அன்புள்ள ஜெ
தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கும் அறிவிப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவில் அளிக்கப்படும் இலக்கியவிருதுகளில் இலங்கைத்தமிழ்ப் படைப்பாளிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த ஊரில் இருந்து எந்த வாழ்க்கையை எழுதினாலும் அவர்களை தமிழ் எழுத்தாளர்களாகவே கருதவேண்டும் என்பதே சரியானது. வரும்காலத்தில் தமிழில் எழுதுபவர்களில் தமிழகத்தில் வாழ்பவர்கள் குறைந்துவிடுவார்கள் என்றுகூடத் தோன்றுகிறது.
சாமிநாதன்
அன்புள்ள ஜெயமோகன்,
தெளிவத்தை ஜோசப் அவர்களின் இணையதளத்திற்குச் சென்றேன். அது பாமினி எழுத்துருவிலே இருக்கிறது என்று நீங்கள் சொன்னபிறகே என்னால் வாசிக்கமுடிந்தது. அவரது இரண்டு கதைகளை இணையத்திலேயே தேடி வாசித்தேன். மீன்கள் கதையை நீங்கள் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் சேர்த்திருந்தீர்கள். நான் அதை தேடிக்கொண்டிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த வ.அ.ராசரத்தினத்தின் தோணி ஏற்கனவே வாசித்திருந்தேன். சிறப்பான கதை. மீன்களை இப்போதுதான் வாசிக்கமுடிந்தது. மிகச்சிறந்த கதை. அடக்கமான மொழியிலே எழுதப்பட்டது. அந்த மண்ணின் ஐந்தடி குடிசைகட்டக்கூட அவர்களுக்கு இடமில்லை என்பது மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருந்தது. வீடு என்பது ஒரு உடல்தேவை மட்டும் அல்ல. அது ஒரு பண்பாட்டு விஷயம். வீடு உள்ளவன் சம்சாரி, இல்லாதவன் நாடோடி. வீடு இருந்தும் தெருவில் வாழ்வதுபோல நாடோடி வாழ்க்கையே அந்தமக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் வந்தது. மிகச்சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. நன்றி
ஜெயராமன்