இந்துவில் சமீபத்தில் வாசித்த செய்தி மனதைக் கவர்ந்தது. குமரிமாவட்டத்தில் உள்ள பல்லாயிரம் வங்காள, பிகாரிய உழைப்பாளர்களை நானும் கவனித்துவருகிறேன். குமரிமாவட்டத்திற்கு இணையாகவே கேரளத்திலும் வங்காள-பீகார் மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு கேரளம் எதுவுமே செய்யவில்லை. இப்படி ஒரு நல்லெண்ண முயற்சி எங்கள் மாவட்டத்தில் நடந்திருபப்தில் பெருமை கொள்கிறேன்.
வங்காளத்தொழிலாளர்கள் கூட்டம்கூட்டமாக கேரளத்துக்கு வேலைசெய்ய வந்துகொண்டிருந்தபோது கேரளத்தில் தோழர்கள் ரயில்நிலையம் சென்று அவர்களை திருப்பி அனுப்பமுயன்றனர் என்பது நாளிதழ்கள் வெளியிட்ட செய்தி. கேரள இடதுசாரிகளை அவமானப்படுத்துவதற்காக காங்கிரஸ்காரர்கள் அவர்களைக் கொண்டுவருகிறார்கள் என்று வாதிட்டனர் அவர்கள். அந்த தொழிலாளர்களை அச்சுறுத்தியும் அவமதித்தும் துரத்தவும் முயன்றனர்.
தொடர்ச்சியாக வங்காளத்தை ஆண்ட இடதுசாரி அரசு வங்காளத்தை இந்தியாவிலேயே பழமையான, வளர்ச்சியற்ற அரசாக வைத்திருப்பதன் அவலம் பற்றி நான் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். இடதுசாரியினர் அதுபற்றி கொதிப்படைந்து வழக்கம்போல உதிரிப்புள்ளிவிவரங்களை அள்ளிவீசியிருக்கிறார்கள்.
மேற்குவங்காளத்தின் பிரச்சினை அங்கே ஆண்ட இடதுசாரி அரசு வெறும்பேச்சாக புரட்சி . தொழிலாளர்நலன் என்றெல்லாம் சொல்லிக்கொண்ட்ருந்தாலும் நடைமுறையில் பிகாரில் இருப்பதுபோன்ற பழைய நிலப்பிரபுத்துவ முறையை அப்படியே நீடிக்கவைத்தது என்பதுதான். அங்கே இடதுசாரிகள் வென்றுகொண்டிருந்தது அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்த பெரும்நிலவுடைமையாளர்களை அப்படியே இடதுசாரிகளாக ஆக்கி அவர்கள் கையில் கிராமங்களைக் கொடுத்து விட்டதனால்தான்.
அவர்களுக்கும் அவர்களுக்கு அடியாட்கள் போலச் செயல்பட்ட கிழக்குவங்கக் குடியேறிகளான இஸ்லாமியர்களுக்குமான கூடாநட்பு ஒரு பெரும் சக்தியாக மாறி மேற்குவங்கத்தை இத்தனைநாள் இடதுசாரிகளின் பிடியில் வைத்திருந்தது. அதை உருவாக்கியவர் ஜோதிபாசு.அந்தக்கூட்டணி சமீபத்திய இஸ்லாமிய மதவாதத்தால் உடைந்ததனால்தான் அங்கே இடதுசாரி ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
பல்லாண்டுக்காலமாக அங்கே சுதந்திரமாகத் தேர்தல்நடத்த அங்குள்ள இடதுசாரி நிலப்பிரபுக்கள் கிராம அதிபர்கள் விட்டதில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள். இவர்களின் துயரம் இங்கே ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் ஓரிரு தலித்துக்கள் சாதிவெறியர்களால் தாக்கப்பட்டால் பல ஆண்டுக்காலம் கூச்சலிடும் நம் இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் இடதுசாரிகளால் நடத்தப்பட்ட மரிச்சபி தலித் படுகொலைகளைப்பற்றி வாயே திறந்ததில்லை. அந்தச்செய்தியே ஊடகங்களால் புதைக்கப்பட்டது. மரிச்சபிதான் இந்தியாவிலேயே தலித்துக்கள் மீது நடந்த பெரிய திட்டமிட்ட தாக்குதல் மற்றும் நிலப்பறிப்பு.
கல்கத்தாவிலும் வங்க நகரங்களிலும் மானுடக்குப்பைகள்போல வங்கத்தின் உதிரித்தொழிலாளர்கள் குவிந்திருப்பதைப்பார்த்து பலமுறை எழுதியிருக்கிறேன். இன்று இந்தியாவெங்கும் பஞ்சம் பிழைக்க செல்பவர்களில் முக்கால்வாசிப்பேர் வங்காள தலித்துக்களே. எந்தவகையான கல்வியறிவோ , தொழில்தேர்ச்சியோ இல்லாமல் மிகமிக அடித்தள உழைப்புக்கே இவர்கள் செல்கிறார்கள். அதாவது 1870களில் தமிழ்மக்கல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் சென்ற அதே நிலைமையில் இவர்கள் இருக்கிறார்கள்
இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய அரசை, இந்தியாவின் பிறபகுதி மாநிலங்கள் அடைந்த எளிய வளர்ச்சியைக்கூட தன் மக்கள் அடையாதபடி பார்த்துக்கொண்ட அரசைத்தான் இங்குள்ள இடதுசாரிகள் இந்தியாவின் முன்மாதிரி அரசாக முன்னிறுத்துகிறார்கள் என்பதை மட்டும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். இவர்களை கால்நூற்றாண்டுககலம் இப்படியே வைத்திருக்க எல்லா முயற்சியையும் எடுத்துக்கொண்ட ஜோதிபாசு இங்கே மாபெரும் தலைவராக கொண்டாடப்பட்டார். ஊடகமோசடி என்றால் இதுதான்
உண்மையில் குமரிமாவட்டத்தில் நிகழும் இந்த கல்விமுயற்சியில் இடதுசாரித் தோழர்கள்தான் கைகொடுக்கவேண்டும். ஒரு சிறு பிராயச்சித்தம்.
இதை நான் எழுதிய கட்டுரைகளின் இணைப்பை கீழே அளித்திருக்கிறேன்