இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…

(தனிப்பட்ட குறிப்புகள் நீக்கப்படுள்ளன – தளநிர்வாகி)

சமீபத்தில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற சினிமா வெளிவந்தபோது அது ஜியோங் ரோங் எழுதி சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஓநாய்குலச்சின்னம்’ என்ற நாவலின் தழுவல்தான். என்று ஒருவர் படத்துடன் சேதிவெளியிட்டிருந்தார். அதை ஒருவர் எனக்குச் சுட்டி அளித்து சரிதானா என்று கேட்டிருந்தார். இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரே விஷயம் ஓநாய் என்ற வார்த்தைதான்.

இந்தமனநிலையைத்தான் நாம் முதலில் கவனிக்கவேண்டும்.நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் சுயமான படைப்பூக்கம் அற்றவர்கள். அவர்களின் தொழிலில் ஒரு இரண்டுபக்க குறிப்பு எழுதுவதாக இருந்தால்கூட அதேபோன்று வேறெங்காவது எழுதப்பட்டிருப்பதைப்பார்த்து நகல்தான் செய்வார்கள். ஆகவே படைப்பூக்கம் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. ‘அதெப்படி சொந்தமா? வெள்ளக்காரந்தானே சொந்தமா எதுனா பண்ணமுடியும்?’ என்ற மனநிலை.

அத்துடன் தாங்களும் விஷயமறிந்தவர்களே என எங்கும் காட்டிக்கொள்ளும் முனைப்பும் அவர்களிடமுள்ளது. ஒருபடைப்பை வாசித்ததுமே அதை உள்வாங்குவதற்குப்பதிலாக அந்த முனைப்பை வெளிப்படுத்தவே முயல்கிறார்கள். பெரும்பாலும் படைப்பில் சில்லறைப் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒற்றுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள்கூட உண்டு – சரியான ஒற்றுப்புள்ளி போடுவதற்காகன போட்டிக்குத்தான் அந்தப்படைப்பு எழுதப்பட்டிருப்பதான பாவனையில்!

இப்படி சுட்டிக்காட்டப்படும் பிழைகள் கூட தொண்ணூறுசதவீதம் அபத்தமானதாக இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்குப் பதில் சொல்லி ஓர் இடத்தில் ஆசிரியன் சலித்து நின்றுவிடுவான். அதை தங்கள் வெற்றி என நினைப்பார்கள்.படைப்பை உடனடியாக திருட்டு அல்லது தழுவல் என்று சொல்வதும் இந்தமனநிலையின் வெளிப்பாடுதான்.

தமிழில் எல்லா நல்ல படைப்புகளைப்பற்றியும் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் பலகதைகள் இப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளன. உதாரணமாக புதுமைப்பித்தன் கண்டியின் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் அவலம் பற்றி எழுதிய துன்பக்கேணி ஆப்ரிக்க கூலியடிமைகளைப்பற்றிய Ebony and Ivory என்ற கதையின் தழுவல் என்று குற்றம்சாட்டப்பட்டது. இருகதைகளையும் விரிவாக சுட்டிக்காட்டி அது எவ்வளவு அபத்தமான ஒப்புமை என க.நா.சு மறுத்தார். இரண்டிலும் பொதுவாக இருந்தது தேயிலைத்தோட்டத்துக்கு அடிமைகள் கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்ற தகவல் மட்டுமே.

அன்று முதல் இன்றுவரை எந்த ஒரு நல்ல ஆக்கத்தையும் ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள ஒன்றின் நகல் என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே வலுவாக இருந்திருக்கிறது. அப்படிச் சொன்னவர்கள் பெரும்பாலும் இன்று காலாவதியாகிவிட்டனர். ஆகவே பெயர்களை சொல்லமுடியாது. ஆனால் எழுத்தாளர்கள் அக்காலங்களில் அந்தக் குற்றச்சாட்டுகளால் ஆழமாக புண்பட்டிருக்கிறார்கள். எழுத்துக்கு சிறு அங்கீகாரம்கூட இல்லாத சூழலில் இந்த வசை மட்டுமே எதிர்வினையாகக் கிடைப்பதன் சோர்வு அவர்களை தளர்த்தியிருக்கிறது.

ஜானகிராமனின் ஒரு ’அம்மா வந்தாள்’ தழுவல் என்று சொல்லப்பட்டபோது அவர் அதற்கு மூலம் என குற்றம்சாட்டப்பட்ட நாவலை [கிரேசியா டெலடா எழுதிய ’அன்னை’] அவரே மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அசோகமித்திரன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன் அனைவர் மீதும் இந்தக்குற்றச்சாட்டு பலமுறை சொல்லப்பட்டது. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் ஜான் அப்டைக்கின் Bech: A Book ன் அப்பட்டமான நகல் என்று சொல்லப்பட்டபோது அவரே அந்நாவலை வாங்கிப் பலருக்கும் அனுப்பி வாசிக்கச் சொல்லியிருக்கிறார். இருநாவல்களுக்கும் பொதுவான அம்சம் இரண்டுமே எழுத்தாளனைப்பற்றிய குறிப்புகள் என்பது மட்டுமே.

