புறப்பாடு தொடரை ரசித்து, அனுபவித்து வாசித்தேன். ஒரு தனித்துவம் வாய்ந்த bildungsroman. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புறப்பாட்டை நீங்கள் தொடராக தந்த விதம்தான். முழுமையான நூலாக இதனை நான் வாசித்திருந்தால் இந்த அளவிற்கு ஒவ்வொரு அனுபவத்தை குறித்தும் சிந்தித்திருப்பேனா என்று தெரியாது. அடுத்தவர்களுக்கான வாழ்கையை தனக்குரியதாக எண்ணி வாழ்ந்து பின்னர் அந்த வாழ்க்கைகளை தனது கதாபாத்திரங்களுக்கு அளித்து, ஒரு படைப்பாளியாக நிம்மதி அடைவது ஒரு வித உள சிகிச்சையாக உள்ளது. விரக்தி அடைந்து வாழ்கையின் அர்த்தத்தை தேடி அலைபவர்களுக்கு வாசித்தல் மட்டும் அல்ல எழுத்தும் ஆறுதல் அளிக்கும் என உணர முடிகிறது.
(பி.கு.: புறப்பாடு காலகட்டத்தில் நீங்கள் எழுதிய ஏதாவது “ஆன்மீக நூல்கள்” இப்போது உங்கள் வசம் உள்ளதா?!!)
அனீஸ் கிருஷ்ணன்,
அன்புள்ள அனீஸ்,
ஆன்மீக நூல்கள் மறுசுழற்சியில் இருக்கலாம். வேறுபெயரில். பாலியல்கதையை வாசித்த ஒருவர் கடிதம் போட்டிருந்தார்.
ஜெ
திரு ஜெ அவர்களுக்கு,
இன்னும் புறப்பாடு-2 படித்து முடித்த திகைப்பிலிருந்து மீளவில்லை. கடைசி அத்தியாயம் படிக்கும்போது ஒவ்வொருவரின் தந்தை-மகன் உறவு நினைத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாதது.
குமரி உலா-1 ல், குளாளர் என இருப்பது ‘குலாலர்’ என்று இருக்க வேண்டும். வேளார், குயவர் என்பதும் ஒன்றே.
அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்
ஐயா… உங்களின் புறப்பாடு முழுவதும் வாசித்தேன்… வார்த்தைகள் வரவில்லை… மனது பிசைந்தது போல் இருக்கிறது… கண்ணீர் வருகிறது… ஓர் நெடுநாள் பயணத்தை அனுபவமாக உணர வைத்தமைக்கு நன்றி.
கணேஷ், சென்னை.