அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே.நீங்கள் சொல்வது உண்மை.பெரியாரை ஒரு மத தலைவரை போல நம்பும் எங்களுக்கு வெங்கடேஷ் சொல்வது போல் காந்தி மீது “விபரம்” தெரிந்த நாள் முதலாய் காரணமற்ற ஒரு வெறுப்பு இருந்து வந்திருக்கிறது.மாற்று தரப்பு என்பது இல்லாமல் திராவிட இயக்கம் எங்கள் மீது செலுத்திய ஆளுமை காரணமாக இருக்கலாம்.ஆயினும் பிடிவாதங்களுக்கு எதிரான உங்கள் வாதங்களால் என் போன்றோருக்கு பயன் இருக்கிறது-முழுக்க ஒப்புக்கொள்ள முடியாமல் போயினும்.
அன்புடன்,
குமார்.
அன்புள்ள குமார்
ஒப்புக் கொள்வதல்ல இங்கே சிக்கல். முன் முடிவுகளைத் தாண்டி தர்க்கப் பூர்வமாக சிந்திக்க முடியுமா மாற்றுத் தரப்புடன் செய்யும் விவாதம் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே.
நான் முன்வைப்பது ஒரு விரிவான வரலாற்று அணுகு முறையை. அது என்னுடையதல்ல. இன்று முக்கியமான சிந்தனையாளர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்
முன் வைப்பதைத்தான். அந்தக் கோணம் சார்ந்து சிந்திப்பதே கூட ஒரு முன்னகர்வே
ஜெ
காந்தியைப்பற்றி பேச நம் மொழியில் ஆளில்லை. ஏன் என்றால் இன்னும் அது இங்கே மோஸ்தர் ஆக வில்லை. ஆனால் மேலைநாடுகளில் சமீபகாலமாக பின் நவீனத்துவ நோக்கில் காந்தியைப்பற்றிய மிக விரிவான் ஆய்வுகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இங்கேயும் சிலவற்றை பேசி வைப்போம். காழ்ப்பே சிந்தனையாக கூச்சலிடும் சூழலில்கூட காந்திக்கு ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்யும். அவர் மனசாட்சியின் முகம் அல்லவா?
ஜெ
ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல.மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.
நான் என் கட்டுரையில் சாதி சாதகமான ஒன்று என்று சொல்லவில்லை. கட்டுரையைஒட்டுமொத்தமாக நோக்கினால் அது உங்களுக்கு புரியும். கட்டுரையைமேற்கோள்களாக உடைப்பதனால் வரும் புரிதல் சிக்கல் அது [நம் தமிழ்’அறிவுஜீவிகள்’ இனிமேல் அதைத்தான் செய்யப்போகிறார்கள், இணையத்தைகவனியுங்கள்]
வரிசையாக ஒரு வாதத்தை உருவாக்கிக் கொன்டு வருவதன் ஒரு படி அது. சாதியை வெறுமொரு மூடநம்பிக்கை அல்லது சமூகத்தீங்கு என்று பார்க்கும் வழக்கம்மேலைநாட்டு மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டு ஆய்வாளார்கள்முன்னெடுத்தது. அது உண்மை அல்ல. சாதி ஒரு சமூகக் குழு அடையாளம். மக்கள்ஒன்றாகத் திரண்டு பணியாற்றவும் சவால்களைச் சந்திக்கவும் அது உதவுகிறது.ஆகவேதான் சமானியர் சாதியை விட தயாராக இல்லை. இது ஓர் இந்திய யதார்த்தம் .இதையும் கணக்கில் கொண்டே சாதியைப்பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.இல்லையேல் மேடையில் சாதி ஒழிக என்று கூவுதலோடு எல்லாம் நின்றுவிடும்.நான்சொன்னது இதையே
இன்றும் சாதி குழுத்தன்மையை இயல்பாக உருவாக்கி ஒரு பொருளாதார சக்தியாகநம் சமூகத்தில் செயல்பட்டுவந்தாலும் அது இந்தக் காலகட்டத்துக்கு உரியதல்லஎன்றே நான் நினைக்கிறேன். அதை சமூகத்தீமை, ஒழிக்கவேண்டிய நோய் என்றுசொல்ல மாட்டேன். ஆனல் அதைவிட மேலான கூட்டு அடையாளங்கள் மூலம் அதுஇடப்பெயர்ச்சி செய்யப்படவேண்டும் என்றே வாதிடுவேன்
காந்தியும் இதே கருத்து நிலையைத்தான் கடைசிக் காலத்தில் வந்துசேர்ந்திருந்தார்
ஜெ