அன்பின் ஜெயமோகன்,
ஈழத்தமிழ் எழுத்துலகு பெரிதும் அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படும் வழமையை முறியடிக்கும் வண்ணம் அயலகத் தமிழ்ப் படைப்புலகு ஈழத்தமிழ்ப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விருது வழங்க முன்வந்திருப்பது சாலவும் மெச்சத்தக்கது, நயக்கத்தக்கது, வியக்கத்தக்கது.
மணி வேலுப்பிள்ளை
அன்புள்ள ஜெ
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். தகுதியான எழுத்தாளர் அவர். காலம் சார்பில் அவரை இங்கே அழைத்து கௌரவித்திருந்தோம்.
காலம் செல்வம்
அன்புள்ள ஜெமோ
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் விசாரித்தபோது அவரது தொகுப்புகள் எவையுமே இங்கே கிடைக்கவில்லை. எந்த நூலகத்திலும் அவரது நூல்கள் இல்லை. [நம்முடைய கல்லூரி நூலகங்களில்கூட இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் இல்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நம் தமிழ் நூல்களை அமெரிக்காவில் வாங்குகிறார்கள் என்று நாம் பெருமை கொள்கிறோம். நம் நூலகங்களில் இலங்கைநூல்களை வாங்குவதே கிடையாது] தெளிவத்தை அவர்களின் நூல்கள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
பெருமாள்
அன்புள்ள பெருமாள்
தெளிவத்தை ஜோசபின் குடைநிழல் உடனே எழுத்து பிரசுரமாகவெளிவரும். மீன்கள் என்ற சிறுகதைத் தொகுதி நற்றிணை வெளியீடாக வரும். பிறநூல்களைக் கொண்டுவர முயல்கிறோம்
ஜெ
ஜெ,
மீன்கள் அற்புதமான சிறுகதை. தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தாளர் யார் என்பதை காட்டும் கதை. சரியான தேர்வு
முரளி ஆர்