இப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னையே இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள் என்று தோன்றியது.
இருந்தும் ஏன் அறிவுரை சொல்கிறார்கள்? ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா? மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களை இவர்கள் அண்ணாந்து பார்க்கிறார்கள். எழுத்தாளர்களை குனிந்து பார்க்கிறார்கள்.
‘எழுத்தாளர்கள் தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லக்கூடாது’ என்றார் ஒருவர். ‘தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லாத ஏதாவது பெரிய எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள்’ என்றேன். மிகவும் யோசித்துவிட்டு ‘பாரதி’ என்றார். அவர் கடைசியாக கேள்விப்பட்ட எழுத்தாளரின் பெயராக இருக்கலாம். ‘சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று அவன்தானே தன் கவிதையைப்பற்றிச் சொன்னான்?’ என்றேன். ’அப்படியா?’ என்றார்.
‘தன் எழுத்தைப்பற்றி, தன் பணியைப்பற்றி பெருமிதமில்லாத கலைஞன் இல்லை. அதைச் சொல்லியாகவேண்டிய நிலையில் சொல்லாத கலைஞனும் இல்லை’ என்றேன்.
நம்மவர்களின் இந்த மனநிலை பழைய நிலப்பிரபுத்துவம் சார்ந்தது. கல்வி மீதோ கலைமீதோ மதிப்பற்றவர்களே அன்று அதிகம். கலைஞர்கள் புலவர்கள் அவமதிப்புக்குள்ளாவது அன்று மிகச் சாதாரணம். தமிழகத்தில் அபாரமான தன்முனைப்பு வழியாக தன் கலைக்கு மதிப்பை உருவாக்கியவர்கள் சிலரே. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்.
‘நான் இசைமகாராஜா’ என்று ராஜரத்தினம் பிள்ளை சொன்னாரென்றால் அவரது மதிப்பை உணராமல் அவர் பெரியமனிதர்களின் முன் சட்டையைக்கழற்றிவிட்டு நிற்கவேண்டும் என்று எதிர்பார்த்த கும்பலை நோக்கித்தான். ‘என் எழுத்தும் நான் வாழும் காலமும் ஒன்றே’ என்று ஜெயகாந்தன் சொன்னதும் அதனால்தான். ஆனால் இன்றும் நம்மில் பெரும்பாலானவர்களின் மனநிலை பாமரத்தனமானதுதான். அதைத்தாண்ட இன்னும் ஒரு தலைமுறை ஆகலாம். தாண்டமுடியாத ஊனச்சமூகமாக இது நின்றுவிடவும் கூடும்.
அ.கா.பெருமாள் எழுதியிருக்கும் இந்த அனுபவக்கட்டுரை என் நெஞ்சை கனக்கச்செய்தது. அ.கா.பெருமாள் இராமசுப்புக் கணியான், தோல்பாவைக்கூத்துக்கலைஞரான ஜி பரமசிவ ராவ் இருவரைப்பற்றியும் வணக்கத்துடன் அன்றி பேசமாட்டார். அந்த இடத்தில் இருந்திருந்தால் நம்மைச்சூழ்ந்திருக்கும் அத்தனை அற்பர்களுக்காகவும் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரியிருப்பேன்.
கிராமியக் கலைகளுக்கு யார் பாதுகாப்பு?
அ.கா.பெருமாள் அறுபது நிகழ்ச்சி