[அயன் ராண்ட்]
அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று.
.
[கிரீன் பெர்க்]
இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்பவர்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த வேலையை, ( உள்ளதை பதிவு செய்வது என்பதை ) இனி புகைப்படம் பார்த்துக் கொள்ளும் எனில் ஓவியம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி. மற்றது புகைப்படக் கலை ஓவியத்தின் தொடர்ச்சியா அல்லது தனித்த தன்மைகள் கொண்ட ஒரு கலையா என்பது.
மேற்சொன்ன இரண்டு பிரச்சனைகளில் முதல் ஒன்றை எதிர் கொண்டது ஓவியர்கள். அங்கிருந்து காட்சிக்கலை இரண்டாகப் பிரிந்தது. ஓவிய மரபென்றும் புகைப்படக்கலை மரபென்றும்.
புகைப்படக் கலையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாத சூழலில் ஓவியர்கள் புகைப்படத்தால் செய்ய இயலாத விஷயங்களை வரைய ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு ஒளியால் நிகழும் வண்ண வேறுபாட்டை வரைவது. ஒரு காட்சி எப்படி இருக்கின்றது என்பதை விட அதைக்கலைஞன் எப்படி எதிர் கொள்கின்றான் என்பது போன்றவை. அப்படி தோன்றியதே மனப்பதிவு வாதம் (Impressionism) மற்றும் வெளிப்பாட்டு வாதம் (Expressionism).
(மொனெட்டின் இந்த ஓவியங்களைப் போல ]
கவனிக்க வேண்டியது அவர்களின் நோக்கம் புகைப்படக் கலையால் செய்ய முடியாததை செய்வது. இந்தக் கருத்தின் நேர்மறை எண்ணமே கிளெமென்ட் க்ரீன்பேர்கை புகைப் படக் கலையில் முடியாதது என்பதில் இருந்து, ஓவியத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றை ஏன் முயலக் கூடாது என்பதை நோக்கி நகர்த்தியது.
உதாரணங்களுடன் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஓவியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் சாக்ரடீஸ் கொல்லப்படுகின்றார். இதைக் காணும் நீங்கள் காண்பது ஓவியத்தை அல்ல. அதாவது ஓவியத்தின் கூறுகளான வண்ணங்களையோ அல்லது அவை வரையபட்டதிரைச்சீலையையோ அல்ல. சாக்ரடீசையும் அவர் கொல்லப்பட்ட நிகழ்வையும்தான். இதைத்தான்nபத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஓவியம் செய்து கொண்டு இருந்தது. இலக்கியத்தை, மத நூல்களை,தொன்மங்களை “சித்தரிப்பது”.
இந்த சித்தரிப்பு வேலையெல்லாம் இனி புகைப்படம் பார்த்துக் கொள்ளும் என்றான பின்பு ஓவியத்திற்கென்றே உள்ள கூறுகளை ( elements ) மையப்படுத்தி ஓவியம் இயங்க வேண்டும் என்றார்கள். இந்த தூய்மைப்படுத்தல் என்பது புற உலகின் வடிவம் சார்ந்த விஷயங்களை, கருத்துகளை சித்தரிப்பதை விடுத்தது வண்ணங்களையும், வடிவமற்ற வடிவங்களையும் ( abstract ) கொண்டு ஓவியத்தை தீட்டுவது. இப்பொழுது கேட்கும் போது அபத்தமாக தோன்றலாம். ஆனால் பாடல்கள் இசையின் தூய்மையைக் கெடுக்கின்றன, மானுட துக்கத்தை சொல்ல வரிகள் தேவை இல்லை, பீம்ப்ளாசியின் ஆலாபனையே போதும் என்று சொல்வதைப் போல என்று புரிந்து கொண்டால் அதை ஒரு அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். இந்த சிந்தனையின் தொடர்ச்சியே மட்டிசியும் (Matisse ) ஜாக்சன் பொல்லாக்கும் ( Jackson Pollock) ரோத்கோவும் (Mark Rothko) .
