திடீரென்று தான் அது நடந்தது!
எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை.
மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா
மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா.
பெரியம்மா@ பெரியப்பா@ குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி…
எத்தனை பேர்!
அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.
எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில்.
இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குளியறைக் கதவின் வெளிக் கொக்கி இருந்திருக்கிறது. நடுவிரலால் உந்த, கொக்கி மேலே போய்விட கதவு திறந்து கொண்டு விட்டது.
அம்மாவுடன், பப்பாவுடன், மம்மியுடன், பெரியம்மாவுடன், சாந்தியுடன் குளியறையின் உள்ளே போய்க் குளித்த, மேல் கழுவிய, சூவிருந்த, பிஞ்சுக் கைகளில் சவர்க்காரம் குழைத்துக் குதூகலித்த பழக்கத்தில் உள்ளே நுழைந்துவிட்டது குழந்தை.
நுழைந்தது மட்டுமல்லாமல் நுழைந்த வேகத்தில் கதவையும் சாத்திக் கொண்டாகிவிட்டது.
உள்ளே இருப்பது வெளியில் இருப்பது போல் வெறும் கொக்கி அல்ல. பித்தளையிலான உயர் ரக சொய்பர் கொண்டி.
கதவை நிலையுடன் சரிசமமாக அழுத்திக் கொண்டு சொய்பரின் பிடியை நேராக வைத்துத் தள்ளினால் நிலைப்படியில் இருக்கும் மறுமுனைக்குள் சொய்பர் நீண்டு நுழைந்து மூடிக் கொள்ளும்.
‘பபா எங்கே…’ என்று யாரோ ஒருவர் எழுப்பிய குரல் எல்லோரையும் திடுக்கிட வைத்து விட்டது. எங்கே எங்கே என்று தேடுகின்றார்கள். சின்னதைக் காணமுடியவில்லை.
முன் ஹாலை ஒட்டினால் போல் ஒரு பக்கம் படுக்கையறை மறுபக்கம் குழந்தையின் விளையாட்டறை. இரண்டுக்கும் இடையில் குளியலறை. குளியலறையின் கதவைப் பூட்டிவிட்டால் உள்ளே நடப்பதொன்றும் வெளியே தெரியாது. இப்போதும் அதேதான்…!
குளியலறைக் கதவில் வெளியே கொண்டி தொங்கிக் கொண்டிருந்தால் உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சின்னதின் மமாவுக்குத்தான் பளீரென அது தெரிய வந்துள்ளது!
வெளியே கொண்டி தொங்கிக் கொண்டிருக்கிறது. கதவைத் தள்ளிப் பார்த்தால் உள்ளே கொண்டி போடப் பட்டிருக்கிறது!
‘மமா நான் உள்ளி…’ என்னும் உற்சாகமான மழலை வெளியிலிருப்போரின் காதுகளில் நாராசமாய் நுழைகின்றது.
படபட வென்று தட்டிப் பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள். கதவு பூட்டப்பட்டிருக்கிறது.
எப்படி! அதுதான் தெரியவவில்லை!
சின்னதின் கடமைகளுக்காக மட்டுமின்றி, பெரியவர்கள் குறிப்பாக சின்னதின் மமா, குளிக்க, மேல் கழுவ, அல்லது துணிகழுவ என்று குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டால் கதவடியில் நின்று சின்னது கதறிக் கதறி அழும். அழுகை இறுமலில் போய் நிற்கும். அழுகையும் இருமலும் அடிவாங்குவதில் போய் நிற்கும். குழந்தை அடிவாங்கப் போவதைப் பொறுக்காத தாய் டக் கென்று கதவைத் திறக்க சின்னது ஊற்றாய் ஓடும் கண்களுடன் மெலிதாகச் சிரித்தபடி உள்ளே நுழைந்து கொள்ளும். நுழைந்த கையுடன் கதவை மூடி சொய்பரை எட்டிப் பிடித்து ஆட்டும். சொய்பர் ஆடும் அந்த ஒலி கதவு பூட்டப்பட்டு விட்டதற்கான அறிகுறி என எண்ணி குழந்தையின் மனம் குதூகலிக்கும்.
