மங்கள்யான்

1988 ல் ராஜீவ்காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பதவியேற்று இந்திய தொலைதொடர்புத்துறையை நவீனப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்திருந்தார். நான் தற்காலிக ஊழியராகத் தொலைபேசித்துறையில் பணியாற்றிவந்தேன்.

அன்று தொலைத்தொடர்பை நவீனப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ராஜீவ் அரசால் ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல அதற்கு இடதுசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில் பணக்காரர்கள் தொலைபேசியில் பேசிக் களிக்க பணம் வீணடிக்கப்படுகிறது என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் அன்று தொலைபேசி என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் ஒரு கருவி. நான் தொலைபேசித்துறையில் வேலைக்குச் சேரும்போது இரண்டுமுறைதான் தொலைபேசியில் பேசியிருந்தேன். கார், தொலைபேசி இரண்டும் அந்தஸ்தின் சின்னங்கள் மட்டுமே.

காரணம் அன்று தொலைபேசி மிகமிக செலவேறியது.நாகர்கோயிலில் இருந்து வள்ளியூருக்குப் பேச மூன்று நிமிடங்களுக்கு சாதாரணக் கட்டணம் நான்கு ரூபாய். அவசர அழைப்பு என்றால் எட்டு ரூபாய். மின்னல்வேக அழைப்பு என்றால் 32 ரூபாய். அன்று ஒரு இடைநிலை தொலைபேசி ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மாதம் 450 ரூ என்பதை வைத்துப்பார்த்தால் நான்கு ரூபாயை இன்றைய கணக்கில் முப்பது மடங்காகக் கணக்கிடவேண்டும். அதாவது 120 ரூபாய். இன்று எல்லா அழைப்புகளும் மின்னல்வேக அழைப்புகள்தான். அப்படிப்பார்த்தால் 960 ரூபாய். இன்று அதே அழைப்புக்கு 45 பைசா செலவாகும். அதாவது கிட்டத்தட்ட இரண்டாயிரம் மடங்கு மலிவு! நினைத்தே பார்க்கமுடியவில்லை.

அன்று இந்தியாவெங்கும் கோடானுகோடிபேர் பட்டினி கிடந்தார்கள் என்பதும் உண்மையே.நான் எண்பதுகளில் இந்தியாவெங்கும் அலைந்த காலகட்டத்தில் தமிழர்கள் கேரளத்துக்கும் பெங்களூருக்கும் கூலிவேலைக்கு கூட்டம்கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். இந்தியாவில் எங்கு பயணம்செய்தாலும் ஒருவேளை உணவுகூட இல்லாத பட்டினிப்பட்டாளங்களைக் காணமுடியும். சிறு நகரமுனைகளில்கூட கூலிவேலைசெய்ய வாய்ப்பு கோரி நூற்றுக்கணக்கானவர்கள் காத்து நிற்பார்கள். மேஸ்திரிகள் வந்து மாடு தரம் பார்ப்பதுபோல ஒவ்வொருவரையாகத் தட்டிபபர்த்து கால்வாசிப்பேரை கூட்டிச்செல்ல மிச்சம்பேர் மனம் உடைந்து அமர்ந்திருப்பார்கள். பல்லாயிரக்கணக்கான் கை ரிக்‌ஷாக்கள் துருப்பிடித்த சைக்கிள் ரிக்‌ஷாக்கள் நகரங்களில் கூடிக்கிடந்தன. பயணிகளை மொய்த்துக்கொண்டு ‘ஐம்பது பைசா சாப்! முப்பது பைசா சாப்’ என கெஞ்சிக்கூச்சலிட்டன.

தொலைபேசித்துறையில் தினமொன்றுக்கு நான்கு ரூபாய் கூலிக்கு குழிவெட்டும் வேலைக்கு இருபதுபேர் தேவை என்றால் முந்நூறுபேர் வந்து விடிகாலையிலேயே காத்துக்கிடப்பார்கள். ஆகவே அன்று இடதுசாரித் தொழிற்சங்கத்தில் செயல்பட்டு வந்த எனக்கு அவர்கள் சொன்னது சரி என்றே பட்டது. நாங்கள் மத்தியஅரசின் மக்கள்விரோத , ஊதாரித் திட்டங்களை எதிர்த்து நடத்திய இருபதுகிலோமீட்டர் பாதயாத்திரையில் நான் ஆவேசமாக முன்னால் நின்று கோஷமிட்டேன். ‘கஞ்சி கேட்கும் ஜனங்களுக்கு கம்பி தருகிற சர்க்காரே, மறக்காது மறக்காது எங்கள் தலைமுறைகள் மறக்காது’ என்ற நான் எழுதிய கோஷம் அன்று பிரபலமாக இருந்தது