[மட்டீசி]
மட்டிசி நவீன ஓவியம்
[ஜாசன் பொல்லாக்]
[பொல்லாக் நவீன ஓவியம்]
[ரொத்கொ]
[ரோத்கோ அருவ ஓவியம்]
மறுபக்கம் புகைப்படக் கலை தோன்றிய உடன் அதன் பயன்பாட்டு வடிவம் ( applied art ) உடனேயே அமலுக்கு வந்துவிட்டது. பல்வேறு நாடுகளுக்கு படை எடுத்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு புதிய நிலங்களையும் அதன் பண்பாடுகளையும் ஆவணப்படுத்த உதவியது.
ஆனால் அதன் தத்துவார்த்த தளத்தில் முக்கியமான பிரச்னை ஓன்று நிலவியது. ஒரு சாரார் அது ஓவியம் விட்ட இடத்தில துவங்க வேண்டும் ( pictorialist photography ) என்றும், மறுசாரார் அது புதிய கலை, எனவே அதற்கு சற்று கால அவகாசம் கொடுத்தால் அதுவே தனக்கான வெளிப்பாட்டு முறையைக் கண்டெடுத்துக் கொள்ளும் என்றும் விவாதித்தார்கள். பல்வேறு தத்துவவாதிகளும் கலைஞர்களும் அணி பிரிந்து கடுமையான விவாதம் நடத்திக் கொண்டனர். தங்கள் தரப்பை விவாதங்களாகவும், சிறு பத்திரிகைகள் நடத்தியும், (http://en.wikipedia.org/wiki/Camera_Work ) கண்காட்சிகள் வைத்தும் அடித்துக் கொண்டனர். ( இலக்கியத்திற்கு இருப்பதைப் போலவே புகைப்படக் கலையிலும் வெகு ஜனக் கலை, தீவிரக் கலை அடிதடிகளும் சிறு பத்திரிகைகளும் உண்டு )
முப்பது வருடங்கள் தீவிரமாக இருந்த விவாதங்கள் கொஞ்சம் குறைந்து ஓவியத் தொடர்ச்சி வாதம் (Pictorialism) பேசியவர்கள் நகர்ந்து வழி விட வேண்டியது ஆயிற்று. இதற்கு நடுவே புகைப்படம் பயன்பாட்டு தளத்தில் தன் இருப்பை நிலைப் படுத்தி விட்டது, பத்திரிக்கைகளிலும் போர்முனைகளிலும்.
எல்லோரும் கொஞ்சம் ஓய்ந்தபோது, தத்துவ தளத்தில் அடுத்த முயற்சிகள் தொடங்கின. புகைப்படக் கலையின் புதிய வெளிப்பட்டு சாத்தியங்களைத் தேடி. பார்த்த் ( Roland Barthes ), சொன்டாக் ( Susan Sontag ) பென்ஜமின் ( Walter Benjamin ) உட்பட விமர்சகர்களும், தத்துவவாதிகளும் எழுதி எழுதி புகைப்படக் கலையின் புதிய சாத்தியங்களை திரந்து வைத்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் ஹென்றி கார்டியர் ப்ராஸோன் ( Henri Cartier-bresson ) ஒரு முன்னெடுப்பை செய்தார். எந்த ஓவியத்திடம் புகைப்படம் சண்டை போட்டுக் கொண்டிருந்ததோ அதன் வெளிப்பாட்டுக் கூறுகளில் இருந்து வடிவ போதத்தை ( composition மட்டும் ) எடுத்துக் கொண்டார். ( அது மட்டுமே சாத்தியம் அப்போது, வண்ணங்கள் வரவில்லை ).
[ப்ரோசோன் ஒரு புகைப்படம்]
[ப்ரோசோன்]
இதை அப்போதிருந்த அறிவு ஜீவிகளும் தத்துவ வாதிகளும் ஒத்துக் கொள்ள நேர்ந்ததன் பின்னணி சுவையானது.
க்ரீன்பேர்கின் தூய்மைப்படுத்தலுக்கு பின் இருந்தநோக்கம், கலையை அதன் சித்தரிப்பு மற்றும் இயங்கு தளத் ( applied art ) தன்மையிலிருந்து விடுவித்து முற்றிலும் அகவயமான அனுபவத்திற்க்கு கொண்டு செல்வது. ( work of art ) தூய இசை போல. அதனால் கலைக்கு தேவையான பயிற்சி அற்றவர்களும் அதை அனுபவிக்க முடியுமென்று நம்பினார். ஆனால் ஒரு கட்டத்தில் அதீத தூய்மைவாதத்தினாலும், கோட்பாட்டுக்குள் நின்று அதன் படைப்பாளிகள் இயங்கியதாலும் இந்த இயக்கம் தொய்வு பெற்றது.
