அறிவுஜீவி- விவாதம்

“யார் அறிவுஜீவி” என்ற கட்டுரையில் ஜெயமோகன் தந்திருப்பது Public intellectual என்பதற்கான வரையறை என்று தோன்றுகிறது. இதன்படி பார்த்தால் அந்த வரையறையும், அவர் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களும் சரியாகப் பொருந்துகிறார்கள். தமிழில் புழக்கத்தில் உள்ள “அறிவுஜீவிகள்” என்ற கலைச்சொல்லும் பொதுவாக Public intellectual களைக் குறிக்கத் தான் பயன்படுகிறது, intellectual எனப்படுபவர்களை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே அந்த சொல்லாட்சி சரியானதே.

இரண்டு வகையினருக்கும் என்ன வேறுபாடு? intellectual என்றால் எல்லா விதமான அறிவுத் துறைகளிலும் இருக்கும் வல்லுனர்களையும், அறிஞர்களையும் குறிக்கும். மூலக்கூறு உயிரியில் முதல் சிற்பவியல் வரை எல்லா துறைகளிலும் இருக்கும் நிபுணர்களும் இதில் அடங்குவார்கள். ஆனால், Public intellectual எனப் படுபவர்கள் “பொது சிந்தனையாளர்கள்”. அவர்கள் பல்வேறு அறிவுத் துறைகளிலும் உள்ள பல சிந்தனைகளைப் பகுத்தும் தொகுத்தும் இணைத்தும் அத்துடன் தங்களது சுயமான எண்ணங்களைக் கலந்தும் ஒரு கருத்தை அல்லது கருத்தாக்கத்தை முன்வைப்பவர்கள். ஒரு 70 ஆண்டுகள் முன்பு வரை கூட அறிவியல் மற்றும் கலையியல் துறைகள் இந்த அளவு தனித் தனி அறிவுத் துறைகளாகப் பிரியவில்லை. ஒவ்வொன்றிலும் நுட்பமான ஆழமான துறைசார்ந்த நிபுணத்துவம் கோரும் அளவு அவை வளர்ச்சியுற்றிருக்கவில்லை. அப்போது எல்லா அறிஞர்களும் சிந்தனையாளர்களுமே ஒருவகையான Public intellectuals என்ற அளவில் இருந்தார்கள்.

ஆனால், அதன் பிறகு அறிவியலிலும் மற்ற துறைகளிலும் ஏற்பட்ட மாபெரும் பாய்ச்சல்களினால் துறை நிபுணத்துவம் என்பது முக்கியமான ஒன்றாகியது. ஆனால் தொடர்ந்து புதிய “பொது சிந்தனைகளை” முன்வைக்கும் அறிவுஜீவிகளும் இருந்தே வந்திருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பௌத்த மதத்தைப் பற்றியும், ஐசக் அசிமோவ் ஜன நாயகத்தைப் பற்றியும், ஜகதீஷ் சந்திர போஸ் தத்துவ சிந்தனைகள் குறித்தும் பேசியிருப்பது அதனால் தான்.

இந்த இணைய யுகத்திலும் கூட, ஒவ்வொரு நாட்டிலும் சமூகத்திலும் இத்தகைய “பொது அறிவுஜீவிகள்” உருவாகி வருகிறார்கள்.. புதிய கண்ணோட்டங்களையும், சிந்தனைப் போக்குகளையும் முன்னெடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அத்தகையோரைப் பற்றியே ஜெயமோகன் அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அவர் “சென்ற நூற்றாண்டின் சிறந்த 10 அறிவுஜீவிகள்” என்று கொடுத்திருக்கும் பட்டியலில் எம்.என்.ராய் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிறுவனர்) தவிர மற்றவர்கள் அனைவரும் அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவர்கள் என்பது என் கருத்து. தனது ஆரம்ப கால தேசபக்தி சார்ந்த செயல்பாடுகளுக்குப் பிறகு, எம். என் ராய் முழுக்க முழுக்க ரஷ்யா / ஜெர்மனி ஆகிய நாடுகளின் கம்யூனிச சித்தாந்தத்தை குருட்டுத் தனமாக ஏற்பவராகவும் அதற்கு விலை போனவராகவும் ஆனார். சுயமான இந்திய சிந்தனை என்று எதையும் அவர் வளர்த்தெடுக்கவில்லை. 10 என்ற எண்ணிக்கை முக்கியம் என்றால் அந்த இடத்தில் நான் ஸ்ரீ அரவிந்தர் அல்லது ஜகதீஷ் சந்திர போஸை வைக்க விரும்புவேன்.