இன்னொரு பிரெஞ்சுநாவலின் தழுவல்தான் என ஜே.ஜே.சிலகுறிப்புகள் குற்றம்சாட்டப்பட்டது. இரண்டுக்கும் அட்டைப்படம் சமானமானதாக இருக்கிறது என ஒரு சிற்றிதழில் புகைப்படம் எடுத்து போட்டு நிறுவியிருந்தனர். ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார் என்று எம்.எஸ் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார். என்.எஸ்.மாதவனின் ‘ஹிக்விட்டா’. ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதன் தழுவலே சுந்தர ராமசாமி எழுதிய ஒரு சிறுகதை என்று குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகவும் அதனால்தான் என்றும் எம்.எஸ். சொன்னார். அக்கதை காலச்சுவட்டில் வெளிவந்தது. வேடிக்கை என்னவென்றால் ஹிக்விட்டாவே ஒரு ஸ்பானிஷ் கதையின் தழுவல் என்று அங்கே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மலையாள இலக்கியத்தின் சாதனைகள் எல்லாமே தழுவல்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றன. நாயர் ‘தறவாட்டின்’ சிக்கல்களை மட்டுமே சொல்லக்கூடிய எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் கூட! ஓ.வி.விஜயனின் கசாகின் இதிகாசம் என்ற புகழ்பெற்ற நாவல் வெங்கடேஷ் மாட்கூல்கர் எழுதிய ’பங்கர்வாடி’ யின் தழுவலே என ஒருவர் வாதிட்டுக்கொண்டே இருந்தார். வைக்கம் முகமது பஷீரின் பால்யகால சகி என்ற நாவல் நட் ஹாம்ஸனின் விக்டோரியா நாவலின் தழுவல் என்று குற்றம்சாட்டப்பட்டது. கேசவதேவின் ’ஓடையில் நிந்நு’ என்ற நாவல் ஜார்ஜ் எலியட்டின் ‘சிலாஸ் மார்னர்’ நாவலின் தழுவல் என சொல்லப்பட்டது. ஆனால் இங்குபோல ஆசிரியனே வந்து பேசி தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கவில்லை.அவை எல்லாம் அபத்தமான கூற்றுக்கள் என விமர்சகர்கள் அங்கே நிறுவினர்

நம்முடைய ஆழமான தாழ்வுணர்ச்சியைத்தான் இதற்கான காரணமாகச் சொல்லவேண்டும். அது பெருகியபடியேதான் வருகிறது. ஒரு தேசிய மனநோய் அது. எங்குசென்றாலும் விடுவதில்லை.

*

இலக்கியத்திருட்டு

இலக்கியத்திருட்டு என்பது ஒருபடைப்பாளி மூல ஆசிரியரை வெளிப்படுத்தாமல் இன்னொரு படைப்பின் சாரமான கூறுகளை எடுத்து தன்னுடையது என்று பயன்படுத்திக்கொள்வதும் அவை தன்னுடையவை என உரிமைகொண்டாடுவதுமாகும். அது ஒரு சட்டபூர்வமான குற்றம். ஒழுக்கரீதியான பிறழ்வு.

ஒருவரை நோக்கி ’நீ திருடன்’ என்று சொல்வது சாதாரணமான விஷயமல்ல.இன்னொரு மனிதரை நோக்கி ஒழுக்க ரீதியான பிறழ்வுக்கு குற்றம்சாட்டுவதென்பது மிக மிகக் கவனமாகச் செய்யப்படவேண்டிய ஒன்று. எந்த வகையான ஒழுக்கமீறலானாலும் சரி. நாம் ஐரோப்பியரிடமிருந்து உடனடியாக எதையாவது கற்றுக்கொண்டாகவேண்டும் என்றால் இதுதான். ஏனென்றால் அது மிக மோசமான அந்தரங்க மீறல். ஒருவரை உணர்வுரீதியாக கொலைசெய்வதற்குச் சமம் அது.

நாம் பழமையான இனக்குழுமனநிலையை இன்றும் கொண்டவர்கள் என்பதனால், நமக்கு இன்னொருவரின் அந்தரங்கம் முக்கியமே அல்ல என்பதனால், மிக எளிதாக பிறரை ஒழுக்கக் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடுகிறோம். அதன்மூலம் அவரது ஆளுமையையே அழிக்கிறோமென நாம் உணர்வதில்லை. காலப்போக்கில் வரும் தலைமுறைகள் தனிமனித உரிமை, ஜனநாயகப்பண்புகளைக் கற்றுக்கொள்ளும்போது நாம் இம்மனநிலையைத் தாண்டக்கூடும்.

