ஊட்டி-கவிதையரங்கு

ஊட்டி நாராயண குருகுலத்தில் இது நான் நடத்தும் பதினேழாவது நண்பர்கள் சந்திப்பு. தமிழ் மலையாளக் கவிதை உரையாடலில் ஒன்பதாவது. நித்யா இருந்தபோது நான்கு நண்பர் சந்திப்புகள் நடந்தன. அப்போதெல்லாம் வருடத்தில் நான்கு சந்திப்புகள் என்பது சாதாரணமாக இருந்தது. நித்யா மறைவுக்குப்பின்னர்தான் மலையாள-தமிழ் கவிதைப்பரிமாற்ற அரங்கை ஊட்டிக்குக் கொண்டுசென்றோம். பத்து வருடம் முன்பு குற்றாலத்தில் கலாப்ரியாவின் இல்லத்தில் சாதாரணமாக கூடிய இந்த விவாத அரங்கு கேரள கவிதையில் கணிசமான மாற்றங்களை உருவாக்கிய இலக்கிய நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது. அன்று இளம்கவிஞர்களாக வந்தவர்கள் இன்று பெரிதும் அறியப்படுபவர்களாக ஆகி விட்டிருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை உற்சாகமான நண்பர் சந்திப்பாகவே இதை மனதுக்குள் உருவகித்திருக்கிறேன். ஏப்ரல் முப்பதாம்தேதியே நண்பர் கெ.பி.வினோத், கவிஞர் வா.மணிகண்டன் ஆகியோர் ஊட்டிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். மலையாளக்கவிஞர்கள் அன்று மாலை வந்தார்கள். நானும் அருண்மொழியும் குடும்பமும் அன்று மாலை ஐந்து மணிக்கு பேருந்தில் கிளம்பி மறுநாள் காலை எட்டரை மணிக்குச் சென்று சேர்ந்தோம். பிற நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். வசந்தகுமார், ராஜசுந்தரராஜன், நாஞ்சில்நாடன் க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மகுடேஸ்வரனின் காரில் வந்தார்கள். தேவதச்சன், எம்.யுவன்[யுவன் சந்திரசேகர்]ஆகியோர் சேர்ந்து வந்தார்கள்.

நண்பர் நிர்மால்யாதான் உண்மையில் நிகழ்ச்சியை நடத்தியவர். உணவுக்கு ஏற்பாடுகள் செய்தது, கம்பிளிகள் எடுத்தது என எல்லா ஏற்பாடுகளும் அவர்தான். நான் சென்றிறங்கியபோது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்ததுடன் சரி. பி.ராமன்,பி.பி.ராமசந்திரன்,எம்.ஜோச·ப், அன்வர் அலி, செபாஸ்டின்,வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், விஷ்ணுபிரசாத்,கல்பற்றா நாராயணன் ஆகிய மலையாளக் கவிஞர்கள் பங்குபெற்றார்கள். தமிழில் தேவதச்சன்,சுகுமாரன், எம்.யுவன்,ராஜ சுந்தரராஜன்,க.மோகன ரங்கன், மகுடேஸ்வரன், வா.மணிகண்டன் ஆகியோர் பங்கு பெற்றார்கள். வருவதாகச் சொல்லியிருந்த நான்கு இளம்கவிஞர்கள் வரவில்லை. கவிஞர் தேவதேவன் இதுவரை எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்தது இல்லை. இம்முறை அவரது மகளின் படிப்பு சார்ந்த வேலைக்காக சென்றமையால் வர முடியாமல் ஆயிற்று.

 ஈரோட்டில் இருந்து வழக்கறிஞர் கிருஷ்ணனும், சென்னை வழக்கறிஞர் செந்திலும், விஜயராகவனும், தங்கமணியும் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். மொத்தம் முப்பதுபேர். குருகுல சார்பில் சுவாமி வினய சைதன்யா பார்வையாளராக கலந்துகொண்டார்.

