எழுத்துரு கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

ஜெயமோகன் அவர் களின் கேள்வி சரியானதுதான். அறிஞர் வா.செ.குழந்தைசாமி
அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே தம்முடைய புத்தகம் ஒன்றில் இக்கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள்.இன்றுள்ள நிலையில் இது மனங்கொள்ளத் தக்கதுதான். அவசரத் தேவையுங்கூட. உண்மையான தமிழ் அறிஞர்களும் உணர்வாளர்களும் ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. செய்வார்களா?

தங்கள் உண்மையுள்ள,

வடிவேல்.வ

வீரபாண்டியன்பட்டினம்
திருச்செந்தூர்.

***

அன்புள்ள வடிவேல்

ஈ.வே.ராவில் ஆரம்பித்து வா.செ.குழந்தைசாமி உட்பட பல முக்கியமான தமிழறிஞர்கள் பல கோணங்களில் சிறிய வேறுபாடுகளுடன் சொல்லி முன்பும் விவாதிக்கப்பட்ட கருத்துதான் அது. இந்தியராணுவத்தில் இந்திக்கு இம்முறை தொடங்கப்பட்டதென்றாலும் நீடிக்கவில்லை. பல தளங்களில் இப்போதும் நடைமுறையிலும் உள்ளது

நான் வேண்டுமென்றேதான் தமிழறிஞர்களின் பெயரை மேற்கோள் காட்டவில்லை. ஒரு கருத்தை கருத்தாக மட்டுமே எதிர்கொள்ள நம்மவர்களால் முடிகிறதா என்று பார்க்க விரும்பினேன். மாறுதல்கள் மீதான நம்மவர்களின் பொதுமனநிலை என்ன என்பதை கணிப்பதே என் நோக்கம். தமிழறிஞர்கள் பெயரை வரிசையாகச் சொல்லியிருந்தால் எதிர்வினைகள் வேறுமாதிரி அமைந்திருக்கும். நம்மவர்களை எனக்குத்தெரியாதா என்ன?

ஜெ

***

ஜெ,

இதை வாசிக்கும் பொழுதே எனக்கு தகலாக் (Tagalog) மொழி தான் நினைவுக்கு வந்தது. ஃபிலிப்பைன்ஸ் மக்களின் மொழி அது. ஆங்கில எழுத்துக்களையே அதற்கான எழுத்துருவாக பயன்படுத்துகின்றனர். அதற்கென்று ஒரு அழகான எழுத்துரு இருந்தது. ஆனால் ஃபிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனியான பொழுது அவர்கள் பள்ளிகளில் ஸ்பானிய எழுத்துகளை (latin alphabets) கற்றுத்தந்து மெல்ல அதுவே தகலாகின் எழுத்துருவாக மாறி விட்டது. நான் பேசிப்பார்த்தவரை என் பிலிப்பினோ நண்பர்களுக்கு இது ஒரு குறையாகவே படவில்லை. ஆனால் தமிழ் இத்திசை நோக்கி நகரத்தான் வேண்டுமா?

சென்னையில் வாழும் என் நண்பர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளின் இரண்டாம் மொழியாக இந்தி அல்லது ப்ரென்சை எடுத்திருக்கிறார்கள். ஏழு வயது சிறுவன் கடைப்பலகையில் உள்ள தமிழ் சொற்களை எழுத்துக்கூட்டி படிப்பதை பெருமை பொங்க பார்க்கும் தந்தையை என்ன என்று சொல்வது?

ஆனால் நிச்சயமாக பள்ளிகளில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்குவதன் மூலம் இந்நிலையை எதிர்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. இதை செய்வது எவ்விதத்திலும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

சித்தார்த் வெங்கடேசன்

***

அன்புள்ள சித்தார்த்,

மலாய்மொழியின் எழுத்துரு ஆங்கிலமே. http://www.omniglot.com/writing/langalph.htm இணைப்பில் சென்று பார்த்தால் அப்படி எத்தனை மொழிகள் என்று காணலாம்

ஜெ

*

வழக்கம்போல இந்தக் கருத்துக்கும் நான் சொன்னதற்குச் சம்பந்தமே இல்லாமல், கட்டுரையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் எதிர்வினைகள். ’ஜெயமோகன் உடனே அவரது எழுத்துக்களை தங்கிலீஷில் போடவேண்டும்’ என்று நான் அப்படித்தான் சொல்வார்கள் என ஏற்கனவே நினைப்பவர்கள் எல்லாரும் தவறாமல் கருத்து தெரிவித்திருப்பது ஆழமான மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் இன்று ஆங்கில எழுத்துருவில் தமிழை வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்றோ, இப்போதே நூல்களை அப்படி வெளியிடமுடியும் என்றோ, சொல்லவில்லை என்பதை அவர்களுக்கு வழக்கம்போல மீண்டும் பசுமரத்தாணிபோல சொல்லிக்கொள்கிறேன். நான் சொன்னது இவ்வாறு ஒரே எழுத்துருவாக ஆக்கினால் அடுத்த தலைமுறை அதை எளிதில் வாசிக்கும் என்று மட்டும்தான் என்பதை மீண்டும் கல்வெட்டாக, தினத்தந்தி கொட்டை எழுத்தாகச் சொல்லிக்கொள்கிறேன்.

மேலும் இக்கட்டுரையை இவ்வடிவில் எழுத எனக்கு எழுத்தாளனாக ஒரு காரணம் உள்ளது. நான் சில விஷயங்களைச் சரிபார்த்துக்கொள்ள, சில விஷயங்களை சோதனை செய்துகொள்ள விரும்பினேன். வழக்கம்போல ஈரோடு கிருஷ்ணனிடன் விவாதித்து அதற்காகவே இதை எழுதினேன். என் கணிப்புகள் தவறல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவற்றை இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்-இணையத்தில்…
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.