வெயிலும் மழையும் ஒன்றாய் தோன்றும் வானம்போல அழுகையும் சிரிப்புமாய் அழகொழுகும் முகத்தை ரசித்தபடி அந்தப் பிஞ்சு விரல்களை ஒதுக்கிவிட்டு அம்மாவின் கை சொய்பரைத் தள்ளிக் கதவைப் பூட்டிக்கொள்ளும்.
இதேபொலத்தான்…. உள்ளே நுழைந்ததும் சொய்பரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது குழந்தை. அது எப்படியோ நீண்டு பூட்டிக் கொண்டது.
இப்போது குழந்தை உள்ளே! குளியலறைக்குள். தன்னந்தனியாக!
அம்மா, அம்மம்மா எல்லோரும் வெளியே! குளயலறைக் கதவருகே… கூட்டமாக பதறிக் கொண்டும், கைகளைப் பிசைந்து கொண்டும்… மெதுவாக கதவைத் தட்டிக் கொண்டும்…! குழந்தையாகக் கதவைத் திறந்து கொள்ளாவிட்டால் வெளியே இருப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
கதவை உடைப்பதென்பது உடனடி சாத்தியமான காரியமில்லை.
லோசாக உடைப்பதற்கு ஏதுவாகவா கதவுகள் அமைக்கப் படுகின்றன.
‘பேபி… கதவத் திறங்கம்மா… பூட்டின மாதிரியே மத்தப் பக்கம் கொண்டியைத் தள்ளுங்கம்மா…”
‘கதவு கிட்டவே நில்லுங்கம்மா… உள்ளுக்குப் போகாதீங்க… வழுக்கும்…’
வெளியே இருந்து பல விதமான குரல்கள்… பலவிதமான கோரிக்கைகள்.
வெளியில் இருந்து கேட்கும் குரல்களுக்குப் பதில் குரலாகக் கேட்பது அடிக்கொரு தடவை சொய்பர் ஆட்டப்படும் ஒலியும் கூடவே மமி… மமி… என்னும் குழந்தையின் கம்மிய குரலும் மட்டுமே…
உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டபோது இருந்த குதூகலம் குழந்தையிடம் இப்போது மறைந்து விட்டது.
தனக்குப் பிரியமானவர்கள் எவருடைய முகமும் தெரியவில்லை. ஏதோ ஒரு பாதாள உலகத்திற்குள் தள்ளப்பட்டு, தனியாக மாட்டிக் கொண்டது போன்றதொரு பயம் தோன்றுகின்றது! ஒருவருமே அருகில் இல்லை என்கின்ற தனிமை உணர்வு மேலெழுகின்றது.
அம்மாவின், பப்பாவின், அம்மம்மாவின்,? பெரியப்பா பெரியம்மாவின், சாந்தியின் முகங்கள் குழந்தையின் மனமுகத்தில் வந்து வந்து போகின்றன.
தூரத்தில் இருக்கும் அப்பம்மா, அத்தை, அத்தானின் முகங்களும் புன்முறுவல் அலைகளுடன் வருகின்றன!
‘தாத்தாக் கண்ணேக் காணவில்லையே’ என்னும் ஏக்கமும் கூடவே வருகின்றது. காணவில்லை என்பது குரல் கேட்க வில்லையே என்னும் ஆதங்கம்.
தாத்தாவைக் குழந்தை தாத்தாக் கண்ணே’ என்று தான் அழைக்கும். தாத்தாவும் குழந்தையை எத்தனை எத்தனையோ செல்லபெயர் சூட்டி அழைத்தாலும் கூடவே ஒரு கண்ணேயையும் சேர்த்துக் கொள்வார். குஞ்சுக் கண்ணே@ பூக்கண்ணே@ சில்வியாக்கண்ணே… இப்படி! அதன் எதிரொலிதான் இந்த தாத்தாக்கண்ணே!
மம்மியும் மிம்மியும் மற்றையோரும் எத்தனையோ தடவை கிறான்பா (புசயnனிய) என்று அழைக்கும்படி அழுதழுது பார்த்து விட்டாலும் சின்னதன் மழலை வாய்க்குள் புசயnனிய நுழைவதேயில்லை. தாத்தாவும் நுழைய விடுவதில்லை.
