பூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்

அண்ணன்!

விவாதத்தின் ஆரம்பமே அனல். எனினும் கற்றுக்கொள்ளுவதற்கு அதிகம் இருப்பதால் பொறுத்துக்கொள்ளலாம்.

உண்மைதான், பல வகைகளில் எழுத்து நமக்கு அறிமுகமான மொழியிலும் நடையிலும் களத்திலும் இருப்பது நமக்கு ஒரு அருகாமையைக் கொடுக்கும். உங்களோடு நான் ஒட்டிக்கொள்ளுவதற்கு அது ஒரு சிறப்புக் காரணம். எனினும் கொற்றவையின் தூய தமிழும், குமரி வட்டார வழக்குகள் தாண்டி உங்கள் எழுத்துக்கள் பயணம் செய்யும்போதும் பெற்றோருடன் வேகமாக நடக்க இயலாத குழந்தை ஓடி வந்து சேர்ந்துகொள்ளும் பரபரப்புடனே இருக்கிறேன்.

இம்மொழி கேட்டிராத ஒரு நண்பருக்கு நான் இதை அனுப்பியபோது அவர் சுஜாதா கூறுவதையே குறிப்பிட்டிருந்தார். இம்மொழிநடை பின்பற்றுவதற்கு சிரமமாக இருப்பதாக சொன்ன அவர், கடைசியாக அனிதா சொல்வதற்கு அர்த்தம் என்ன? எனக் கேட்டிருந்தார். நான் விளக்க வேண்டியிருந்தது.

இன்று இம்மொழிநடை குமரி மாவட்டத்தில் காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் ஒரு சில படைப்புகளாவது இம்மொழி நடையில் முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன். அதனால் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளை கதையோட்டத்தில் ஏற்படுத்தி வசனங்களை இன்னும் சுருக்க முயற்சிக்கிறேன்.

இதே மொழிநடையில் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எழுதினால் என்ன என்று இப்போது தோன்றுகிறது.

“அதேபோல சமூக-மத யதார்த்தங்கள் கதைக்குள் அவற்றைப்பற்றி ஏதும் அறியாத வாசகன் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்”

மிக மிக முக்கியமான ஒன்று.

புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வது ஒரு சிரமமான வேலை போலவே தோன்றுகிறது. நீங்கள் உவகையுடன் அதை செய்து வருவது எங்களைப் போன்றோருக்கு பெரிய உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. நன்றி.

காட்சன்

அன்புள்ள காட்சன்,

பைபிளை முதன்முதலில் ‘சந்தைமொழியில்’ மொழியாக்கம் செய்த மார்ட்டின் லூதர் கிங் இதேபோன்ற எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆனால் மக்கள் பேசும் மொழிக்கு அதற்கான அழகும் மகத்துவமும் உள்ளது என உணராமல் வாழ்க்கையை அணுகியறியமுடியாது.

ஜெ

அன்புள்ள ஜெ,

வணக்கம்

பூ குறித்து – பூவை வாசிப்பதும் நல்ல அனுபவமாக இருந்தது. குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு தரவாட்டிலும் காணி அன்பர்கள் பூஜை செய்யும் தேவதை ஓன்று உள்ளது. அந்தச் சடங்கின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்று தேட வேண்டும். பூ வாசிக்கும்போது எனக்கு என்னவோ உங்கள் எழுத்தை வாசிப்பது போல் இருந்தது. நான் மொழியையும், கதைக் களனையும், கருவையும் மட்டும் வைத்து கூறவில்லை. இக்கதையில் வரும் பலரும் உங்கள் காடு, தீ அறியும் போன்ற படைப்புக்களில் வந்தவர்கள் என்பது போன்ற எண்ணம். நீங்கள் என்றால் கதை இறுதிப்பகுதி சிறிது வேறுபட்டிருக்கும். பெரிய யக்ஷி தன் மருமகளின் உடலில் ஆவேசித்து மருளாடி கிருஷ்ணன் அருகே வந்திருப்பாள். அப்போது நாகலிங்க மலரின் வாசம் அடித்திருக்கும். என்னவோ இப்படி தோன்றுகிறது.

ஒரு வேளை பூ போன்ற கதைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையைச்சேர்ந்தவை என்பதால்தான் இப்படி தோன்றுகிறதோ? நீங்கள் பூவை முதல் முறையாக வாசித்தபோது இவ்வாறு உணர்ந்தீர்களா? போகனிடம் உங்களை காண முடிந்ததா? அவர் பேச்சில் படைப்புகளில் உங்கள் தாக்கம் நிறைந்திருக்கிறதா? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன்

அன்புள்ள அனீஷ்,

பூ கதையின் பேசுபொருள் தென் குமரி மாவட்டத்தின் தொன்மம். அதை நானும் எழுதியிருக்கிறேன். ஒரே உலகைச்சேர்ந்த இரு கதைகள் என்பதே பொது அம்சம் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைமு.வ.வின் எக்ஸ்ரே
அடுத்த கட்டுரைஅரவிந்த்