புல்வெளிதேசம் 18, நதிக்கரையில்

ஆற்றங்கரைகளில்தான் பெரும்பாலான நகரங்கள் அமைந்திருக்கின்றன. ஏனென்றால் நகரங்கள் இயல்பாகவே அமைவது அங்கேதான். முற்காலங்களில் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு நதிகளையே நம்பி இருந்திருக்கிறார்கள். டெல்லி யமுனையின் கரையில் அமைந்தது அதனால்தான். மதுரை வைகை கரையில் அமைந்ததும் அக்காரணத்தாலேயே.

காலப்போக்கில் நதிகளை போக்குவரத்துக்காக நம்புவது அனேகமாக நின்றது. அதற்கு ஒரு காரணம் விரிவான காடழிவின் விளைவாக நதிகளில் நீர்ப்போக்கு குறைந்தது என்பதுதான். பின்னர் அணைகள் வந்தன. நதி நீர் திசைமாற்றப்பட்டபோது பெரும்பாலான நதிகள் வரண்ட தடங்களாக மாறின

அத்துடன் நகரங்களின் வளர்ச்சி காரணமாக பெருமளவில் கழிவுநீர் நதிகளில் கலக்க ஆரம்பித்தது. ஒரு நகரம் திட்டமிட்டு பெரும் செலவில் கழிவுநீரோடைகளை வேறுவகையில் அமைக்காவிட்டால் அந்நகரின் கழிவுநீர் நதியில்தான் கலக்கும். ஏன் என்றால் மழைநீர் நதிக்கு ஓடிவந்து சேரும் இயல்பான வழிகளைத்தான் அந்நகரம் சாக்கடையாகப் பயன்படுத்தும்.

இவ்வாறு மெல்லமெல்ல நகரை ஒட்டியிருக்கும் நதிகள் எல்லாம் சாக்கடைத்தடங்கள் ஆக மாறின. திருப்பூரின் நொய்யல் சென்னையின் கூவம் போல சிற்றாறுகள் வெறும் சாக்கடைகளாக மாறியது எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் மதுரைக்குப்பின் வைகையும் நெல்லைக்குபின் தாமிரவருணியும் கழிவோடைகளாக மாறியதென்பது ஆச்சரியம் ஊட்டக்கூடியது. ஏன் திருச்சிக்குப் பின்னர் காவேரிகூட கழிவு விவாடையுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

டாக்டர் நடேசன் வீட்டுமுன்

 

நாகர்கோயில் நகரை ஒட்டி பழையாறு செல்கிறது. பழையாறுதான் நாகர்கோயிலை உருவாக்கியது. பழையாறு கடலில் கடக்கும் மணக்குடிக் காயல்வழியாக கடலில் இருந்து கப்பல்கள் வந்து தமிழ்மையநிலத்தில் இருந்து வண்டிகளில் வரும் சரக்குகளைக் கொள் முதல்செய்யும் இடம் கோட்டாறு சந்தை என்று புகழ்பெற்றிருந்தது. ‘கோட்டாறும் வெள்ளாறும் புகையால் மூட’ குமரியை அநபாயன் குலோத்துங்கசோழன் வென்றதை கல்வெட்டு சொல்கிறது

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்கூட பசும்தாழைப் புதர்கள் நடுவே நீலநீர் சுடர்விட  பழையாறு அற்புதமான அழகுடன்  நகரை அணைத்து ஓடிக்கொண்டிருந்தது. காலையில் நூற்றுக்கணக்கானவர்கள் அந்நீரில் குளித்துக்கொண்டிருப்பார்கள். பழையாறை ஒட்டித்தான் நாகர்கோயிலின் பல அழகிய புராதன சிறு கோயில்கள் இருந்தன. பழையாற்றின் கரையில் இருந்த குளிர்ந்த பசுந்தோப்புகளில் சென்றமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்

ஆனால் இன்று பழையாறு நாற்றம் அடிக்கும் சாக்கடையாக ஆகிவிட்டிருகிறது. நாகர்கோயில் நகரின் எல்லா சாக்கடைகளையும் ந்கராட்சியே அந்த ஆற்றுக்குக் கொண்டுசென்று விட்டிருக்கிறார்கள். கழிப்பறைக் கழிவுகள் உட்பட! இருந்தும் சுசீந்திரம் பகுதியில் அந்நீரில் எளிய மக்கள் குளிக்கிறார்கள். ஏன் என்றால் ஏழை மக்களின் வீடுகளில் குளியலறை இருப்பதில்லை. குடிநீரையே அவர்கள் சண்டைபிடித்துத்தான் குழாயில் பிடிக்கவேண்டும். குடும்ப உறுப்பினர் அனைவரும் குளிக்கும்படி நீர் வீட்டில் இருக்காது. பொது நீரில் குளித்தே ஆகவேண்டும். அம்மக்களின் ஜீவாதாரமான இந்த விஷயத்தை எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் அரசாங்கம் அழிக்கிறது.