தகவல்-சித்தரிப்பு ( narration) அற்ற படைப்புகள் அதன் தூய அனுபவத்தினாலேயே பொது மக்களிடமிருந்து விலக்கம் பெற்றன. ஏனென்றால் அதற்கு தேவையான மன நிலை என்பது கலையை அணுகத் தேவையான பயிற்சியை விட அபூர்வமானதாகவே இருந்தது என்பதை அவர் கணிக்கத் தவறி விட்டார்.
இந்த்ச் சூழலில் ராபர்ட் ரோஷன்பெர்க் ( Robert Rauschenberg ) க்ரீன்பேர்கின் எல்லா கோட்பாடுகளையும் அபத்தங்கள் என்று நிறுவினார். எவ்வளவு தூய்மைவாதம் பேசினாலும் தூய்மையான கலையை படைக்க முடியாது என்றும், இந்த எண்ணமே கலையை வெறும் வெளிப்பாட்டு செயல்பாடாக காண்பதன் பிழை என்றும் நிறுவினார். ரோஷன்பெர்கின் கோட்பாட்டின்படி கலை நிகழ்வது என்பது கலைஞனின் சிந்தனையில் மற்றும் உள்ளுணர்வில். அந்த சிந்தனையும் உள்ளுணர்வும் அவன் சார்ந்த சமூகத்திலிருந்து பெறப்பட்டவை.தனித்தசிந்தனை என்று எதுவும் கிடையாது, எல்லா சிந்தனைகளும் ஏதோ ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சியே – அது அந்த சிந்தனையை மறுத்தாலும் அல்லது அதன் தொடர்ச்சியாகவே இருந்தாலும் என்றார்.
அவர் கேட்டது வரலாற்றின் ஒட்டுமொத்த உரையடலில் இருந்து கலைஞனை பிரிக்க இயலாத பொழுது கலையை மட்டும் பிரித்து விட முடியுமா என்பதே.அதை ஏற்றுக் கொண்ட ஓவிய உலகம் மற்றகலைகளிடம் முன்னை விட அதிகமாக கொண்டு கொடுத்து வளர ஆரம்பித்தது. இந்த சமரசத்தின் மற்றொரு முனையே ப்ராஸோன் ஓவியத்தின் வடிவ போதத்தை புகைப்படக் கலையில் கொண்டு வந்தது.
[ரோஷன்பெர்க்-சுய புகைப்படம்]
இந்தக் காலகட்டத்தில் தான் அயன் ரண்ட் அந்தக் கருத்தை முன் வைத்திருக்கின்றார். அறுபதுகளின்
முடிவில்.அந்த வகையில் புகைப்படக் கலை தன் கலை சாத்தியங்களை அப்போது முழுமையாக எட்டி இருக்க வில்லை, அதன் துவக்க புள்ளியில் தான் இருந்தது.
அதே நேரம் அது வெறும் பதிவு செய்யும் பயன்பாட்டுக் கலையாகவும் இருக்கவில்லை அயன் ராண்ட் முன் வைப்பது போல (பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததைப் போல) ஆனால் இந்த மாற்றங்களெல்லாம் சிறு பத்திரிக்கை உலகிலும், கண்காட்சி அரங்குகளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அயன் ராண்ட்டுக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம்.
அயன் ராண்டின் கோட்பாட்டில் உள்ள பிழை அவர் புகைப்படக் கலையின் செயல்பாட்டு ( execution process ) வடிவத்தை எடுத்துக் கொண்டு பேசுகின்றார். அந்தக் கோட்பாட்டின்படி ஓவியம் என்பது முற்றிலும் ஏதுமற்ற வெள்ளை திரைச் சீலையில் இருந்து உருவாகின்றது. புகைப்படக் கலையில் அது சாத்தியம் இல்லை என்கிறார்.