தாத்தா என்பதில் தொனிக்கும் அந்த பாரம்பரிய ஜீவன் புசயnனிய வில் ஏனோ இருப்பதில்லை. மனைவி, மக்கள், மக்களின் மக்கள், என்று தொடர்ந்து வரும் குடும்ப உறவின் பிணைப்பு…
வயதின் முதிர்ச்சியை நினைவு படுத்தும் அதன் பண்பு…
குடும்ப நண்பரான டொக்டர் ஒரு தடவை, தாத்தா கதிரையில் இருந்து எழுந்த வேகத்தைப் பார்த்துக் கூறியுள்ளார். ஒரு இளைஞனைப் போல நடந்து கொள்வதைத் தவிர்த்து ‘யூ மஸ்ட் ரெஸ்ட்பெக்ட் யுவர் ஏஜ்’ என்று.
வயதைக் கனம் பண்ணும் பண்பு ‘இந்த தாத்தா’ வுக்கே இருக்கிறது.
பாடசாலை சுற்றுலா செல்லும் பேத்தியிடம் ‘கருத்தடை வில்லை எடுத்துக் கொண்டாயா கண்ணே’ என்று கேட்கும் மேலைநாட்டுக் கிறான்பாவிடம் இருப்பதில்லை. நிறைய ஆங்கிலப் படங்கள் இப்படியான கிறான்பாக்களையே காட்டுகின்றன.
தன்னுடைய முழு உலகுமேயோன@ தன்மீது அன்பையும் பாசத்தையும் பொழியும் இந்த அனைவரிலும் ஒருவர் கூடத் தன் அருகே இல்லை என்னும் தனிமை உணர்வு அப்பிஞ்சுக் குழந்தையின் முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
தாத்தா தன்னுடைய படிப்பறையில் பைபிள் படித்துக் கொண்டிருந்தார்.
‘ஏசு பேசிக் கொண்டிருக்கின்றார். சீடர்கள் அருகில் இருக்கின்றனர். மக்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க வந்திருந்தனர்.
‘நீங்கள் கூறும் மோட்ச ராஜ்சியத்தில், பேரின்ப வீட்டில் யாருக்கு அதிக மகிமை’ என்று அவர்கள் கேட்டனர்.
ஏசு ஒரு குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டார்.
‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகின்றேன்…. நீங்கள் குழந்தைகள் போல் இருக்க வேண்டும். இல்லை என்றால் மோட்ச ராஜ்சியத்தில் உங்களுக்கு இடம் கிடையாது… குழந்தையைப் போற்றுகிறவன் என்னைப் போற்றுபவனாகிறான்…’
வீட்டைச் சுற்றி குழந்தை, குழந்தை என்னும் குரல்கள் கேட்கின்றன. எழுந்து வெளியே வந்தவர் நிலைமைகளை உணர்ந்து கொண்டார்.
‘குஞ்சுக் கண்ணே அப்படியே நில்லுங்கள்… தாத்தா உங்களிடம் வருகின்றேன்…” என்று குரல் கொடுத்தார்.
குழந்தைக்குத் திடீரென ஒரு குதூகலம். யாரோ ஒருவர் தன்னிடம் வரப் போகின்றார். இந்தத் தனிமை ஓடி விடும்… அவர் என்னைத் தூக்கிக் கொண்டு போய் மம்மியிடம் கொடுத்து விடுவார்…
வீட்டைச் சுற்றி ஒராள் உயரத்திற்கு ஒரு மதில் இருக்கிறது.