படைப்பின் சாராம்சமான கூறுகள் என்றால் ஆறு விஷயங்கள். ஒன்று அதன் தரிசனம் அல்லது வாழ்க்கைபபர்வை. இரண்டு அதன் கதைமாந்தரின் குணச்சித்திரம் மூன்று, அதன் கதைக்கட்டுமானம். நான்கு, அதன் நிகழ்வுப்போக்கு.ஐந்து, அதன் சொல்லாட்சிகள் ஆறு, அதன் அடிப்படையான ஆராய்ச்சித்தகவல்கள். இவற்றில் அந்த மூல ஆக்கத்தின் தனித்தன்மையாக விளங்கக்கூடிய ஒன்றை அல்லது பலவற்றை அப்படியே எடுத்து தன்னுடையது என கையாள்வதே இலக்கியத்திருட்டாகும்.

பெரும்பாலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள எழுத்தாளர்கள், அனேகமாக பிழைப்புக்காக மட்டும், இதைச் செய்கிறார்கள். ஓரளவேனும் அங்கீகாரமோ கற்பனையோ உள்ள எழுத்தாளர்கள் இதைச் செய்வதில்லை. ஏனென்றால் அது எப்படியானாலும் மிகுந்த அவமானத்தைக் கொண்டுவந்து சேர்க்குமென அவர்கள் அறிந்திருப்பார்கள்.

ஆகவே இலக்கியத்திருட்டு என்ற சொல்லைக் கையாளும்போது மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்முடைய நீதிமுறைகூட இலக்கியத்திருட்டு என்றால் மேலே சொன்ன ஆறு கூறுகளில் இரண்டேனும் ‘அப்படியே’ எடுத்தாளப்பட்டிருந்தால் மட்டுமே அதை இலக்கியத்திருட்டாக இருக்குமோ என்று பரிசீலிக்கிறது. அதற்குமேல் அந்த ஆசிரியர் மூலத்தை வாசித்திருக்கிறார் என்பது நிறுவப்படவேண்டும். அவர் மூலத்தை தன்னுடைய ஆக்கமாக கூறுகிறார் என்பதும் நிறுவப்படவேண்டும்.

ஆகவே இலக்கியம் அறிந்தவர்கள், அடிப்படை நாகரீகமறிந்தவர்கள் இலக்கியத்திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள மிகமிகத் தெளிவான ஆதாரங்களுடனும் வாதங்களுடனுமல்லாமல் சொல்லத்துணியமாட்டார்கள்.


தழுவல்

தழுவல் என்பது மூலப்படைப்பின் அடிப்படையான நான்கு அம்சங்களில் ஒன்றையோ பலவற்றையோ இன்னொரு படைப்பாளி தன் படைப்புக்குத் திரும்பப் பயன்படுத்துவது. தழுவல் என்பது உலகின் மிகப்புராதனமான இலக்கியச் செயல்பாடு. மொழிபெயர்ப்பு என்பது தத்துவநூல்கள் மற்றும் அறிவியல்நூல்களிலேயே கையாளப்பட்டது. இலக்கிய ஆக்கங்கள் திரும்பத்திரும்ப தழுவி எழுதப்பட்டன. இதற்கு ‘வழிநூல்’ என நம் இலக்கண மரபு அங்கீகாரமளித்திருக்கிறது

மூலநூலின் செய்தியையும் இலக்கிய அழகையும் இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்ல, அல்லது அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்ல தழுவல் பயன்பட்டது. நம் நாட்டில் இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் தழுவி எழுதப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை தழுவல் முக்கியமான இலக்கியச் செயல்பாடாக இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து சுதந்திரம், ஜனநாயகம் போன்ற நவீன விழுமியங்களைக் கொண்ட பெரும்படைப்புகளை உலகமெங்கும் தழுவி எழுதினார்கள். அதன் வழியாக தங்கள் மொழிக்கு அப்படைப்புகளின் செய்தியைக் கொண்டுசென்றார்கள். இந்தியமொழிகளில் தொடக்ககாலப் படைப்புகள் அனைத்துமே ஆங்கிலத்திலிருந்து தழுவி எழுதப்பட்டவைதான். தீவிர இலக்கியமும் வணிக எழுத்தும் எல்லாம் தழுவல்களே.

ஒருமொழியில் ஒருவகை இலக்கியமரபே இல்லாமலிருக்கையில் இன்னொரு மொழியிலிருந்து அதை தழுவி எழுதுவதன் மூலமே கொண்டுவர முடியும். தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலப்படைப்புகளும் பின்பு வங்கமொழிப்படைப்புகளும் தழுவி எழுதப்பட்டன. இவை ஒரு புதிய எழுத்துவகைக்கு வாசகர்களைத் தயார்படுத்தின. மெல்ல அசலான எழுத்துக்கள் வர வழிவகுத்தன.