 பதினொரு மணிக்கு அரங்கு தொடங்கியது. பி.ராமன் ஊக்கமூட்டும் ஒரு படைப்பாளியாக கேரளத்தில் அறியப்பட்டவர். சட்டென்று அவர் மௌனமாகி நாலைந்து வருடம் எதுவும் எழுதாமலிருந்தார். சென்ற அரங்குக்கு அவர் வரவில்லை. முதலில் அவரது ‘எழுத்துத் தடை’ பற்றி பேச்சு எழுந்தது. சட்டென்று அப்படி ஒரு இடைவெளி நிகழ என்ன காரணம் என்றபோது ராமன் மூன்று காரணங்கள் சொன்னார். ஒன்று, தன்னைத்தானே திருப்பி எழுதுகிறேனா என்ற ஐயம். இரண்டு, தன் கவிதைகள் மொழியனுபவமாக இல்லாமல் கருத்தனுபவமாக உள்ளனவா என்ற ஐயம். மூன்று, இவற்றுடன் திருமணம் குடும்பம் போன்ற புறச்சிக்கல்களும் சேர்ந்துகொண்டன.

 சுகுமாரனும் இதேபோன்ற ஒரு தடையைச் சந்தித்து மீண்டுகொண்டிருக்கிறார். அவரும் தனக்குரிய சிக்கல்களாகச் சொன்னது ஏறத்தாழ இதையே. தன்னுடைய நடையையும் மொழியையும் பிறர் தொடர்ந்து நகல்செய்து தன் வரிகளை தானே விரும்பாத நிலையை உருவாக்கிவிட்டார்கள் என்றார். அத்துடன் செய்தித்துறையில் கடும் உழைப்பு தேவைப்படும் வேலையும் காரணமாக அமைந்தது. இருவருமே அந்த தடையில் இருந்து மீள்வதற்கான வழியாக மொழிபெயர்ப்பை கைக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். சுகுமாரன் கட்டுரைகள் அனுபவக்குறிப்புகள் அதற்கு தனக்கு மிக உதவியாக இருப்பதாகச் சொன்னார்.

முதலில் பி.ராமனின் கவிதைகள் வாசிக்கப்பட்டன. எங்கள் பொதுவான வழிமுறை என்பதுஒரு கவிதையை முதலில் படைப்பாளியும் பிறகு பிறருமாக மூலமொழியில் நாலைந்துமுறை படிப்பது. பிறகு அதன் மொழிபெயர்ப்பை நாலைந்துமுறை படிப்பது. அதன்மீதான தங்கள் வாசிப்புகளையும் கருத்துக்களையும் விமரிசனங்களையும் பங்கேற்பாளர்கள் சொல்வார்கள். அதை நான் இருமொழிகளுக்கும் மாறி மாறி மொழிபெயர்த்துச் சொல்வேன். முதல் அமர்வில் பி.ராமனின் கவிதைகளை மட்டுமே பேச முடிந்தது.

 மதியத்துக்குப் பின் இன்னொரு அரங்கு.மாலை ஐந்தரைக்கு இரண்டாம் அரங்கு முடிந்தபின் தனித்தனிக் குழுக்களாக மாலைநடை சென்றோம். ஏழரை மணிக்கு திரும்பி வந்து மீண்டும் கவிதை அரங்கு. இரவு பத்து மணி வரை. ஊட்டியில் இம்முறை காலநிலை மிக சிறப்பாக இருந்தது. மழைபெய்வதுதான் ஊட்டி அனுபவத்தைச் சிதைக்கும். இம்முறை மழையே இல்லை. மிதமான குளிர் இருந்தது. விடியற்காலையில் மட்டுமே குளிர் சற்று அதிகரித்தது. குருகுலத்தில் இருந்து லவ்டேல் பள்ளிக்குப் பின்புறம் இறங்கி நடந்துவரும் வழி மிக அழகான ஒன்று.

 மறுநாள் மூன்று அரங்குகளும் முழுமையாக நடந்தன. நான் நண்பர்கள் எட்டுபேரை அழைத்துக் கொண்டு கேர்ன்ஹில் என்ற குன்றுக்குச் சென்றேன். வனத்துறையால் பராமரிக்கபப்டும் இந்தக் குன்று அருமையான ஒரு இடம். சுற்றுலாப்பயணிகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சமீபகாலமாக முற்றாகவே எவரையும் விடுவதில்லை. ஆகவே வழியெல்லாம் மரங்கள் விழுந்து ஏறித்தாவிச் செல்ல வேண்டியிருந்தது. திரும்பும் வழியில் வழி தவறி குன்றுக்கு மறுபக்கம் இறங்கி பத்து கிலோமீட்டர் விலகி சாலைக்கு வந்தோம். கால் ஓய நடந்து குருகுலம் வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதனால் எட்டரை மணிக்கு உத்தேசித்திருந்த அரங்கை பத்துக்குத்தான் தொடங்கவேண்டியிருந்தது.

