இரவு -கடிதம்

வணக்கத்திற்குரிய ஜெ அவர்களுக்கு,

தங்களின் “இரவு” என்னை மிகவும் அசர வைத்து விட்டது. இரவில் விழித்திருக்கும் ஒரு மாபெரும் சமூகத்தின் அறிமுகம் ஆச்சரியப்படுத்தியது. இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இரவு வாழ்க்கையை தேடி வருகின்றனர். அதன் தீவிரத்தை உணராமலேயே, தானறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு இதுதான் அதன் முழுமை என அறைகூவல் விடுக்கின்றனர், உதயபானு, முகர்ஜி போல். ஆனால் எல்லாவற்றிலும் சித்தாந்தம், தருக்கம் என பேசி வாயடைத்த மேனன், கமலம், பிரசண்டானந்தா உட்பட பலர் அதன் கோரப்பசிக்கு இரையானதுதான் உச்சக்கட்ட சோகத்தைத் தருகிறது.

நீலிமாவின் அழுத்தமான அமைதியும், அகோர கோபமும் என்னை உலுக்கவில்லை, அவளது அமைதியில் நான் எதிர்பார்த்த கோபம் தெரிந்தது. அனைவரது இரவையும் வெளுத்தெடுத்தவள், கமலம்தான். அவளது இரவு எத்தனை உக்கிரமானது. கனவையே வாழ்க்கையென வாழ்ந்த பலரது விழிகளில் விளக்கின் பேரொளியைப் பாய்ச்சி அஞ்சி நடுங்க வைத்துவிட்டது. அவள் தேடிய பசிகொண்ட காமம், என்னையும் உசுப்பிவிட்டது. இரவில் காமம் புதிதல்ல, ஆனாலும் கமலம் தேடிய மறைவு காமம் முகர்ஜி, உதய பானுவைப் போல் அல்லாமல், கண்ணில் விழுந்த சிறு தூசியாய் இப்பொழுதும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. பெரும் கோபம் கூட தீவிரம் குறைந்த உடன் அடங்கி விடும், ஆனால் இந்த உறுத்தல், ஆறவே இல்லை.

இரவிலும் பகலின் ஒழுக்கத்தன்மையைத் தேடியதுதான் காரணமாக இருக்குமோ? சரவணன் போல் எல்லாத் தாக்கத்தையும் மென்று முழுங்கி உட்கிரகிக்க வேண்டுமா? எல்லாப் பெண்களும் யட்சியின் வடிவம்தான், அவளது யட்சிய தன்மையை வெளிக்காட்டும் தருணங்களை எதிர்பார்த்துக் காத்திராமல், வெளிக்காட்டிய தருணங்களின் யட்சிய தன்மையை தேடாமலும், அதுவும் அவளே என ஏற்றுக்கொள்ள மனம் வேண்டுமா?

நீலிமா போன்றவர்களின் அமைதியோ அகோரமோ அதிகம் சலனப்படுத்தவில்லை, கமலம் போன்றோரின் அகோரம் ஆழிப் பேரலையாய் எல்லாவற்றையும் உள்ளிழுத்துப் பின் தூக்கி எறிகிறது.

ஹரிஹரன் கண்ணன்

அன்புள்ள ஹரிஹரன்,

இரவு நாவல் முன்வைக்கும் கேள்வி ஒன்றுதான். பகல் என நம் முன் விரிந்துகிடப்பவை நாம் இரவில் விதைகளாக உள்ளுக்குள் வைத்திருப்பவைதாமா? அப்படியென்றால் விதைகளின் உலகிலேயே வாழ்வது எப்படி இருக்கும். அந்த விதைகளின் மூலம் எதுவாக இருக்கும்? இரவின் இரவைப்பற்றிய நாவல் எனலாம்

அது யோக இருள் என்று சொல்லப்படும் ஆழமா அல்லது காம குரோத மோகங்களின் ஆழமா?

உங்கள் வாசிப்பு மகிழ்ச்சியளிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து