சாம் பிட்ரோடா அப்போது ஒரு மாநாட்டுக்காக கோழிக்கோடுக்கு வந்தார். அதில் அவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொன்னார். ‘ஒட்டுமொத்தமாக ஒரே பெரிய முதலீடுதான் இதில் உள்ளது. திட்டமிட்டு அதைச் செய்தால் இந்தியாவின் குன்றுகளில் நிலைநாட்டப்படும் கோபுரங்கள் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரே தொலைத்தொடர்புவலையில் இணைத்துவிடலாம். அதன்பின் தொலைபேசிக்கட்டணம் குறைய ஆரம்பிக்கும். மீன் விற்பவரும் கீரை விற்பவரும் கையில் ஒரு கம்பியில்லா தொலைபேசியை வைத்திருப்பார்கள். அதைக்கொண்டு ஒருநாளுக்கு ஐந்துமணிநேரம் அவர்கள் பேசினாலும் இன்று ஒரு அழைப்புக்கு ஆகும் செலவுகூட ஆகாது’

அவர் செங்கல் அளவிருந்த ஒரு கருவியை காட்டி ‘இதைக்கொண்டு பஸ்சில் போனபடியே பேசமுடியும்’ என்றார் அவர் சொல்லிக்கொண்டிருக்கவே அரங்கில் சிரிப்பொலி நிறைந்தது. நாங்கள் கடும் கோபத்துடன் ‘வெட்கம் வெட்கம்!’ என்று கூச்சலிட்டோம். அன்றெல்லாம் தொலைபேசியில் பேச ஒலிவாங்கியை எடுத்துக் காதில் வைத்துக் காத்திருக்கவேண்டும். ஊழியர் மறுமுனையில் வந்து கேட்பார். அழைப்பை பதிவுசெய்துவிட்டு தொலைபேசி அருகிலேயே காத்திருக்கவேண்டும். ஊழியர் அந்த எண்ணை அழைத்தபின் நம்மைஅழைத்து இணைப்பை அளிப்பார்.நாகர்கோயில் வள்ளியூர் அழைப்புக்கு சாதாரணமாக ஒருமணிநேரம் ஆகும். வெளிமாநில இணைப்புக்கு முழுநாளும் ஆகும்.

சாம் தொடர்ந்தார் ‘அந்தக் கம்பியில்லா தொலைபேசி மக்களின் வணிகத்தைப்பெருக்கும். வேலைகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு தகவல்தொழில்நுட்பத்துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்….வறுமை நீங்கும். பட்டினி அகலும்’ சிரிப்பு சினமாக மாறியது. ஊளைகள் கூச்சல்கள். நாங்கள் வெளியேறி வெளியே நின்று ‘சாம் பிட்ரோடா திரும்பிப்போ’ என்று கூச்சலிட்டோம். நவீனமயமாக்கலால் எங்களில் பாதிப்பேருக்கு வேலைபோகும் என்ற அச்சம் அடிபப்டை உணர்ச்சியாக இருந்தது.

1989 டிசம்பரில் வி பி சிங் அமைச்சரவை வந்து தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இடதுசாரிகளின் அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் பதவியேற்றதும் பிட்ரோடா அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது நாங்கள் துள்ளிக்குதித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினோம்.

நாங்கள் எதிர்த்தாலும் தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருந்தன. எதையும் அன்று ஊகிக்கவே முடியவில்லை. டியானன் மைன் சதுக்கத்தில் 1989ல் நிகழ்ந்த படுகொலைகள் சீனா முதலாளித்துவம் நோக்கி வலுவான அடியெடுத்துவைப்பதை தெளிவாக்கின. 1991ல் சோவியத் யூனியன் உடைந்தது கனவிலும் நினைக்காத வரலாற்று நிகழ்வு. உடைந்து ஆறுமாதமாகியும்கூட ஏதோ நிகழ்ந்து எல்லாம் சரியாகிவிடுமென நம்பியவர்கள் பலர் இருந்தனர், நானும்தான்

அதன்பின் உலகமயமாக்கம், சுதந்திர வணிகம் ஆரம்பித்தது. இந்தியத்தெருக்களில் அம்பாசிடர்களும் ஃபியட்டுகளும் மட்டும் ஓடிய காலம் மறைந்தது. ஒரு ‘செவன் ஓ கிளாக் பிளேடு’க்காக வெளிநாடு சென்று மீண்ட நண்பனைச்சென்று பார்க்கும் காலகட்டம் நினைவாக மாறியது. வேலை என்றாலே அரசுவேலைதான் என்ற நிலை அகன்றது. அரசுவேலைக்கு இருந்த முக்கியத்துவமே மறைந்தது.முக்கியமாக சேவைத்துறையில் பெரும் மாற்றம்.

நான் 2000த்தில் இந்தியப்பயணம் மேற்கொள்ளும்போது முதன்மையாகக் கவனித்த ஒன்று இந்தியாவின் வறுமை பெருமளவுக்கு விலகியிருக்கிறது என்பதையே. எண்பதுகளில் இருந்த கடுமையான உணவுப்பஞ்சம் அகன்றிருந்தது. பிகார், மேற்குவங்கம் தவிர எங்குமே கொடூரமான வறுமையைக் காணமுடியவில்லை. நகரங்கள் வளர்ந்தன. கிராமங்களில்கூட உயர்தரக் கல்விக்கூடங்கள் வந்தன. அடித்தளமக்கள்கூட நம்பிக்கையுடன் கல்வியை நோக்கி வந்தார்கள். கிராமங்களில் ஓலைகுடிசைகள் கண்ணெதிரே இல்லாமலாகிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஓரளவு வசதியான அடித்தளக்குடியிருப்புகள் உருவாகி வந்தன. கிராமங்களில் டிவிஎஸ் 50 சாதாரணமாக தென்பட்டது.