சனிக்கிழமை மதியத்திலேயே உத்தேசித்தது போலக் கவிதை அரங்கு முடிந்தது. மதியமே பலர் கிளம்பிச் சென்றார்கள். நானும் நண்பர்களும் அரசு தேயிலைத்தோட்டத்துக்குள் அருமையான ஒரு ஊடுவழியில் நீண்ட நடைபயணம் மேற்கொண்டோம். இரவு எம்.யுவன் வழக்கம்போல பாடினார். சஹானா, தன்யாஸி ராகங்களில் அமைந்த திரைப்பாடல்களை தொகுத்துப் பாடினார்.

 மறுநாள் காலையிலேயே எழவேண்டியிருந்தமையால் பத்து மணிக்கே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு அவலாஞ்சி கிளம்பினோம். அவலாஞ்சியில் அனுமதி எப்போதும் நிராகரிக்கத்தக்கது. வனத்துறை பொதுவாக அங்கே ஆட்களை விடுவதில்லை. ஆகவே உள்ளூர உதைப்பு இருந்துகொண்டே இருந்தது. நண்பர் லதானந்த் அவர்கள் பலமுறை தொலைபேசியில் சொல்லி அனுமதி பெற்றுத்தந்தார்.

இம்முறை அவலாஞ்சி புல்வெளிக்குன்றுகளில் வெகுதூரம் ஏறி மறுபக்கம் சென்று அங்கே புல்வெளி கடல்போல விரிந்து அலையடித்த மச்சைப்பெருவெளியைக் கண்டோம். காடு முடிந்து புல்வெளி கண்ணில் படும் அனுபவமே கல்பற்றா நாராயணனை ‘ஆ!” என்று அலறச் செய்துவிட்டது. புல்குன்றுகளின் உச்சியிலும் புல்வெளிவிரிவிலும் அரை மணி நேரம் முற்றிலும் அமைதியாக அமர்ந்து அதை நோக்கினோம். புல் சதுப்பில் யானைக்கூட்டம் நடந்து உருவான ஆழமான குழிகளில் கால்மாட்டி தடுமாறி ஒவ்வொருவராக விழுந்து எழுந்த அனுபவம் உற்சாகமாக இருந்தது. திரும்பும் வழியில் ஒரு செந்நாயைப் பார்த்தோம். எங்களை வெகுதூரத்துக்கு கூர்ந்து நோக்கியயபடி ஓடி புதருக்குள் மறைந்தது.

ஞாயிறு மாலை கிளம்பி ஊர்வந்து சேர்ந்தோம். இம்முறையும் கவிதைப்பரிமாற்ற அரங்கு மிகுந்த நட்பார்ந்த வகையிலும் ஒருகணம் கூட வீணாகாத செறிவுடனும் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தக் கவியரங்கில் அதிகமாக பாராட்டப்பட்டவை இளம் கவிஞர் விஷ்ணுபிரசாத் எழுதிய வரிகளே. அவர்தான் இவ்வரங்கில் நட்சத்திரம் என சொல்லவேண்டும். ஈரோடு நண்பர்களும் இதை மிகப்பரவசமான அனுபவமாகச் சொன்னார்கள்.

கவிதையில் போதிய பரிச்சயம் இல்லாதவர்களைப் பொறுத்தவரை இவ்வரங்கு ஒரு பெரிய பயிற்சிக்களம். சுமார் எண்பது கவிதைகள். ஒவ்வொன்றுக்கும் குறைந்தது அரைமணிநேர விளக்கங்கள், வாசிப்புகள், விமரிசனங்கள். சட்சட்டென்று கவிதைகளை நோக்கும் சாத்தியங்கள் திறந்துகொள்ள ஒரு கட்டத்தில் கவிதைகளை அவர்களே விரிவாக வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு புதிய கண் கிடைப்பதுபோன்றது இது என்றார் ஒரு நண்பர்.

  அரங்கில் வாசிக்கபப்ட்ட மலையாளக் கவிதைகளை தனியாகக் காண்க

http://jeyamohan.in/?p=26

முந்தைய கட்டுரைகள்

http://jeyamohan.in/?p=411

http://jeyamohan.in/?p=329

http://jeyamohan.in/?p=26

முந்தைய கட்டுரைகீதைவெளி
அடுத்த கட்டுரைஜூவியின் பதினாறாம் பக்கம்.