால் அமெரிக்க வசதிகள் இருக்காது. இதைப்பற்றி விவரங்கள் எழுதத்தேவையில்லை; வளரும் நாடுகளுக்கே உரித்தான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஒன்றை கவனிக்கலாம். ஏதோ சுமாரான பள்ளியில், பின் சுமாரான கல்லூரியில் பயின்று, நடுத்தரமான மதிப்பெண்கள் பெற்று, சில வருட உள்ளூர் வேலை அனுபவத்துடன் வெளிநாட்டு வேலை கிடைத்து, மத்திய கிழக்கிலோ, தென் கிழக்காசியாவிலோ வேலைசெய்யும் பெரும்பாலோரிடம் இந்த சிக்கல்கள் இருக்காது. அடிக்கடி ஊருக்குச்சென்றுவர இயலவிட்டாலும் மணிக்கணக்கில் பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் தொலைபேசித் தீர்த்துவிடுவார்கள். இவர்களுக்கு அந்த ‘வெளி’ கிடைப்பதே காரணம் என்பது என் கணிப்பு. இதுவே நான் குறிப்பாக ‘அமெரிக்க-இந்தியப் பானை’யிலிருந்து ஒரு சோறு என்று முதலில் குறிப்பிடவும் காரணம்.
இறுதியாக ஒன்று. நீங்கள் செய்தது அவ்வளவு சரியில்லை என்று நினைக்கிறேன். தந்தையின் மின்னஞ்சலை மகனுக்கும் மகனதைத் தந்தைக்கும் ஒருக்காலும் திருப்பிவிட்டிருக்கவே கூடாது. அதன் சாரத்தை உங்கள் வார்த்தைகளில் எழுதியிருக்கலாம்; யாராவது ஒருவருக்குமட்டும். முடிந்தால் அவர் மனம் மாறும் வரை. முன்பு அவர்களிடையே இடைவெளி மட்டும் இருந்தது. இப்போது நீங்கள் பாலமாக இருக்கமுயன்று சுவராக ஆகிவிட்டீர்கள். மகன் இந்தியா வந்துபோன ஐந்து நாட்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது என்பதே என் கணிப்பு.
ஆச்சரியம் என்னவெனில் அவ்வாசகர் கட்டுக்கட்டான ‘அச்சிட்ட’ ஜெயமோகனிடமிருந்து பெற்ற அறிவை வக்கனையாக -துன்பமான நினைவுகள் இருந்தால்கூட தேவலை என்பதுபோல- நீண்ட தன்னிலை விளக்கங்கள் அளிக்கப் பயன்படுத்தியிருக்கிறாரேயொழிய இன்றும் சென்னைக்குக் குடிபெயராமல் நாகர்கோவிலிலேயே வசித்துக்கொண்டு மனைவியின் சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் உதவிசெய்து ‘வாழும்’ ஜெயமோகனிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான்.
சிவானந்தம் நீலகண்டன்,
சிங்கப்பூர்.