தென்மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரா பெரும் எழுச்சி பெற்றதை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களின் வளர்ச்சி ஏற்கனவே ஆரம்பித்திருந்ததுதான். 2008 இல் பயணம் செல்லும்போது மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும்கூட வளர்ச்சியை நோக்கி வர ஆரம்பித்திருந்தன. 2012இல் ஒரிசா வளர்ச்சியின் பாதையில் வந்திருப்பதை, கிராமப்புற வறுமை மறைந்திருப்பதைக் கண்டேன். அந்த வளர்ச்சிக்கு தகவல்தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த பாய்ச்சல் முக்கியமான காரணம். பின்னர் தாராளமயமாக்கம் நிகழ்ந்தபோது அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நம்மை தயார்படுத்தி வைத்தது சாம் பிட்ரோடாவின் தகவல்தொழில்நுட்பப்புரட்சிதான். நேருவின் சோஷலிசமும், இந்திரா காந்தியின் கரீபி கடாவோ கோஷமும் செய்யாததை தொழில்நுட்பம் செய்தது என்றே நான் நினைக்கிறேன்

நான் நவீனத் தொழில்நுட்பத்தின் கண்மூடித்தனமான ஆதரவாளனல்ல. அதன்மேல் ஐயம் கொண்டவன். ஆனால் முதலாளித்துவப் பொருளியலை ஏற்றுக்கொண்டபின் நவீனத் தொழில்நுட்பத்தை வெளியே நிறுத்துவதென்பது அசட்டுத்தனம் என்றே நினைக்கிறேன். நவீனத்தொழில்நுட்பம் பட்டினியை அகற்றுமென்றால் அகற்றட்டுமே என்றுதான் பட்டினியைக் கண்டவன் என்றமுறையில் என்னால் சொல்லமுடிகிறது.

வறுமை ஒழிப்புக்கு வேறு வழி இல்லையா? உண்டு. அது காந்தியப்பொருளியல் என்றே நான் நம்புகிறேன். இந்த நவீனத்தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமங்கள் கைவிடப்பட்டு வேளாண்மை அழிகிறது. இது சமச்சீரான வளர்ச்சி அல்ல. இந்நிலையைத் தவிர்க்க காந்தியவழி மட்டுமே உள்ளது. ஆனால் அது ஒட்டுமொத்தமான மாற்றம் வழியாகவே சாத்தியம். பொருளியல்-நிர்வாகம் இரு தளத்திலும் அடிப்படையான மாற்றம் தேவை அதற்கு. இன்றைய சூழலில் நவீனத்தொழில்நுட்பத்தைச் சாராமல் வேறுவழியில்லை.

நான் பொருளியல் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்றாலும் கருத்துரைக்கும் தகுதிகொண்டவன் அல்ல. என் கருத்து குடிமகனாக, முன்னாள் தொழிற்சங்க ஊழியனாக மட்டுமே.ஆகவே புள்ளிவிவரங்கள், கொள்கைகள் ஆகியவை சார்ந்த விவாதத்திற்கு நானில்லை. நான் சொல்வது என் சொந்த அனுபவம் சார்ந்த அவதானிப்பை மட்டுமே. அதுவே என்னை முடிவெடுகக்ச் செய்கிறது.

தமிழில் இதுபற்றி பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையையே எனக்கு உவப்பான குரலாகக் காண்கிறேன் மங்கள்யான் இந்தியத் தொழில்நுட்பத்தின் ஒரு பதாகை. நாம் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்திருக்கிறோம் என்பதை மட்டுமல்லாது சர்வதேசத்தரத்தை வைத்துப்பார்த்தால் அடிமட்டச் செலவில் நம்மால் உயர்தொழில்நுட்பத்தைச் சாதிக்கமுடிகிறது என்பதற்கும் அடையாளம். அதற்கான செலவு இந்தியாவில் ஒரு மாநில ஊழலில் அழியும் பணத்தின் துளிகூட இல்லை. ஒட்டுமொத்தமாக இதன்மூலம் நமக்குக் கிடைப்பது நன்மையே.

ஆகவேதான் இன்று மங்கள்யான் திட்டம் பற்றி இடதுசாரிகள் எழுப்பும் கோஷங்களை அவநம்பிக்கையுடன் மட்டுமே பார்க்கிறேன். அதே கோஷம், அதே வரிகள். யார்கண்டது, கேரளத்தில் அன்று நான் எழுதிய கோஷங்களையே கூட இடதுசாரிகள் இப்போதும் முழங்கிக்கொண்டிருக்கலாம் இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2