மெல்பர்ன் நகரம் யாரா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஒரு நதிக்கு கொஞ்சம் பெண்மை கலந்த பெயர் இருப்பதுதான் நம் மனதுக்கு உவப்பாக இருக்கிறது. யாரா எனக்குப் பிடித்த பெயராக இருந்தது. அதற்கு ஆஸ்திரேலியப் பழங்குடிகளான உருஞ்சேரி மக்கள் [Wurundjeri] போட்ட பெயர் பிர்ராரங் [Birrarung] யாரா நதி 242 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் யாரா மலைகளில் இருந்து பிறந்து யாரா சமவெளி வழியாக ஓடிவந்து மெல்பர்ன் அருகே ஹாப்ஸன் வளைகுடாவில் கடலில் கலக்கிறது. யாரா நெடுங்காலமாகவே உருஞ்சேரி மக்களின் கூடுகைமையமாகவும் கடலுக்குள் அவர்கள் செல்வதற்கான வழியாகவும் இருந்துள்ளது.

 

யாராவின் நீர்

 

 

நானும் டாக்டர் நடேசனும் அருண்மொழியும் 22 ஏப்ரல் காலையில் கிளம்பி யாரா நதிக்கரையோரமாகச் சென்றோம். யாரா நதியின் இரு கரைகளையும் சீராக வரம்பிட்டு வைத்திருந்தார்கள். சிமிட்டி கரைகல் நடுவே சீராக ஓடிய நதிநீர் மிகவும் சுத்தமாக இருந்தது. ஒருநதிநீர் சுத்தமாக இருப்பதை அதன் வாசனையே சொல்லிவிடும்.

இக்காலகட்டத்தில் ஒரு நகர் அருகே ஓடும் நதியை சுத்தமாக வைத்திருப்பதென்பது பெரும் செலவுபிடிப்பது. நகரின் மழைநீர் நதிக்குள் கொஞ்சம்கூட வராமல் வரம்பிடவேண்டும்– மழைநீரில் கண்டிப்பாக சாக்கடை இருக்கும். நகரின் கழிவுநீரை நதிக்கு தொடர்பில்லாத வேறுவழிகளில் வெளியே கொண்டுசென்று சுத்தம் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவின் சாதகமான அம்சம் என்னவென்றால் அங்கே பெருமழை கிடையாது. கழிவுநீரை வெளியே கொண்டுசென்று சுத்தம் செய்ய ஆளில்லாத திறந்தவெளி எல்லையில்லாமல் இருக்கிறது.

யாரா ஒரு நீலப்பளிங்குச்சாலை போல கிடந்தது. அதில் ஹயாக்கிங் எனப்படும் இலகுபடகுகளை இளைஞர்கள் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். துடுப்புகள் துழாவும்போது நீர்த்துளிகள் தெறிக்கும் ஒளி கண்களைக் கூசச்செய்தது. நதிக்கரை ஓரமாக அமர்ந்திருப்பதற்கான நூற்றுக்கணக்கான இருக்கைகள். அவற்றில் கணிசமான காதலிணைகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

மெல்பர்ன் நகரம் விக்டோரியா மாகாணத்தின் தலைநகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரியநகரம் இதுவே.மெல்பர்ன் நகரத்துக்கு அப்பெயர் பிரிட்டிஷ் பிரதமாராக இருந்த இரண்டாவது விஸ்கவுன்ட் ஆ·ப் மெல்பர்ன், வில்லியம் லாம்ப் பிரபுவின் பெயரால் அமைக்கப்பட்டது. 1835 வாக்கில் மெல்பர்ன் நகரம் உருவாகியது என்று சொல்கிறார்கள். எளிய ஒரு துறைமுகப்பகுதிக் குடியிருப்பாக இருந்த மெல்பர்ன் ஆஸ்திரேலியாவின் தங்கவேட்டைக் காலகட்டத்தில்தான் பெரிய நகரமாக மாறியது. உலகின் வாழ்வதற்குச் சிறந்த பதினொன்றாவது நகரமாக எகனாமிஸ்ட் இதழால் மெல்பர்ன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

யாரா நதியருகே மெல்பர்ன் நகரத்தின் பிரபலமான சதுக்கங்களில் ஒன்று இருந்தது . கோடையில் அங்கே கூட்டம்கூட்டமாக மக்கள் வந்து சீல் மிருகங்கள் போல சட்டையில்லாமல் கிடப்பார்கள் என்றார் டாக்டர் நடேசன்.அங்கே சென்று சற்று அமர்ந்திருந்தோம். அப்பகுதியெங்கும் ஓர் ஓய்வான மனநிலை நிலவியது.