வ.வே.சு அய்யர், புதுமைப்பித்தன் போன்ற முன்னோடிகள் ஏராளமான தழுவல்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச்சிறுகதையின் பிறப்பை நிகழ்த்திய வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் தழுவல்களே. சுத்தானந்த பாரதியார் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகப்பேரிலக்கியங்களைத் தழுவி தமிழில் எழுதியிருக்கிறார். அவைதான் இங்கே தமிழிலக்கிய விழிப்புணர்ச்சியை உருவாக்கின.

சமீபத்தில்கூட தமிழவன் ஏற்கனவே சொல்லப்பட்டமனிதர்கள், ஜே கே எழுதிய மர்மநாவல் போன்ற நாவல்களை தழுவலாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் மார்க்யூஸின் தனிமையின் நூறு ஆண்டுகளில் உள்ள உத்தி மட்டும் தழுவப்பட்டது. ஜே.கே.எழுதிய மர்மநாவலில் உம்பர்ட்டோ எக்கோவின் நேம் ஆஃப் த ரோஸின் கதைமுறை தழுவப்பட்டது. அதை முன்னுரையில் வெளிப்படையாகச் சொல்லித்தான் அந்தத் தழுவல் செய்யப்பட்டது.அந்த இலக்கியமுறையை தமிழில் அறிமுகம்செய்வதே நோக்கம்.

இவையெல்லாமே மூலத்தைச் சுட்டிக்காட்டி இன்ன படைப்பின் தழுவல் என்று குறிப்பிடப்பட்டு வெளியானவை. புதுமைப்பித்தன் தன் தழுவல்கதைகளை ரசமட்டம், சொவி போன்ற பல பெயர்களில் வெளியிட்டிருக்கிறார். தழுவு என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கிறார். கதையின் கீழ் மாப்பசான் கதையின் தழுவு என்று இருப்பதைப்பார்க்கலாம்.

அபூர்வமாக மூலம் குறிப்பிடப்படாமலும் தழுவல் நிகழ்ந்திருக்கிறது. அன்றைய சூழலில் அது பெரிதாகக் கருதப்படவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். ஏனென்றால் நம் மரபில் அப்படி மூலத்தைச் சுட்டிக்காட்டும் வழக்கம் இருந்ததில்லை. கணிசமான வழிநூல்கள் மூலம் குறிப்பிடப்படாமலேயே எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணம் வீராசாமிச் செட்டியாரின் வினோத ரசமஞ்சரி. நூற்றுக்கணக்கான நூல்களை அப்படி சுட்டிக்காட்டமுடியும்

இதற்கான காரணத்தை நம் மரபிலிருந்து எளிதில் ஊகிக்கலாம். இங்கே அறிவு ஒரு தனிமனிதனின் சொத்தாக, அவனுடைய தனியாளுமையின் வெளிப்பாடாக கருதப்படவில்லை. அது ஒரு பொதுச்சொத்தாகவே எண்ணப்பட்டது. ஆகவே அதை பரப்புவதற்காக இன்னொருவர் எடுத்தாள்வது ஓர் உயரிய செயல்பாடாக நினைக்கப்பட்டது.

ஐரோப்பாவிலும் பதினாறாம் நூற்றாண்டுவரை தழுவல் அறிவுப்பரவலுக்கான இயல்பான வழிமுறையாக எண்ணப்பட்டது. பெரும்பாலும் மதநூல்கள் தழுவி எழுதப்பட்டன.


தூண்டுதலாக்கம்

ஒருபடைப்பு இன்னொரு படைப்பை உருவாக்கும் தூண்டுதலை அளிப்பதென்பது இலக்கியத்தில் மிகமிக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும். இலக்கியத்திருட்டு, தழுவல் என மேலே சொன்ன இரண்டுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடுண்டு. மேலே சொன்ன இரண்டிலும் இரண்டாம் வடிவம் மூலத்தின் இன்னொரு தோற்றமே. ஆனால் தூண்டுதல் அப்படி அல்ல. அது மூலத்தில் இருந்து முளைத்து எழுந்த இன்னொரு சுதந்திரமான படைப்பு

உலகமெங்கும் பெரும் இலக்கிய ஆக்கங்கள் அவற்றிலிருந்து மேலும் பல இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறுதான் பேரிலக்கியங்கள் உலகமெங்கும் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அவை ஒரு தனிப்படைப்பாக அல்லாமல் மானுடத்தின் ஒரு மனநிலையின் பிரதிபலிப்பாகவே மாறிவிடுகின்றன.

