ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைவாசகர் ஒரு பிரமிப்பை அடைவார். ‘இனிமேல் கவிதையில் என்ன எழுத இருக்கிறது?’ அந்தப்பிரமிப்பிலிருந்துதான் ‘கவிதை செத்துவிட்டது’ என்ற வழக்கமான பல்லவி எழுகிறது. எனக்கே அடிக்கடி அப்படித்தோன்றும். ஆனால் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிய ஆதிகாரணம் மனித மனதுக்குள் வேர் போல இருந்துகொண்டேதான் இருக்கும் என்று நினைப்பேன். அதிலிருந்து கவிதை எப்போதும் புதியதாக முளைக்கும் என்றும்.
இந்தச்சலிப்புக்கு இரண்டுகாரணங்கள். ஒன்று மேலான கவிதை அடையும் உச்சத்தை நாம் அறிவது. இரண்டு அந்த உச்சம் ஒரு வடிவமாகச் சுருக்கப்பட்டு எல்லாராலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது தரும் சலிப்பு. நாம் தேய்வழக்கு என நினைக்கும் கவிதைகளைப்பாருங்கள், அவை சிறந்த கவிதைகளின் அதே வடிவை தாங்களும் அடைய முயன்றிருக்கும்.
தமிழில் பாரதிக்குப்பின் நவீனமரபுக்கவிதைகளின் வெள்ளம் பெருகி கவிதை என்றாலே கதறும் நிலை வந்தது. அந்த அலையின் பெரும்பாலான கவிஞர்கள் இன்று வெறும் சரித்திரப் பெயர்கள்- பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் உட்பட.புதுக்கவிதை அந்தத் தேக்கத்தை உடைத்தது.
உருவகங்களாக நிறைந்து வழிந்த புதுக்கவிதையில் படிமவியல் பெரும் பாய்ச்சலாக அமைந்தது. ஆனால் அரை நூற்றாண்டுக்குள் படிமத்தொழிற்சாலைகள் தமிழில் உருவாகிவிட்டன. காட்சி ஊடகத்தில் நேர்கோடற்ற படத்தொகுப்பு மூலம் முடிவில்லாத படிமங்களை உருவாக்கித்தள்ளமுடியும் என்ற நிலை வந்ததுமே படிமவியல் காலாவதியாகிவிட்டது.
இனி கவிதை இல்லை, அவ்வளவுதான் என்ற நினைப்பு வந்தபோதுதான் முற்றிலும் படிமத்தை துறந்து நுண்சித்தரிப்புகளாக, மாற்றுமொழிவெளிப்பாடுகளாக மட்டுமே நிலைகொள்ளும் கவிதைகள் வெளிவந்தன. தமிழில் அத்தகைய கவிதைகளை உருவாக்கிய இளைய தலைமுறைக் கவிஞர்களில் முகுந்த் நாகராஜன் எனக்குப் பிடித்தமானவர்
இன்று நான் மிகமிக விரும்பும் கவிஞர் என்றால் ‘இசை’ தான். இது என்னுடைய தனிப்பட்ட ரசனை மட்டுமல்ல என்பதை சமீபத்தில் ஏற்காட்டில் எங்கள் இலக்கிய கூட்டத்தில் தனித்தனியாக நவீனக் கவிதைகளைப்பற்றி பேசிய அனைவருமே இசை கவிதைகளை பொதுவாகச் சுட்டியது எனக்கு காட்டியது.
நேற்றுவரை வழக்கமாக எதையெல்லாம் கவிதை என நினைத்துவந்தோமோ அவை ஏதுமில்லாத அசல் கவிதைகள் இவை. இப்படி புதியதாகப்பிறக்கிறது என்பதே நவீன கவிதையின் சிறப்பியல்பு. இவை ஒரு தருணத்தின் மனநிலையைச் சொல்கின்றன. ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றன. அவை ஏன் கவிதையாகின்றன என்றால் அந்த துளி சொல்லப்படாத ஒரு பெரும் பின்னணியைச் சுட்டிநிற்கிறது என்பதனால்தான்
நேற்றுவரை கவிதைகள் கொண்டிருந்த ‘தீவிர’ பாவனை இல்லாதவை இக்கவிதைகள். ‘சரிதான் இப்ப என்ன கெட்டுப்போச்சு’ என்ற மனநிலையில் வாழ்க்கையைப்பார்ப்பவை. ஆனால் கவிதை என்றென்றும் எவற்றுக்காகவெல்லாம் கண்ணீர்விட்டதோ அவையெல்லாம் இவற்றிலும் பேசப்படுகின்றன.