ஆனால் அதை ஒரு கலைவடிவத்துக்கு அளவு கோலாக ஆக்க முடியாது. அந்தக் கோட்பாட்டை திரைப்படத்துக்கும் போடமுடியாது. அதன்படி திரைப்படமும் கலை ஆகாது ஏனெனில் அது இங்கே இருக்கும் உலகத்தை பயன்படுத்தி ’தொகுக்கப்படுகின்றது’. அவர் வார்த்தையில் ’உருவாக்கப்படுவதில்லை’.
கலைக்கு உண்டான எல்லா கோட்பாடுகளும் அதன் வடிவம் சார்ந்தோ ( form of expression ) அல்லது உள்ளடக்கம் ( subject )சார்ந்தோ இருக்க வேண்டும். அப்பொழுதே அவை அனைத்துக் கலைகளுக்கும் செல்லுபடியாகும்.
“புகைப்படம் அதன் கருத்துருவாக்கத்தை (conceptualize ) செயல்படுத்த முடியாது, ஏற்கனவே அங்கே இருப்பதை மட்டுமே அது எடுக்க முடியும் என்கின்றார் அயன் ராண்ட். அதற்கு காரணம் புகைப்படக் கலையின் இயலாமை அல்ல. அறுபதுகள் வரை புகைப்படக் கலை அதிகமும் தத்துவார்த்தமான வெளிப்பாடுகளின்றி இருந்து வந்ததுதான், அதற்கு பின்னான இந்த ஐம்பது வருடங்களில் அதன் பரப்பும் வீச்சும் இலக்கியத்தில் நிகழ்ந்ததற்கு சற்றும் குறைவில்லை.
இந்த வருடங்களில் வேறு எந்தக் கலைகளிலும் நிகழ்ந்த பாய்ச்சல்களை விட காட்சிக்கலைகளை நிகழ்ந்தவையே அதிகம். அவற்றில் முக்கியமான ஓன்று கருத்துருவாக்கக் கலையின் ( conceptual art ) முக்கிய வடிவமாக புகைப்படக் கலையே உருவாகி வந்தது. ( கலை நிகழ்வது படைப்பில் அல்ல, படைப்பு ஒரு எளிய ஊடகம் மட்டுமே, படைப்பவனின் அகத் தரிசனத்திலும், அதை அணுகுபவரின் அகத்தரிசனத்திலுமே எனவே அந்தக் குறிப்பிட்ட படைப்பு வெறும் முகாந்திரம் மட்டுமே என்பதே கருத்துருவாக்கக் கலையின் முக்கிய கோட்பாடு. )
பிக்காசோவின் எருமைத் தலையை நினைவு கூர்ந்து கொள்ளலாம்.
இங்கே இருக்கும் படைப்பு வெறும் மிதி வண்டி ஒன்றின் பாகங்களே. அதில் எருமையை அவர் பார்த்ததும் நாம் காண்பதும் இயல்பாக நிகழ்கின்றது. இதை அயன் ராண்ட் முற்றாக மறுக்கக் கூடுமா என்ன? அந்த உதிரி பாகங்களை பிக்காசோ தயாரிக்கவில்லை, வெளியில் இருந்து கண்டெடுத்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக?
மேலும் கலை குறித்த அவரது கோட்பாட்டில் ஏற்கனவே இருக்கும் கூறுகளை ஒழுங்குபடுத்தியும் மாற்றி அமைத்தும் புதிய சாத்தியங்களையும் அர்த்தங்களையும் வெளிபடுத்துவதென்பதே கலை என்கிறார் அயன் ராண்ட்.
ஒரு வகையில் அது சரியான கருத்தே. ஆனால் அதை புகைப்படத்தில் எப்படி சாத்தியப் படுத்தமுடியும் என்ற கேள்வியை நோக்கி அவர் நகர்ந்திருந்தாரெனில் அதற்கான விடையையும் கண்டிருக்கலாம். ஆனால் அவரே அதையும் முடிவு செய்து விடுகின்றார்– அது சாத்தியம் இல்லையென்று. ஒருவேளை அது அவரது காலத்திற்கு மீறிய செயலாக இருந்திருக்கக் கூடும். (அதிகமில்லை, பத்து வருடங்கள்)
புதுமைப்பித்தனுக்கு முன்னான கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு விமர்சகர், தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்று சொல்லி இருந்தால் அதை எப்படிப் புரிந்து கொள்ளுவோமோ அப்படியே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
[மேலும்]