உலக இலக்கியத்தில் அப்படி பெரும் பாதிப்பைச் செலுத்திய மூன்று ஆக்கங்களைச் சுட்டிக்காட்டலாம்.

ஒன்று விக்டர் யூகோவின் லே மிசரபில்ஸ்[Le miserables] [தமிழில் இதன் தழுவல் வடிவம் ஏழைபடும்பாடு என்ற பேரில் சுத்தானந்தபாரதியாரால் செய்யப்பட்டு , இப்போதும் கிடைக்கிறது]

இன்னொன்று, மக்ஸீம் கோர்க்கியின் தாய் [Mother] [தமிழில் இரண்டு தழுவல் வடிவங்கள் வந்தபின் தொ.மு.சி ரகுநாதனால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னரும் மு.கருணாநிதியின் தழுவல் வடிவம் வெளியாகியது]

மூன்றாவது அலக்ஸாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் {Three musketeers] [தமிழில் இதன் சுருக்கமான தழுவல் வடிவம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகவெளியீடாக வந்தது]

உலகின் எல்லா மொழிகளிலும் இந்நாவல்களால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்புகள் உண்டு என்று சொல்வார்கள்.

யூகோவின் நவால் உலகம் முழுக்க மனிதாபிமான எழுத்தின் முன்னோடி வடிவை உருவாக்கியது. கோர்க்கியின் தாய் உலகம் முழுக்க முற்போக்கு எழுத்தின் முதல்வடிவை தீர்மானித்தது. டூமாவின் நாவல் வணிக எழுத்தின் முன்னோடி வடிவமாக அமைந்தது. நான் வங்கமொழியில் பிமல் மித்ரா எழுதிய விலைக்குவாங்கலாம் என்ற நாவலை வாசித்த பின்னரே யூகோவின் நாவலை வாசித்தேன். மலையாளத்தில் செறுகாடு எழுதிய முத்தச்சி நாவலை வாசித்த பின்னரே மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை வாசித்தேன்.

தமிழில் முதலிரு முன்வடிவங்களும் பெரிய தூண்டுதலை உருவாக்கவில்லை. ஆனால் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் தமிழில் கல்கியின் ’பொன்னியின்செல்வ’னுக்கு தூண்டுதலாக அமைந்தது. போர்க்குடியில் பிறந்த ஏழை இளைஞனான டி-ஆர்ட்டக்னான் ஒருவாளுடன் ’உலகை வெல்ல’ கிளம்பிச்செல்லும் இடத்தில் ஆரம்பிக்கிற்து அந்தத் தூண்டுதல். வந்தியத்தேவனுக்கு ஆதாரம் அந்தக் கதாபாத்திரமே. மிலாடி டி விண்டரின் அதே குணச்சித்திரத்தை நாம் நந்தினியில் காண்கிறோம். இளவரசர்களின் ஆள்மாறாட்டம் அப்படியே மூலத்தை ஒத்திருக்கிறது.

ஆனால் அதேசமயம் பொன்னியின் செல்வன் முழுமையாக ஒரு தமிழ்நாவலாகவும் உள்ளது. தமிழ்ப்பண்பாடு, வரலாறு மட்டுமல்ல நிலக்காட்சிகள் கூட அதில் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தமிழில் வெற்றிகரமாக ஒரு வணிகஎழுத்துமரபை உருவாக்கிய முன்னோடி ஆக்கம் அது.

இது உலகம் முழுக்க நடந்தது. மலையாளத்தின் முன்னோடி ஆக்கமான மார்த்தாண்டவர்மா வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ நாவலை தூண்டுதலாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் அது எண்பது சதவீதம் அப்படியே திருவிதாங்கூரின் உண்மையான வரலாறும்கூட!

இது சற்றுத் தாமதமாக நவீன இலக்கியம் உருவான கீழைநாடுகளில் அதிகமாக நம் கண்ணுக்குப் படுகிறது. ஆனால் ஐரோப்பிய இலக்கியத்திலேயே ஒருபடைப்பில் இருந்து ஊக்கம்பெற்று உருவான இன்னொரு படைப்பு என நூற்றுக்கணக்கான படைப்புகளைச் சொல்லமுடியும். உதாரணமாக விக்தர்.யூகோவின் லே மிஸரபில்ஸ் நாவலே ஜார்ஜ் எலியட்டின் சிலாஸ் மார்னர் நாவலுக்கான தூண்டுதல்.

தமிழிலேயே அப்படி பல மறுஆக்கங்கள் உண்டு. புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ கதையின் தூண்டுதலே க்.நா.சுவின் ‘தெய்வஜனனம்’. ஒரு நல்ல வாசகன் அப்படி தமிழில் ஐம்பது படைப்புகளை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். என் இலக்கியமுன்னோடிகள் விமர்சன நூல்வரிசையில் பல படைப்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்

இப்படி ஒரு படைப்பில் தூண்டுதல் கொண்டு இன்னொன்று உருவாவது மூலத்திற்கு அளிக்கப்படும் கௌரவம். மூலத்தில் உள்ள தரிசனம் பல கோணங்களில் முளைத்து எழுந்து விரிவதை காட்டுகிறது அது.