சுற்று மதிலுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையில் உள்ள இடம் நாய் பூனைகள் ஓட மட்டுமே போதுமானது. மனிதர்கள் அதற்குள் நுழைந்து நடக்க வேண்டுமாயின் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க டேவிட் பிளேய்ன் என்னும் அமெரிக்கன் லண்டனில் உண்ணாவிரதம் இருந்தது போல் 40 நாள் இருந்து உடல் மெலிய வேண்டும். இப்போது குழந்தை சிக்குண்டிருக்கும் குளியறைக்கும் ஓராள் உயரத்துக்கு மேலாக ஒரு ஜன்னல் இருக்கிறது. கைகூட நுழைய முடியாத அளவுக்கு இரும்பு க்றில் பூட்டப்பட்டுள்ள ஜன்னல் அது. எப்போதும் திறந்தேதான் இருக்கும். வீட்டின் சுற்று மதிலின் உயரத்துக்கும் கம்மியான உயரத்திலேயே ஜன்னல் இருப்பதால் அதை மூடிவைக்கும் தேவை ஏற்படுவதில்லை.
சமையறைக் கதவு வழியாக வெளியே வந்து, பூனைகள் மட்டுமே மகிழ்வுடன் உலாவும் அந்தச் சின்ன சந்துக்குள் நுழைந்து முதுகைச் சுவர்ப்பக்கம் வைத்து பக்கவாட்டில் நகர்ந்து வீட்டைச் சுற்றி மறுமுனைக்கு வந்தால் குளியலறை ஜன்னலடியில் நிற்போம்.
வந்தாயிற்று! திறந்த ஜன்னலின் அடிப்பக்கம் உச்சந் தலையை உரசிக் கொண்டிருக்கிறது. எதையாவது வைத்து ஏறினால்தான் ஜன்னலால் உள்ளே பார்க்க முடியும்.
ஆளே நுழைய முடியாத சந்துக்குள் எதைக் கொண்டு வந்து வைத்து ஏறுவது!
ஆளே நுழைய முடியாதென்றால் எதற்காக இந்தச் சந்து என்று யாரும் கேட்கலாம். அது வீட்டுக்காரரைக் கேட்க வேண்டிய கேள்வி.
நாங்கள் வெறும் வாடகைக்காரர்கள் மட்டுமே!
பின் சுவரில் ஒரு காலும் வீட்டுச் சுவரில் ஒரு காலுமாக ஊன்றி உந்தி உந்தி ஏறி தலையை ஜன்னல் வரை உயர்த்தியாகிவிட்டது.
பூட்டப்பட்டுவிட்ட கதவில் முதுகைச் சாய்த்தபடி சோர்ந்து போய் நிற்கிறது சிசு.
கதவின் மண்வர்ணப் பின்னணியில் ஒரு லில்லி மலர் போல.
மெதுமெதுவாக உயர்ந்த தாத்தாவின் முகம் ஜன்னலில் தெரிந்தவுடன் சோர்வுற்றுப் போயிருந்த அந்த சின்ன வதனத்தில் ஏற்பட்ட மகிழ்வைப் பார்க்க வேண்டுமே!
இதோ கைக்கெட்டும் தூரத்தில் எனக்கொரு துணை என்ற துணிவு! அதனால் ஏற்பட்ட மகிழ்வு. அந்த மகிழ்வில் முகிழ்ந்த லாவண்யம். கதவின் சாய்விலிருந்து அசைந்து அசைந்து முன்னேறுகிறது குழந்தையின் முகம். திரைத்துணியில் அசைந்தாடும் ஓவியம் போல்!
இப்படியே தான் இரண்டுக்கு ஒன்றரை அடிப் படம் ஒன்று இருக்கிறது முன் ஹாலில். இதே பூஞ்சிரிப்புப் பார்வையுடன்.
இரண்டாவது பிறந்த தின நினைவுக்காக கோவிலுக்குப் போய் வீட்டுக்குத் திரும்புகையில் மமாவும் பப்பாவும் ஸ்டூடியோவுக்குப் போய் ஒரு நெஞ்சளவு போஸ்கார்ட் சைஸ் படம் ஒன்று எடுத்துள்ளார்கள் குழந்தையை மட்டும்.
படத்தை வாங்க சென்றபோது “டெறிப்லி போட்டோஜினிக் லிட்டில் ப்ளவர்” என்னும் கொமெண்டுடன் படத்தைக் கொடுத்துள்ளார் ஸ்டூடியோக்காரர்.
