சென்ற 26-10-2013 அன்று என் பக்கத்துவீட்டுக்காரரான ஸ்ரீகுமாரன் நாயர் மரணமடைந்தார். அவருக்கு வயது எழுபத்தொன்பது. அரசூழியராக இருந்து ஓய்வுபெற்றவர். நான் 2000 டிசம்பரில் இந்த வீட்டுக்கு குடிவருவதற்கு பத்துநாட்களுக்கு முன்னர்தான் அவர் அறிமுகமானார். அவரது மனைவியும் மகளும் மருமகனும் இருகுழந்தைகளும் அடங்கிய குடும்பம் ஆறுமாதம் முன்புதான் பக்கத்துவீட்டில் குடியேறியிருந்தனர். பதிமூன்றுவருடம் எங்கள் நட்பு ஆழமான ஒன்றாக நீடித்தது
அதற்குக்காரணம், ஸ்ரீகுமாரன் நாயர் ஒரு வேதாந்தி என்பதுதான்.வில்லுக்குறி மௌனசாமி மடம் உள்ளிட்ட பல ஆசிரமங்களுடன் அவருக்குத் தொடர்பிருந்தது. தமிழிலும் மலையாளத்திலும் நிறைய வாசிப்பார். குறைவாகவும் அழகாகவும் பேசக்கூடியவர். அவருக்கே மாணவர்கள் இருந்தனர். என்னுடைய ‘இந்திய ஞானம்’ நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.
மூன்றுவயதுக்குழந்தையாக இங்கே வந்த சைதன்யாவுடன் அவருக்கு மிகநெருக்கமான உறவு இருந்தது. அன்றெல்லாம் நானும் அருண்மொழியும் கொஞ்சம் தாமதமாகத்தான் வீடுதிரும்புவோம். இருகுழந்தைகளும் நாலரைக்கே திரும்பிவந்துவிடுவார்கள். அவர்கள் ஸ்ரீகுமாரன்நாயர் வீட்டில் சாப்பிட்டு அங்கே விளையாடிக்கொண்டிருப்பார்கள். சைதன்யா தாத்தாவுக்குப் பணிவிடைகள் செய்து அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பாள்.
குழந்தைகளிடம் பேசுவதில் அவருக்கென ஒரு மொழியை கண்டுகொண்டிருந்தார். சொல்விளையாட்டு நிறைந்த அந்த மொழி பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். ‘இருக்காது’ என்று சொன்னால் ‘இரு காது?’ என காதைத் தொட்டுக்காட்டுவார். ‘ஒருக்காலும் நடக்காது’ என்று சொல்லி ‘ஒரு கால் மட்டும் எப்படி நடக்கும்?’ என்பார். அப்போது அவர் கைவல்யநவநீதத்திலும் வேதாந்தசூத்ரங்களிலும் தேர்ந்த அறிஞர் என எவரும் ஊகிக்கமுடியாது
பதிமூன்று ஆண்டுகளாக என் குடும்பத்தை அவரை நம்பித்தான் விட்டுவிட்டுச் சென்றுகொண்டிருந்தேன். நான் இல்லாதபோது அனைத்தையும் கவனித்துக்கொள்வார். நாங்கள் மொத்த இல்லத்தையே அவர் பொறுப்பில் விட்டுவிட்டு கிளம்பி பயணங்கள் செல்வோம். நாய்களுக்கு சாப்பாடு போட்டு பராமரித்து பார்த்துக்கொள்வார்.
நாய்ப்பிரியர். எங்கள்வீட்டு நாய்களுடன் மிகநெருக்கமான உறவு எப்போதும் அவருக்கிருந்தது. தினமும் அரைமணிநேரம் வந்து கொஞ்சிவிட்டுச்செல்வார். சிலசமயம் நாய்களின் உடல்நிலை சம்பந்தமான எதையாவது நான் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவர்தான் கண்டு சொல்வார்
வேதாந்தியானாலும் சிவபூஜை செய்வார். அதைப்பற்றி ஒருமுறை கேட்டேன் ‘வெறும் அஹம் என்றால் அது அஹங்காரமாகத்தான் மாறுகிறது என அனுபவத்தில் கண்டேன். சிவோஹம் என்னும்போதுதான் இது அழிந்து அது எஞ்சுகிறது’ என்றார்.
நான்கடவுளுக்காக காசி சென்றிருந்தபோது அவருக்கு ருத்ராட்சமும் பூஜைப்பொருட்களும் கங்கைநீரும் வாங்கிவந்து கொடுத்தேன். அந்த உருத்ராட்சத்தைத்தான் அணிந்திருந்தார். பூஜைப்பொருட்களைத்தான் பயன்படுத்திவந்தார்.
மற்றபடி சடங்குகள் சம்பிரதாயங்கள் சோதிடம் மாயமந்திரங்கள் போன்ற எவற்றிலும் நம்பிக்கையற்றவர். ‘அறிவே தெய்வம் என்று சொல்கிறார்கள். அறிவை ஒரே தெருவில் நான்கு முறை ஊர்வலமாக கொண்டுசென்றால்போதும் அது அறியாமையாக ஆகிவிடும்’ என்றார் ஒருமுறை
உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குகளுக்குச் சென்றுவிட்டு வந்தார். அவர் இவரது வேதாந்த மாணவர். ‘எவ்வளவு சடங்குகள்! செத்தபிறகும் என்னென்ன நடிப்புகளை அளிக்கவேண்டியிருக்கிறது!’ என்றார்.
‘வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே’
‘வேண்டாம் என்று சொன்னாலும் அதை முக்கியமாக நினைக்கிறோம் என்றுதான் அர்த்தம். வாழ்க்கையிலே என்னென்னவோ நடிக்கிறோம். பெரும்பகுதி மற்றவர்களுக்கான நடிப்பு. இதையும் நடித்துவிட்டுச் செல்வோமே?’ என்றார்.
‘ஒரு சின்ன சிரிப்பு உள்ளே இருந்தால்போதும். வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது அந்தச் சிரிப்பை மட்டும்தான்’ சட்டென்று உரக்கச்சிரித்து ‘ஆனால் சிரித்துக்கொண்டிருப்பவர்கள்கூட மரணம் அருகே வந்ததும் திகைத்து அழ ஆரம்பித்துவிடுவார்கள். உலகிலேயே எளிமையான பாடம் வேதாந்தம். கற்றுக்கொள்ள சிரமமான பாடமும் அதுதான்’
அவரது சொந்த ஊர் பள்ளியாடிப்பக்கம் குழிக்கோடு. அங்கே தொன்மையான நாயர் குடும்பம். குமரிமாவட்டத்தின் பெரும்பாலான நாயர்குடும்பங்கள் குடும்பவீடுகளை கைவிட்டுவிட்டு நகரங்களில் குடியேறியிருக்கிறார்கள்.அவரும் அப்படித்தான். என்னை அவரது குடும்பவீட்டுக்குக் கொண்டுசென்று காட்டுவதாகச் சொல்லியிருந்தார்
நான் அந்த வீட்டுக்குச் சென்றது அவரது சடலத்துடன்தான். பெரியவீடு அப்படியே இடிந்து சரிந்து கிடந்தது. அக்கால வீடுகள் எல்லாம் வயல்வெளியின் ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும். சாலை இருக்காது. வரப்போ ஒற்றையடிப்பாதையோதான் இருக்கும். வயலை நம்பியிருந்த வாழ்க்கை. இன்று வயலும் தோட்டமும் எல்லாம் ரப்பர் மயமாகிவிட்டிருந்தன.
அவரது இல்லத்தில் ஒரு மர்மம் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரியமாமா இல்லத்தின் வைப்பறைக்குள் சென்று உள்ளே தாழிட்டுக்கொண்டார். தாந்த்ரீகபூசை செய்யக்கூடியவர். திரும்ப வெளிவரவே இல்லை. இன்றுவரை அந்த அறை பூட்டியபடியேதான் இருக்கிறது. அவருக்கான எல்லா சடங்குகளையும் வெளியேதான் செய்தார்கள். திறக்கப்படாமலேயே இடிந்துவிட்டது அந்த அறை
ஸ்ரீகுமாரன் நாயர் சிதையில் மெல்லிய புன்னகையுடன் படுத்திருப்பதாகத் தோன்றியது. நான்குமாதம் முன்னர் இதயபலவீனம் காரணமாக ஆஸ்பத்திரிக்குச் சென்றுவந்தார். அதன்பின் பேச்சு குறைந்துவிட்டது. பெரும்பாலும் தனக்குள் மூழ்கி அமைதியாக இருந்தார். நான் கடைசியாக திருவண்ணாமலைக்குக் கிளம்பும்போது சொல்லிக்கொள்ளச் சென்றேன். ‘திருவண்ணாமலைக்குப் போகிறேன்’ என்றேன். புன்னகையுடன் தலையாட்டினார்.
முந்தையநாள் மாலை கழிப்பறையில் விழுந்திருக்கிறார். காலையில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல காருக்கு கூட்டிச்சென்றிருக்கிறார்கள். நடந்து படி இறங்கியவர் திரும்ப வீட்டுக்குக் கொண்டுசெல்லும்படி சைகை காட்டியிருக்கிறார். கட்டிலில் படுத்து தன் நாடியை தானே பார்த்தாராம். கண்ணைமூடிக்கொண்டார். அரைமணிநேரத்தில் மரணம்.
நான் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்த கங்கைநீரை பூசையறையில் வைத்திருந்தார். அதைத்தான் கடைசியாக ஊற்றினோம் என அவரது மனைவி சொன்னார்.நான் திருவண்ணாமலை சென்னை எர்ணாகுளம் என அலைந்து திரும்பியபோது அவர் கண்மூடிக் கிடப்பதைத்தான் பார்த்தேன்.கல்யாணச்சாவு, அருகே அவர் மனைவி மட்டும்தான் அழுதுகொண்டிருந்தார்.
முன்பொருமுறை அவரது முன்னோடி அறையை பூட்டிக்கொண்டதை பற்றிச் சொன்னார். ‘நேர்மாறாகச் செய்திருக்கவேண்டும். வெளியேபோய் கதவைத் தாழிட்டுக்கொண்டிருக்கவேண்டும்’
சடங்குகள். ஒரேசமயம் மிகத்தீவிரமானவையாகவும் மிகஅபத்தமானவையாகவும் தோன்றச்செய்பவை. ஸ்ரீகுமாரன் நாயர் சிறப்பாகவே நடித்தார், மெல்லிய புன்னகையுடன்