நாம் புரிந்துகொள்கிறோமா?

இன்று இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய நாம் புரிந்துகொள்கிறோமா என்ற கட்டுரை வெளிவந்தது. மொத்தம் 123 கடிதங்கள் வெளிவந்தன. ஒன்பது கடிதங்கள் மட்டும் கல்விமுறையின் சிக்கல்களைப்பற்றி அக்கட்டுரை பேசுகிறது என்பதைப் புரிந்துகொண்டவை. மீதி எல்லாக் கடிதங்களும் பகுத்தறிவினால் ஒழுக்கம் சிதைந்துவிடும் என்று நான் சொல்வதாக எடுத்துக்கொண்டு அதை ஆதரித்தோ மறுத்தோ எழுதப்பட்டவை.

உதாரணத்துக்கு ஒரு கடிதமும் நான் எழுதிய பதிலும்.

ஜெ

ஐயா, வணக்கம்!

சிறப்பான கட்டுரை..

ஒழுக்கநெறிகள் பகுத்தறிவின்பாற்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் முன்னர் இருந்த குருகுலக் கல்விமுறை சிறப்பாக இருந்தது என்ற கருத்து ஏற்கமுடியாதது. கல்வி முறை, பள்ளிக்கூடம் என மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிய நம்மால் நமது முந்தைய குருகுல-திண்ணைப்பள்ளியின் குரு-சிஷ்ய உறவுகளை விட்டொழிக்க முடியவில்லை என்பது வருத்தமான ஒன்று.

குழந்தைகளைப் பற்றிய புரிதல்கள் போதாமை நமது குடும்பங்களில் இருக்குமளவு பள்ளிகளில் இருப்பதில்லை.. பெற்றோர்கள் முதலாவது ஆசிரியர்கள்.. ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் என்ற கருத்துக்கூட வாயளவில் இருக்கிறது..

இறுதியில் உள்ள வாசிப்பு குறித்த வார்த்தைகள் நிதர்சனமான உண்மை! தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முகமாக மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாநில அளவில் அழைப்பு விடுத்து விருப்பமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு வாசிப்பு முகாம்களை தொடர்ந்து நடத்திவருகிறது.. அவர்கள் வாசிப்பவராக இருக்கவேண்டும். தனது சொந்த பணத்தில் புத்தகம் வாங்கிப் படிப்பவராக இருக்க வேண்டும்.. சொந்தப் பணத்தினைச் செலவழித்து மாநிலத்தில் எந்த மூலையில் நடந்தாலும் வந்துசெல்லும் ஆசிரிய நண்பர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனக்குரிய இடம் எங்கே? பகல் கனவு, டோட்டோ ஜான், முதல் ஆசிரியர், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என கடந்த 2ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன..

தே.சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தலைவா!

ஒழுக்க நெறிகள் பகுத்தறிவுக்கு ஒத்துப்போகுமா என்ற தலைப்பில் அந்தக்கட்டுரை எழுதப்படவில்லை. அந்தக்கருத்து ஒரு கருதுகோளுக்கு உதாரணமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அதை எப்படி மறுக்கவேண்டும் என்பதும் அதே கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தக்கட்டுரை நாம் கருதுகோள்களை ஏன் புரிந்துகொள்வதில்லை என்பதைப்பற்றிப் பேசுகிறது. கொல்லாதீர்கள், தயவுசெய்து…கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை6. நிர்வாணம் – ரா.கிரிதரன்
அடுத்த கட்டுரைபூ – கடிதங்கள் மேலும்