எப்படி இது தழுவலில் இருந்து வேறுபடுகிறது? மூலத்தை திரும்ப நிகழ்த்தினால் அது தழுவல். மூலத்திலுள்ள தத்துவதரிசனத்தை, வரலாற்றுநோக்கை, கதாபாத்திரங்களை விரிவாக்கம் செய்தால் அல்லது வேறுவகையில் மாற்றிக்கொண்டால் அது தூண்டுதல்.

சிறந்த உதாரணம் லே மிஸரபிள்– சிலாஸ் மார்னர் தான். ழீன் வல் ழீன் குழந்தை ஒன்றை தெருவிலிருந்து தத்தெடுப்பதிலிருந்து ஜார்ஜ் எலியட் தன் தூண்டுதலைப்பெற்றார். ஆனால் லே மிசரபிள்ஸ் ஓர் இலட்சியவாதப்படைப்பு. சிலாஸ் மார்னர் இலட்சியங்களைச் சந்தேகப்படும் படைப்பு.

இன்றுவரை உலகில் உருவான இலக்கியப்படைப்புகளில் கணிசமானவற்றுக்கு தூண்டுதலாக இன்னொரு படைப்பு இருக்கும். கொஞ்சமேனும் இன்னொரு படைப்பிலிருந்து தூண்டுதல் பெறாத ஓர் இலக்கியப்படைப்பே சாத்தியமல்ல என்று சொல்லும் விமர்சகர்கள் உண்டு.


பொதுக்கரு, பொதுவடிவம்

ஒரே கருவை இரு படைப்பாளிகள் கையாள்வது என்பது உலக இலக்கியத்தில் மிகமிகச் சாதாரணமான ஒன்று. சமகாலப்படைப்பாளிகள் பெரும்பாலும் ஒரே பிரச்சினைகளை எடுத்து எழுதியிருப்பார்கள் .ஏனென்றால் ஒருகாலகட்டத்தின் அறப்பிரச்சினைகள், அரசியல் நெருக்கடிகள், சமூக மாற்றங்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவானவை. ஒரே பிரச்சினை வெவ்வேறு படைப்பாளிகளை வெவ்வேறு வகையில் அழுத்தமாக பாதித்திருக்கலாம்.

சிலசமயம் சில மானுடப்பிரச்சினைகள் காலம்தோறும் நீண்டு செல்லக்கூடியவை. தலைமுறை தலைமுறையாகவே அவற்றை படைப்பாளிகள் கையாண்டிருப்பார்கள். அவ்வாறு ஒரே பிரச்சினையைக் கையாளும் இலக்கியப்படைப்புகள் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட வகைமையாகவே மாறிவிடும்

அதேபோல ஒரு குறிப்பிட்ட வகையான கதைசொல்லல் முறை பல படைப்பாளிகளால் தொடர்ச்சியாக கையாளப்படும்போது அது ஒரு இலக்கியவகைமையாகவே ஆகிவிடும்.

இவற்றுக்கெல்லாம் உலக இலக்கியத்தில் ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒரு கதாபாத்திரம் தன்னுடைய வாழ்க்கையை தானே வெளிப்படையாகச் சொல்லும் பாவனையில் எழுதப்பட்டவை காலப்போக்கில் ஒப்புகைவகை [confessional ] நாவல்கள் என்ற தனிவகைமையாக ஆயின. டைரிக்குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்ட நாவல்கள் காலப்போக்கில் ஒரு தனி நாவல் வடிவமாக [diary novels] அடையாளப்படுத்தப்பட்டன.

நாமறிந்த பிரபலமான டைரி நாவல் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. தமிழில் நகுலனின் நவீனன் டைரி. அதன்பிறகு ஜே.ஜே சிலகுறிப்புகள்.இதேபோல முக்கியமான இலக்கியவடிவம் கடித வடிவ நாவல். தமிழில் வந்த முதல்கடிதவடிவ நாவல் மறைமலை அடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங்கள்.

உலக இலக்கியத்தில் இவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கணக்கான நாவல்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் நடுவே பொதுவான அம்சங்கள் ஏராளமாக இருக்கும். மேலோட்டமான வாசகர்கள் ஏதேனும் இரண்டை மட்டும் வாசித்துவிட்டு அதுவும் குறிப்பு இதுவும் குறிப்பு என சொல்வது தமிழில் சாதாரணம். அப்படித்தான் பெக் எ புக் நாவல்தான் ஜே.ஜே.சிலகுறிப்புகள் என்று சொல்லப்பட்டது.

தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும்தண்டனையும் இரண்டுமே ஒரே கருவைக்கொண்டவை, பாவத்திலிருந்து மீட்பு பற்றிய கிறித்தவ நம்பிக்கையை அவை மீண்டும் பரிசீலிக்கின்றன.அதேபோல பழைஅய் நிலப்பிரபுத்துவகாலக் குடும்பம் ஒன்றின் சரிவைச் சொல்லக்கூடிய நாவல்கள் ஏராளமாக ஐரோப்பாவில் உண்டு. பேரிலக்கியங்கள் என்று சொல்லப்படக்கூடியவையே பலநூறு. அவையனைத்துக்கும் நடுவே பொதுக்கூறுகள் வலுவானவை. உதாரணமாக மக்ஸீம் கோர்கியின் ‘அர்தமானவ்ஸ்’ தாஸ்மன்னின் ‘புடன்புரூக்ஸ்’ நாவல்களை ஒப்பிட்டுநோக்கி இரண்டும் ஒரே நாவலின் இருவடிவங்களே என ஒருவர் வாதிட முடியும்.

சில அடிப்படைக் கதைக்கருக்கள் மீளமீள கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக பரபாஸ். பேர்லாகர்குவிஸ்ட், [Pär Lagerkvist.] எமிலி ஜோலா [Emile zola] இருவருமே அதே கதையை அதேபாணியில் அதே பெயரில் எழுதியிருக்கிறார்கள் .இருபெரும் படைப்பாளிகளின் வாழ்க்கைநோக்கைப் புரிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு வாசகன் ஆராயமுடியும்.

ஒரே விஷயத்தை எழுதுவதனால் ஒரே இலக்கிய வகைமையாக அடையாளப்படுத்தப்படும் நாவல்கள் உண்டு. மத்தியகால ஐரோப்பாவின் பின்னணியில் காமம் வன்முறை மர்மம் கொடூரம் ஆகிய இயல்புகளை கொண்ட நாவல்கள் கோதிக்நாவல்கள் எனப்பட்டன. நாஜி பேரழிவைச் சித்தரிக்கும் நாவல்கள் பேரழிவுநாவல்கள் எனப்பட்டன. இவ்ற்றின் சூழல்சித்தரிப்பு, மொழிநடை, கதாபாத்திரங்களின் அமைப்பு எல்லாமே ஒத்திருக்கும்.

இந்தியச் சூழலில் விதவைமணம் போன்ற சில கருக்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. பலநாவல்கள் நடுவே கதைப்போக்கில்கூட சமானத்தன்மை உண்டு. கே.ஆர்.இந்திராவின் கன்னடநாவலான ‘ஃபணியம்மா’ லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் மலையாளநாவலான ‘நார்மடிப்புடவை’ போன்ற ஆக்கங்களின் சமானத்தன்மை ஆச்சரியமூட்டுவது. தாகூரின் ’கோரா’வும் எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்சவிருட்சா’வும் கிட்டத்தட்ட ஒரே பிரச்சினையைக் கையாள்கின்றன, ஒரே இறுதிமுடிச்சையும் கொண்டுள்ளன.

ஒரு அன்னியர் கிராமத்துக்கு வந்து கிராமத்தின் பண்பாட்டு அமைப்பில் சலனத்தை உருவாக்குவது என்ற கரு இந்தியநாவல்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடியது. அந்த அன்னியர் பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருப்பார். ஓ.வி.விஜயனின் ‘கசாகின் இதிகாசம்’ நாவலுக்கும் வெங்கடேஷ்மாட்கூல்கரின் ’பன்கர்வாடி’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை இதுமட்டுமே. அதே கதைதான் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலிலும்.

மறுஆக்கம்

முன்னோடி இலக்கியப்படைப்புகளையும் வாழ்க்கைவரலாறுகளையும் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் மறு ஆக்கம் செய்வதென்பது நவீன இலக்கியம் தொடங்கிய காலம் முதலே இருந்துவரக்கூடியது. அதற்கும் தழுவலுக்கும் இடையேயான வேறுபாடு எனன்வென்றால் அந்தப்படைப்பில் அதன் மூலம் மிகத்தெளிவாக, அப்பட்டமாகவே சொல்லப்பட்டிருக்கும். மூலத்தின் அனைத்து விஷயங்களும் அப்படியே திரும்பக் கையாளப்பட்டிருக்கும்

ஆனால் மூலத்தை தன்னுடைய தரிசனத்தின் அடிப்படையில் அப்படைப்பாளி மறு ஆக்கம் செய்வதனாலேயே அது இன்னொரு தனித்த இலக்கியப்படைப்பாக ஆகிறது.அது ஒரு இலக்கியவகைமை.