ஜெ.மோ கட்டுரை: http://tamil.thehindu.com/opinion/columns/யார்-அறிவுஜீவி/article5337998.ece

பப்ளிக் இன்டலக்சுவல்கள் குறித்து ஒரு நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை: http://artsbeat.blogs.nytimes.com/2008/06/11/who-is-a-public-intellectual/?_r=0

The Public Intellectual as Provocateur என்கிறது இந்தப் பதிவு –

// What is called for are public intellectuals who exert critical intelligence in synthesizing multiple sources of information and knowledge and presenting their opinions for debate, not simply for consumption. A public intellectual today would thus not simply be one filter alongside others, an arbiter of opinion and supplier of diversity. Instead, today’s public intellectual is a provocateur who also provides a compelling reason to think differently. This distinction is critical. //

http://www.bostonreview.net/blog/palumbo-liu-public-intellectual-provocateur

ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

அறிவுஜீவிகள் என்ற சொல்லாட்சியை நான் ஏறத்தாழ பொதுஅறிவுஜீவிகள் என நீங்கள் சுட்டி கொடுத்திருக்கும் பொருளிலேயே கையாள்கிறேன்.

அறிவுஜீவிகள் [intellectuals] என்ற சொல்லை பொதுவாகப்பேசும்போது கையாள்வதற்கும் அரசியல்- இலக்கியத்தளத்தில் கையாள்வதற்கும் முக்கியமானவேறுபாடுண்டு. பொதுவான பேச்சுக்களில் அறிவைக்கொண்டு செயல்படுபவர்கள் என்ற பொருளிலிலேயே அதைச் சொல்கிறார்கள்.

ஆனால் அரசியலிலும் இலக்கியத்திலும் அது ஒரு கலைச்சொல். தனித்த பொருள்கொண்டது. இத்தாலிய மார்க்ஸிய அறிஞரான அண்டோனியொ கிராம்ஷி உருவாக்கிய அர்த்தத்தில் அச்சொல் வரையறை செய்யப்படுகிறது.[கிராம்ஷி பற்றி நான் பலவருடங்களுக்கு முன்பு விரிவாகவே எழுதியிருக்கிறேன்] அந்த அர்த்தத்தில் அறிவுஜீவி என்ற சொல்லைப் பயன்படுத்துவது சென்ற இருபதாண்டுக்காலமாகவே தமிழ்ச்சிந்தனைத்தளத்தில் நிலைபெற்றும் விட்டது.

அந்த வரையறைப்படி சமூகத்தை நோக்கி தன் அறிவை பிரயோகிப்பவன்,தன் கருத்துக்களால் அதை பாதிக்க முனைபவன் அறிவுஜீவி என்று சொல்லலாம். அதற்குள் தொழில்நுட்பநிபுணர்களோ ,நிர்வாகிகளோ வரமாட்டார்கள். இப்படிச் சொல்லலாம், ஒரு சிறந்த மருத்துவர் அறிவுஜீவியல்ல. ஆனால் சமகால மருத்துவப்பிரக்ஞையை நோக்கி அவர் கருத்துலகில் செயல்படுவாரென்றால் அவர் அறிவுஜீவி.

அத்தகைய அறிவுஜீவிகள் இருவகை என்பது அண்டோனியோ கிராம்ஷியின் வரையறை. உயிர்நிலை அறிவுஜீவிகள்[ Organic intellectuals], மரபுசார் அறிவுஜீவிகள் [ Traditional Intellectuals] .

சமகால சமூக- அரசியல்- பண்பாட்டுச்சூழலை மாற்றிஅமைக்கப் போராடுபவர்கள் உயிர்நிலை அறிவுஜீவிகள். [கிராம்ஷி மார்க்ஸிய நோக்கில் சமூக – அரசியல் அதிகாரத்தை மாற்றுவதற்காக போராடுபவர்கள்தான் உயிர்நிலை அறிவுஜீவிகள் என்கிறார். அதை நான் இப்படி விரிவாக எடுத்துக்கொள்கிறேன்] சமூக-அரசியல்-பண்பாட்டு மரபை தக்கவைத்துக்கொள்ள நிலைகொள்பவர்கள் மரபுசார் அறிவுஜீவிகள்.

இந்த அறிவுஜீவியின் இயல்பைத்தான் நான் வரையறைசெய்ய முயல்கிறேன். இது ஒன்றும் புதிய சிந்தனையும் அல்ல. சமானமான தளத்தில் வெவ்வேறு கோணங்களில் வரையறைகளை முன்னோடியான பலசிந்தனையாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அறிவுஜீவிகளிடம் நான் எதிர்பார்ப்பது ஒரு முழுமைப்பார்வையை.அப்பார்வையை உருவாக்குவதற்கு ஒரு துறைசார் அறிவு மட்டும் போதாது. அவ்வறிவை ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பின்புலத்தில், வரலாற்றுவெளியில் வைத்துப்பார்க்கும் பார்வை தேவை. நான் பேசுவது அதைத்தான்

என்னுடைய நோக்கில் இரு சாராருமே முக்கியமானவர்கள்தான். ஆனால் உயிர்நிலை அறிவுஜீவிகளுக்கே நான் முக்கியமான இடத்தை அளிப்பேன். அவர்களில் முன்னுதாரணமான, முக்கியமான, முதல்பத்துபேரை நான் உதாரணம் காட்டுவது நான் சொல்வதென்ன என்பதைச் சுட்டிக்காட்டும்பொருட்டு மட்டுமே.

அந்த அறிவுஜீவிகள் தன்வாழும் சமூகத்தை மாற்றியமைக்கும்பொருட்டு அறிவை கையாண்டவர்களாக இருக்கவேண்டும், அதில் அவர்கள் வெற்றிபெற்று தங்கள் பண்பாட்டு-சமூக- அரசியல் சூழலில் ஒரு புதிய முன்னகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கவேண்டும் என்பதையே அளவீடாகக் கொண்டேன். அவர்கள் முழுமைநோக்கு கொண்டவர்களாக இருப்பதை எவரும் பார்க்கலாம்

உதாரணம் சொல்கிறேன். விவேகானந்தர் வேதாந்தி. ஆனால் அவரை சமகாலத்தில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மாபெரும் வேதாந்திகளிடமிருந்து தனித்துக்காட்டியது அவரது முழுமைநோக்கு. அவரது பார்வை இந்தியா தன் பழமையின் சாராம்சத்தை தக்கவைத்துக்கொண்டு நவயுகம் நோக்கிச் செல்லவேண்டிய எழுச்சியை முன்வைத்தது. அதற்காக வரலாற்றையும், பண்பாட்டையும் கருத்தில்கொண்டு அவர் சிந்திக்கிறார்.இந்தியாவுக்கான ஓவியமரபு பற்றியும் அசலான பார்வையை முன்வைத்திருக்கிறார்

அவனீந்திரநாத் தாகூர் இந்தியாவுக்கு தனித்தன்மை கொண்ட ஓவியமுறை தேவை என்று சிந்தித்து அந்த பெரும் அலையை உருவாக்கியவர். ஆனால் அவருக்குப்பின் வந்த பல ஓவியர்களைப்போல அவர் வெறும் கலைஞர் அல்ல. இந்தியாவின் அனைத்துப்பண்பாட்டுக்கூறுகளையும் அறிந்தவர். உலகப்பண்பாட்டில் இந்தியவின் இடமென்ன என்று உணர்ந்தவர். அந்ததெளிவே அவரை முன்னோடியாக்கியது. அவர் ஓவியத்தில் ஒரு புதுமரபை உருவாக்கியவர் மட்டுமல்ல. அவர் ஒரு சிந்தனையாளர்

நான் சொல்லியிருக்கும் ஒவ்வொருவரைப்பற்றியும் இவ்வாறு சொல்லமுடியும். இதற்கு அடுத்தபடியில் நான் ராம் மனோகர் லோகியா, இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு, விஸ்வேஸ்வரய்யா, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், நேரு, மகாலானோபிஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன் என பலரைச் சுட்டிக்காட்டுவேன்.

இந்தவரிசையில் ஏன் எம்.என்.ராய் வருகிறார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ராயின் வாழ்க்கை பல படிகள் கொண்டது. ருஷ்யபுரட்சியின் நேரடிசாட்சியான இளைஞர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்தாபகர். அதன் வழியாக உலகம்தழுவிய நோக்கை அடைந்த முன்னோடிச் சிந்தனையாளர்.

ராயின் பங்களிப்புகளில் முக்கியமானது அவரே இந்திய சிந்தனைமரபின் மைய ஓட்டம் அல்லாத தரப்புகளை அடையாளம் காண ஆரம்பித்த முன்னோடி என்பதுதான். மிகவிரிவான ஆய்வுகள் வழியாக இந்தியசிந்தனையின் உலகாயத தரப்புகளை அவர் நிறுவிக்காட்டினார். அவரிலிருந்து தொடங்கிய ஒரு பெரிய கருத்துத் தரப்பு இன்றும் இந்தியசிந்தனையில் வலுவாக உள்ளது.தேபிபிரசாத் சட்டோபாத்யயா, கே.தாமோதரன் என்று ஆரம்பிக்கும் சிந்தனையாளர் வரிசையின் விதை அவரே.

இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் எம்.என்.ராயின் பாதிப்புள்ள முக்கியமான சிந்தனையாளர்கள் இருந்திருக்கிறார்கள். மலையாளத்தில் அவரது நேரடிமாணவரான எம்.கோவிந்தனில் இருந்துதான் நவீன பண்பாட்டாய்வே ஆரம்பித்தது. கோவிந்தனால் வடிவமைக்கப்பட்டவரே சுந்தர ராமசாமி. சிறிதுகாலம் கோவிந்தனிடம் எனக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது.

இந்த ஒவ்வொருவரைப்பற்றியும் விரிவாக விவாதிக்கலாம். அது இந்தியா சென்ற இருநூறாண்டுக்காலத்தில் எப்படிச் சிந்தித்தது என்பதை அறிவதற்கான வழியாக அமையும்

ஜெ

அன்புள்ள ஜெ,

மேலதிக விளக்கங்களுக்கு நன்றி. நீங்கள் எழுதியது கச்சிதமாக, தெளிவாகத் தான் இருந்தது. ஆனால் அது (வழக்கம் போலவே) இங்கு, பலருக்கும் புரியவில்லை :) பேஸ்புக்கில் பிஏ கிருஷ்ணன் கூட ஒரு இயற்பியலாளரும் அறிவுஜீவி தான், இந்த வரையறை மிகவும் குறுகியது என்றெல்லாம் சொல்லியிருந்தார் .. அதனால் என் புரிதலை எழுதினேன்.

கோசாம்பியை அசலான வரலாற்று சிந்தனையாளராக என்னால் ஏற்க முடிகிறது, அவர் முன்வைத்தது மார்க்சிய அணுகுமுறையே ஆனாலும். ஆனால் எம்.என்.ராய் குறித்து படித்த வரையில் அவர் மீது ஒரு கடும் ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது… மேலும் அரசியல் தளத்தில் இந்திய தேசியத்திற்கெதிரான அவரது துரோகங்கள் அவர் மீதான மதிப்பைக் குறைத்து விட்டன.

உங்களது 10 பேர் பட்டியல் முழுமையானது அல்ல தான். ஆனால் முக்கியமான எல்லா நவீன இந்திய சிந்தனை இழைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது (நவீன இந்திய அறிவியல் விடுபட்டுள்ளது – எனவே ஜகதீஷ் போஸை சேர்க்கலாம்). ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இத்தகைய பட்டியல் மிகவும் அத்தியாவசியமானதும் கூட. எனவே, அதில் ஏன் இவர் இல்லை, அவர் இல்லை என்றெல்லாம் சிலர் கேட்பது பொருளற்றது.

ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

எம்.என்.ராய் இந்திய தேசியத்துக்கு எதிராகத் துரோகம் ஏதும் செய்தாரென நான் நினைக்கவில்லை. அவர் சர்வதேசியவாதி. முழுமையாகவே அந்நம்பிக்கையில் வாழ்ந்து மறைந்தவர். தன் பார்வையை மிக விரிவாக முன்வைத்து அவர் எழுதியிருக்கிறார். இந்திய தேசியத்தின் நாயகர்களான நேரு போன்றவர்கள் கூடஅவரை நீங்கள் நினைப்பதுபோல கருதவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஈவேரா பற்றி சில வினாக்கள்…
அடுத்த கட்டுரைகுமரப்பா என்ற தமிழர்