உண்மையில் இந்த சிக்கல் சுற்றுலாப்பயணிகளின் கண்ணைக் கட்டக்கூடியது. நாம் அனேகமாக சுற்றுலாமையங்கள் சதுக்கங்கள் ஆகியவற்றையே அதிகமும் பார்வையிடுகிறோம். அங்கே மக்கள் ஓய்வாகவும் உற்சாகமாகவும்தான் இருப்பார்கள். அந்த மனநிலை நமக்கும் இருக்கும். அந்த கண்ணுடன் நாம் அந்நகரத்தையோ நாட்டையோ பார்க்கலாகாது ஆனால் நாம் கவனிப்பதைவிட ஆழமாக நம்  ஆம்மனம் கவனிக்கும். ஆஸ்திரேலியாவில் எப்போதுமே ஒரு இதமான தன்மையை நான் உணர்ந்துகொண்டே இருந்தேன்.

சீனக்கடை ஒன்றுக்குச் சென்று உணவுண்டோம். நான் பழச்சாறில் வேகவைத்த சீவிய பன்றிக்கறி சாப்பிட்டேன். அருண்மொழி பீதியுடன் கோழிக்கறியில் பன்றியைக் கலக்கமாட்டார்களே என்று கேட்டுக்கொண்டாள். சிக்கன் நூடில்ஸ் அவளுக்கு. பன்றிக்கறி நன்றாக சமைக்கப்பட்டால் வேறெந்த கறியைவிடவும் ருசியானது — சாப்பிட்டால் நூறு கிலோமீட்டர் ஓடி கொழுப்பை செரிக்க வேண்டும்.

சாப்பாட்டுடன் அவர்கள் கொடுத்த பச்சை டீ மிகச்சிறப்பாக இருந்தது. சீனி பால் இல்லாத சூடான டீ. மிதமான கசப்பும் மணமும். இறைச்சி உண்பதனால் வரும் மெல்லிய இரைப்பை கனத்தையும் மசாலா கரிப்பையும் பச்சை டீ உடனடியாகச் சரிசெய்துவிடுகிறது. அசைவ உணவுடன் பச்சை டீ குடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன் , கிடைத்தால்.
.
மறுநாள் ஏப்ரல் 23 அன்று அருண்மொழியும் டாக்டர் நடேசனின் மனைவி டாக்டர் சியாமளாவும் வெளியே சென்று கடைகளைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தார்கள். நான் வீட்டிலேயே அமர்ந்து கணிப்பொறியில் கடிதங்களுக்கு பதில்போட்டேன். ஏராளமான கடிதங்கள் வந்திருந்தன. இன்னொரு நாட்டில் சற்று ஓய்வாக இருப்பதும் நன்றாகவே இருந்தது. என் இணைய தளத்தில் சில புதிய கட்டுரைகளைப் போட்டேன். வெளிநாட்டுப்பயணத்தில் இருந்தாலும் அது விடாப்பிடியாக ஒவ்வொருநாளும் வந்துகொண்டுதான் இருந்தது.

அன்று மாலை நானும் அருண்மொழியும் டாக்டர் நடேசனும் அவர் மனைவியும் மெல்பர்ன் நகரில் இருந்த மபெரும் சூதாட்டக் கட்டிடமான கிரௌன் காசினோவைப் பார்க்கச் சென்றோம். யாரா நதியின் தெற்குப்பகுதியில் இருக்கும் இந்த சூதாட்டவிடுதிக்கு வருடத்துக்கு ஒன்றரை கோடிப்பேர் வருகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

நல்ல குளிர் இருந்தது. நான் ஒரு பெரிய சிவப்பு மேல்சட்டையை அணிந்து சட்டைப்பைக்குள் கைகளை விட்டுக்கொண்டேன். காரை எங்கோ ஒரு இடத்தில் விட்டுவிட்டு  ஒளிபரவிய நகரத்தெருவில் நடந்து காஸினோவை நோக்கிச் சென்றோம். செங்குத்தாக ஒளிவிடும் சதுரக் கண்ணாடித் தூண் போல எழுந்த பிரம்மாண்டமான கட்டிடம். அதன் உச்சியில் இருந்த ஒளிரும் கிரீடம் போன்ற அடையாளத்தை தூரத்திலேயே பார்க்க முடிந்தது.

உலகப்புகழ்பெற்ற சிற்பியான டாரில் ஜாக்சன் உட்பட பல சிற்பிகள் இணைந்து வடிவமைத்த இந்த காசினோ 1997ல் திறக்கப்பட்டது. இதை திறந்துவைத்த நாளில் என்ற நடிகை வெற்றுமுலைகளுடன் ஓடி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலாம். அதை ஒரு வரலாற்றுச் செய்தியாக எழுதி வைத்திருந்தார்கள் . படமும் வைத்திருந்திருக்கலாம்

உள்ளே நுழைந்தோம். நான் முதன்முதலாக அத்தகைய ஒரு நவீந காசினோவுக்குள் நுழைகிறேன். உயர்தரமான கண்ணாடிகளாலும் பளிங்காலும் பளபளக்கும் பித்தளையாலும் கட்டப்பட்ட நவீன கட்டிடம். எந்த திசையில் பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் ஒளி. கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் இயந்திரங்களின் நடுவே நடந்தோம். மனிதர்கள் ஒரு திருவிழா முற்றம் போல கூடி நெரிசலிட்டு நடந்துகொண்டிருந்தார்கள். பெண்கள் அவர்களின் உயர்தர உடைகளில் உச்சகட்ட ஒப்பனையில் வந்திருந்தார்கள்.

பூமிப்பந்திற்கு தெற்கே கிரௌன் தான் ஆகப்பெரிய காஸினோ என்று சொல்லப்படுகிறது. 2500 போக்கர் ஆடும் இயந்திரங்களும் 350 சீட்டாட்ட மேஜைகளும் இந்த ஒரு கட்டிடத்துக்குள் உள்ளன. காசினோ இயந்திரங்கள் கலகலவென ஓடிக்கொண்டே இருந்தன. அங்கே அரசு உத்தரவின்படி சில எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்திருந்தார்கள். ‘இயந்திரத்தை மனிதன் வெல்ல முடியாது, அவை வெல்லும்பொருட்டே படைக்கப்பட்ட்வை’ ‘சூதாட்டம் ஏதேனும் ஓர் எல்லையில் நிறுத்தப்பட்டாக வேண்டும்’ என்பது போல. நம்முடைய டாஸ்மாக் குப்பிகளில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்றெல்லாம் எழுதி வைத்திருப்பதுபோல. குடியர்கள் அப்படி எழுதாத புட்டி போதிய போதையை அளிப்பதில்லை என்று எண்ணுவதாகச் சொன்னார்கள்.

இயந்திரங்களில் ஆடிக்கொண்டிருந்தவர்களிலும் சரி, சீட்டாடிக்கொண்டிருந்தவர்களிலும் சரி, சீனர்களே அதிகமும் கண்ணில்பட்டார்கள். சீனர்களுக்கு பொதுவாக சூதாட்ட மோகம் அதிகம் என்று எண்ணுகிறேன். சூதாட்டத்தை குடி உட்பட எல்லா கேளிக்கைகளுடனும் கலந்து ஒரு முழுமையான பாவச்செயலின் இன்பக்கிளுகிளுப்பு இருக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அந்த காசினோவின் மாடியில் நிறைய இரவுவிடுதிகளும் நடனசாலைகளும் குடியரங்குகளும் உள்ளன.

இரவில் வீடுதிரும்பிக் கொண்டிருக்கும்போது அந்தச் சூதாட்ட விடுதி குறித்து பேசினோம். அருண்மொழியை அது கொஞ்சம்கூட கவரவில்லை. போகலாம் போகலாம் என்று படுத்திக் கொண்டிருந்தாள். அங்கே நிலவிய ஒருவகையான போதைநிலை அல்லது கிறுக்குநிலை மிரட்சியை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அந்த இடத்தில் நிற்கவேமுடியாதபடி ஒருவகையான பதற்றம்.

ஆனால் அன்றிரவு நான் அந்த சூதாட்டவிடுதியில் நடந்துகொண்டிருப்பதாக ஒரு கனவு வந்தது. கூடவே ஹீரோவும் வருகிறது. என் கையில் இருந்து எதுவோ கீழே விழ நான் பொறுக்கிக் கொண்டே இருக்கிறேன். அதை எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இடம் ஆழ்மனதை ஏதோ ஒருவகையில் வசீகரிக்கிறது. நான் எதை தவறவிடுகிரேன் அங்கே? ஏன் கூடவே நாய் வந்தது? கள்ளமில்லாத ஹீரோவை கூட்டிக்கோண்டு  போவதன் வழியாக ஆழ்மனம் ஒரு குற்ற உணர்ச்சியை சமன்செய்து கொண்டதா? யாரறிவார்?

[மேலும்]

முந்தைய கட்டுரைமலையாளவாதம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேசியம்:கடிதங்கள்