கடல்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நான் தமிழ்ப்படங்களை வெளியானவுடன் பார்ப்பதில்லை. பெரும்பாலும் திரையரங்கிலிருந்து படத்தைத் தூக்கும்போது அல்லது வேறு திரையரங்கில் மறுதிரையிடும்போது பார்ப்பது தான் வழக்கம். இல்லையென்றால் வெற்றுக்கூச்சலில் படம் பார்க்க வேண்டியிருக்கும்.. ஒரு வாழ்க்கையைப் ‘பார்த்துக் கொண்டிருக்கும்போது’ ஏற்படும் இடைஞ்சல் போல் நரகம் வேறெதுவும் இல்லை. அதிலும் கடல் குறித்த எக்களிப்புகளையே பெரிதும் கேட்டுக்கொண்டிருந்ததால் வெளியானபோது படம் பார்க்கவில்லை.

இப்பொழுதுதான் பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் எழுதுகிறேன். இந்தளவிற்கு ஆழமான ஒரு திரைப்படத்தைப் பார்த்ததில்லை. சில காட்சிகளில் அழாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக அம்மாவின் மீது படுத்திருக்கும் சிறுவன்.. தனியனான பிறகு கையில் உள்ள மீனை மற்ற சிறுவர்கள் பறித்துக் கொண்டு ஓடிய பிறகு அவனது பார்வை, சாம் பேசச்சொல்லியபின் கெட்ட வார்த்தைகளைக் கொட்டிய பிறகு அம்மா வேண்டும் என அழுதது.. முதல் முறை தோணியில் செல்லும் போது அவனுக்கு ஏற்படும் விடுதலையுணர்வின் முதல் அனுபவம்..என அற்புதமாக நகர்ந்தது. பிறகு தாமஸின் பாவ மன்னிப்பு, தாமஸ் குழந்தையை பிரசவிப்பது .. இவையிரண்டும்தான் படத்தின் உச்சகாட்சி.. ‘இனிமே செய்யாதே’ என்று பியா சொல்லும்போது உலுக்கி விட்டது. என்வரையில் அத்துடனே படம் முடிந்து விட்டது. பிறகு வந்த காட்சிகளில் மனம் லயிக்கவில்லை.

படத்தில் குறைகள் உண்டு என்று நான் சொன்னால் அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்களும் மணிரத்னமும் பங்களிப்பாற்றிய இந்தப் படத்தில் குறைகளைப் பற்றிப் பேச எனக்குத் தகுதியில்லை என்றே துணிந்து சொல்வேன். அப்படிச் செய்வது எனது அறியாமையையே காட்டும். ஆனால் ஒரு கருத்து , ஃபாதர் சாம், தாமஸ் ஆகியோரைக் காட்டிய அளவிற்கு பெர்க்மான்ஸைக் காட்டவில்லை. உண்மையில் படம் சாம், தாமஸ், பியா இந்த மூன்று பேருக்குள் நடப்பதாகவே தோன்றியது.

ஆழமான மன நெகிழ்வுடன் நன்றிகள் பல.

சங்கரன் ரவி

அன்புள்ள ரவி

நன்றி. நீண்ட இடைவேளைக்குப்பின் வந்த இக்கடிதத்தை நிறைவூட்டும் ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன். கடல் குறைபாடுகள் உள்ள படம்தான். அதை அதில் பங்கேற்ற அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதில் ஒரு ஆன்மீகமான தேடலும் கண்டடைந்தலும் உள்ளது. அதை மெல்ல ரசிகர்கள் கண்டடைவார்கள் என்றே நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை
அடுத்த கட்டுரைவெள்ளையானை வெளியீட்டுவிழா சென்னையில்