கதைகள் – கடிதங்கள்

காட்சன் அவர்களின் மொழி புரிந்து கொள்ள மூன்றுமுறை படிக்க வேண்டியிருந்தது.  ஜெ-வின் அத்தனை கதைகளையும் படித்திருந்தும் இந்த மொழி இன்னும் கடினமானதாகத்தான் இருந்தது. கதை க்ளைமாக்ஸ் வரை அருமை. ஒரு விஷயம், பல கோணம், பார்வையாளர் ஒருத்தி என தொடங்கிச் சென்ற கதை ஒரு பெரிய உச்சத்தில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் கதை வளர்ந்திருக்க வேண்டும். டபக்குன்னு முடிச்சிட்டாருன்னு தோணியது.

அப்பாவின் குரல் எனக்கு தனிப்பட்ட முறையில் வலி நிறைந்த கதை. நம்மில் பெரும்பாலோர் கதை. நாயகனுடன் நம்மைப் பொருத்திக்கொள்ள முடியும் என்று தோணுகிறது. அவன் தன் அப்பாவை இவ்வளவு ரத்தத்தை கொடுத்துதான் விரட்ட முடியும். அவரின் தொடர்ச்சிதான் அவன். எல்லா மகன்களையும் போல.. மிக அருமையாய் எழுதியிருக்கிறார்.

கடலாழம் மிக அருமையான விவரிப்புகளுடன் கூடிய கதை, தேர்ந்த எழுத்தாளரின் நடை. ஆழிசூழுலகின் ஒரு துளி போல் இருந்தாலும் தன்னில் இது சிறந்த கதை, முடிவின் உச்சம் மனதில் சரியாகப் பதியமாட்டேன் என்கிறது. ஏனென்று தெரியவில்லை.

தனா

அழைத்தவன் – உரையாடல்கள் கொஞ்சம் தரை தட்டினாலும், நல்ல கதை. சிறுகதைக்கே உரிய முடிவு. கடைசி வரி, பெற்றவர்களின் அத்தனை சோகத்தையும் வாசகன் தோளில் சுமத்திவிட்டது.

வாழ்த்துக்கள்.

பாலசுப்ரமணியன் முத்துசாமி

அன்புள்ள ஜெ,

அழைத்தவன் என் குடும்பத்தில் நடந்த கதை. இதேபோல இருந்த ஒரு அண்ணனைக் கொண்டுபோய் அசைலத்திலே விட்டுவிட்டோம். அவர்கள் அவனைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிவிட்டார்கள். ஒரு மாதம் வரை எல்லாரும் கொஞ்சம் வருத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் மறந்தே போனார்கள். என் ஞாபகத்தில் அவரைப் போய்ப் பார்த்த நினைவே இல்லை. ஆனால் அவர் செத்துப்போன தகவல் கிடைத்தபோது சென்று கதறி அழுதார்கள். அவர் அப்பாவைப் பார்க்கவேண்டும் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று கேட்பார் என்று ஃபாதர் சொன்னபோது மார்பில் அடித்துக்கொண்டு அழுகை. ஆனால் அதுவும் ஒரே மாசம்தான்.

எஸ்

முந்தைய கட்டுரைஇரு விருதுகள்
அடுத்த கட்டுரைநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்