மறுஆக்கம் என்ற இலக்கியவகைமை எப்போதும் உள்ளது என்றாலும் பின்நவீனத்துவம் [Post modernism] அதை முதன்மையான இலக்கியவகைமையாக முன்வைத்தது. சொல்லப்போனால் பின்நவீனத்துவ நோக்கின்படி எல்லா படைப்புகளும் ஏதேனும் ஒருவகையில் மறு ஆக்கங்களே. ‘சுயமான’ ஆக்கம் என்ற ஒன்று சாத்தியமே இல்லை. இலக்கியம் என்பதே மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துக்கொள்ளும் கலைதான்.

பின்நவீனத்துவம் வந்தபின்னர் பல்வேறுவகைகளில் முந்தையபடைப்புகளை திரும்பச்சொல்லிப்பார்க்கும் எழுத்துக்கள் உலகமெங்கும் வெளிவந்து குவிந்திருக்கின்றன. கொஞ்சம் ஆர்வமுள்ள வாசகர் அவற்றை வாசித்துப்பார்க்கலாம்.

இவை ஏன் திருட்டோ தழுவலோ அல்ல என்றால் இவை திட்டவட்டமாகவே மூலத்தைச் சொல்லிவிடுகின்றன. அந்த மூலத்தையும் வாசகர்கள் வாசித்துப்பார்க்கவேண்டும் என அவை விரும்புகின்றன. அந்த மூலத்தை எப்படி மாற்றியும் வளர்த்தும் மறுஆக்கம்செய்திருக்கிறார் என்பதை தன் வாசகர் உரவேண்டும் என்று மறு ஆக்கத்தின் ஆசிரியர் விரும்புகிறார். அந்த பார்வை வேறுபாட்டின் மூலமே அது தனித்த இலக்கியப்படைபபாக ஆகிறது.

தமிழிலும் இது புதிதல்ல. நான் எழுதிய பின் தொடரும் நிழலின் குரலில் பல மறு ஆக்கப்படைப்புகள் உள்ளன. ஜான் ரீடின் ரஷ்யப்புரட்சியைப்பற்றிய ‘உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புகழ்பெற்ற நூலின் ஓர் அத்தியாயம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ரெஜி சிரிவர்தனேயின் அன்னா புகாரினா பற்றிய நாடகம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. புஷ்கினின் ‘வெண்கலக்குதிரைவீரன்’ என்ற கவிதைக்கதை மறு ஆக்கம்செய்யப்பட்டுள்ளது. மறுஆக்கம் என்ற தகவல் அக்கதைகளிலேயே சொல்லப்பட்டுள்ளது.

அக்கதைகள் சோவியத் ருஷ்யா இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. சோவியத் ருஷ்யா உடைந்தபின் நான் அக்கதைகளை திரும்பச்சொல்லிப்பார்க்கிறேன். அவற்றை மறுபரிசீலனை செய்கிறேன்.

இதேபோல பேரிலக்கியங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நான் எழுதிய ’கொற்றவை’ சிலப்பதிகாரத்தின் மறு ஆக்கம்தான். கதைப்போக்கிலும் கதாபாத்திர ஒழுங்கிலும் அப்படியே சிலப்பதிகாரத்தையே கொற்றவை பின்தொடர்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் வரும் சமணத்துறவியான கவுந்தி கொற்றவையில் நாட்டார்தெய்வமான நீலியாக இருக்கிறாள். இப்படி தரிசனத்தில் அணுகுமுறையில் கொற்றவை முற்றிலும் புதிய ஒன்றும்கூட.

மகாபாரதம் இந்தியமொழிகளில் நூற்றாண்டுகளாக மறு ஆக்கம்செய்யப்படுகிறது. இந்தியமொழிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட நவீன மகாபாரதநாவல்கள் உள்ளன என்று சாகித்ய அக்காதமி பட்டிலிட்டிருக்கிறது. தேவதேவன் புரமித்யூஸ் போன்ற பல தொன்மங்களை மறு ஆக்கம்செய்திருக்கிறார். இன்னும் பல ஆக்கங்கள் இதேபோல வெளிவரக்கூடும்.

ஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது ஒருவகையில் ஒட்டுமொத்தமாக இதுவரையிலான மானுடப்பண்பாட்டையே திரும்பிச் சொல்லிப்பார்ப்பதுதான். வரலாற்றை, சமூகவியலை, அரசியல்கோட்பாடுகளை எல்லாம் அது திரும்பச் சொல்லிப்பார்க்கிறது.

மிக அடிப்படையான இந்த விஷயம் பின்நவீனத்துவம் உருவாகிவந்த தொண்ணூறுகளிலேயே மிகமிக விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்ட ஒன்று.

***************

தழுவல்-மொழியாக்கம் கேள்விபதில்

தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று

முந்தைய கட்டுரைசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்
அடுத்த கட்டுரைஇடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு