உமிழ்தல்,இமயம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தளத்தில் நுழைந்தாலும் , தீவிர வாசிப்புக்கான மனநிலை இல்லாததால் ஒரு மாத அளவில் எதையும் முழுமையாக படிக்கவில்லை..திரும்பி பார்த்தால் புறப்பாடு , நூறு நிலங்களின் மலை , மீண்டும் புதியவர்களின் கதைகள் என நீண்டு கிடக்கிறது.,கல்லூரி ஸ்டடி ஹாலிடேஸ் இறுதி இரண்டு நாட்களில் எல்லா புத்தகங்களையும் விரித்து வைத்து , பீதி அடைபவன் நான்..அதே மனநிலையில் மீண்டும் :-)

இமயம் என்றால் பனி மூடிய மலைகள்தான் நினைவுக்கு வரும் .அந்த சித்திரத்தை முழுமையாக உடைத்து எறிந்துவிட்டது நூறு நிலங்களின் மலை..நூறு நூறு நிலங்களின் சித்திரமாக விரிகிறது உங்கள் எழுத்துகளில்..ஏற்கனவே இருக்கும் இமயமலைகளோடு, ஜெ.,வின் இமயமலையையும் கலைத்து போட்டு கட்டி உள்ளேன்…என்றாவது இமயம் முன் நிற்கும் போது மனம் நடுங்கும்,கலைந்து சரியும் கணத்துக்காக காத்து இருப்பதை தவிர வேறு வழி இல்லை. தீராத ஏக்கங்களே வாழ்வின் மீது பிடிப்பை அதிகரிக்கின்றன.
நிலக்காட்சிகளை மிக துல்லியமாக உருவாக்குகிறீர்கள் ஜெ ..! பரந்து விரிந்த நிலத்தின் முன் அடையாளம் இழக்கும் ஒருவித போதைக்காகவே தேடித்தேடி பயணம் செய்து இருக்கிறேன் ..நிலக்காட்சிகளுக்காகவே சில திரைப்படங்களை மீண்டும் மீண்டும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கிறேன்.. அந்த அளவில் நூறு நிலங்களின் மலை எனக்கு ஒரு பொக்கிஷமே..
நன்றி ஜெ..

அன்புடன்,
பிரதீப் பாரதி

அன்புள்ள பிரதீப்,

நன்றி

ஆம் இமயம் அழகுதான். ஆனால் விட்டுவிட்டுவந்த இடங்களின் அழகு நேரில் காண்பதைவிட பல மடங்கு. இப்போது யோசிக்கும்போது லடாக் பயணம் ஒரு பெரும் கனவாக மனதில் நிறைகிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் உமிழ்தல் கட்டுரை படித்தேன் என்னைப் பொறுத்த வரையில் “அம்பேத்கரின் தம்மம்“தான் போன வருடம் வெளி வந்த கட்டுரைகளிலேயே ஆகச் சிறந்தது. வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் இந்த வருடம் உமிழ்தல் அந்த இடத்தை அடைந்து விட்டது. காந்தி பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இருக்கிறது. இதற்கப்புறமும் காந்தி பற்றி இன்னொரு கட்டுரை நீங்கள் எழுத தேவையில்லை என்று தோன்றுகிறது. என்னை காந்தியை மறு பரிசீலனை செய்ய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சிவா
ஹியூஸ்டன்

அன்புள்ள சிவா

உண்மை. அந்தக்கட்டுரை அதன் கூரிய அமைப்பாலேயே நிறையப்பேசுகிறது. அது அன்று காலை எழுந்த ஒரு திடீர் நினைவு என்பதனால்கூட இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைகலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்