பிறகொரு நாள் எதற்காகவோ அந்த ஸ்டூயோவுக்குப் போனபோது திகைத்துப் போய் விட்டனர் பெற்றோர். குழந்தையின் படம் பெரிய அளவில் ஸ்டூடியோ விளம்பரத்துடன் அழகாக கண்ணாடி பிரேமுக்குள்.
‘எங்கள் குழந்தையை எங்கள் அனுமதி இன்றி எப்படி விளம்பரத்துக்குப் பாவிக்கலாம்’ என்று ஸ்டூடியோகாரருடன் சண்டை பிடித்துள்ளார்கள். ‘வழக்குப் போடுவோம்’ என்று கொதித்துள்ளார்கள். பிறகு ஒரு விதமாகச் சமாதானம் கொண்டு விளம்பரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு பெரிய அளவிலான படத்தை வாங்கிக் கொண்டு வந்து ஹாலில் மாட்டிக் கொண்டார்கள்.
கதவில் சாய்ந்தபடி சோகமும், சோகம் மறைந்த ஒரு ஒய்யாரமுமாக… இதோ நிற்கிறதே இதே போலத்தான்.
‘தாத்தாக்கண்ணே’ என்று பலமாகக் கூவியபடி ஜன்னலை நோக்கி விரைய யத்தனித்தது குழந்தை.
‘வரவேண்டாம் கண்ணே அங்கேயே இருங்கள் கதவுப்பக்கம் திரும்பி கொண்டியைக் காட்டுங்கள்….’ என்கின்றார் தாத்தா.
சரியாக சொய்பரின் உருண்டைத் தலையைப் பிடித்துக் காட்டுகிறது குழந்தை.
சொய்பரின் கீழ் இடை வெளிக்குள் விழுந்து கிடக்கிறது இந்தக் குமிழ்.
அதைப் பிடித்துத்தான் குழந்தை ஆட்டுகிறது. ஒலி எழும்புகிறதே தவிர முன், பின்னாக அது ஓட மறுக்கிறது.
‘அதுதான் அதேதான்’ உற்சாகமாகக் கூறுகின்றார் தாத்தா. ‘அதை நேராக்குங்கள் செல்லம்’ என்கின்றார்.
குழந்தை அதை நேராக்குகிறது. மேல் இடைவெளிக்குள் அது விழுந்து விட்டால் மறுபடியும் இப்பக்கம், அப்பக்கம் ஓடாது.
ஆகவே குழந்தையின் விரலசைவுகளையே உன்னிதமாகக் கவனித்துக் கொண்டிருந்த தாத்தா குமிழைக் குழந்தை நேராக உயர்த்தியதும் இப்போது தள்ளுங்கள் என்றார்.
பூட்டுகிற பக்கம் தள்ளிப் பார்த்து ஏமாறுகிறது குழந்தை. அந்தப் பக்கம் இல்லை மற்றப் பக்கம் என்று தாத்தா கூறி முடிக்குமுன் சின்ன விரல்கள் இயங்கின.
கிளிக் என்னும் ஒலியுடன் கொண்டி விலகியது. கதவு திறந்து கொண்டது.
தேவனைத் தொழ வான் நோக்கி உயரும் பக்தர்களின் கரங்கள் போல் எத்தனை கரங்கள் நீளுகின்றன.
வெளியே ஓடிவந்த குழந்தை அம்மாவின் கரங்களுக்குள் அடைக்கலமாகிறது.
இனியொரு தடவை இப்படி நேராமல் இருக்க என்ன செய்யலாம்… வெளியிலிருக்கும் கொக்கியை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் அடித்துக் கொள்ளலாமா’ என்பது போன்ற சிந்தனைகளில் மூளையைக் குழப்பிக் கொண்டனர் கூடி நின்ற பெரியவர்கள்.
‘இன்னொரு தடவை இப்படி நடந்து விட்டால் இதேபோல் திறந்து கொள்வேன்’ என்ற தெளிவான சிந்தனையுடன் குழந்தையின் பிஞ்சுக் கைகள் அம்மாவின் கழுத்தை இறுக்கிக் கொண்டன. கண்களின் ஓரம் தாத்தாவைத் தேடுகிறது.